Urasathe--EPI 4

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
918
-1,981
93
அத்தியாயம் 4


டிமென்ஷியாவின் அறிகுறிகள்:

ஞாபக மறதி

பெயரை மறப்பது, பொருளை தொலைப்பது, குறித்த சந்திப்புக்களை(appointment) மறப்பது, வார்த்தைகளை கண்டுபிடிக்க திணறுவது, ஞாபகம் வைத்துக் கொள்வது, புதிதாக கற்பதில் பிரச்சனை ஏற்படுவது எல்லாம் அதன் அறிகுறிகள் ஆகும். சில சமயங்களில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களையும் கூட மறந்து விடுவார்கள்.




அவன் அதிர்ந்துப் போய் சிலையாக நின்றது சில நொடிகள் தான். மீண்டும் போனை எடுத்துக் காதுக்குக் கொடுத்தவன்,

“ராம்! அழுகைய நிப்பாட்டு. கால்ம் டவ்ன் மேன்!” என அவனை சமாதானப்படுத்த முயன்றான்.

“எனக்கு பயமா இருக்கு. அபி மேலலாம் ரத்தம். கூப்பிட்டா பேசமாட்டறா!” இன்னும் சத்தமாக அழுதான்.

“ராம், ராம்! லிசன்.நான் வந்துட்டே இருக்கேன். பயப்படாத. நீ அபி பக்கத்துல தானே இருக்க?”

“ஆமா, பக்கத்துல தான் இருக்கேன்” தேம்பினான்.

“சரி, நான் சொல்லுறத செய்! அபி மூக்குல கை வச்சு, மூச்சு விடறாளான்னு பாரு. குவிக்” அவனிடம் போனில் பேசியபடியே, லேபில் இருந்த லேண்ட் லைன் போனை நோக்கி ஓடி, அவசரமாக சிலருக்குத் தொடர்பு கொண்டான்.

“வெட்டு சார், மூக்குல காத்து போகுதான்னே தெரியலை” அழுதவாறே சொன்னான் ராம்.

இதயம் படபடக்க

“ராம் கண்ண தொடச்சிக்கிட்டு, குனிஞ்சு அபி நெஞ்சுல காதை வச்சு கேளு. லப்டப் கேக்குதா?” என கேட்டபடியே லேபில் இருந்து வெளியேறி வீட்டிற்குள் ஓடினான்.

“கேக்குது, டப்புடப்புன்னு கேக்குது” என்ற ராமின் பதிலில் தான் இவனுக்கு இதயத் துடிப்பு நார்மல் ஆனது.

“அபி பக்கத்துலயே இரு. நான் இப்போ வந்துடறேன். அபிய பத்திரமா பாத்துக்கோ ராம்.” அவன் சொல்லி முடிக்கவில்லை கால் கட்டானது. மீண்டும் மீண்டும் முயலும் போது, வாய்ஸ் மேசேஜிற்குதான் சென்றது.

“டேம்மீட்!” போனை பேண்ட் பாக்கேட்டில் போட்டவன்,

“சாமிண்ணா!” என உரக்கக் கூப்பிட்டான்.

“சொல்லுங்க தம்பி” என ஓடி வந்தார் அந்த வீட்டின் சமையல்காரர்.

“நான் அவசரமா வெளிய போறேன். வீட்ட பார்த்துக்குங்க. நான் வரும் வரைக்கும் கொஞ்சம் ஹாலுலேயே படுத்துருக்கீங்களா ப்ளிஸ்?”

“படுன்னா படுக்கப் போறேன். இதுக்கு எதுக்கு ப்ளிஸ்லாம் தம்பி!”

சரி என தலை அசைத்து வெளியேற போனவன், ஏதோ ஞாபகமாக மறுபடியும் உள்ளே வந்து பூஜையறையை நோக்கிப் போனான். படமாய் இருந்த தன் அம்மாவிடம் வேண்டிக் கொண்டவன், படத்தின் அடியில் இருந்த சிறிய டப்பாவை கையோடு எடுத்துக் கொண்டு புயலென வெளியேறினான்.

