Sorkam Madhuvile--EPI 10

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
932
-1,941
93
அத்தியாயம் 10

நீதானே என் கோடை கால காற்று!




அந்த வெள்ளை நிற வேன் சிலாங்கூர் மாநிலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அதில் ஓட்டுனர் அருகே லெக்சரர் ஒருவர் அமர்ந்திருக்க, பின்னால் ஏழு மாணவர்கள் பயணித்தார்கள். அதில் விஜய்யும், மதுஷாலினியும் கூட அடக்கம். அவர்கள் கல்லூரியைப் பிரதிநிதித்து இந்த ஏழு பேரும் போட்டி விளையாட்டுக்களில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். இந்தப் போட்டி மலேசியா முழுதும் இருக்கும் கல்லூரிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

விஜய்யும், மதுஷாலினியும் மிக்ஸ்ட் டபுள்ஸ் பேட்மிண்டன் போட்டிக்குத் தேர்வாகி இருக்க, மற்றவர்கள் சதுரங்கம், பிங் போங், தேக்குவாண்டோ போன்ற விளையாட்டுக்களுக்காகத் தேர்வாகி இருந்தார்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வாலண்டியர் கேட்டு ஒவ்வொரு கிளாசுக்கும் மெமோ வந்த போது, ஆர்வமாக என்னென்ன விளையாட்டுக்கள் இருக்கின்றன எனப் போய் பார்த்தாள் இவள். ஓட்டப் போட்டி இல்லாமல் போக, போனால் போகட்டும் என பூப்பந்தாட்டத்துக்குப் பெயர் கொடுத்திருந்தாள் ஷாலு.

பெயர் கொடுத்தவர்களை எல்லாம் வர வைத்து, அவர்கள் திறமையைப் பரிசோதித்த பின்புதான் இறுதி தேர்வுக்கு எடுத்தார்கள். அந்தக் கமிட்டியில் இருந்த விஜய், இவள் பேட்மிண்டனுக்குப் பெயர் கொடுத்துத் தேர்வாகி இருக்க, அவனும் அதையே தேர்ந்தெடுத்து இவர்கள் இருவர் விளையாடுவது போல மிக்ஸ்ட் டபுள்ஸாக்கி இருந்தான். விஜய்யும் இவளுடன் போவதால், மகளை அவன் பார்த்துக் கொள்வான் எனப் போட்டிக்கு வேறு மாநிலத்துக்குப் போய் வருவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார் மனோகர்.

சில வாரங்களாக இரவில் பாடம் படிப்பதை விட்டு விட்டு, இவர்கள் இருவரும் மொட்டை மாடியில் பேட்மிண்டன் விளையாடிப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஞானவேலுக்கும் அந்த விளையாட்டுப் பிடிக்கும்! அவரும் சில நேரம் இவர்களோடு வந்து நின்று, இப்படி அடி, அப்படி அடி என உற்சாகப்படுத்துவார். குட்டையாக இருக்கும் அவளை முன்னே நிறுத்தி, விஜய் பின்னால் நின்று கொள்வான். ஞானவேல் ஒத்தையாக இவர்களுக்கு ஈடு கொடுத்து விளையாடுவார்.

வெள்ளிக்கிழமை மாலை கிளம்பி சிலாங்கூர் மாநிலத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி, சனிக்கிழமை நடைபெறும் விளையாட்டுகளில் கலந்து கொண்டு, ஞாயிறு செக் அவுட் செய்வதாக திட்டமிட்டிருந்தார்கள். தங்குமிடத்தில் இருந்து வெளியாகி கோலாலம்பூரை ஒரு ரவுண்ட் அடித்து விட்டுப் பிறகு பகாங் மாநிலத்துக்குத் திரும்புவதாக ப்ளான். போட்டிக்குத் தேர்வாகி இருந்த குழுவில் இவர்கள் இருவர்தான் தமிழ் மக்கள். மற்றவர்கள் எல்லாம் சீனர்கள்தான். இவர்களோடு வந்த லெக்சரர் கூட சீனர்தான்.

