Jagam Nee--EPI 12

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
932
-1,941
93
அத்தியாயம் 12

மண்ணு ரோட்டுல லாரி

வாங்கித் தரவா சில்க் சாரி!!!



“படிப்புலாம் எப்படி போகுது பாப்பா?”

“ஓகேப்பா!”

“புது செமெஸ்டரு ஆரம்பிச்சிருச்சு போலிருக்கு”

“ஆமாப்பா!”

“இதுலயும் மேத்ஸ் வருதா? அந்த பைய இன்னும் சொல்லிக் குடுக்கனுமா கண்ணு?”

“இல்லப்பா! இந்த செமஸ்டர்ல சயின்ஸ் சப்ஜக்ட்தான் வருது! மேத்ஸ் இல்ல! சோ டீயூசன் வேணாம்னு பாண்டியா கிட்ட சொல்லிட்டேன்!”

“ரொம்ப நல்லதுடா கண்ணு! இன்னும் கொஞ்சம் போட்டு சாப்பிடு! சாயாங்(அன்பே), பாப்பாக்கு இன்னும் கொஞ்சம் குழம்பு ஊத்து” எனத் தன் மனைவியிடம் கட்டளையிட்டார் தனசேகர்.

மகளையும், மகனையும் தனது வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தார் அவர். எப்பொழுதும் மறுத்து விடும் ஷாமினி, தம்பியின் மனநிலை புரிந்ததில் இருந்து கொஞ்சமாய் இறங்கி வந்திருந்தாள். என்ன இருந்தாலும் அவனுக்கு அவர் அப்பா! ஒரேடியாக வெட்டி விட முடியாத பந்தம் அது! ஏதோ ஒரு முறையாவது தந்தையின் பாசத்தை அவன் அனுபவிப்பதில் தான் குறுக்கே நிற்க கூடாது என முடிவெடுத்திருந்தாள்.

தந்தை பார்க்காத போதெல்லாம் முறைத்தபடியே இருந்த அவரின் மனைவியின் முகத்தைச் சகித்துக் கொண்டு, முள்ளில் மேல் நிற்பது போல அங்கே அமர்ந்திருந்தாள். நிதினோ முகம் மலர சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவர் மடியில் அமர்ந்திருந்த இன்னொரு மகனுக்குப் போட்டியாக, நொடிக்கொரு முறை அப்பா, அப்பாவென அழைத்து அதையும் இதையும் கேட்டுத் தன் உரிமையை நிலை நிறுத்த முயன்றுக் கொண்டிருந்தான். தம்பியின் செய்கையில் இவளுக்கு மனதில் இரத்தம் வடிந்தது.

எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், அவனின் அப்பா கிறுக்கை மட்டும் இவளால் மாற்றவே முடியவில்லை. கண்ணில் வெறுப்புடன் தனது தந்தையை வெறித்தாள் ஷாமினி.

“என்னம்மா?” எனப் பதிலுக்குப் பாசமாகக் கேட்டு வைத்தார் தனசேகர்.

“சாப்பிட்டதும் கிளம்பறோம்! நான் காபிதியாமுக்கு போகனும்! இவனுக்கும் ஹோம்வொர்க் இருக்கு”

“அங்கே போய் வேர்த்து விறுவிறுத்து உழைக்கனும்னு உனக்கென்ன தலையெழுத்தா பாப்பா? முன்னல்லாம் ஞாயிறாச்சும் லீவ் எடுத்து வீட்டுல இருப்ப! இப்போ அன்னைக்குக் கூட கடைக்குப் போறியாமே!!! அவ்ளோ டெடிகேஷனா?” எனக் கேட்டவரை உற்றுப் பார்த்தாள் பெண்.

அவர் குரலில் என்னவோ இருந்தது.

மகளின் பார்வையைக் கண்டவர், வெடித்துச் சிரித்தார்.

