IMTP Epi 17(1)

அத்தியாயம் 17

ஜீப்பில் வீட்டுக்கு வரும் வழியிலே தூங்கி வழிய ஆரம்பித்திருந்தாள் சுப்பு. கண் அயர்வதும், கரடு முரடான சாலையில் ஜீப் தூக்கிக் போடும்போது கண் விழிப்பதுமாக தள்ளாடினாள் அவள்.

“ப்ளேக்கி! கிட்ட நகர்ந்து என் கையை இறுக்கி பிடிச்சுட்டு தோளுல சாஞ்சிக்க”

பாதி கதவுதான் இருக்கும் அந்த ஜீப்பில். அவள் தூக்கக் கலக்கத்தில் விழுந்து விடுவாளோ எனப் பயந்தான் எட்வர்ட்.

“பரவாயில்ல துரை. உங்களுக்கு ஜீப்பு ஓட்ட கஷ்டமா இருக்கும்”

“காடு மலைலாம் சுத்தி வரனும், அதோட தனிக்கட்டைனால ஜீப்தான் வசதின்னு இருந்துட்டேன். இனி நமக்கு கார் வாங்கிரலாம் ப்ளேக்கி. இப்போ கிட்ட வா! தூக்க கலக்கத்துல எங்கயாச்சும் விழுந்து வச்சிறாத!”

ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்தபடியே மறுகையால் அவளை தன் தோள் மேல் சாய்க்க முயற்சித்தான். அவளோ அவன் நெஞ்சளவுதான் வந்தாள். சிரிப்புடன் காரை ஓரம் கட்டியவன், அவள் காலை மடக்கச் சொல்லி தன் மடியில் சாய்த்துக் கொண்டான். மெதுவாகவே ஓட்டி வந்தவன், வீடு சேரும் போது இரவாகி இருந்தது.

கார் நின்றதும், அவளாகவே எழுந்து கொண்டாள் சுப்பு. கண்களைத் தேய்த்து விட்டவள்,

“அதுக்குள்ள துரை பங்களா வந்துருச்சா?” எனக் கேட்டாள்.

அதற்கு அவனிடம் முறைப்புதான் பதிலாகக் கிடைத்தது.

“ஏன் முறைக்கறீங்க துரை?”

“இனிமே இது துரை பங்களா இல்ல, நம்ம பங்களா. எங்க சொல்லு பார்ப்போம்!”

“ஹ்ம்ம்.. நம்ம பங்களா”

“கரேக்ட்! ஜீப்புல இருந்து இப்ப இறங்காத ப்ளேக்கி. நான் பொருளெல்லாம் வச்சிட்டு, உள்ள லைட் போட்டுட்டு வர வரைக்கும் இங்கயே உக்காந்திருக்கனும்” என மிரட்டி விட்டுப் போனான்.

திரும்பி வந்தவன் அலேக்காக அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தான்.

“நான் முழுச்சிதானே இருகேன் துரை, எதுக்கு தூக்கறீங்க? விடுங்க நானே நடப்பேன்”

“எங்க ஊருல கல்யாணம் முடிஞ்சதும் புருஷன், பொண்டாட்டிய வீட்டுகுள்ள தூக்கிட்டு வரனும்னு சாங்கியம் இருக்கு. அததான் நான் செய்யறேன்”

“எதுக்கு அந்த சாங்கியம்?”

அவன் நெஞ்சில் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டு கதை கேட்டாள் சுப்பு.

“அது வந்து, வீட்டு வாசல்ல தீய சக்திங்க வாசம் செய்யுமாம். புதுசா கல்யாணம் ஆகி வர பொண்ணு மேல அந்த சக்தி படிஞ்சு அவளுக்குக் பிள்ளை பொறக்க விடாம செஞ்சிருமாம்”

அந்தக் கதையைக் கேட்டு பயந்தவள் இன்னும் அவன் மார்பில் ஒண்டிக் கொண்டாள்.

