Sorkam Madhuvile--EPI 9

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
932
-1,941
93
அத்தியாயம் 9

நீதானே என் பேருந்து பயணத்தின் ஜன்னல் இருக்கை!




மனோகர் ஓய்வாய் படுத்திருக்க, அவர் பார்த்துக் கொண்டிருந்த தோட்ட வேலையைப் பிடுங்கி செய்து கொண்டிருந்தாள் மதுஷாலினி. கீழே கொட்டிக் கிடந்த காய்ந்த சருகுகளைக் கூட்டி அள்ளியவள், பூச்செடியின் கீழ் முளைத்திருந்த புற்களைப் பிடுங்க ஆரம்பித்தாள்.

“பாப்பா!”

இவர் எத்தனைத் தடவைச் சொன்னாலும் அப்படிக் கூப்பிடுவதை நிறுத்த மாட்டார் என எண்ணி பெருமூச்செறிந்தவள் மேலே நிமிர்ந்து பார்த்து,

“என்ன ஆண்ட்டி?” எனக் கேட்டாள்.

“முருங்கைக்கீரை கொஞ்சம் பறிச்சு குடுக்கறியா? தேங்காப்பூ, கொஞ்சம் நெத்திலி போட்டு பிரட்டிடலாம்(பொரியல்).”

“முருங்கைக்காயும் இருக்கு ஆண்ட்டி! கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, பறிச்சுத் தரேன்” என்றவள் வீட்டிலிருந்து நாற்காலி கொண்டு வந்து அது மேல் ஏறி பறித்தாள்.

இவர்கள் பயிரிட்டிருக்கும் கீரைகள், வாழை, பலா என அடிக்கடி அகிலாவிடம் கொண்டு போய் கொடுப்பாள் மதுஷாலினி. அந்த வீட்டில் இருந்தவர்களில் இவளுக்கு அகிலாவை ரொம்பவே பிடித்தது! வீட்டில் ஆட்கள் இருந்தால் அவள் வர விருப்பப்படுவதில்லை என அறிந்து கொண்டு, யாரும் இல்லாத போது இவளை அடிக்கடி சாப்பிட அழைப்பார் அகிலா. பல தடவைகள் இவள் மறுத்தாலும், சில தடவை அழைப்பை ஏற்றுக் கொள்வாள். என்னவோ அகிலாவின் கை மணம் இவளுக்கு அவ்வளவு பிடித்தது. அம்மா கையால் சாப்பிட்டால் இப்படித்தான் இருக்குமோ என எண்ணிக் கொள்வாள் பெண். இத்தனைக்கும் கோழி, ஆடு, மீன் என இருக்காது. முட்டை அவித்து அதை மீண்டும் வறுத்து குருமா செய்வார். நிறைய காய்கறிகள் சேர்த்துப் போட்டு சாம்பார் வைத்திருப்பார். சில வேளைகளில் ரசம் வைத்து, கருவாடு பொரித்திருப்பார். சுடச் சுட அவர் கையால் பரிமாறப்படும் போது உணவு தேவாமிர்தமாய் இறங்கும் இவளுக்கு.

ரசித்துச் சாப்பிட்டு,

“ஆண்ட்டி! செம்மையா சமைக்கறீங்க நீங்க! எது செஞ்சாலும் ருசியா இருக்கு” எனக் கண்கள் மின்ன சொல்பவளை வாஞ்சையாய் பார்ப்பார் அகிலா.

அந்தத் தாயில்லா பெண் மீது, தாயன்பு சுரந்தது இவருக்கு.

“ஆண்ட்டி! இந்தாங்க முருங்கைக்காயும் கீரையும்”

அவர்கள் வீட்டுக் கதவருகே வந்து நின்று அழைத்தவளை, வீட்டுக்குள் வர சொன்னார் அகிலா.

“வேலை இருக்கு ஆண்ட்டி!”