“என் செல்லக் குட்டிமா நீ! அப்படியே என்னோட புத்திசாலித்தனம், என் குணம் எல்லாம் உன் ஒருத்தி கிட்டத்தான் குமிஞ்சு கிடக்கு! அப்பவுமே மொத புள்ளைங்க அம்மா அப்பாவோட பெஸ்ட்டான குணங்களையோ, இல்ல வொர்ஸ்ட்டான குணங்களையோ அப்படியே தனக்குள்ள எடுத்துக்கிட்டுப் பொறப்பாங்களாம். என்னோட எல்லாத்தையும் உன் கிட்டத்தான் இறக்கி வச்சிருக்கான் போல அந்த ஆண்டவன். ஆனா பாரேன்! கொஞ்சமா உங்கம்மாவோட கிறுக்குத்தனமும் உன் கிட்ட வந்திருக்கு! சீக்கிரம் ஓடிப் போய்டும் அதெல்லாம்!” எனப் பூடகமாகப் பேசியவர், கை கழுவிவிட்டு வந்து மகளின் தலையைத் தன் வயிற்றோடு இறுக்கிக் கொண்டார்.

“என் செல்லம்மா” என அவர் குரல் கொஞ்சியது.

அச்செயலை கடுப்புடனும், வெறுப்புடனும் பார்த்திருந்தார் அவரின் இரண்டாவது மனைவி.

“கை கழுவிட்டு ரூமுக்கு வாடா குட்டிமா! அப்பா உன் கிட்ட பேசனும்” என்றார் தனசேகர்.

இவளும் கை கழுவி விட்டு அப்பாவைத் தேடி அவரது அறைக்குப் போனாள்.

சோபாவில் அமர்ந்திருந்தவர் மகளைத் தனது பக்கத்தில் அமரும்படி அழைத்தார். இவள் போய் அமர்ந்ததும், அவளது கையை எடுத்துத் தன் கரத்தில் வைத்துக் கொண்டவர்,

“யூஸ் அண்ட் த்ரோன்னு கேள்விப் பட்டுருக்கியா பாப்பா?” எனக் கேட்டார்.

ஆமெனத் தலையை ஆட்டினாள் ஷாமினி.

“பொருள மட்டும் இல்ல, சில ஆட்களயும் நாம அப்படித்தான் ட்ரீட் பண்ணனும்”

“எங்கம்மாவ நீங்க ட்ரீட் பண்ண மாதிரியா?” எனக் கோபத்துடன் படபடத்து விட்டாள் ஷாமினி.

மகளின் கோபத்தில் அப்படி ஒரு வெடிச் சிரிப்பு சிரித்தார் தனசேகர்.

“என்னை மாதிரியே கோபம் புடைச்சிக்கிட்டு வருது என் மகளுக்கு” எனச் சீராட்டிக் கொண்டார் அவர்.

இவள் அமைதியாக இருக்க,

“நமக்குன்னு ஒரு அந்தஸ்த்து இருக்குமா கண்ணு! என் பொண்ண ராணி மாதிரி வாழ வச்சுப் பார்க்கனும் எனக்கு! ஆனாலும் இந்த வயசுல அப்படி இப்படி ஆசைங்க இருக்கும்தான்! அதுக்குத்தான் அப்பா இத்தனை நாள் டைம் குடுத்துட்டேன்ல! இனி நிறுத்திக்குவியாம்! சரியா!! போதும்டா! த்ரோ பண்ணிடு! ரொம்ப நாள் கூடிப் போனாலும், மனசுக்குள்ள வந்து நின்னுடுச்சுனா, அந்த கா..”தல் என சொல்ல வந்தவர்,

“சனியனா தூக்கிப் போட முடியாது! சரியாடா குட்டி?” எனக் கேட்டார்.

“சரிப்பா!” என்றவளை ஆழ்ந்து பார்த்தவர், அவள் கன்னம் தட்டிப் புன்னகைத்தார்.

“என் பொண்ணுடாம்மா நீ! உன்னால முடிஞ்சதப் பார்த்துக்கோ!” எனப் பூடகமாகச் சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டவர்,

“போய்ட்டு வா” என்றார்.

தலையாட்டி விட்டு விடைப் பெற்றவளுக்கு உள்ளுக்குள் உதறியது! அவர் சொல்லிய யூஸ் அண்ட் த்ரோ உள்ளுக்குள் போட்டுக் குடைந்தது. உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ எனத் தனக்கு சவால் விட்டிருக்கிறார் எனப் புரிந்து கொண்டவளுக்கு மயக்கம் வரும் போல இருந்தது.

தம்பியை வீட்டில் இறக்கி விட்டவள், நேராக காபிதியாமுக்கு கிளம்பினாள். என்னவோ நடக்கப் போகிறது என உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது. அன்று வேலை நேரமாக இருக்க, காபிதியாம் முன்னே காரை நிறுத்து எஞ்சினை அணைக்காமல் உள்ளே நுழைந்தாள்.