அன்று சதா வந்துப் போனதில் இருந்து ஆறுமுகத்தின் வீடே கஜா புயல் தாக்கியது போல சேதாரமாகிக் கிடந்தது.

அவன் கார் வீட்டை விட்டுக் கிளம்பிய கையோடு, ராகவி சுழன்று ஆடிவிட்டாள். அவள் விட்ட அறையில் மூன்று தரம் சுற்றி பொத்தென கீழே விழுந்தாள் அபி.

ராம் ஓடி வருவதற்குள், அபியைத் தூக்கி தன் பின்னால் நிறுத்தி இருந்தான் ராஜா.

தன் அக்காவைப் பார்த்து முறைத்தவன்,

“இன்னொரு அடி அவ மேல பட்டுச்சு, அக்கான்னு கூட பார்க்காம பொளந்து கட்டிருவேன்” என கத்தினான்.

“டேய் ராஜா, நகருடா! வத்தலும் தொத்தலுமா இருந்துகிட்டு பணக்கார சதா கேக்குதா இவளுக்கு? இன்னிக்கு அடிச்சே கொல்லுறேன் பாரு” வெறியுடன் நெருங்கினாள் ராகவி.

பெற்றவர்கள் இருவரும் சதியாலோசனை நடத்துவதற்கு ஏற்கனவே ரூமின் உள்ளே புகுந்திருந்தனர்.

அருகில் நெருங்கிய சகோதரியைத் தள்ளி விட்டவன்,

“அவன் அப்படி கேட்டா, இவ என்ன பண்ணுவா? போடா வெளியேன்னு சொல்லிட்டா தானே! நான் தான் பேரழகின்னு பந்தா காட்டிட்டு திரியற உனக்கு, அந்த தேஞ்சு போன மூஞ்சிய கூட மடக்கத் துப்பில்ல! வந்துட்டா என் அபிய அடிக்க! போ, போய் ஃபேஸ் மாஸ்க் போட்டுகிட்டு ஃபேஸ்புக்கு பாரு. அதுக்குத்தான் நீ லாயக்கு” ராகவியை இன்னும் வெறி ஏற்றினான் ராஜா.

கோபத்தில் முகம் சிவக்க,

“என்னடா என் கிட்ட வந்து பெரிய ஆம்பள மாதிரி சீன் காட்டுற? அவன் கையப் புடிச்சானே அப்போ எங்க போச்சு உன் வீரம்? அம்மா, ஆத்தான்னு ஆப்படிச்ச குரங்கு மாதிரி கத்துன! உன் வீரம் எல்லாம் பொம்பளைங்க கிட்ட தான்” என இவளும் ராஜாவை வெறுப்பேற்றினாள்.

இவர்கள் சண்டையை குதூகலத்துடன் பார்த்திருந்தாள் அபி. பட்டென ராஜா அவள் புறம் திரும்பவும், முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டாள்.

ராகவி அறைந்திருந்த கன்னத்தைத் தடவிக் கொடுத்தவன்,

“நீ உள்ள போடி!’ என கட்டளையிட்டான்.

அவன் கன்னத்தை தடவும் போது முறைத்தாலும், அசையாமல் நின்றிருந்தாள் அபி. அவனைத் தடுத்தால் அம்பி போல் நின்றிருப்பவன், அந்நியனாய் மாறி போவான். அவனிடம் வாங்கி இருந்த விழுப்புண்கள் இன்னும் ரணமாய் இருக்க, உள்ளுக்குள் கொதித்தாலும் வெளியே அமைதியாகவே காட்டிக் கொண்டாள்.