“பயமா இருக்கு துரை. பொண்ண மட்டும் ஏன் புடிக்குது? மாப்பிள்ளைய புடிச்சிக்க வேண்டியதுதானே. அதுங்களுக்கு கூட நாங்கன்ன இளப்பம்தான்”

“நான் இருக்கறப்ப எந்த காத்து கருப்பு உன்னை பிடிக்கும்? பயப்படாத ப்ளேக்கி. அதோட அந்தக் காலத்துல பெத்தவங்க வீட்ட விட்டு போறதுக்கு பொண்ணுங்களுக்கு மனசு வராதாம். அதனால அவங்க கிட்ட இருந்து பிரிச்சு பொண்ண தூக்கிட்டு அவன் வீட்டுக்கு போயிருவானாம் புருஷன்காரன். அதையும் காரணமா சொல்லூறாங்க ப்ளேக்கி”

“அப்படினா நீங்களும் என்னை ஆத்தாகிட்ட இருந்து பிரிச்சு கல்யாணம் பண்ணி வீட்டுக்குள்ள தூக்கிட்டுப் போறீங்களா துரை?”

அவள் சாதாரணமாகத்தான் தன் சந்தேகத்தைக் கேட்டாள். அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்து அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே சில கணங்கள் நின்றான் எட்வர்ட். விநாடிக்குள் தன்னை சமாளித்தவன்,

“ப்ளேக்கி, என்னைக் கல்யாணம் பண்ணதும் நீ இன்னும் புத்திசாலியா ஆகிட்ட தெரியுமா?” எனக் கன்னத்து குழி காட்டி சிரித்து அவளை திசை திருப்பினான்.

அவளது கவனம் அருகில் தெரிந்த அவன் கன்னத்துக்கு மாறியது.

“உங்களுக்கு மட்டும் எப்படிதான் இப்படி குழி விழுகுதோ தெரியல. துரை ரொம்ப அழகு!”

அதற்குள் வீட்டின் உள்ளே வந்திருந்தார்கள். அவன் இன்னும் அவளை இறக்கி விடாமல் இருக்கவும்,

“துரை, இறக்கி விடுங்க. கை வலிக்க போகுது” என்றாள் சுப்பு.

“நம்ம ரூம்ல போய்தான் இறக்கி விடனும்” எனச் சொல்லியவன் ரூமில் நுழைந்து கட்டிலின் மேல் அவளை மெதுவாக தூக்கிக் போட்டான்.

பொத்தென விழுந்தவளுக்கு ஒரே சிரிப்பாக இருந்தது. 

“இப்போ சாங்கியம் முடிஞ்சதா துரை?”

“இன்னும் ஒன்னே ஒன்னு, ரொம்ப முக்கியமான சாங்கியம் மிச்சம் இருக்கு ப்ளேக்கி!” என அழகாக முறுவலித்தான்.

“இன்னிக்கு முழுக்க நீங்க ரொம்ப சிரிக்கறீங்க. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. சுத்திப் போடனும்”

கட்டிலில் இருந்து எழுந்து அவன் அருகில் வந்தவள் அவன் முகம் வழித்து நெட்டி முறிந்தாள்.

“நீயும்தான் சிரிச்ச முகமாவே இருக்க இன்னைக்கு” என்றவன் அவள் செய்தது போலவே அவளுக்குச் செய்தான்.

“இப்போ சொல்லுங்க துரை, இன்னும் என்ன சாங்கியம் இருக்கு? செஞ்சிட்டு நான் போய் தூங்கனும். கண்ணு சொக்குது”

“முதல்ல நீ போய் குளிச்சிட்டு வருவியாம். அப்புறமா நாம அந்த சாங்கியத்த செய்வோமாம்”

“வேணா, குளிக்கலாம் மாட்டேன்! குளிச்சா தூக்கம் ஓடிப் போயிரும். அதனால குளிக்காம செஞ்சிரலாம்”

அவன் தாடையைப் பற்றி கெஞ்சினாள் சுப்பு.