“உனக்கு என்னைக்குத்தான் வேலை இல்ல! என் மகன் மாதிரியே வேலை, வேலைன்னு கிடக்க நீ! அஞ்சு நாள் காலேஜூக்கு போற! மத்த ரெண்டு நாள் அம்மாயி வீட்டுல உதவி, தோட்ட வேலை, வீட்டு வேலைன்னு நிக்காம சுழலுற!”

“நீங்க மட்டும் படுத்து படுத்து ஓய்வெடுக்கறீங்களாக்கும்! போங்க ஆண்ட்டி! நானாச்சும் யங்ஸ்டர்! தெம்பிருக்கு உடம்புல! நீங்க வயசானக் கட்டை! இப்படி ஓவர்டைம், வீட்டு வேலைன்னு நிக்காம சுழண்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்?”

“யார பார்த்து வயசானக் கட்டைன்னு சொன்ன? வரியா ஓடிப் போவோம்! யாரு சின்னக் குட்டி, யாரு சிறுத்தைக் குட்டின்னு அந்தப் போட்டில தெரிஞ்சுடும்!” எனக் கீரையைக் கழுவியபடி இவளை வம்பிழுத்தார் அகிலா.

வீட்டுக்குள் நுழைந்து கிளாசில் தண்ணீர் ஊற்றிக் குடித்தபடியே,

“உங்க கூட எதுக்கு நான் ஓடிப் போகனும்? அதுல என்ன யூஸ்? ஹூம்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க! உங்க மகன் கூட வேணும்னா ஓடிப் போறேன்” எனச் சொல்லிக் கண்ணடித்தாள் இவள்.

“நீ கூட்டிட்டு ஓடத்தானே நாங்க காவியமா புள்ள பெத்து, ஓவியமா வளத்து வச்சிருக்கோம்!” என நக்கலடித்தார் அகிலா.

“உங்க காவியக் கண்ணன, ஓவிய மன்னன நீங்களே பொத்திப் பொத்தி வச்சிக்கோங்க! அகிலாத்தான் அகிலமும்னு சொல்ற அம்மா கோண்டுலாம் எனக்கு செட் ஆகாது! மணாளனே மங்கையின் பாக்கியம்ங்கற மாதிரி, மதுஷாலினியே மணாளனின் பாக்கியம்னு எவன் சொல்றானோ, அவனுக்கு நான் தாலி கட்டி என் வீட்டோட மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்து வச்சிக்குவேன்!”

அவளது பேச்சில் அப்படி ஒரு சிரிப்பு அகிலாவுக்கு!

“எவன் உன் கிட்ட மாட்டிட்டு முழிக்கப் போறானோ தெரில போ” என்றவர், கையோடு ஒரு பாத்திரத்தில் கீரை பொரியலைப் போட்டுக் கொடுத்தார்.

“இந்தா! வீட்டுக்குக் கொண்டு போய் அப்பாவோட சாப்பிடு! அவர் கூட இருந்தா உனக்கு யாரையும் கண்ணுக்குத் தெரியாது! நீ என் மவன அம்மா கோண்டுன்னு சொல்றியா! போடி அப்பா பைத்தியம்”

“இருந்துட்டு போறேன்!” எனச் சிரித்தவள், அஸ்மிதா அவள் அறையில் இருந்து வெளியே வரவும் கிளம்பி விட்டாள்.

“அவட்ட மட்டும் கெக்கேபெக்கேன்னு சிரிப்பீங்கம்மா நீங்க”

“உன் கிட்டயும் கேக்கேபெக்கேன்னு சிரிக்க ஆசைத்தான். நீ எங்க அந்த ரூம விட்டு வெளிய வர? ஒரு நாள் லீவுல வீட்டுல இருக்கற அம்மா தனியா வேலைப் பார்க்கறாங்களேன்னு அக்கறை எதாச்சும் இருக்கா? துவைச்சு வச்சத் துணிய கொண்டு போய் காய வை அஸ்மி. எப்ப பாரு அந்தப் போனுல உனக்கு என்னத்தான் வேலையோ! தூக்கி அடுப்புல போடறேன் பாரு அதை” என அம்மா, மகள் இருவரின் பேச்சுச் சத்தம் காதில் விழ, விடுவிடுவென வீட்டுக்குள் நுழைந்து விட்டாள் இவள்.