சின்னஞ் சிறுசுகள் பயணம் போனால் உற்சாகத்துக்குச் சொல்லவும்தான் வேண்டுமா! பேச்சு, சிரிப்பு, பாட்டு எனச் சந்தோஷமாகப் போனது அவர்களது பயணம். வரும் வழியிலேயே இரவு உணவை முடித்துக் கொண்டுதான் வந்திருந்தார்கள். ஹோட்டலை இவர்கள் அடைந்த போது கிட்டத்தட்ட இரவு பத்தாகி இருந்தது. ஆண்கள் மூவருக்கும் ஓர் அறை! பெண்கள் நால்வருக்கும் இரண்டு அறை என ஏற்பாடாகி இருந்தது. அறை சாவியை அவர்களிடம் கொடுத்த லெக்சரர்.

“நாளைக்குக் காலையில ஆறுக்கெல்லாம் லாபிக்கு வந்திடனும். இங்கயே ப்ரேக்பஸ்ட் குடுப்பாங்க! சாப்பிட்டுட்டு, விளையாட்டுப் போட்டிய ஏற்று நடத்துற கல்லூரிக்குப் போகனும்! நீங்க அந்தக் காலேஜ்குள்ளயே வேற வேற இடத்துல இருப்பீங்க உங்க போட்டிக்காக! நான் அப்பப்ப, வந்து எல்லா போட்டியையும் கவனிச்சுப்பேன். மதிய உணவு, ஈவ்னிங் ஸ்நாக்ஸ்லாம் அவங்களே குடுப்பாங்க! போட்டிலாம் முடிஞ்சு பரிசளிப்பு விழாலாம் நடந்ததும், சுமார் ஆறு மணி போல வேன் பார்க் பண்ணிருக்கற இடத்துக்கு வந்திடுங்க!” எனச் சொன்னவர், அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அறைக்குப் போய் விட்டார்.

இவர்களும் அவரவர் அறைக்குப் போனார்கள்.

“குட் நைட் மது” என இவளைப் பார்த்துப் புன்னகையுடன் சொன்னான் விஜய்.

“குட் நைட் விஜய்” எனச் சிரித்த முகமாகச் சொன்னவள், தனது அறைக்குப் போய் விட்டாள்.

மறுநாள் காலை லெக்சரர் சொல்லியது போல ஆறு மணிக்கெல்லாம் எல்லோரும் லாபியில் கூடி விட்டார்கள்.

“வாங்க சாப்பிடப் போகலாம்” என இவர்களை ஹோட்டல் டைனிங் ஹாலுக்கு அழைத்துப் போனார் லெக்சரர்.

விஜய்க்கும், மதுஷாலினிக்கும் இதுதான் முதல் அனுபவம் ஹோட்டலில் தங்குவது. அவர்கள் முன்னே பரப்பி வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளைப் பார்த்த இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. கேக் வகைகள், பழ வகைகள், லோக்கல் உணவான நாசி லெமாக், நூடுல்ஸ், சோசேஜ், பல வகையாய் சமைக்கப்பட்டிருந்த முட்டை, சூப் வகைகள் என அத்தனை வெரைட்டிஸ்.

“மது!!”

“ஹ்ம்ம்”

“இன்னிக்குப் போட்டி இருக்கு! அதனால கொஞ்சமா சாப்பிட்டுக்கலாம்! நாளைக்குக் காலையில இங்க இறங்கி வந்து ஃபுல் கட்டு கட்டிடலாம்! என்ன சொல்ற நீ?”

புன்னகையுடன் அவனுக்கு ஹை ஃபை கொடுத்தாள் மதுஷாலினி. பூப்பந்தாட்டப் போட்டியில் கவனம் போக ஆரம்பித்ததில் இருந்து, இருவருக்கும் இன்னும் சண்டை ஏதும் வந்திருக்கவில்லை. ஆகையால் சிரித்த முகமாகவே இருந்தாள் ஷாலு.

