Sorkam Madhuvile--EPI 16

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
932
-1,941
93
அத்தியாயம் 16

நீதானே இருண்ட என் வாழ்க்கையின் வெளிச்சப்பூ!



துபாய் செல்லும் விமானத்தின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்தான் விஜயவேல். வெளியே கும்மிருட்டாய் இருந்தது. துபாயில் வேலை முடியும் முன்னரே மலேசியாவுக்கு வந்து, மீண்டும் அவசரமாகக் கிளம்பி இருந்ததில் களைத்திருந்தான். உடல் ஓய்வுக்குக் கெஞ்ச, பிஸ்னஸ் கிளாஸ் சீட்டில் இருந்தவன் மெல்ல சாய்ந்து உறங்க முயன்றான். கண்ணை மூடினால், பிங்க் வர்ண பாஜூ கெபாயாவில் அழகாய் சிரித்தாள் மது. குளிரில் கன்னங்கள் சிவந்திருக்க, ஸ்வெட்டருக்குள் கை நுழைத்தப்படி அவனையே பார்த்திருந்தாள் மது.

“இத்தனை வருஷமாகியும் காந்தமா இருந்து இந்த இரும்பை ஈர்த்துத் தொலைக்கிறா! வேலைக்கு வந்து சேர்ந்துட்டான்னு கேள்விப்பட்டதும் துபாய்ல இருக்கவே முடியாம, வெக்கங் கெட்டு ஓடோடி போய் நிக்கறேன் அவ முன்ன! என்னைலாம் திருத்தவே முடியாது” எனத் தன்னையே திட்டிக் கொண்டவன் தூங்கும் எண்ணத்தைக் கை விட்டான்.

விமானப் பணிப் பெண்ணை அழைத்து ஒரு காபி கேட்டவன், நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டான். அவள் சூடாகக் காபி கொண்டு வந்து கொடுக்க, மெல்ல உறிஞ்சியவனுக்கு நினைவெல்லாம் மதுதான். அவள் மேல் கோபம், ஆதங்கம், ஆத்திரம் எல்லாம் இருந்தது. ஆனால் வெறுப்பு துளி கூட இல்லை.

தெரியாதவனைப் போல அவன் பேசிய போது, அவள் கண்ணில் தோன்றிய அதிர்வும், சோகமும் இவனைப் போட்டுப் பாடாய்ப்படுத்தியது.

‘ஏன்டா விஜய் இப்படிலாம் அவள படுத்தற?’ என இதயம் இறுக்கிப் பிடிக்க,

‘சட்டுன்னு அவ கூட போய் சேர்ந்த, வெளக்கமாத்தால அடிப்பேன்’ என அறிவு அடாவடி செய்தது.

அன்றைய மீட்டிங் முடிந்த போது கூட, அவளருகே இருக்க வேண்டும் எனத்தான் காண்டினுக்கு அவள் பின்னாலேயே ஓடோடி வந்திருந்தான். ஆனாலும் அவளிடம் தானாய் போய் பேச அவனது கோபம் இடம் கொடுக்கவில்லை. மற்றவர்கள் வந்து அவனிடம் பேசும் போது, பின்னால் இருப்பவன் அவன்தான் எனத் தெரிந்திருக்கும் அவளுக்கு. இருந்தாலும் திரும்பிக் கூடப் பார்க்காமல் அவள் இருந்து விட,

‘அவ்ளோ அதுப்பாடி உனக்கு’ எனக் கொதித்துக் கொண்டுதான் வந்தது இவனுக்கு.

பிரிந்திருந்த இத்தனை வருடங்களில் பல தடவைகள் தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறான் மதுவை. அவள் போட்டிருக்கும் பெர்ஃபியூம் வாசனை மூக்கை மோதிப் போகும் அளவுக்கு நெருங்கி நின்றது அன்றைய தினம்தான். அவள் வாசம், உறங்கிக் கொண்டிருந்த அவனது செல்களை உயிர்ப்பித்திருந்தது. முக்கியமாய் காதல் செல்கள் எல்லாம் நீண்ட உறக்கத்தில் இருந்து எழுந்து பேயாட்டம் போட்டன. கை நீட்டி அந்தக் குட்டி உருவத்தை பின்னால் இழுத்து நெஞ்சோடு கட்டிக் கொள்ள வேண்டும் எனப் பரபரத்தது இவனுக்கு.