அன்றைய மதிய உணவு நேரத்தின் போது,

“ஷாலு! இன்னிக்கு உனக்கு லாப்டாப் வாங்க போகலாம்னு இருக்கேன்டா! அஞ்சு மணி போல நாம ரெண்டு பேரும், டவுன்ல விஜய் வேலைப் பார்க்கற சூப்பர் மார்க்கேட் கிட்ட போய் நிப்போம். கம்ப்யூட்டர் கடைக்கு விஜய் நம்ம கூட வரேன்னு சொல்லிருக்கான்” என்றார் மனோகர்.

“விஜய் கிட்ட எப்பப்பா பேசனீங்க?”

“நேத்து நைட்டு பேசிட்டேன்! உங்கண்ணாங்கத்தான் சொன்னானுங்க, கம்ப்யூட்டர் சம்பந்தமா எதுனாலும் விஜய கேட்டுக்க சொல்லி! அவனுக்குத்தான் உள்ளுக்குள்ள பார்ட்டுலாம் என்ன, எப்படின்னு எல்லாம் தெரியுமாம்! முதல்ல போனுத்தான் வாங்கலாம்னு நெனைச்சேன்! நீதான் என்னமோ அசைண்டுமெண்டு இருக்கு! லப்டாப் இருந்தா ஈசியா இருக்கும்னு சொல்ற! அடுத்த மாசம் போன் பார்க்கலாம்டா!”

“சரிப்பா! மாமா போன் வாங்கித் தரேன்னாங்க! நான் வேணாம்னு சொல்லிட்டேன்பா”

“வேணாம்டா பாப்பா! உங்க அம்மா போனதுல மலைச்சு நின்ன எனக்கு, நாங்க இருக்கோம் தோள் குடுக்கன்னு காட்டனவங்கடா உன் அம்மாயியும், மாமாவும்! அந்தப் பாசத்துக்கும், பரிவுக்கும் வேற எதுவுமே ஈடாகாது! பாசத்துல எப்ப பணம் கலக்குதோ, அப்போ தேவையில்லாத பிணக்குலாம் வர ஆரம்பிச்சிடும்! உன் மாமான்காரன் காலேஜ்ல சேர்ந்தப்ப, நாம இந்த வீட்ட கட்டிட்டு இருந்தோம்! போட்ட பட்ஜெட்ட விட, கண்ட்ரெக்டர் சீனன் செலவ இழுத்து விட்டுட்டான்! என்ன பண்றதுன்னு ரெண்டு பேரும் தவிச்சு நின்னோம். உங்க அம்மாயிக்கு மகனுக்கு செலவு செய்யறதா, இல்லை மகளுக்குக் கை குடுக்கறதான்னு போராட்டம். வச்சிருந்த நகைலாம் அடகு வச்சி, அவனுக்கும் காலேஜ் பீஸ் கட்டி, நமக்கும் பணம் குடுத்தாங்க. கொஞ்ச வருஷத்துல நாம பணத்தத் திருப்பிக் குடுத்துட்டோம்! ஆனாலும் உங்க அம்மா சைட்டு சொந்தக்காரங்க, எங்கள ஒரு மாதிரி பேசிட்டாங்க! கட்டிக் கொடுத்தும், இன்னும் அம்மா வீட்டுல காசு பீராஞ்சிட்டு இருக்கா பாருன்னு! உங்க அம்மா உடஞ்சுப் போய்ட்டா! அதுக்குப் பிறகு, ஒத்த வெள்ளி உங்க அம்மாயி கிட்ட இருந்து வாங்கிக்க மாட்டா! இவத்தான் போறப்பலாம் அவங்களுக்கு காசு குடுத்துட்டு வருவா! அம்மா இப்போ நம்ம கூட இல்லைனாலும், நாம அவளோட தன்மானத்த மதிக்கனும்மா! அம்மாயி கிட்ட பேத்திங்கற உரிமைல நீ சின்ன சின்ன சாமான்லாம் வாங்கிக்கறது தப்பில்ல! ஆனா இது போல நூத்துக் கணக்குல வர செலவெல்லாம் உனக்கு அப்பாத்தான் செய்வேன். அப்பா இல்லைனா, அண்ணாங்க செய்வாங்க! புரிஞ்சதா?”
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 9
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
932
-1,941
93
“அதென்ன அப்பா இல்லைன்னுலாம் பேச்சு! கடுப்பக் கிளப்பாதீங்க மனோகர்!” எனக் காண்டானவளை சமாதானப்படுத்துவதற்குள் தாவு தீர்ந்து விட்டது இவருக்கு.