ராஜா நேர்ட் எனும் வகையில் சேர்க்க கூடிய படிப்பாளி. யாரிடமும் கலந்து பழக மாட்டான். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பான். யாராவது வந்துப் பேசினாலும், நெளிந்து, திக்கி திணறி பேசுவான். அதனாலேயே, மற்ற ரவுடி மாணவர்கள் அவனை அடிப்பதும் பணம் பிடுங்குவதும் என ஒரு வழி செய்து விடுவார்கள். வீட்டில் வந்து அழுதால், நீயெல்லாம் ஆம்பிளை பிள்ளையா என கேலி செய்வார் ஆறுமுகம். பூரணியோ ஒதுங்கிப் போ என ஆறுதல் சொல்லுவார். இப்படி இவன் வளர்ந்து வந்த சூழலில் தான், ஐந்து வயது அழகு குட்டிப் பெண்ணாக அவர்கள் வீட்டுக்கு வந்தாள் அபி.

அந்த வயதில் அபி செய்த ஒரே தவறு, அவளை விட கொஞ்சம் பெரியவனாக இருந்த ராஜாவின் கைப் பற்றிக் கொண்டு கள்ளமில்லாமல் சிரித்தது தான். அவளை இவர்கள் வீட்டில் விட வந்த தூரத்து பாட்டி, ராஜாவைப் பார்த்து சொன்ன ஒரே வார்த்தைதான் இருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது.

“யப்பா சாமி! உன் முறைப் பொண்ணுப்பா இவ. உனக்குத்தான் சொந்தம். பாத்துக்க ராஜா” என அவர் எதார்த்தமாக சொன்னதை இவன் அந்த எட்டு வயதிலேயே பதார்த்தமாக புரிந்துக் கொண்டான்.

அன்றிலிருந்து ஆரம்பித்தது அபிக்கு சட்டேர்டேயின் சாகசங்கள். பள்ளி முடிந்து வருபவன் அவள் பின்னாலேயே தான் சுற்றுவான். அவனுக்கு எல்லாமே அவள் தான் செய்ய வேண்டும். சாப்பிடும் போது தண்ணீர் எடுத்து கொடுப்பது முதல், குளிக்கப் போகும் போது துண்டு எடுத்துக் கொடுப்பது வரை. மற்றவர்களிடம் பேச முடியாததை எல்லாம் அவளிடம் சேர்த்து வைத்து பேசுவான். அவன் பேசும் போது இவள் வேறு எங்கேயாவது பராக்குப் பார்த்தால், பளீரென அறைவான். பயந்து போய் அழுபவளை தடவிக் கொடுத்து அவனே தேற்றுவான்.
 

Author: VanishaAdmin
Article Title: Urasathe--EPI 4
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
918
-1,981
93
அதோடு பூரணியும், ஆறுமுகமும் இவளை என்ன என்று கூட கண்டுக் கொள்ள மாட்டார்கள். தங்கள் மேல் சுமத்தப்பட்ட சுமையாகவே அவளை பார்த்தனர். ஆசையாக அவள் அத்தை என அருகே வந்தால், இந்தா இந்த துணியை துவைக்கப் போடு என வேலை சொல்லி அனுப்புவார் பூரணி. சொந்தப் பிள்ளைகள் பேசுவதையே கேட்க பொறுமை இல்லாமல், வியாபாரம் என பறப்பவர்கள் கணவன் மனைவி இருவரும். அபியிடம் பேச மட்டும் நேரம் இருக்குமா?

சொந்தக்காரர்களுக்கு பயந்து பள்ளிக்கு அனுப்பினாலும், வீடு வந்து அவள் வயதுக்கு ஏற்றது போல சிறு சிறு ஒத்தாசைகள் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சமையல் அறை பக்கத்தில் சிறு ரூம் அவளது. படுக்கப் பாயும், உடுக்க சில செட் மாற்றுடைகள் மட்டுமே அங்கே இருக்கும். அவளுக்கு குளிருமே என தன் போர்வையைக் கொண்டு வந்து கொடுக்கும் ராஜா, அவன் கூப்பிட்ட மறுநொடி ஆஜராகாவிட்டால் அதே போர்வையைக் கிழித்து நார் நாராக்கி விடுவான். பாசத்தை அபி மீது பொழிபவன், கோபம் வந்தால் நெருப்பென சுட்டெரிப்பான்.