போனி டெயிலில் அடக்கி இருந்த அடங்காத முடியை, பளிச்செனக் கண்ணுக்குத் தெரிந்த அவளது பின்கழுத்தை, அதில் குட்டியாய் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை, காதில் ஆடிக் கொண்டிருந்த தொங்கட்டான்களை எனப் பின்னாடி இருந்து தெரிந்த அத்தனையும் கண்களால் களவாடிக் கொண்டே மோன நிலையில் நின்றிருந்தான் விஜய்.

“சொர்க்கம் மதுவிலே

சொக்கும் அழகிலே

மது தரும் சுகம் சுகம்

எதில் வரும் நிதம் நிதம்

இன்பம் இரவுதான்” என அவன் காதல் ஹார்மோன்கள் எல்லாம் பாடிக் குதூகலித்தன.

அதற்குள் ஒருத்தன் இவளது காபிக்குப் பணம் செலுத்தி விட்டுப் போக, பொசு பொசுவென பொசெசிவ்னெஸ் பொங்கி விட்டது இவனுக்கு.

‘டேய் டேய்! அடங்குடா! இத்தனை வருஷமா இந்த பெசெசிவ்னெஸ் பொடலங்காய்லாம் எங்கடா போச்சு? திடீர்னு ஒவ்வொன்னா மொளைக்குது!’ என மூளை முழக்கமிட,

‘எல்லாம் உள்ளத்தான் உறங்கிட்டு இருந்துச்சு! அதத தட்டி எழுப்ப, அதுக்கான ஆள் வரனும்ல’ என மனது மஜாவாய் சொன்னது.

சட்டென அந்தக் கப்பை எடுத்துக் கொண்டவன், அவள் காபி வாங்கிக் கொள்ள பணமும் வைத்து விட்டு ஓடோடி வந்து விட்டான். இன்னும் சற்று நேரம் அங்கே நின்றிருந்தால்,

“மது! மது! என் கூட வந்திடு மது! என் கூடவே இருந்திடு மது” எனக் கெஞ்சி இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்ததால் ஓட்டம் பிடித்திருந்தான்.

அதை அப்பொழுது நினைத்துக் கொண்டவன்,

“மதுன்னு வந்துட்டா வெக்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் பாய் போட்டுப் படுத்துக்கும்டா உனக்கு! சீச்சீ! கொஞ்சமாச்சும் கெத்தா நில்லுடா!” எனத் தனக்குத் தானே அறிவுரை சொல்லிக் கொண்டான்.

பழைய நினைவுகள் வேறு நெஞ்சைப் போட்டு அழுத்த, அப்படியே ஹெட் ரெஸ்ட்டில் சாய்ந்து கொண்டான் விஜயவேல்.

அன்றைய தினம் அகிலா மயங்கி கிடந்த போது, மதுவின் சத்தமும் உலுக்கலும்தான் அவனைத் தன்னிலை அடைய வைத்தது. அவசரமாக அவரைக் காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு அரசாங்க மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தான் விஜய். அஸ்மிதாவின் செயல்கள் கூட அகிலாவின் நிலையால் பின்னுக்குப் போயிருந்தது. மூவரும் ஹாஸ்பிட்டல் காரிடாரில் இரவெல்லாம் காத்துக் கிடந்தார்கள்.

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளி வந்த டாக்டர்,

“அவங்களுக்கு ஸ்ட்ரோக் வந்திருக்கு. ஒரு பக்க கை கால் இழுத்துக்குச்சு” என நெருப்பை வாரி இவர்கள் நெஞ்சில் விசிறி அடித்தார்.

நிலைக்குலைந்து போனது அந்தக் குடும்பம். அஸ்மிதா கதறி அழ, ஞானவேல் அப்படியே சரிந்து அமர்ந்து விட்டார்.

“பயப்படாதீங்க! உயிரோட இருக்காங்களேன்னு சந்தோஷப்படுங்க! இன்னும் கொஞ்சம் லேட்டா கொண்டு வந்திருந்தா, மூளை செயல் இழந்து இறந்திருப்பாங்க! இனிமே கவனமா பார்த்துக்கிட்டு, மருந்து மாத்திரை, தெரப்பின்னு முயற்சி பண்ணா பழையபடி இல்லைன்னாலும் ஓரளவுக்குத் தேறி வந்து நடமாடுவாங்க! நம்பிக்கைய கை விட்டுறாதீங்க” எனத் தேற்றினார் அவர்.