“சின்னப் புள்ள மாதிரி, இன்னும் அடிக்கடி என் கிட்ட கோச்சிக்கற நீ”

“எனக்குப் புடிச்சவங்க கிட்ட இப்படித்தான் சண்டைப் பிடிப்பேன், கோச்சிப்பேன்! அத நீங்கல்லாம் தாங்கிட்டுத்தான் ஆகனும்!” என்றவள் பாத்திரங்களைக் கழுவிப் போட ஆரம்பித்தாள்.

மாலையில் இவர்கள் இருவரும் கிளம்பி, பைக்கில் டவுனுக்குப் போனார்கள். விஜய் வேலைப் பார்க்கும் சூப்பர்மார்க்கேட் வெளியே காத்திருந்த நேரம்,

“இந்தப் பையன நெனைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு ஷாலு! காலேஜ் போறான், பார்ட் டைம்ல வேலைப் பார்க்கறான், வீட்டுலயும் மத்த வேலைகளுக்கு ஹெல்ப் பண்ணறான். வயசுக்கு மீறின பக்குவம்! உன் அண்ணனுங்க என்னன்னா, கவர்மெண்ட் குடுக்கற லோன் பணத்தை முடிச்சிட்டு, அப்பப்ப என் கிட்ட வேற காசுக்கு வந்து நிக்கறானுங்க! கிட்டத்தட்ட இந்தப் பையன் வயசுதானே மகேஷூக்கும், மகேனுக்கும்! இவன மாதிரி கொஞ்சம் பொறுப்பா இருக்கலாம்” என மனதில் உள்ளதை மகளிடம் பகிர்ந்து கொண்டார்.

“ஒருத்தங்கள புகழனும்னா உடனே இன்னொருத்தங்கள கீழ இறக்கிக் காட்டாதீங்கப்பா! அண்ணா ரெண்டு பேருமே யூனிவெர்சிட்டி ஹாஸ்டல்ல தங்கிருக்காங்க! அங்க இருந்து கிட்டு எப்படி வேலைக்குலாம் போக முடியும்? அதோட விலைவாசி வேற ஏறிப் போச்சு! கவர்மெண்ட் குடுக்கற இத்துனூண்டு காசுல சமாளிக்க முடியுமா?” என அண்ணன்களுக்காகச் சண்டைக்கு வந்தாள் மதுஷாலினி.

“அவனுங்கள எதாச்சும் சொல்லிட்டா உனக்குப் பொத்துட்டு வந்திடுமே கோபம்! சம்பாதிக்க சொல்லல ஷாலு! கொஞ்சம் செலவ கொறச்சிக்கலாம்ல!”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அவசரமாக வந்து சேர்ந்தான் விஜயவேல்.

“லேட்டாக்கிட்டனா அங்கிள்?”

“இல்லப்பா! நாங்களும் இப்போத்தான் வந்தோம்! உனக்கு எவ்ளோ நேரம் டைம் குடுத்தாங்க?”