“பாண்டியா! உன் பேங்க் டீட்டேய்ஸ் எடுத்துக்கிட்டு என் கூட வா” என அவசரமாக அழைத்தாள் அவனை.

அவளுக்குத்தான் கேள்விக் கேட்டால் பிடிக்காதே! உடனே அவள் கேட்டதை எடுத்துக் கொண்டு அவளோடு சென்றான் சரவணப்பாண்டியன்.

கிளம்பியவர்களைப் பார்த்து, சூப்பர்வைசர் உடனே யாருக்கோ போன் செய்தாள்.

வங்கி ஒன்றில் காரை நிறுத்திப் பார்க் செய்தவள், எப்பொழுதும் போல வாவென சொல்லி விட்டு உள்ளே போனாள். அவள் பாதச் சுவடைப் பின் பற்றி இவனும் போனான்.

“பாண்டியா!”

“யெஸ் மேடம்”

“உன்னோட இந்தியா பேங்க் அக்கவுண்ட் நம்பர் குடு”

அவள் கேட்டதை அவளிடம் கொடுத்தான் சரவணப்பாண்டியன்.

“ஏன் மேடம்?” எனத் தயங்கி தயங்கிக் கேட்டான்.

“உன் அக்கவுண்ட்ல உள்ளதெல்லாம் வழிச்சு எடுத்துக்கப் போறேன்”

“சரி மேடம்”

“எதே!! சரியா?”

“என்னோட ப்ரேண்ட் நீங்க மேடம்! உங்களுக்குக் குடுக்காம வேற யாருக்குக் குடுப்பேன்!” என்றவனை ஆழ்ந்து பார்த்தாள் இவள்.

சட்டெனப் பார்வையைத் திருப்பிக் கொண்டவள்,

“இந்த ப்ரேன்ட்ஷிப்காக நான் எது குடுத்தாலும் வாங்கிப்பியா பாண்டியா?” எனக் கேட்டாள்.

ஆமெனத் தலையாட்டினான் இவன்.

“தேங்க்ஸ்!” என்றவளுக்குக் குரல் கரகரத்திருந்தது.

பேங்க் கவுண்ட்டரில் என்னவோ பேசியவள், இவனிடம் சில பேப்பரில் சைன் வாங்கினாள். என்ன ஏதென்று கேட்காமல் சைன் வைத்துக் கொடுத்தான் இவன்.

அதன் பிறகு ஒரு ஸ்லிப்பை அவனிடம் நீட்டியவள்,

“பாண்டிய மன்னனுக்கு இந்த கிளியோட பரிசு!” என்றாள்.

அதில் அவனது இந்திய அக்கவுண்டுக்கு மலேசிய வெள்ளி எழுபதாயிரம் போடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இந்திய ரூபாய் பத்து லட்சம். வாய் பிழந்துப் பார்த்தான் இவன்.

வார்த்தைகள் திக்கியது. பேச முடியாமல் உள்ளுக்குள் சிக்கியது. கண்கள் கலங்க,

“என்னதிது கிளி?” எனக் கலக்கமானக் குரலில் கேட்டான் சரவணப்பாண்டியன்.

“இனி நீ இங்க இருக்க வேணா பாண்டியா! ஊருக்குக் கிளம்பு! எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு! இந்த காச வச்சி எதாச்சும் தொழில் பார்த்துப் பொழச்சிக்கோ! செம்பா குட்டிய கூடவே வச்சிப் பார்த்துக்கோ! சரியா?”

முடியாது எனத் தலையாட்டியவன்,

“என்னாச்சி மேடம்! இந்த பணம் எதுக்கு குடுக்கறீங்க! ப்ளிஸ் வேணாம்! நீங்க என்னோட மேடம்! என் ப்ரேண்ட்! உங்க கிட்ட என்னால பணம் வாங்கிக்க முடியாது!” எனக் கண் கலங்க சொன்னான்.

“அடிங்க! என்னடா பாண்டியா! பயம் விட்டுப் போச்சா! பளீர்னு அறைஞ்சிடுவேன் பார்த்துக்கோ! இந்தப் பணத்த உன் தோழி குடுத்த கடனா வச்சிக்கோ! எப்பவாச்சும் நாம திரும்பிப் பார்க்கற ப்ராப்தம் இருந்தா எனக்கு வட்டிப் போட்டுத் திருப்பிக் குடு! இது எங்கப்பா பணம் இல்ல! எங்கம்மா எனக்காக விட்டுட்டுப் போன பணம்! என் பணம்! புரியுதா? இப்போ வா” என்றவள், இவன் முதன் முதலாக வேலைக்கு வந்த போது போயிருந்த ஆபிஸ் அறைக்கு அழைத்துப் போனாள்.