இவள் போய் உடம்புக்கு எனெர்ஜி கொடுக்கும் உணவான முட்டையை இருவருக்குமாய் எடுத்து வர, அவன் போய் மற்ற வகை உணவுகளில் அது கொஞ்சம், இது கொஞ்சம் என எடுத்து வந்தான். அந்த நேரத்தில் இவர்கள் கல்லூரி ஆட்களைத் தவிர வேறு யாரும் இல்லாதிருக்க, அவ்விடமே இவர்களுக்கென்றானது. மதுவும், விஜய்யும் ஒரே மேசையில் அமர்ந்து கொண்டார்கள். ஓரே இனத்தவர்கள் என்பதால் மற்றவர்களும் தப்பாய் ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. கொண்டு வந்திருந்த உணவை இருவருமே பகிர்ந்து உண்டார்கள்.

“விஜய்”

“ஹ்ம்ம்”

“பொசு பொசுன்னு ஒரு ரொட்டி இருக்கு பாரேன் அங்க!”

“ஆமா! அது பேரு குவோசோனாம்(croissant)! போர்ட்ல எழுதிருந்தது” என்றவன், எழுந்து போய் இவளுக்கு ஒன்று எடுத்து வந்து கொடுத்தான்.

“இன்னிக்கு ஒன்னு மட்டும் சாப்பிடு! நாளைக்கு காலி பண்ணிடலாம் எல்லாத்தையும்”

மகிழ்ச்சியுடன் உணவுண்டு எழுந்தனர் இருவரும். அதன் பிறகு வேன் ட்ரைவர் இவர்கள் அனைவரையும் கொண்டு போய் ஒரு பெரிய கல்லூரியில் இறக்கி விட்டார். வேனை நிறுத்தி வைக்கப் போகும் இடத்தையும் காட்டிக் கொடுத்தார் மாணவர்களுக்கு.

இவர்கள் இருவரும் ரேக்கேட்டைத் தூக்கிக் கொண்டு, கையில் கொடுக்கப்பட்டிருந்த பேம்ப்ளேட்டைப் பார்த்து, தங்களுக்கான போட்டி நடக்கும் இடத்தைத் தேடிப் போனார்கள். அங்கங்கே உதவிக்கு இருந்த அந்தக் கல்லூரியின் மாணவர்கள் இவர்களுக்கு வழி காட்டினார்கள். ஒரு வழியாக பேட்மிண்ட்டன் கோர்ட்டைக் கண்டுப் பிடித்து, உள்ளே நுழைந்தார்கள் இவர்கள்.

விளையாட்டு கமிட்டியிடம் இவர்களின் வரவைப் பதிந்து விட்டு, சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தார்கள் விஜய்யும், மதுவும்.

“பயமா இருக்கா மது?”

“நீ கூடவே இருக்கறப்ப எனக்கு என்ன பயம்!” எனக் கேட்டவள், கைகளுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தாள்.

அவளது பதிலில் மலர்ந்து விகசித்தது இவன் முகம்.

முதல் செட் ஆரம்பித்தது. மிகச் சுலபமாக இவர்கள் இருவரும் எதிர்த்து விளையாடிய இன்னொரு இரட்டையர்களை தோற்கடித்தார்கள். அதன் வழி குவாட்டர் ஃபைனலுக்குத் தேர்வானார்கள் இவர்கள்.

இவர்களைப் பார்க்க வந்த லெக்சரர்,

“வெரி குட்! ரெண்டு பேரும் சேர்ந்து கப் அடிச்சீங்கனா இங்க குடுக்கற மெடலோட கல்லூரில ஆளுக்கு இருநூறு வெள்ளி குடுக்கச் சொல்லி ஏற்பாடு செய்யறேன்! நம்ம காலேஜ் மானத்த காப்பாத்துங்க!” என உற்சாகப்படுத்தி விட்டுப் போனார்.