மதுஷாலினி தன்னை உசுப்பி விட்டிருக்காவிட்டால், இந்நேரம் தாயின் உயிர் பிரிந்திருக்குமே என எண்ணிய விஜய்க்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ஏற்கனவே செய்வதறியாது திகைத்து நிற்கும் தந்தையையும், தங்கையையும் கருத்தில் கொண்டு கண்ணீரை அடக்கிக் கொண்டான்.

அதன் பிறகு ஒரே ஓட்டமாய் ஓடியது இவன் பொழுதுகள்.

“இனி இங்க இருக்க வேண்டாம்டா தம்பி! நாம கோலாலம்பூருக்குப் போய்டலாம்! உங்க பெரிப்பா கிட்ட கேட்டு, நமக்கு ஒரு வீடு பார்க்கச் சொல்லறேன்! அவர் வேலைப் பார்க்கற இடத்துலயே எனக்கும் வேலைத் தேடிக்கறேன்! நாம கேவலப்பட்டு நின்ன இந்த ஊரே வேணாம்! அங்க போயாச்சும் நல்ல பொழப்பு பொழைப்போம்” என்றவருக்குக் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“உங்கம்மா இல்லாம எனக்கு ஒரு வாழ்க்கை இல்லடா தம்பி. வேரறுந்த மரமா அவள பார்த்ததும் என் உசுரே போய்டுச்சுடா! போய்டுச்சு! என் அகிலா இருக்கா, எல்லாம் பார்த்துப்பான்னு தெனாவுட்டுல என் இஷ்டத்துக்குச் சுத்திட்டு இருந்தேன். அவ இல்லாம போயிருப்பான்னு டாக்டர் சொல்லி கேட்டதுல இருந்து கை காலுலாம் வெடவெடன்னு வருதுடா! படுக்கைல இருந்தாலும், எனக்கு என் அகிலா உசுரோட வேணும்டா விஜய்!” என மகனைக் கட்டிக் கொண்டு அழுது விட்டார் ஞானவேல்.

இவர் எவ்வளவோ கஷ்டங்கள் கொடுத்திருக்கிறார் அகிலாவுக்கு. அவரோ கணவரைத் திட்டி இருக்கிறார், ஏசி இருக்கிறார் ஏன் ஒரு தடவை அடித்தும் கூட இருக்கிறார் கோபத்தில். ஆனால் கணவரின் வயிறு வாட விட்டதில்லை. வெளியே போய் படு எனத் துரத்தி விட்டது இல்லை. கூடவே இருக்கும் போது தெரியாத அருமை, மனைவி படுத்தப் படுக்கையாய் ஆனதில்தான் தெரிந்தது ஞானவேலுக்கு.

மனைவிக்கு இப்படியானதுக்கு மகள்தான் காரணம் என அவளிடம் பேசுவதையே விட்டு விட்டார். மூவருக்கும் நடுவில் கிடந்து அல்லாடியது விஜய்தான்.

“நீயும் என் கிட்ட பேச மாட்டியா அண்ணா?” என அழுத தங்கையை ஒதுக்கி வைக்க முடியவில்லை இவனால்.

“நான் செஞ்சது தப்புத்தான் அண்ணா! ரொம்பத் தப்பு! செய்யறப்ப அதோட விளைவுகள் தெரியல! ஆனா இப்போ ரொம்ப கேவலமா இருக்குண்ணா!” எனக் கதறியத் தங்கையை அணைத்து ஆறுதல் படுத்தினான்.