அங்கிருந்த மலாய் பெண்ணிடம் இவனது பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டாள். இவர்கள் அதை எடுத்துக் கொண்டு போனதும், அந்த பெண் யாருக்கோ போன் செய்து பேசினாள்.

“இந்தியாவுக்கு டிக்கேட் வாங்க ட்ரை பண்றேன்! நாளை மறுநாள்தான் இருக்கு! இப்போ உன்னைக் கொண்டு போய் காபிதியாம்ல விடறேன்! வேலை முடிஞ்சதும் எல்லாத்தையும் பேக் பண்ணி வச்சிக்கோ! மிட்நைட் ரகசியமா வரேன்! உன்னைக் கொண்டு போய் ஹோட்டல்ல விட்டுடறேன்! நாளை மறுநாள் ப்ளைட்ல யாருக்கும் தெரியாம கிளம்பி போய்டு! அங்க போய் எனக்கு எந்த காரணத்த கொண்டும் காண்டேக்ட் பண்ணாதே! புரியுதா?” எனக் கேட்டாள்.

“என்னாச்சி? ஏன் என்னை கிளப்பி விடறீங்க மேடம்?”

“சொன்னாலும் உனக்குப் புரியாது! நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத்தான் செய்வேன்! புரியுதா? கெளம்பிடு பாண்டியா!” என்றவள், காரில் தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை சட்டெனக் கட்டிக் கொண்டாள்.

“பாண்டியா மன்னா! உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் நான்” என்றவளுக்குக் கண்களில் கண்ணீர் வழிந்தது.

கெத்தாய் நடமாடும் பெண், தன்னைக் கட்டிக் கொண்டு அழுவதைப் பார்த்தவனுக்கும் கண்கள் கலங்கியது. முதலில் தயங்கியவன், பின் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“அழாதே கிளி! நான் போகறதுதான் உனக்கு வேணும்னா, நான் போயிடறேன்! அழாதே!” என அவளின் முதுகைத் தடவிக் கொடுத்தான்.

கண்ணைத் துடைத்துக் கொண்டவள்,

“போடா போடா பாண்டியா! நீ கிளம்பி போனாத்தான் நான் நிம்மதியா இருப்பேன்! சும்மா மேடம் மேடம்னு என்னையே சுத்திட்டு இருக்க! இரிட்டேட்டிங்கா இருக்கு!” எனச் சிடுசிடுத்தாள்.

“ஓகே! ஓகே!” எனக் கையை சரண்டர் என்பது போலத் தூக்கினான் இவன்.

காபிதியாம் அடைக்கும் வரை அவனோடு இருந்தவள், வெளியேறும் முன் அலாரத்தின் நம்பரையும் மாற்றினாள்.

“ஏன் மேடம்?”

“பழைய நம்பர் எல்லாருக்கும் தெரியும்ல! அதான் மாத்துனேன்! புது நம்பர ஞாபகம் வச்சிக்கோ! கரேக்டா பனெண்டு மணிக்கு பேக்க எடுத்துக்கிட்டு, எல்லாத்தையும் லாக் பண்ணிட்டு, புது நம்பர வச்சி அலார்ம் செட் பண்ணிட்டு கடை முன்னாடி வந்திடு! புரியுதா?”

“சரி!” எனத் தலையாட்டினான் இவன்.

“நீ கிளம்பப் போற விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது! இளாவுக்கு கூட! புரியுதா?”

“சரி மேடம்”

“பத்திரம்டா பாண்டியா!” என்றவள், மீண்டும் அவனை அணைத்து அவன் கழுத்தோர வாசனையை முகர்ந்து பின் விடுவித்தாள்.

“பாண்டியா!”

“என்ன மேடம்”

“ஒரே ஒரு தடவை என்னை கிளின்னு கூப்புடேன்”

“கிளி!” என மென்மையாய் அழைத்தவனின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“பாண்டியா!!! எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணிக் குடு”

“என்ன மேடம்?”