“ஓன் ஹவர் கேட்டிருக்கேன் அங்கிள். நாம வாங்கி முடிச்சதும், திரும்பி வேலைக்கு வந்திடனும்” எனச் சொல்லிப் புன்னகைத்தான்.

பக்கத்தில் நின்றிருந்தவளைப் பார்த்து,

“ஹாய் மதுஷாலினி” என்றான்.

யாரும் இல்லாத போது மது என்பவன், பக்கத்தில் ஆட்கள் இருந்தால் முழு பெயரையும் நீட்டி முழக்குவான். ஷாலு என மற்றவர்கள் போல் கூப்பிட்டதேயில்லை.

புன்னகையுடன் தலையாட்டினாள் அவள். இவர்களது சண்டை ஏற்கனவே மண்டையைப் போட்டிருந்தது! ஆகவே எப்பொழுதும் போல பேசிக் கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். ஆனாலும் அடிக்கடி எதாவது ஒரு காரணத்துக்காக பாப்பா மேடம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வதும், இவன் காலில் விழாத குறையாக சமாதானப்படுத்துவதும் நடந்து கொண்டுதான் இருந்தது.

சூப்பர் மார்க்கேட் தாண்டி அடுத்தத் தெருவில் கட்டப்பட்டிருந்த கடை வரிசையில் இருந்தது அந்தக் கணிணி விற்கும் கடை. நடந்தே போனார்கள் மூவரும். கடை உள்ளே இவர்கள் நுழைய, அந்தக் கடை ஓனரான சீனர் புன்னகையுடன் விஜையை வரவேற்றார்.

“அடிக்கடி வந்து புது கம்ப்யூட்டர் எல்லாம் பார்த்துட்டு போற! எப்போத்தான் வாங்க போற நீ?” என அவர் கேட்க, சிரித்து மழுப்பினான் இவன்.

அதன் பிறகு இவர்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். இவள் கடையைச் சுற்றி வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் கணிணிகளையும், மடிக் கணிணிகளையும், கை தொலைபேசிகளையும் பார்வையிட, ஆண்கள் மூவரும் பேச ஆரம்பித்தார்கள்.

“அங்கிள்! ப்ராண்ட் வச்ச லாப்டாப் வாங்கறத விட, சொந்தமா இவங்களே அசேம்பள் பண்ண லாப்டாப் வாங்கலாம். முன்னது விலை அதிகம், பின்னது விலை மலிவு! அதோட சொந்தமா அசெம்பள் பண்ணற மடிக் கணிணில நாமளே, நமக்குத் தேவையான மெமரி அளவு, ஸ்பீட் எல்லாம் தேவைப்படறப்ப வாங்கி மாத்திக்கலாம். இந்த ஓனர் அந்த மாதிரி லாப்டாப்புக்கும், ப்ராண்டேட் லாப்டாப்புக்கு குடுக்கற மாதிரி வாரண்டி குடுப்பாரு!” எனச் சொல்லி, அது போன்ற மடிக் கணிணிகளைக் காட்டச் சொன்னான் விஜய்.

மிகத் தீவிரமாகக் கணிணியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவனை, மென்னகையுடன் பார்த்தாள் மதுஷாலினி. இந்தத் தீவிரமும், தீர்க்கமும், திடமும் இவளிடம் பேசும் போது மட்டும் காணாமல் போய் விடும் விந்தையை எண்ணி வியப்பாய் இருந்தது இவளுக்கு. விஜயின் முகமும், குரலும் இவளிடம் பேசிப் பழகும் போது மென்மையைப் பூசிக் கொள்ளும் அதிசயத்தை இவளே உணர்ந்திருக்கிறாள். முதன் முதலாய் இவளைப் பார்த்தப் போது குரலை உயர்த்திப் பேசி இருக்கிறான். அதன் பிறகு அப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை.

ரெய்ன் வித் ராஜா சண்டைக்குப் பிறகு, பேருந்து நிலையத்தில் இவள் முன் விஜய் வந்து நின்ற தினத்துக்குப் போனது இவள் மனம்.