“ஃப்ரெண்டா பழகத்தாண்ணா நம்பர் குடுத்தேன். அடிக்கடி மேசேஜ் போடுவாங்க! நான் பேலன்ஸ் குறைவா இருக்கு! டாப் ஆப் பண்ணதும் ரிப்ளை செய்யறேன்னு சொல்லுவேன். அவங்களேத்தாண்ணா ஆரம்பத்துல டாப் ஆப் பண்ணி விட்டாங்க! பிறகு நானா உரிமையா கேக்க ஆரம்பிச்சேன். ஒரு தடவை ப்ரெண்ட்ஸ் எல்லாம் கே.எஃப்.சிக்கு போனாங்க! அப்பாட்ட காசு கேட்டேன், இல்லைன்னு சொல்லிட்டாரு. அம்மாவும் குடுக்கல. உன் கிட்ட கேட்டா குடும்ப சூழ்நிலைய புரிஞ்சுக்கோம்மான்னு சொல்வ! ரொம்ப ஆசையா இருந்ததுண்ணா! அப்போ மகேஷ் மேசேஜ் போடவும், இத சொன்னேன். உடனே அவர் பேங்க் இன் பண்ணி விட்டாரு! அவ்ளோ சந்தோஷமா இருந்ததுண்ணா! அதுவே போகப் போக பேராசையா மாறிடுச்சு! நாம அழகா இருக்கோம்! நாம கேட்டா செய்ய ஆள் இருக்குன்னு ஒரு திமிரு வந்திடுச்சு! இப்படி மாட்டிப்பேன்னு நெனைக்கல! அவங்கப்பா திட்டுனப்பத்தான் எவ்ளோ கேவலமான வேலைப் பார்த்திருக்கேன்னு புரியுது! என்னை மன்னிச்சிடுண்ணா! அம்மாவுக்கு இப்படி அதிர்ச்சில ஸ்ட்ரோக் வர நான் காரணமாயிட்டேன்! எல்லாமே என் தப்புத்தான். நான் வேணும்னா செத்துடவாண்ணா?” எனக் கேட்டவளின் வாயில் பட்டென ஒன்று போட்டான் விஜய்.

“இந்த உலகத்துல ஃப்ரீயா கிடைக்கறதுன்னு எதுவுமே இல்ல அஸ்மி. ஏதோ அவனுங்க ரெண்டு பேரும் நல்லவனுங்களா இருக்கவும் இதோட போச்சு! வேற மாதிரி ஆட்கள் கிட்ட நீ மாட்டிருந்தா என்னாகிருக்கும்? ஏழ்மைய காரணம் காட்டி, மத்தவங்கள் ஏமாத்தி காசு வாங்கிருக்க! அழகை யூஸ் பண்ணி பணம் வாங்கறவங்களுக்கு ஆம்பளைங்க டிக்‌ஷனரில ரொம்பக் கேவலமான பேரு அஸ்மி. என் தங்கையா இப்படின்னு எனக்கு ரொம்ப அருவருப்பா இருக்கு! நீயும் நானும் ஒரே குடும்ப சூழ்நிலைலத்தான் வளந்தோம்! என் கிட்ட இருந்த நேர்மை, உன் கிட்ட ஏன் இல்லாம போச்சு? அம்மா அப்படியா நம்மள வளத்தாங்க? அவங்களுக்கு சாப்பிட இல்லைனாலும், நம்ம வயிறு வாட விட்டிருக்காங்களா? அவங்களுக்குக் கடைசியா நீ தேடித் தந்த பேர் என்ன? செய்யறதெல்லாம் செஞ்சிட்டு செத்துப் போய்ட்டா எல்லாம் சரியாகிடுமா அஸ்மி? நீ செத்துப் போய்ட்டா அம்மாவும் அப்பாவும் தாங்கிப்பாங்களா? யோசி அஸ்மி! இனியாச்சும் இது போல ஒரு கேவலமான வேலைப் பார்க்காம, நல்லா படிச்சு, ஒழுங்கா வாழ்ந்து காட்டு” எனச் சொல்லி அவளைத் தேற்றினான்.

அகிலா ஒரு வாரம் மருத்துவமனையிலேயே இருக்க, அவருடன் அஸ்மியும் இருந்து கொண்டாள். அப்பாவும், மகனும் கோலாலம்பூருக்கு மாறிப் போவதற்கான ஏற்பாடுகளைப் பார்த்தார்கள். சாமான்களை லாரியில் ஏற்றி விட்டு சாவியை மனோகரிடம் கொண்டு போய் கொடுத்தான் விஜய். ஒன்றும் பேசாமல் வாங்கிக் கொண்டவர், அவர்கள் கொடுத்திருந்த முன் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

“வேணாம் அங்கிள்! மகேனும், மகேஷூம் செலவு பண்ணக் காசுக்கு இத ஈடா வச்சிக்கோங்க! முடிஞ்சா எங்கள மன்னிச்சுடுங்க” என்றவன் விடுவிடுவென நடந்து விட்டான்.