ராஜாவின் அட்டகாசத்துக்கும் ஒரு தற்காலிக முடிவு வந்தது. ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்த சொந்தக்கார பையனுடன் சேர்ந்து விளையாடினாள் அபி. கோபமாக பார்த்திருந்த ராஜா, வீட்டில் எல்லோரும் தூங்கிய பிறகு அபியின் அறைக்கு வந்தான். தூங்கியவளை எழுப்பி, அவள் தோள் பட்டையில் வெறி பிடித்தவன் போல் அழுந்தக் கடித்தான். அவள் கத்தி கதறியும் விடவில்லை.

“நீ எனக்கு மட்டும்தான். எதுக்கு அவனோட சேர்ந்து விளையாடுன? இனிமே விளையாடுவியா? சொல்லு அபி விளையாடுவியா?” அவள் கதறலில் ஓடி வந்த ஆறுமுகம் அடித்து தான் அவனை விலக்கி விட்டார். இந்த ரத்தக்காய சம்பவம் நடந்த போது, அபிக்கு வயது எட்டு. சிறுபிள்ளைத்தனம் என ராஜா செய்ததை எல்லாம் கண்டுக் கொள்ளாமலும், அபி தன்னிடம் சொல்லும் எதையும் அசட்டையாகவும் எடுத்துக் கொண்டிருந்த பூரணி அச்சம்பவத்தில் ஆடிப் போய்விட்டார். அந்த வாரமே, அவனை மூட்டைக் கட்டி ஹாஸ்டலில் சேர்த்தார்கள்.

“இந்த மாதிரி கிறுக்குத்தனம் இனிமே பண்ண, அபிய எங்கயாவது கண் காணாத இடத்துல விட்டுருவோம்” என மிரட்டி தான் அங்கே விட்டு விட்டு வந்தார் பூரணி. அவர் மிரட்டலுக்கு பலன் இருந்தது. லீவுக்கு வருபவன் பெற்றவர்களுக்கு தெரியாமல் அபியிடம் வம்பு வளர்க்கும் அளவு தேறி இருந்தான். அதன் பிறகு ராமின் வருகை அபியை நெருங்க விடாமல் அவனைப் படுத்தியது.

அவள் வயதுக்கு வந்ததும், அவனின் உரிமைப் பார்வைகள் விரசமாக மாறுவதைக் கண்டு கொண்ட அபி, அவன் இருக்கும் இடத்தில் தான் இல்லாமல் பார்த்துக் கொண்டாள். எவ்வளவு கவனமாக இருந்தும் அவனின் கைகளில் பல சமயங்களில் மாட்டிக் கொள்வாள். அவளைப் பிடித்ததும் அவன் கை முதலில் போவது அவள் கூந்தலுக்குத்தான். அவள் ஓடி விடாமல் இருக்க கூந்தலை சுருட்டி தன் கைகளுக்குள் பிடித்துக் கொள்வான் ராஜா.

“அபி, பட்டு மாதிரி இருக்குடி உன் கூந்தல். என்ன கண்டா ஏன்டி ஓடி ஒளியற? உன்னை பார்க்கறதுக்கு மட்டும்தான் நான் லீவுக்கு வரேன். என்னைப் பார்த்து ஒளியாத ப்ளீஸ். எனக்கு மனசு கஸ்டமா இருக்கு. என்னை ஏன்டி புரிஞ்சிக்க மாட்டற? சரி விடு, இந்த தடவை உனக்கு, ஹேர் க்ளீப் நிறைய வாங்கிட்டு வந்துருக்கேன். அசையாம நில்லுடி, என் செல்ல அபி!”

திமிருபவளை ஓர் அறை அறைந்து அவனே க்ளிப்பை மாட்டி விடுவான். அழாமல் முறைத்தப்படியே நிற்பாள் அபி. அவள் அழுதால் அவனும் கூட சேர்ந்து அழுவான், இன்னும் இமோஷனல் ஆவான். இன்னும் நெருக்கத்தைக் கூட்டுவான். அதற்காகவே அவன் முன்னே அழ மாட்டாள் அபி. பல வருட அனுபவத்தில் அவனை பூரணிக்கு மேலாக அறிந்து வைத்திருந்தாள்.