“மது!!! ஐ லவ்..” என விஜய் தயங்கி நிற்க, அவன் கண்களையே பயமில்லாமல் நோக்கினாள் இவள்.

உள்ளுக்குள், எங்கே ஐ லவ் யூ எனச் சொல்லி விடுவானோ என்று அல்லு விட்டது மதுஷாலினிக்கு. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

‘இப்படியே செக்குரிட்டி செர்விஸ் வேலையைப் பார்த்துட்டு இருக்க வேண்டியதுதானேடா! இப்ப எதுக்கு ஐ லவ்னு வந்து நிக்கற! எனக்கு லவ்வெல்லாம் பண்ண வருமோ, வராதோன்னு கூடத் தெரியலை! இது வரைக்கும் எவனும் என்னை லுக்கு கூட விட்டதில்லையே! நீ அழகா வேற இருந்து தொலைக்கற! உன்னை எப்படி நான் மத்தவளுங்க கிட்ட இருந்து கட்டிக் காபந்து பண்ணி கைக்குள்ளயே வச்சிக்கறது! அந்தக் கஷ்டத்த எனக்குக் குடுத்துடாதடா விஜய்’ என உள்ளுக்குள் தடதடக்கும் இதயத்தைப் பெருமூச்சொன்று எடுத்து நிதானப்படுத்தியவள், இவனைப் பார்த்து முறைக்க ஆரம்பித்தாள்.

“மது!! ஐ லவ் இளையராஜா!” என அவன் சொல்லி நிறுத்த, சில விநாடிகள் சத்தமே இல்லை அவளிடம்.

“எதே!!! லவ் ராஜாவா?” எனக் கேட்டவளுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

கலகலவென வாய் விட்டு சிரித்தவளைப் புன்னகையுடன் பார்த்திருந்தான் விஜய்.

‘கொஞ்ச நேரத்துல மனுஷன கலங்கடிச்சிட்டான்’ என எண்ணியவளுக்குச் சிரிப்பு மட்டும் நிற்கவில்லை.

“ராஜாவுக்காக என் கிட்ட கோச்சிக்கிட்டுப் பேசாம இருக்காத மது! எனக்கும் அவர ரொம்பப் பிடிக்கும்! உன்னைப் பேச வைக்கனும்னுதான் சும்மா வம்பு பண்ணேன் அன்னைக்கு! நீ கண் கலங்கவும், தாங்கிக்கவே முடியல! சாரி மது! ப்ளீஸ் பேசு என் கிட்ட! நான் வச்சிருந்த பாப்பா பாட்டு சீடிலாம் தூக்கிப் போட்டுட்டேன்! இனிமே இந்த மாதிரி ஒரு தவறு நடக்காது மது! என்னை மன்னிச்சு, மறுபடி மொட்டை மாடிக்கு வருவியா படிக்க?” எனக் கேட்டவன், அவள் கையில் ஒரு சீடியையும் கொடுத்தான்.

“கோபம் போக வைக்கற ராஜா பாட்டுலாம் நானே இதுல ரெக்கார்ட் பண்ணிருக்கேன்! இதை என்னோட மன்னிப்புப் பரிசா வாங்கிக்க!”

பத்து பாடல்கள் ரெக்கார்ட் செய்து, அதன் தலைப்புகளையும் சீடி கவரில் எழுதி இருந்தான் விஜய். அதை வாங்கிப் படித்தாள் இவள்.

“பொன் மானே கோபம் ஏனோ, நிலாவே வா செல்லாதே வா, ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே! எனக்குப் புடிச்ச கலேக்‌ஷன்தான்! நல்லா இருக்கு! தேங்க்ஸ்”

“கோபம் போச்சா?”

“எப்போ கோபமா இருந்தேன் நான்?”

அவன் முகத்தில் அதிர்ச்சி.

“நான் பேச வந்தப்பலாம் பேசவே இல்லையே நீ!”