சந்தோசத்தில் விஜய்யைக் கட்டிக் கொண்டாள் மதுஷாலினி.

“இரு நூறு வெள்ளி! நான் என்னெல்லாம் வாங்குவேன் தெரியுமா?” எனக் கட்டிக் கொண்டு குதித்தவளை பொக்கிஷமென அணைத்துக் கொண்டான் இவன்.

அவன் நெஞ்சளவு கூட வரவில்லை அவள். மெல்ல குனிந்து அவள் தலையைத் தடவிக் கொடுத்தவன்,
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 10
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
932
-1,941
93
“விலகிக்கோ மது! பப்ளிக் ப்ளேஸ் இது” எனச் சின்னக் குரலில் சொன்னான்.

அவளை விலக்கி நிறுத்தவே பிடிக்கவில்லை இவனுக்கு! ஆனாலும் வேறு வழி இல்லாமல் தள்ளி நிறுத்தினான். இவளும் சட்டென விலகிக் கொண்டாள்.

அடுத்தச் சுற்றில் போராடித்தான் வென்றார்கள் இந்த ஜோடி. இவர்களை எதிர்த்து நின்ற ஜோடி, உயிரைக் கொடுத்து ஆடினார்கள். நெட்டுக்கு அருகே வந்த பூப்பந்தை இவளும், வேகமாய் பின்னால் வந்ததை இவனும் டேக்கல் செய்ய ஒரு வழியாய் செமி ஃபைனலுக்குத் தேர்வானர்கள் மதுவும், விஜய்யும்.

அங்கேயே மதிய உணவு வழங்கப்பட, இருவரும் தரையிலேயே அமர்ந்து டப்பர்வேரை கையில் ஏந்தி உணவை முடித்தார்கள்.

“மது! ஃபுல்லா சாப்பிடாதே! இனிமே இன்னும் தீவிரமா போகும் விளையாட்டு! ஓட முடியாது அப்புறம்”

“நல்ல சாப்பாட்ட கண்ணுல காட்டி, சாப்பிடாதேன்னு கொடுமை பண்ற விஜய் நீ”

கலகலவென சிரித்தான் இவன்.

“சரி சாப்பிடு! உன்னால ஓட முடியலைனா நானே உனக்கும் சேர்த்து ஈடு குடுத்து ஆடறேன்”

அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தவள்,

“ஜெயிக்கனும் விஜய்! நம்ம ரெண்டு பேர் கம்போ என்னைக்கும் தோக்கக் கூடாது!” என்றாள்.

“கண்டிப்பா மது” என உற்சாகமாகச் சொன்னான் விஜய்.

மதிய உணவு வேளை முடிந்து மறுபடியும் போட்டிகள் ஆரம்பித்தன. இந்த முறை இவர்களோடு ஒரு சீன ஜோடி மோதினார்கள். அவர்கள் இருவரும் காட்டுத்தனமாக விளையாடினார்கள். முதல் செட்டில் அவர்கள் ஜெயித்து விட, கலங்கிப் போனாள் மது.

“மது! கிவ் அப் பண்ணாதே! தோக்கப் போறோம்னு நெனைச்சாலே தோத்துடுவோம்! நம்மால முடியும்னு நம்பு” என அவள் தோளணைத்து தைரியமூட்டினான் விஜய்.

சரியெனத் தலையாட்டியவள், அடுத்த செட்டில் வெறித்தனமாக விளையாடினாள். வெற்றி இவர்கள் பக்கம் வந்தது. வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டிலும் இவர்களே வென்று, ஃபைனலுக்குத் தேர்வானார்கள்.

எல்லோருக்கும் சற்று நேரம் ஓய்வுக் கொடுக்கப்பட்டது! இவர்கள் கல்லூரியைச் சேர்ந்த மற்றவர்கள் தங்களது போட்டியை முடித்து விட்டு, இவர்கள் விளையாடுவதைக் காண வந்திருந்தார்கள். லெக்சரரும் வந்து விட்டார்.