ஆம்புலன்சில் வைத்து ஏற்றி, அகிலாவை கோலாலம்பூர் கொண்டு வந்தார்கள். இனி வீட்டிலேயே வைத்துப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டார்கள் மருத்துவமனையில். அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்தது ஓரறை கொண்ட மலிவு விலை வீடு. இவன் டிகிரி கையில் வரும் வரை லீவில் இருக்க, காலையில் அஸ்மி பள்ளிக்குப் போகும் போது அகிலாவை இவனே குளிக்க வைப்பதில் இருந்து உணவுக் கொடுப்பது வரைப் பார்த்துக் கொள்வான். சிறு வயதில் இவர் எல்லாம் மகனுக்குச் செய்திருக்க, இப்பொழுது மகன் இவரைக் குழந்தைப் போல பார்த்துக் கொள்வதில் கண்களில் கண்ணீர் கட்டிக் கொள்ளும் அகிலாவுக்கு. சரியாகப் பேச்சு வராததால், எதையும் வாய் திறந்து சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக் குமைந்து போவார்.

இவன் எல்லாம் செய்வதில் அவருக்கு குன்றிப் போகிறது என உணர்ந்து கொண்ட விஜய், ஏதேதோ சிரிக்கச் சிரிக்கப் பேசி அவரது கவனத்தைத் திசைத் திருப்பி விடுவான். பள்ளி முடிந்து வந்ததும் அஸ்மி தாயைப் பார்த்துக் கொள்வாள். அந்த நேரத்தில் பகுதி நேரமாக சூப்பர் மார்க்கேட் ஒன்றுக்கு வேலைக்குப் போய் விடுவான் விஜய். ஞானவேல் பெரிய கம்பெனி ஒன்றுக்கு லாரி ஒட்டும் வேலைப் பார்த்தார். காலையில் போனால் இரவுக்குத்தான் வருவார். அதன் பிறகு மனைவியைக் குழந்தைப் போல அவர் பார்த்துக் கொள்வார்.

அந்தக் காலக் கட்டத்தில் மதுவுக்கும் விஜய்க்கும் எந்த விதத் தொடர்பும் இல்லாமல் இருந்தது. அவனிடம் தொலைப்பேசி இல்லை. அவளிடம் இருந்தது. அவளது நம்பரும் இவனிடம் இருந்தது. ஆனாலும் நேரில் போய் பேசுவதுதான் சரி வரும் என அமைதியாக இருந்து கொண்டான். டிகிரி கைக்கு வரும் தினம், அவளும் கல்லூரியில் இருப்பாள். அன்று பார்த்துப் பேசி இவன் ஒரு நிலையை அடையும் வரை காத்திருக்கச் சொல்லலாம் என முடிவெடுத்திருந்தான். தங்கை செய்து வைத்தக் காரியத்துக்குத் தன்னைத் திரும்பிப் பார்ப்பாளா எனப் பயமாய் இருந்தது. துப்பாக்கி குண்டொன்று மூளையில் சிக்கிக் கொண்டு தினம் மரண வேதனையைக் காட்டுவது போல செத்துச் செத்துப் பிழைத்தான் விஜயவேல்.

அவனது டிகிரி கைக்கு வரும் தினமும் வந்து சேர்ந்தது.

“அஸ்மி! நாளைக்கு ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டு அம்மாவ பத்திரமா பார்த்துக்கோ! நான் விடிகாலை பஸ் எடுத்து காலேஜ் போய்ட்டு, நைட்டே வந்திடுவேன்” எனச் சொன்னவன், மறுநாள் காலையே பஸ் ஏறி விட்டான் பகாங் மாநிலத்துக்கு.

டிகிரி முடித்திருந்தவர்களுக்காக விழா ஒன்று ஏற்பாடாகி இருந்தது. விஜய்க்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிகிரி கிடைத்திருந்தது. எடுத்த எல்லா பாடத்திலும் ஏ வாங்கி இருந்தான். பத்திரிக்கை ஆபிசில் இருந்து போட்டோ கூட எடுத்தார்கள் இவன் மேடையில் டிகிரி வாங்குவதை. இவன் கண்கள் மதுவைத் தேடி அலைபாய்ந்தது. அவள் இவன் பார்வை வட்டத்தில் விழாமல் ஒரு மூலையில் நின்று அந்நிகழ்வைப் பார்த்திருந்தாள். விழா முடிந்ததும் மதுஷாலினியைத் தேடிப் போனான் இவன்.