“சார் என்ன கில்லி விஜய்யா? இவர் பேசனதும் உடனே நான் திருப்பிப் பேசிட! எப்ப பேச தோணுதோ அப்போத்தான் பேசுவேன்! இப்போ பேசத் தோணுது, சோ பேசறேன்”

“ஷப்பா!!” என இவன் முனக,

“என்ன?” எனக் கேட்டாள் இவள்.

“ஒன்னும் இல்ல! ஒன்னுமே இல்ல! நைட் பேசலாம், மொட்டை மாடில!” எனச் சொன்னவன், அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வேலை இடம் நோக்கிப் போனான்.

“ரொம்பப் படுத்தறனோ! ம்ப்ச்ச்! நம்ம விஜய்தானே! படுத்தலாம், தப்பில்ல!”

“ஷாலு!” எனும் தந்தையின் அழைப்பில் நடப்புக்கு வந்தாள் இவள்.

“இந்த லப்டாப் ஓகேன்னு விஜய் சொல்லுது! நீ வந்து பாரு, உனக்கு சரி வருமான்னு”

இவளிடம் மறுபடியும் அந்த லாப்டாப்பின் ஸ்பெக்ஸ் பற்றி விளக்கினான் விஜய்.

“உங்களுக்கு ஓகேவா விஜய்?” எனக் கேட்டாள் இவள்.

தந்தை அருகில் இருக்கவும் மரியாதை தானாகவே வந்தது.

ஆமென இவன் தலையாட்ட,

“அப்போ வாங்கிக்கலாம்!” என்றாள் இவள்.

“அங்கிள்! நீங்க சொன்ன பட்ஜெட்டோட இப்போ குறைவாத்தான் எடுத்திருக்கோம்! அதோட சாப்ஃட்வேர்லாம் நானே இன்ஸ்டால் பண்ணி தரேன்! அதுக்கான காசையும் இவர் கிட்ட மிச்சம் பண்ணிடலாம்! போன் வாங்கனும்னு சொன்னீங்கல்ல அடுத்த மாசம், அதை இப்பவே வாங்கிடலாம்”

மனோகர் சந்தோஷமாக ஒத்துக் கொள்ள, அந்த ஓனரிடம், மடிக்கணிணியோடு ஒரு அலைப்பேசியும் வாங்குவதாகவும், விலையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டு அதை சாத்தியமாக்கிக் கொடுத்தான் விஜய். மனோகர் முகத்தில் ஒரே சந்தோஷம்.

“தேங்க்ஸ்ப்பா விஜய்! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுக் குடுத்துட்ட!”

“என்ன அங்கிள், எனக்கு போய் தேங்க்ஸ்லாம் சொல்லிக்கிட்டு!” எனச் சங்கடப்பட்டான் விஜய்.

“சரி வா! ஒரு தேத்தண்ணி குடிச்சிட்டு போவோம்! உனக்கு இன்னும் நேரம் இருக்கே வேலைக்குப் போக” என அழைத்தார் மனோகர்.

மூவரும் ஓர் இந்திய ரெஸ்டாரண்டில் அமர்ந்தார்கள்.

“ப்பா!”

“சொல்லு ஷாலு”

“எனக்கு முட்டைப் பரோட்டா வேணும்”

“சரி! உனக்கு என்னப்பா வேணும் விஜய்?”

“டீ மட்டும் போதும் அங்கிள்”

பரோட்டா வந்ததும், இவளும் சாப்பிட்டு மனோகருக்கும் இரண்டு வாய் ஊட்டினாள். அதையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் விஜய்.

அப்பாவும் மகளும் தேநீர் அருந்தி கொண்டிருக்க, அவசரமாகத் தனது பானத்தை அருந்தியவன், கவுண்ட்டருக்குப் போய் இவர்களுக்கான பணத்தைச் செலுத்தினான்.