தனக்கு நடக்கும் கொடுமையை பூரணியிடம் சொல்லி விட மனசு துடிக்கும் அபிக்கு. அவளிடம் இருந்து அவனை பிரித்து ஹாஸ்டலுக்கு அனுப்பியது போல பூரணி நடவடிக்கை எடுப்பார் தான். ஆனால் இன்னும் அவனின் வெறி கூடுமே. சந்திக்கவே முடியாத அளவுக்கு சந்திர மண்டலத்துக்கா ராஜாவை அனுப்பி விடுவார்கள்? அவர்கள் பெற்ற மகன் எப்படியும் ஒரு நாள் அந்த வீட்டுக்குத் தானே திரும்ப வருவான்! அதனால் தன் விதியை மாற்ற அவளே போராட துணிந்தாள்.

அவன் அடுத்த லீவுக்கு வரும் போது, அவன் ரசித்த முடியை குதறி வைத்திருந்தாள் அபி. அவனிடம் இருந்து தப்பிக்கவே, ஆண்கள் மாதிரி பேண்ட் அணிய ஆரம்பித்தாள். குறைவாக உண்டு உடம்பை ஒல்லியாகவே வைத்திருந்தாள். அவன் பிடிக்க வருவதற்குள் மானென ஓடி விடுவாள். ராமை தனக்கு காவலாக வைத்துக் கொண்டே திரிவாள். அவன் லீவ் முடிந்து போகும் வரை நரகத்தில் இருப்பது போல ஒவ்வொரு நொடியையும் கழிப்பாள் அபி.

வளர வளர அவளது ஒதுக்கத்தையும், தான் ரசிக்கும் விஷயங்களை அவள் அழிப்பதையும் கண்டு கொண்டவன், அவளைத் தொல்லை செய்வதை நிறுத்தினான். தன் சொத்தை யார் களவாடி விடுவார்கள் எனும் எண்ணத்தில் விட்டு வைத்தான் அவளை.

படித்து முடித்து வந்தவன், பெற்றவர்கள் முன் கவனமாக இருந்தாலும், தாயறியாத சூலா? பூரணி அவன் ஆசையைக் கண்டு கொண்டது மட்டுமில்லாது, அபியை நல்லதம்பிக்கு திருமணம் செய்து கிராமத்துக்கு அனுப்பவும் முடிவு எடுத்தார். அதற்குள் தான் சதா புயல் அவர்கள் வீட்டை மையம் கொண்டு விட்டது.

மறுநாள் காலையே அபியை கிராமத்துக்கு கொண்டு சென்று திருமணத்தை முடிப்பது என முடிவெடுத்து ரூமிலிருந்து வெளி வந்த தம்பதியினர், ஹாலில் சண்டையிட்டுக் கொண்டிருந்த பிள்ளைகள் இருவரையும் கடுப்புடன் பார்த்தனர்.

தாயின் அருகே சென்ற ராஜா அவர் கையைப் பற்றிக் கொண்டு,

“அம்மா, அபிய எனக்கு இன்னிக்கே கல்யாணம் பண்ணி குடுங்க. அவ இல்லாம என்னால இருக்க முடியாது. கண்ட கண்ட டாக்லாம் அவள கட்டிக்கறேன்னு கேக்குறப்போ எனக்கு ரத்தம் கொதிக்குது. எப்போ இந்த வீட்டுக்குள்ள வந்தாளோ, அப்ப இருந்து அபி என் ப்ராபெர்ட்டி. ஐ வாண்ட் ஹேர். ஷி இஸ் மைன்! ஒன்லி மைன்” என சொன்னான்.

பேயடித்தது போல முகம் வெளிறினார் பூரணி. கணவனை என்ன செய்வது இப்போது என்பது போல பார்த்தார். கண்ணை மூடி திறந்து பூரணியை அமைதியாக இருக்கும்படி ஜாடை செய்தவர் மகனிடம் திரும்பி,

“ராஜா, உனக்கு இன்னும் கல்யாணம் செஞ்சிக்கற வயசு வரலடா. இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்” என அமைதிப்படுத்தினார்.