இறுதி சுற்றும் ஆரம்பித்தது. இவர்களை எதிர்த்து விளையாடிய சீன ஜோடி இருவருமே நல்ல வளர்த்தியாக இருந்தார்கள். முதல் செட்டில் விஜய்யும் மதுவும் சுலபமாகவே வெற்றிப் பெற்றார்கள். ஆனால் எதிராளிகளால் நிறைய ஓட விடப்பட்டதால் களைத்துப் போயிருந்தார்கள். அடுத்த செட்டில் களைத்துப் போயிருந்த இவர்களை மிக மிகச் சுலபமாக வென்றார்கள் எதிரணியினர். வெற்றிக் கோப்பை யாருக்கு என நிர்ணயிக்கப் போகும் கடைசி செட் ஆரம்பிக்கும் இடைவெளியில் விஜயிடம்,

“எப்படியாவது ஜெய்க்கனும் விஜய்!” எனத் தீவிரமாகச் சொன்னாள் மது.

தலையை மட்டும் ஆட்டியவன், விளையாட ரெடியானான். இவள் குட்டையாய் இருக்க, மாற்றி மாற்றி இவளுக்கே அடித்து ஓட விட்டார்கள் எதிரணியினர் இருவரும். இவளும் அங்கும் இங்கும் ஓடி, பூப்பந்தை அடித்து அவர்கள் பக்கம் அனுப்பியபடியே இருந்தாள். ஒரு கட்டத்தில் வேகமாய் நகர்ந்தவள், படக்கென கீழே விழுந்திருந்தாள். முட்டியில் அடிப் பட்டு லேசாய் ரத்தம் வந்தது.

ஓடி வந்து அவளைத் தாங்கிக் கொண்டான் விஜய்.

“மது! போதும் மது! ஜெயிக்கலனா போகுது! உனக்கு ஒன்னும் ஆகக் கூடாது! ஸ்டாப் பண்ணிடலாம்”

“ஸ்டாப் பண்ண வேணா! என்னால விளையாட முடியும் விஜய்!”

“பிடிவாதம் பிடிக்காத மது!” என ஆத்திரப்பட்டான் விஜய்.

ரெஃப்ரீ இவளால் விளையாட முடியுமா, அல்லது விலகிக் கொண்டு இரண்டாவது பரிசு வாங்கிக் கொள்கிறீர்களா எனக் கேட்க, விளையாட முடியும் என எழுந்து நின்றாள் மதுஷாலினி. எதிரணியினர் முகத்தில் நக்கல் சிரிப்பு. அவள் காலில் ஒரு ப்ளாஸ்ட்டர் ஒட்டப் பட, விளையாட்டு மறுபடி ஆரம்பமானது. இந்த முறை வேண்டுமென்றே இவளுக்கே பந்தை அடித்து விட்டார்கள் எதிராய் விளையாடியவர்கள். இவளை ஓட விடாமல், முன்னும் பின்னும் ஓடி ஆக்ரோஷமாய் விளையாடினான் விஜயவேல்.