அவனுக்காகக் கல்லூரி வெளியே காத்திருந்தாள் ஷாலினி. இவனைப் பார்த்ததும் ஓடி வந்தவள்,

“அகிலா ஆண்ட்டி எப்படி இருக்காங்க?” என அவசரமாகக் கேட்டாள்.

“நல்லா இருக்காங்க!” என்றவன் உண்மையை மறைத்து விட்டான்.

அம்மாவை அவளுக்கு எவ்வளவு பிடிக்கும் என இவனுக்குத் தெரியுமே! அவளாவது நிம்மதியாக இருந்து விட்டுப் போகட்டும் என எதையும் சொல்லவில்லை விஜய். ஒரு நிம்மதி பெருமூச்சுடன் விலகி நடக்க ஆரம்பித்தாள் மதுஷாலினி.

“மது” எனப் பின்னால் ஓடி வந்தான் இவன்.

நிற்காமலேயே வேகமாய் நடந்தாள் அவள். ஷாலினியின் கை பிடித்து நிறுத்தியவன்,

“எங்க ஓடற மது!! உன் கிட்ட நான் கொஞ்சம் பேசனும்!” என்றான்.

“உன் கிட்ட பேச எனக்கொன்னும் இல்ல” என முறுக்கிக் கொண்டாள் இவள்.

“மது. ப்ளிஸ்டா, ப்ளிஸ்! எனக்கு ஒரு டென் மினிட்ஸ் குடுடா” என்றவன் அவள் கையைப் பற்றியபடியே கல்லூரி கட்டிடத்தின் பின்னால் இருக்கும் கல் பெஞ்சுக்கு அழைத்துப் போனான்.

அந்த பெஞ்சில் பொத்தென அமர்ந்தவள், இவன் முகத்தைக் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. முட்டிக் காலிட்டு அவள் முன்னே அமர்ந்தவன், மதுவின் தாடையைப் பிடித்துத் தன் புறம் திருப்பினான்.

“மது” என அழைத்தவனின் குரலில் அப்படி ஒரு மென்மை.

இவளுக்குக் கண்களில் கண்ணீர் வழிந்தது. பெரு விரல் கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்தவன்,

“அழாதே மது! எல்லாம் சரியாகிடும்! நான் சரி பண்ணிடுவேன். எனக்குக் கொஞ்சம் டைம் மட்டும் குடு” என்றான்.

“நமக்குள்ள இனி எதுவும் சரிப்பட்டு வராது விஜய்! என்னை விட்டிரு”

“அதெல்லாம் முடியாது மது! விட்டிருன்னு மட்டும் சொல்லாதே! உன்னை விட்டுட்டு நான் எப்படி மது இருப்பேன்!” என்றவனின் குரலில் அப்படி ஒரு வேதனை.

“இருக்கனும் விஜய்! நான் இல்லாம நீ நல்லாவே இருக்கனும். வேலை பாரு, நல்லா சம்பாரி! உன் குடும்பத்த நல்லா வச்சிப் பாரு! உனக்குன்னு ஒரு குடும்பம் அமைச்சிக்கோ! ஹேப்பியா இரு”

“இப்படிலாம் பேசினா அறைஞ்சிடுவேன் மது! நீ இல்லாம எனக்குன்னு எப்படி குடும்பம் அமைச்சிப்பேன்! புரியாம பேசாதே! நான் உன்னை கா..”தலிக்கறேன் எனச் சொல்ல வந்தவனின் வாயில் அடி ஒன்று போட்டவள்,

“சொல்லாத, சொல்லாத! எதையும் சொல்லாத” எனக் காதை இரு கரங்களால் பொத்திக் கொண்டுக் கத்தினாள்.