“ஏன்? அதுக்குள்ள என் அபிய எவனாச்சும் கொத்திக்கிட்டுப் போறதுக்கா? நோ வே! ஷி இஸ் மைன்”

“எல்லாரும் ஏன்டா, அபி அபின்னு ஆடறீங்க? எலும்புக்கூடு கூடலாம் குடும்பம் நடத்த முடியாதுடா! மெடிக்கல் காலேஜில வச்சு பாடம் வேணா நடத்தலாம்” நக்கலாக சொன்னாள் ராகவி.

“அவள வச்சு பள்ளி பாடமோ இல்ல பள்ளியறை பாடமோ நான் நடத்திக்கறேன், அது என் பாடு. நீ போய் யூடியூப்ல ‘மங்கூஸ் மண்டையனை மயக்குவது எப்படி’ன்னு டிப்ஸ் ஏதாச்சும் குடுத்துருந்தாங்கனா பார்த்துப் படி. வேஸ்ட்டு பீசு!” என திட்டினான்.

“ப்பா, பாருங்கப்பா இவன! எப்படிலாம் பேசுறான்னு” கண்ணைக் கசக்கினாள் ராகவி.

“ராஜா! அக்கான்னு ஒரு மரியாதை வேணா? போ, போய் வேற வேலை இருந்தா பாரு” என்றார் ஆறுமுகம்.

“நீங்க பேச்சை மாத்தாதிங்கப்பா. எனக்கு அபிய கட்டிக் குடுங்க. அந்த அசிங்கம் புடிச்சவன் வந்து ஏதாவது பிரச்சனை பண்ணுறதுக்குள்ள எனக்கே எனக்கா அபி வேணும்” என எதிர்த்துப் பேசினான் ராஜா.

ஆறுமுகத்துக்குக் கோபம் வந்துவிட்டது. ஓங்கி விட்டார் ஓர் அறை.

“கேடு கெட்டவனே! நானும் உங்கம்மாவும் உன்னை எப்படிலாம் வாழ வைக்கனும்னு கனவு கண்டுகிட்டு இருக்கோம்! இவன் என்னன்னா அபி, ஆட்டுக்குட்டின்னு பொலம்புறான். இனிமே அவ பேச்ச எடுத்த, கொலை தான் விழும். போயிரு”

கன்னத்தைப் பிடித்தப்படி அவரைப் பார்த்தவன்,

“நீங்க ரொம்ப தப்பு பண்ணுறீங்க மிஸ்டர் ஆறுமுகம்! ஒழுங்கா இருந்த என்னை அடிச்சு உசுப்பேத்தி விட்டுட்டீங்க. நீங்களே வந்து அபியை கட்டிக்கடான்னு என்னை கெஞ்சுவீங்க. கெஞ்ச வைப்பேன்” சூளுரைத்தவன் கோபமாக தன் அறைக்கு சென்றான்.

“என்னங்க, தோளுக்கு மேல வளந்த புள்ளய போய் அடிச்சுப் புட்டீங்க?”

“இனி ஒரு வார்த்தை அவனுக்கு சப்போர்ட்டுக்கு வந்த, உன்னையும் அப்பிப்புடுவேன் அப்பி. சின்ன வயசுலயே கண்டிச்சி வளர்த்துருக்கனும். கொஞ்சி கொஞ்சி கெடுத்து குட்டி சுவராக்கிட்டு, என்னங்க நொன்னங்கன்னுட்டு. மனுசனே நினைச்சது ஒன்னு கிடைச்சது புண்ணுன்னு நொந்து போய் கிடக்கான். இவ வேற!” கத்தியவர் செறுப்பை மாட்டிக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

அதற்குப் பிறகு நடந்த விபரீதங்கள் எதுவும் ராகவிக்கோ அவளைப் பெற்றவர்களுக்கோ தெரியாமல் போனது.