“என்னப்பா இது! எங்களுக்காகத்தான் வேலையை விட்டுட்டு வந்த! உனக்குச் சாப்பிட வாங்கிக் குடுக்கலாம்னு நெனைச்சா, நீயே பணம் கட்டிட்ட!” என ஆதங்கப்பட்டார் மனோகர்.

“இருக்கட்டும் அங்கிள்! இன்னொரு தடவை நீங்க வாங்கிக் குடுங்க!” எனப் புன்னகையுடன் சொன்னான் இவன்.

அவன் முதுகில் வாஞ்சையாகத் தட்டிக் கொடுத்த மனோகர், மகளிடம்,

“இங்கயே கொஞ்ச நேரம் நில்லுமா! நான் போய் பைக்க எடுத்துட்டு வரேன். அவ்ளோ தூரம் நீ நடக்க வேணாம்!” என்றார்.

“சரிப்பா!”

“நானும் இப்படியே வேலைக்குக் கிளம்பறேன் அங்கிள்!” என்றவன், மனோகர் சற்று தூரம் போனதும்,

“மது!” என அழைத்தான்.

“ஹ்ம்ம்”

“புது போனு! புது லாப்டாப்!! கலக்கறே போ”

“தேங்க் யூ விஜய் எங்களுக்கு ஹெல்ப் பண்ணதுக்கு!”

“உங்கப்பா காசுலத்தான் வாங்கிக் குடுத்துருக்கேன்! கண்டிப்பா ஒரு நாள் என் காசுல உனக்கு எல்லாமே வாங்கித் தருவேன்! அப்போ எனக்கும் ஊட்டி விடுவியா?”

அவனை முறைத்தவள்,

“நீ என் அத்தைப் பையனா? இல்ல மாமா மகனா? இந்தத் துரை எனக்கு வாங்கிக் குடுப்பாராம்! அதுக்கு பதிலா இவருக்கு நான் ஊட்டி விடனுமாம்! இங்கயே நில்லு! கொஞ்ச நேரத்துல உன் மாமனாரு வருவாரு! அவர்ட்ட இத சொல்றேன்!! உன்னை நாரு நாரா கிழிச்சி தோரணம் கட்டுவாரு!” எனச் சிடுசிடுத்தாள்.

“மது! நான் அந்த மீனிங்ல சொல்லல! மறுபடி கோச்சிக்காதே ப்ளிஸ்! ப்யூச்சர்ல நான் உனக்கு வாங்கி மட்டும் தரேன். நீ எனக்கு ஊட்டல்லாம் வேணா!” என அவன் தடுமாறி நிற்க, இவளுக்குச் சிரிப்பில் கண்கள் மின்னியது.

வேறு புறம் திரும்பிக் கொண்டவள்,

“மறுபடியும் பாரேன்! எனக்கு எது வேணும்னாலும் எங்கப்பா வாங்கிக் குடுப்பாரு! இல்லை, எங்கண்ணாங்க வாங்கிக் குடுப்பாங்க! நீ யாரு மேன் எனக்கு வாங்கிக் குடுக்க? ப்பா! பாருப்பா! இந்த விஜய்ய!” என அவள் ஒரு புறம் திரும்பிப் பார்த்து சத்தம் கொடுக்க, இவன் கலவரமாய் அந்தப் பக்கம் பார்த்தான்.

அங்கே யாருமே இல்லை. அவன் முகம் போனப் போக்கைப் பார்த்து கலகலவெனச் சிரித்தாள் மதுஷாலினி.

“அந்தப் பயம் இருக்கட்டும்!” என விரல் நீட்டி எச்சரித்தவள்,

“வர்ட்டா மிஸ்டர் விஜய்!” எனச் சொல்லி விட்டு, அப்பொழுதுதான் அங்கு வந்து சேர்ந்திருந்த மனோகரை நோக்கி நடையிட்டாள்.

சுனாமி ஒன்று சூறையாடி விட்டுப் போனதைப் போல திக்குமுக்காடி நின்றான் விஜய்!

“அராத்து!”