“நாம ஒரு பத்து வருஷம் கேப் எடுத்துக்கலாம்! நான் போலண்ட் போய் செட்டிலாகி, தம்பிய படிக்க வச்சி எல்லாம் முடிக்க ஒரு பத்து வருஷமாகும். பத்தாவது வருஷம் நீ என் கிட்ட வேலைக்கு வந்திடனும்! சரியா?”

புன்னகையுடன்,

“சரி மேடம்” என்றான் இவன்.

“பாய் பாண்டியா! சீ யூ லேட்டர்” என்றவள், கதவு வரை போய் மீண்டும் ஓடி வந்து இவனைக் கட்டிக் கொண்டாள்.

அவளது செய்கைகள் எல்லாம் புதிராக இருந்தன இவனுக்கு.

“வரேன்!” என்றவள் அதன் பிறகு அங்கே நிற்கவில்லை.

அவள் கிளம்பிப் போக, இவனுக்கு இன்னும் கூட என்ன நடக்கிறது எனப் புரியவில்லை. ஏன் இந்த அவசரம், எதற்காக திருப்பி அனுப்புகிறாள், ஏன் பணம் போட்டு விட்டாள் எனப் பல கேள்விகள்.

அவள் சொல்லியதை செய்தே பழக்கப்பட்டிருந்தவன், துணிமணிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

நேரத்தை நெட்டித் தள்ளிய ஷாமினி, அவர்கள் கொண்டோவின் பின் வாசலைப் பயன் படுத்தி, கிரேப்(டாக்சி) எடுத்துக் கொண்டு காபிதியாமை நோக்கிப் பயணப்பட்டாள். அவள் அப்பா இவளுக்குப் பாதுகாப்பாய் பின்னால் அனுப்பும் ஆளை இன்று முழுக்க, காரை வேகமாய் ஓட்டியும், வேறு பாதை உபயோகித்தும் ஏமாற்றி இருந்தாள். காபிதியாமுக்கு இவள் மறுபடி போனதும் அந்த ஆள் மறுபடி வந்துவிட, அவரை ஏய்க்கவே மிட்நைட் இங்கே வர ப்ளான் செய்திருந்தாள். கொண்டோமினியம் வாசலில் அவளது காரை மட்டும் அவர் பார்த்தபடி இருக்க, இவள் டாக்சியில் போனது அவருக்குத் தெரியவில்லை. நிம்மதியுடன் இவள் காபிதியாமை அடைய, அங்கே ஒரே களேபரமாக இருந்தது.

போலிஸ் கார்கள் வெளியே நிற்க, கடை அலாரம் பீம்பீம்மென சத்தம் போட, இவளுக்கு இருதயம் தொண்டைக்குள் வந்து துடித்தது. வேகமாய் காரிலிருந்து இறங்கி காபிதியாமை நோக்கி ஓட, போலிஸ்காரர் ஒருவர் இவளைப் பிடித்துக் கொண்டார்.

“என்னாச்சு??? நான் கடை ஓனர்தான்! விடுங்க! விடுங்க!” என இவள் கத்தித் துடித்து உள்ளே ஓட, அங்கே கேஷ் ரிஜிஸ்டர் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

“பாண்டியா! பாண்டியா” என இவள் கத்த அதற்கு எந்த எதிர்வினையும் இல்லை.

ஸ்டோர் ரூம், கிச்சன் என எல்லா இடத்துக்கும் ஓடினாள் இவள். பாண்டியனைக் காணவில்லை.

போலிஸ்காரர்கள் அவள் கையைப் பிடித்துக் கொள்ள, ஓரிடத்தில் ரத்த வெள்ளமாய் கிடந்த தரையையும் சரவணப்பாண்டியன் எப்பொழுதும் அணியும் காலணியில் ஒற்றைக் காலணியையும் பார்த்தவள்,

“பாண்டியா!” எனக் கதறியபடியே மயங்கி சரிந்தாள்.
 

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 12
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
123
-47
43
அச்சோ..! பாண்டியனுக்கு என்னாச்சுன்னு தெரியலையே..?

😌😌😌
CRVS (or)CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin

Ananthi Jai

Active member
Dec 28, 2024
102
-24
43
Ponnu varadhunu munna appa vandhutaara... Intha rowdy rangan mattum love marriage pannikalam avaru ponnu panna koodadha... Paavam saravan than onnumey theriyama kasta paduran... Un ponna sari panna vendi thana avanuku onnumey theriyathey😭
 
  • Love
Reactions: VanishaAdmin