“எதையுமே என்னைச் சொல்ல விடாம சோதிக்காதே மது! அஸ்மி செஞ்சது தப்புத்தான்! ஆனா அவ மேல மட்டுமே தப்பு இல்ல! உன் அண்ணாங்களுக்கும் அதுல பங்கு இருக்கு! அதெல்லாம் நமக்கு நடுவுல வர வேணாம் மது. எல்லா பிரச்சனைகளும் காலப் போக்குல காணாம போய்டும்! டைம் வில் ஹீல் எவிரிதிங்! வெய்ட் பண்ணு மது! நான் ஒரு நல்ல நிலைய அடைஞ்சதும், உன்னைத் தேடி வருவேன். அப்போ யாராலயும் உனக்கும் எனக்கும் நடுவுல வர முடியாது. வரவும் விட மாட்டேன்”

வேகமாய் மூச்செடுத்தவள், கண்ணீர் வழியும் கண்களைத் துடைத்துக் கொண்டாள். விஜயை உறுத்துப் பார்த்தவள்,

“உன் தங்கச்சி ஒரே நேரத்துல என் அண்ணனுங்க ரெண்டு பேரையும் மயக்கி பணம் புடுங்கிருக்கா! நீ என்னை மயக்கி என்னத்த புடுங்கிட்டு போக நினைச்ச விஜய்? உன்னைப் பார்க்கவே புடிக்கல! என் மூஞ்சிலே முழிக்காதே இனி! ஐ ஹேட் யூ! ஹேட் யூ சோ மச்!” எனக் கத்தினாள்.

அப்படியே தரையில் சரிந்து அமர்ந்து விட்டான் விஜய்.

“மது!” என்றவனுக்குக் குரலே எழும்பவில்லை.

“மனோகர்ங்கற இளிச்சவாயன் மக பேருல காசு போட்டு வச்சிருக்காரு! வீடும் அவளுக்குத்தான் எழுதி வைப்பாருன்னு தெரிஞ்சுட்டுத்தானே என்னை டார்கேட் பண்ணி பழகன! இல்லைனா உனக்கு ஏன் குட்டையா, பல்லு கொஞ்சம் எடுப்பா, அழகுனா என்ன விலைன்னு கேக்கற மாதிரி இருக்கற இந்த மதுஷாலினி மேல ஒரு இது வரப் போகுது? போதும் விஜய்! நீ நடிச்ச நடிப்பெல்லாம் போதும்! உன் சுயரூபம் என்னன்னு எனக்குத் தெரிஞ்சிருச்சு! என்னை விட்டுரு! இல்லைனா எங்கப்பாட்ட சொல்லி உன்னை என்ன செய்வேன்னே எனக்கே தெரியாது” எனப் படப்படத்தாள்.

அவள் முகத்தையே கண்ணெடுக்காது பார்த்திருந்த விஜயின் விழிகளில் மெலிதான நீர்ப்படலம்.

“அவ்ளோதானா மது” எனக் கேட்டவனின் குரல் தளுதளுத்திருந்தது.

“இனிமே என்னை பார்க்க வரதோ, எந்த விதத்திலாவது காண்டேக்ட் செய்யறதோ வச்சிக்காதே விஜய்! போ! போய் உன் பொழப்ப பாரு” என்றவள் எழுந்து விடுவிடுவென நடந்து விட்டாள்.

அவனைத் தாண்டிப் போனவளின் கண்ணில் இருந்து விழுந்த கண்ணீர் துளி, அமர்ந்திருந்த இவன் கன்னம் தொட்டுப் போனது.

அந்தக் கண்ணீர் துளியின் சில்லிப்பு, இவன் நெஞ்சை தீயாய் தகிக்க வைத்தது.

அமர்ந்த வாக்கிலேயே அவளைத் திரும்பிப் பார்க்காமல்,

“போடி போ! எனக்கு நீ, உனக்கு நான்! இது அந்த ஆண்டவன் போட்ட முடிச்சு! அதை யாராலும் மாத்த முடியாது” என முணுமுணுத்தான்.

நெஞ்சில் பாரமாய் எதுவோ அழுத்தக் கண்களைத் திறந்தான் விஜயவேல். விமானத்தின் ஜன்னல் வெளியே தெரிந்த இருட்டை வெறித்தவன், நெஞ்சை மெல்ல நீவிக் கொண்டான்.

“என் கிட்ட வர வச்சிட்டேன்! இனி கொஞ்சமா படுத்தி எடுத்துட்டு, என்னை விட்டு நகரவே முடியாதபடி இறுக்கி என் கக்கத்துல வச்சிப்பேன்டி உன்னை!”

பல வருடங்களுக்குப் பிறகு முகம் மலர்ந்து விகசிக்க, பெரிதாய் புன்னகைத்தான் விஜயவேல்.
 

Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 16
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.