இடுப்பில் கை வைத்து முறைத்தான் எட்வர்ட்.

“இன்னும் புது வருஷம் முடியல, மொறைக்காதீங்க! நான் போறேன் குளிக்க!”

“இங்கயே குளி, நான் தண்ணி எடுத்துட்டு வரேன்” என்றவன் வெளியில் சென்றான் சுடு தண்ணீர் எடுத்து வர.

“அங்க வீட்டுல செய்யற மாதிரி தண்ணிய மட்டும் மொண்டு தரையில ஊத்திட்டு குளிச்சிட்டேனு சொல்லிரலாமா? இல்ல வேணாம். ஆத்தா மாதிரியே அர்ணாக்கயிறு நனையாம எப்படிடி குளிச்சன்னு துரையும் மொத்திட்டாருன்னா! அடச்சை! இந்த குளியல கண்டுபிடிச்சவன, ஜோனிய விட்டு கடிக்க விடனும்” என முனகியபடியே மாற்று உடை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குப் போனவள் எட்வர்ட் கொடுத்த சுடுதண்ணீரில் குளித்து விட்டு வந்தாள்.

இவள் வெளியே வந்ததும் எட்வர்ட் குளிக்கப் போனான்.

அவன் திரும்பி வந்து பார்க்கும் போது அறையில் சுப்பு இல்லை. அவளைத் தேடி அடுப்படிக்கு சென்றவன் அவள் எப்பொழுதும் போல் அவள் இடத்தில் முடங்கி இருப்பதைப் பார்த்தான். ஒன்றும் பேசாமல் அருகில் வந்து குனிந்தவன், அவளை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டான்.

“இன்னிக்கு என்னாச்சு துரைக்கு, என்னை பொசுக்கு பொசுக்குன்னு தூக்கறீங்க? உங்க ஜாதியில கல்யாணம் பண்ணா பொண்டாட்டிய தூக்கிட்டே சுத்துவாங்களா? அப்போ இனிமே என்னை நடக்க விடமாட்டீங்களா?” என ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டாள் சுப்பு.

மீண்டும் அவளை கட்டிலில் விட்டவன்,

“இனிமே நீ இங்கதான், என் கூட தான் படுக்கனும்” எனக் கண்டிப்பாக சொன்னான்.

“அதெல்லாம் முடியாது. அக்காவுக்கு தெரிஞ்சா கொட்டி கொட்டியே கொன்னுருவாங்க. உங்க கூட படுத்தா மேல கீழ கைப்படும். அப்புறம் என் கற்பு கட்டி கரைஞ்சி போயிரும். நான் என் எடத்துலதான் படுப்பேன்” என அழ ஆரம்பித்து விட்டாள்.

“ஏ ப்ளேக்கி! அழாத ப்ளிஸ். சொன்னா கேளு”

அவன் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. மிரட்டி பார்த்தான் அதற்கும் அசையவில்லை. கோபத்தில் கத்திக் கூட பார்த்தான், அதற்கும் மசியவில்லை. கடைசியில் அவன்தான் அடுப்படியில் அவள் பக்கத்தில் படுக்கும் படி ஆனது.

“நீங்க இப்ப ஏன் இங்க வந்து படுக்கறீங்க துரை? உங்க ரூம்புலயே படுக்க வேண்டிதானே”

தன் பக்கத்தில் படுக்கை விரிப்பை விரித்துப் படுத்திருந்தவன், கைகளைப் பற்றியவாறு கேட்டாள் சுப்பு.

“இன்னிக்கு நம்மள கல்யாணம் பண்ணி வச்சாரே ஃபாதர், அவர் கிட்ட வாக்கு குடுத்துருக்கேன் ப்ளேக்கி”

“என்னன்னு துரை?”

Scroll to Top