கார் சதாவின் கையில் சீறிப் பாய்ந்தது. ஆறுமுகத்தின் வீட்டை அடைந்தவன், படபடவென கதவைத் தட்டினான். காலிங் பெல்லையும் பொறுமையற்று அழுத்தினான். சில பல நிமிடங்களில் வீடு வெளிச்சமானது.

கதவைத் திறந்த ஆறுமுகம் சதாவை அங்கே பார்த்து அதிர்ந்தார்.

“என்ன தம்பி இந்த நேரத்துல? அதுதான் ரெண்டு நாள் டைம் குடுத்திருக்கீங்களே! இப்போ எதுக்கு நடு ராத்தியில வந்து நிக்கறீங்க! எதா இருந்தாலும் காலையில பேசிக்கலாம். இப்போ போங்க” என பதட்டத்துடன் அவனை வெளியேற்றப் பார்த்தார்.

அவரைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவன்,

“அபி எங்கே?” என பதட்டமாக கேட்டான்.

“அவ தூங்கறா! இது என்ன அநியாயமா இருக்கு, அர்த்த ராத்திரியில வயசு புள்ளய வந்து தேடறது! நாங்க இந்த ஏரியாவுல மானம் மரியாதையா வாழற ஆளுங்க தம்பி” என சத்தம் போட்டார் ஆறுமுகம்.

அவர் சத்தத்தில் வீட்டில் உள்ள எல்லோரும் ஹாலுக்கு வந்திருந்தனர். அதில் ராம், அபி, ராஜா மூவரும் மிஸ்ஸிங் என்பதைக் கண்டு கொண்டான் சதா.

“அபி ரூம் எங்க?” உள்ளே புகுந்து அலசினான் சதா.

“ஏ, என்னப்பா என்ன பண்ணுற? அவருதான் வெளிய போக சொல்லுறாரு இல்ல. போப்பா, இல்லைனா போலிச கூப்புடுவோம்” அர்த்த ராத்திரியில் அபியைத் தேடி வந்திருக்கும் இவன், இனி ராகவி பக்கம் தலை சாய்க்க மாட்டான் என்ற கடுப்பில் சத்தம் போட்டார் பூரணி.

வேக எட்டுக்களுடன் ஆறுமுகத்தை நெருங்கியவன், அருகில் இருந்த பூச்சாடியை உடைத்து, கண்ணாடி சில்லை அவர் கழுத்தில் லேசாக அழுத்தினான். ரத்தம் குபுக்கென கசிந்தது.

“இப்பவாச்சும் அவள என் கண்ணுல காட்டுறீங்களா இல்ல இன்னும் கிழிக்கவா?” ஆக்ரோஷமாகக் கேட்டான். ஆறுமுகம் திடீரென நடந்த தாக்குதலில் நடுநடுங்கிப் போனார்.

அவன் அதிரடியில் ஆடிப் போன பூரணி,

“இப்படி வாங்க சார். அவ சமையல் ரூமுக்கு பக்கத்து அறையில இருக்கா” என உடம்பைத் தூக்கிக் கொண்டு ஓடினார். அவர் பின்னாடியே ஓடினான் சதா. சாத்தியிருந்த ரூமின் கதவை அவசரமாகத் தட்டினான்.

“ராஜா டேய்! போயிருடா. மறுபடியும் அப்பிய தொல்லை பண்ணாத. அண்ணன்னு கூட பாக்க மாட்டேன். கையில கத்தி வச்சிருக்கேன். குத்திருவேன் குத்தி. போயிரு!” உள்ளே இருந்து ராம் அழுகுரலில் கத்தினான்.

“ராம், நான் வெட்டு சார் வந்துருக்கேன். கதவ திற”

ஓடி வந்து பட்டென கதவைத் திறந்து விட்டான் ராம். உள்ளே நுழைந்த சதா, அங்கு கண்ட காண கூடாத காட்சியில் அதிர்ந்துப் போய் நின்றான்.

தொடரும்..
 
  • Like
Reactions: Thani and yasotha

Thani

Active member
Nov 27, 2025
144
-39
43
ராஜா என்னடா பண்ணினாய் அபியை .