SC Epi 9(1)

அத்தியாயம் 9

“மூனு விஷயத்தை மட்டும் என்னைக்கும் வெளிய சொல்லவே கூடாது! என்னன்னு கேக்கறீங்களா? ஒன்னு நம்ம வருங்கால திட்டத்த! வீடு வாங்கப் போறேன், கார் வாங்கப் போறேன்னு வெளிய சொல்லிட்டுத் திரிஞ்சிங்கன்னு வைங்க, சொந்தக்கார பைய புள்ள முட்டை மந்திரிச்சு விட்டுருவான்! ரெண்டாவது எவ்வளவு சம்பாதிக்கறோம், எவ்ளோ சேர்த்து வச்சிருக்கோம்ங்கறத! இதை சொன்னீங்கன்னு வைங்க ஒன்னு கடன் கேட்டு வருவாங்க, இல்லை வயிரெறிஞ்சு சாபம் விடுவாங்க! மூனாவது புருஷன் பொண்டாட்டி பிரச்சனைய! அப்படியே அக்கறையா கேட்கற மாதிரி கேட்டுட்டு, மறு நிமிடமே வீரபாகுக்கு அர்ஜூன் பார்த்து விட்ட சம்பவம் மாதிரி ஊரெல்லாம் பரப்பி விட்டுருவாங்க! எல்லாரும் இந்த கேட்டகரில வர மாட்டாங்க! ஆனாலும் கவனமா இருக்கறது பெட்டர் இல்லையா!!!”

(பாட்காஸ்ட் பை பரதேசி)

“வீடியோ கால் வாயேன் ஊர்மி! ப்ளீஸ்! ப்ரீட்டி ப்ளீஸ்!”

“வேணாமே விஷ்ணு! என்னமோ உன் முகத்தப் பார்த்துப் பேசவே ஒரு மாதிரி ஷையா ஃபீலாகுது!” என்றவளின் குரலில் விரவிக் கிடந்த வெட்கத்தைக் கண்டு கொண்டவனுக்குத் தாளவேயில்லை.

இப்பொழுதே பறந்து அவள் பக்கம் போய் அமர்ந்து கொள்ள வேண்டும் என மனம் அடம் பிடித்தது. நெடிய மூச்சை இழுத்து விட்டவன்,

“முகத்தத்தான் காட்ட மாட்டற! ஐ லவ் யூவாச்சும் சொல்லேன்!” என்றவனின் குரலில் கொட்டிக் கிடந்த ஏக்கத்தில், இவள் காது மடல்கள் சூடேறி சிவந்து போயின.

“விஷ்ணு!!!”

“இப்போ நீ கொஞ்சறியா இல்ல கெஞ்சறியான்னே எனக்குத் தெரியலடா ஊர்மி! நீ யெஸ்னு சொன்னதையே இன்னும் என்னால நம்ப முடியல! உன் ஃபோன யாரோ திருடி, எனக்கு யெஸ் சொல்லி விளையாடறாங்களோன்னு டவுட்டாவே இருக்கு”

சிரிப்பு வந்தது இவளுக்கு. அழைப்பை நிறுத்தி விட்டுக் காணோளி அழைப்பு விடுத்தாள் விஷ்ணுவுக்கு. உடனே அழைப்பை ஏற்றுக் கொண்டு விட்டான் அவன்.

காணொளி விட்டத்தைக் காட்ட, கடுப்பாகிக் போனான் இவன்.

“ஊர்மி! முகத்தக் காட்டு”

மெல்ல முகத்தைக் காட்டியது நிலவு! இவன் முகம் மலர்ந்து போனது அவள் வதனத்தைப் பார்த்து!

“அப்பாடா! நீதான் இதுன்னு இப்போ நான் நம்பறேன்!” எனப் புன்னகைத்தான் விஷ்ணு.

அவள் உதய்ப்பூரைச் சென்றடையும் நேரத்தைக் கணக்கிட்டு அழைத்திருந்தான் இவன். போனை அட்டெண்ட் செய்தவளைத்தான் இவ்வளவு நேரமாய் காணொளியில் வா, காதலைச் சொல்லு என டீனேஜ் பையன் போல மல்லுக் கட்டிக் கொண்டிருந்தான் விஷ்ணு!