பூப்பந்து பறக்கும் ஷூஸ் சத்தத்தைத் தவிர அவ்வரங்கமே அமைதியாகிப் போனது! எல்லோரும் கண் சிமிட்டாமல் அந்தப் போட்டியைப் பார்த்திருந்தார்கள். பாரதப் போரில் அம்பு பறந்தது போல, இந்த பேட்மிண்டன் போரில் பூப்பந்து காற்றைக் கிழித்துக் கொண்டு அங்கும் இங்கும் பறந்தது. இரு அணியினரின் புள்ளிகளும் கிட்ட கிட்ட இருந்ததில் இரு பக்கமும் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. மூன்று நிமிடங்கள் இரு பக்கத்தினரும் விடாமல் அடிக்க, யார் தவற விடுவார்களோ எனக் கூட்டமே வாய் பிளந்து பார்த்தது. விஜய் அடித்த பூ, கோட்டைத் தாண்டி விழுவது போல இருக்க, அதை அப்படியே விட்டு விட்டார்கள் எதிர் அணியினர். அந்தோ பரிதாபம்!! பூப்பந்து சின்ன இடைவெளி விட்டு கோட்டுக்கு உள்ளேயே விழுந்து விட, வெற்றிக் கனி இவர்கள் பக்கம் வந்து விழுந்தது. ஹூரே எனக் கத்திக் கொண்டே, விஜய் மதுவைத் தூக்கி இடுப்பில் வைத்து ஒரு சுற்று சுற்றி விட்டான். அவளும் வெற்றிக் களிப்பில் வலியையும் மறந்து,

“நாம ஜெய்ச்சிட்டோம் விஜய்” எனக் கத்தி ஆர்ப்பரித்தாள்.

இவர்கள் கல்லூரி மக்கள் மட்டுமில்லாது மற்ற கல்லூரி மாணவர்களும் இவர்களைக் கொண்டாடித் தீர்த்து விட்டார்கள். போட்டிக்கு வந்திருந்த இவர்கள் குழுவில் இந்தப் போட்டிக்கு மட்டுமே முதலாம் இடம் கிடைத்திருந்தது. மற்றவர்கள் இரண்டாம் பரிசு, ஆறுதல் பரிசு எனத்தான் வாங்கி இருந்தார்கள். லெக்சரர் இவர்கள் இருவரைப் பாராட்டித் தள்ளி விட்டார்.

பரிசளிப்பு விழா ஆரம்பிக்கும் முன், அங்கு சர்விஸ் பார்த்த சாரணியர் இயக்க டெண்டுக்கு இவளை அழைத்துப் போய் முறையாய் காலைப் பரிசோதித்து, கட்டுப் போட்டு விடச் சொன்னான் விஜய்.

“லேசான சிராய்ப்புத்தான் விஜய்! சுருக்குன்னு கொஞ்சம் வலிக்குது! நாளைக்கு சரியா போய்டும்” என்றாள் இவள்.

அவளைப் பார்த்து முறைத்தான் இவன். முகத்தில் கோபம் தாண்டவமாடியது. இவர்கள் நட்பாக பழக ஆரம்பித்த தினத்தில் இருந்து கோபம், முறைப்பு, எல்லாம் இவள் பக்கம் இருந்துதான் வரும். இப்பொழுது அவன் கோபமாய் இருக்க, எப்படிச் சமாளிக்க எனத் தெரியவில்லை இவளுக்கு.

“சாரி விஜய்”

“கால விட உனக்கு இருநூறு வெள்ளி முக்கியமா போய்டுச்சா மதுஷாலினி?”

“இது காசுக்காக இல்ல விஜய்”

“பின்ன எதுக்கு இந்தப் பைத்தியக்காரத்தனமான வேலை?”

“விஜய்னா என்ன அர்த்தம் தெரியுமா?”

தெரியும் எனத் தலையாட்டினான் இவன்.

“விஜய்னா வெற்றி! என் கூட கூட்டு சேர்ந்ததுனால உனக்குத் தோல்வி கிடைச்சிடக் கூடாது விஜய்! விஜய்க்கு என்னைக்கும் விக்டரி மட்டும்தான் கிடைக்கனும்!” எனச் சிரித்தபடி சொன்னவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் இவன்.

“ஹேய் விடு! என்ன சும்மா சும்மா கட்டிப் புடிக்கற!! இரு எங்கப்பாட்ட சொல்றேன்!” என்றவளைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் விஜய்.
 

Akila

New member
Aug 4, 2024
13
2
3
விஜய் na வெற்றி. Vijay ku victory மட்டும் தான். .. அன்றே kanithar Vanisha. Super
 
  • Love
Reactions: VanishaAdmin