ஊர்மியின் முகம் பயணத்தில் களைத்துக் கிடந்தது! ஆனாலும் கண்களில் மின்னலடித்தது! உதட்டில் புன்னகை உறைந்து கிடந்தது. அவளது முகத்தைப் பார்த்தவனுக்கும் அதற்கு மேல் பேச்சு வரவில்லை. இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபடி இருந்தனர். கடைசியில் இவள்தான் மௌனத்தைக் கலைந்தாள்.

“விஷ்ணு!”

“ஹ்ம்ம்”

“யெஸ் சொன்னது உனக்கு அதிர்ச்சியா இருந்திருக்கும்னு எனக்குப் புரியுது”

“அதிர்ச்சின்னு சின்ன வார்த்தைல சொல்ல முடியாது ஊர்மி! என் அண்ட சராசரமே கிடுகிடுத்த மாதிரி இருந்துச்சுன்னு வேணும்னா சொல்லலாம்”

“இதெல்லாம் ரொம்ப ஓவர் விஷ்ணு”

“நெஜமாத்தான்! உன் கிட்ட இருந்து பாசிட்டிவா பதில் வர ரொம்பப் போராடனும்! அப்படிப் போராடனாலும் உன் வாய்ல இருந்து யெஸ்னு ஒரு வார்த்தை வரவே வராதோன்னு ரொம்ப பயமா இருந்தது ஊர்மி! வெளிய காட்டிக்கலனாலும், உள்ளுக்குள்ள டங்குவார்லாம் டான்ஸ் ஆடிட்டேத்தான் இருந்தது” என அவன் சொல்ல, கலகலத்துச் சிரித்தாள் இவள்.

அவள் சிரிப்பதையே வாஞ்சையுடன் பார்த்திருந்தான் இவன்.

“விஷ்ணு!” என அழைத்தவள் தயக்கமாய்,

“ஏன் விஷ்ணு என் மேல உனக்குக் காதல் வந்தது?” எனக் கேட்டாள்.

“காதலிக்க காரணம் வேணுமா ஊர்மி?” எனப் பட்டெனத் திருப்பிக் கேட்டான் இவன்.

“உனக்கு எப்படி சொல்லிப் புரிய வைக்கறதுன்னு தெரியல விஷ்ணு! என்னை நீ காதலிக்கறேன்னு என் மனசுக்குப் புரியுது! ஆனா என் புத்தி இது எப்படி சாத்தியம்? உனக்குலாம் நல்லது நடக்குமா? இது நனவா கனவான்னு பல கேள்விகள் கேக்குதே!” என்றவளை ஆழ்ந்து நோக்கினான் இவன்.

சொந்த பந்தமில்லாமல் வளர்ந்திருந்தவளுக்கு, தேஜாவைப் போன்றவர்களைக் கடந்து வந்திருந்தவளுக்கு எல்லாவற்றுக்கும் ஒரு நம்பிக்கையூட்டுதல்(reassurence—இந்த வார்த்தைக்குக் கரேக்டான வார்த்தை தெரிஞ்சவங்க சொல்லலாம்) தேவைப்படுவதை உணர முடிந்தது இவனால்.

“ஊர்வசியா நீ அறிமுகமானப்பவே என்னவோ சொல்லத் தெரியாத உணர்வு எனக்குள்ள! ஓர் ஈர்ப்பு! அங்க வந்திருந்தவங்கள விட நீ வித்தியாசமா தெரிஞ்சதாலயா, இல்ல உன்னோட நடவடிக்கைகள் எனக்குச் சுவாரசியத்தக் குடுத்ததனாலையான்னு தெரியல ஊர்மி! நீ என்னை, உன்னை நோக்கி இழுத்த! வெளி அழகினால வந்த ஈர்ப்பு மட்டும்னா, நீ என்னை டீல்ல விட்டுட்டுப் போனப்போ, கோபப்பட்டிருக்காம போடின்னு போய்ருப்பேன்! பார்க்க வச்சி சாப்பிடக் கூடாதுன்னு எனக்கும் சாப்பாடு குடுத்தப் பார்த்தியா, அது என்னை ஹெவியா தாக்கிருச்சு போல! அந்த பார்ட்டிக்குப் பிறகு சில பல மாசமாச்சு நான் உன்னைக் கடந்து போக!”

அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் பொக்கிஷமாகக் கோர்த்து, மனதில் மாலையாக மாட்டிக் கொண்டாள் ஊர்மிளா.

“வியாட்னாம்ல பார்த்தப்ப கோபத்தையும் தாண்டி, உள்ளுக்குள்ள மகிழ்ச்சி வந்தது உண்மை! இந்தத் தடவை உன்னோட பேச்சுத் திறமை, புத்திசாலித்தனம், ஹியூமர், கோபம், இப்படி நிறைய விஷயங்கள் என்னைக் கவர்ந்து இழுத்தது! உன் கூட இருக்கறப்ப, ஐ ஃபீல் அலைவ்! என் பக்கத்துலயே நீ இருக்கனும், என்னோட டீஷர்ட்ல இருந்து டீ கப் வரை எல்லாத்தையும் நீ என் கூட ஷேர் பண்ணிக்கனும்னு தோண ஆரம்பிச்சிருச்சு! நீ கிளம்பப் போற நாள் நெருங்க, நெருங்க, இந்தத் தடவையும் இவள கோட்டை விட்டிறாதேன்னு மண்டைக்குள்ள ஒரு குரல் ஒலிச்சிட்டே இருந்தது! அதான் என் காதல சொல்லிட்டேன்! சொல்லாத காதல் செல்லாதுன்னு எத்தனைப் படத்துல சொல்றான்! அதான் சொல்லிட்டேன்!” என்றவனின் குரலில் காதல் கொட்டிக் கிடந்தது.

அவனது வார்த்தைகளில் மனம் குளிர்ந்து போனது இவளுக்கு.

“இப்போ உன்னோட டர்ன்! சொல்லு ஊர்மி! எனக்கு ஏன் யெஸ் சொன்ன?”

அமைதியாய் அவன் முகத்தைப் பார்த்தாள் இவள். கண்கள் அலைபாய்ந்தன.

“என்னடா?” என்றவனின் குரல் மிக மிக மென்மையாய் ஒலித்தது.

“உன்னைப் பிடிச்சிருக்கு விஷ்ணு! ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு! ஆனா இது காதலான்னு எனக்குத் தெரியல! லவ்னா என்ன? அதுக்கு எதாச்சும் டெபினிஷன் இருக்கா? உனக்கு ஓர் ஆபத்து வந்தா எனக்குத் துடிக்கும்னு தோணுது! அதுக்குப் பேரு லவ்னா, எனக்கு வந்தது லவ்தான் போல! நீ சிரிச்சா எனக்கும் சிரிப்பு வரும்! நீ அழுதா எனக்கும் அழுகை வரும்னு நெனைக்கறேன்! அதுக்கு பேரு லவ்னா, எனக்கு வந்தது லவ்தான் போல! எனக்கு!!! ம்ப்ச்! விஷ்ணு! குழப்பமாவே இருக்கு! ஆனா உன்னைப் போடா நீ வேணாம்னு விட்டுடவும் முடியல! நான் செய்யறது சரியா தவறான்னு ரெண்டு நிலைல நின்னு தவியா தவிக்கறேன் விஷ்ணு! என்னைப் பத்தி, என் கடந்த காலத்தப் பத்திலாம் உன் கிட்ட சொல்லனும்! அதுக்கு அப்புறமும் உனக்கு என்னைப் பிடிக்குமான்னுலாம் பயமா வேற இருக்கு விஷ்ணு!”

தொண்டையடைக்கக் கண்கள் கலங்க அவனை ஏறிட்டாள் ஊர்மிளா.

“ஊர்மி! டேய்! செல்லம்! ப்ளீஸ்! கண் கலங்காதே! என்னால உடனே வந்து உன் கண்ணீரைத் துடைக்கக் கூட முடியாது! ஓ காட்! ஐ ஹேட் திஸ் டிஸ்டன்ஸ்!” என ஆவேசப்பட்டவனைப் பார்த்துக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

Scroll to Top