இள மனச--EPI 24

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
923
-1,943
93
அத்தியாயம் 24



சில நாட்களாகவே மிகவும் அமைதியாக இருந்தாள் சுப்பு. மனதில் இனம் புரியாத கலக்கம். பட்டுவும், பவுனுவும் கூட அவளின் அமைதியை கவனிக்கத்தான் செய்தார்கள். திருமணம் ஆகி பொறுப்பு வந்துவிட்டது என தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

எட்வர்ட் வீட்டில் இருக்கும் நேரம் மட்டும் முகத்தை மலர்ச்சியாக வைத்திருப்பாள். முயன்று அப்படி இருப்பவள், எட்வர்டின் கவனிப்பில் தானாகவே சரியாகி விடுவாள். இரவில் அவன் தூங்கியவுடன், மீண்டும் கலக்கம் சூழ்ந்து கொள்ளும் அவளை. கண்ணை மூடி தூங்காமல் விடிய விடிய கண்டதையும் நினைத்துக் கொண்டு படுத்தே கிடப்பாள்.

அவளின் கலக்கத்தை இவனும் அறிந்துதான் இருந்தான். ஆனால் பெற்றவர்களை நினைத்து தான் இந்தக் கலக்கம் என தப்பாக நினைத்துக் கொண்டான் எட்வர்ட். இங்கு வந்ததில் இருந்தே தினம் அவர்களைப் பற்றி பேசுபவள், திருமணம் முடிந்ததில் இருந்து அந்தப் பேச்சைக் குறைத்திருந்தாள்.

சில நாட்கள் அப்படியே விட்டாள் சரியாகி விடுவாள் என நினைத்தான் எட்வர்ட். தூங்காமல் தவிப்பவளை தட்டிக் கொடுத்து, நெற்றி வருடி, மெல்ல பாடி தூங்க வைப்பான். இருந்தும் நாளுக்கு நாள் அவளின் தவிப்பு அதிகரித்ததே தவிர குறையவில்லை எனும் போது அவனுக்கு பயம் பீடித்துக் கொண்டது. எப்பொழுதும் சிரித்த முகமாய் இருப்பவள், முகத்தில் கஷ்டப்பட்டு புன்னகையை ஒட்டி வைத்திருப்பது அவனுக்கு கவலையைக் கூட்டியது. தனது சுயநலம் அவளின் சந்தோஷத்தைப் பறித்து விட்டதாக எண்ணி கலங்கிப்போனான் எட்வர்ட்.

அன்றிரவு சன்னமான விசும்பல் ஒலியில் கண் விழித்தவன், கடிகாரத்தைப் பார்த்தான். விடிகாலை இரண்டை காட்டியது.

“ப்ளேக்கி!” மென்மையாக அழைத்தான்.

பட்டென விசும்பல் சத்தம் அடங்கியது. அவளின் கை அசைவிலேயே கண்ணைத் துடைக்கிறாள் என தெரிந்து போனது எட்வர்டுக்கு. இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் அவளை.

“என்னாச்சு ப்ளேக்கி? ஏன் அழற? ஆத்தா ஞாபகம் வந்துருச்சா?”

ஆமாம், இல்லை என்பது போல இரண்டு வகையிலும் தலையை ஆட்டினாள் அவள்.

“சொல்லும்மா! ஆமாவா, இல்லையா?”

“அவங்க ஞாபகம் தினமும் தான் வரும். அவங்கள பத்தி பேசுனா தான் உங்களுக்குப் பிடிக்கலையே!”

“யாரு சொன்னா எனக்குப் பிடிக்கலைன்னு?”

“எனக்கு தெரியும் உங்களுக்குப் பிடிக்கலனு. நான் அவங்கள பத்தி பேசுனாலே நீங்க வேற கதை பேச ஆரம்பிச்சிருவீங்க. நெறைய தடவை அப்படிதான் செஞ்சீங்க. ஒரு தடவை செஞ்சிருந்தா எனக்கு தெரிஞ்சிருக்காது. பல தடவை நீங்க அப்படி செய்யவும், அவங்கள உங்களுக்குப் பிடிக்கலன்னு புரிஞ்சுகிட்டேன். அதான் இப்பலாம் ஆத்தா பத்தி பேசறது இல்ல.”

“சரி தப்புதான். இனிமே அவங்கள பத்தி நீ பேசினா காது குடுத்து கேக்கறேன் ப்ளேக்கி. இப்படி அழாத! அவங்கள விட நான் உன்னை நல்லா பாத்துக்கலியா?”

“நீங்க நல்லாதான் பாத்துக்கறீங்க துரை”

“நீ தினமும் அழறத பாத்தா அப்படி தெரியலையே! நான் எங்கயோ உனக்கு குறை வச்ச மாதிரி இருக்கே! சொல்லு ப்ளேக்கி. சொன்னா தானே எனக்கு தெரியும்?” நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.

“இங்க பாரு ப்ளேக்கி! உனக்காக, என் நிலைய விட்டு ரொம்ப கீழ வந்து என்னால முடிஞ்சளவு முயற்சி பண்ணிட்டேன். நல்லத கண்ணு தொறந்து பார்க்காம தன் சொந்த பிடிவாதத்துல நிக்கறவங்கள என்ன செய்ய முடியும்?” குரலில் இயலாமை எட்டிப் பார்த்தது.

“என்ன முயற்சி செஞ்சீங்க துரை?”

“அது வந்து..ஹ்ம்ம். எல்லாம் நல்லபடி முடியட்டும் அப்புறம் சொல்லுறேன். இப்போ நீ சொல்லு, நான் உன்னை நல்லா பாத்துக்கலியா?” மீண்டும் கேட்டான் எட்வர்ட்.

“நீங்க என்னை ரொம்ப நல்லா பாத்துக்கறீங்க துரை. “

“அப்புறம் ஏன் அழுகை? ஏன் சோகம்? என் கிட்ட சொல்லக்கூடாதா?”

“இது வந்து வேற விஷயம்!”

“வேற விஷயமா?” குடும்பத்தைத் தவிர வேறு என்ன குழப்பம் இவளுக்குள் என குழம்பினான் எட்வர்ட்.

“துரை!”

“ஹ்ம்ம்”

“நீங்க ஏன் என்னை கல்யாணம் செஞ்சிகிட்டீங்க?”

“இதென்ன கேள்வி ப்ளேக்கி? உன்னை ரொம்ப பிடிச்சுப் போச்சு, உன்னை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு தோணவும் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்”

“அதான் ஏன் என்னை பிடிச்சது? எனக்கும் உங்களுக்கும் எந்த வகையிலயும் பொருத்தம் இல்லையே! அப்புறம் ஏன் என்னைப் பிடிச்சது?”

அவன் கை அணைப்பில் இருந்தவள், முகத்தை அண்ணாந்து பார்த்து கேட்டாள். அவள் முகத்தில் தெரிந்த சோகமும், கலக்கமும் எட்வர்டை பாதித்தது.

“ஒருத்தர பிடிக்கறதுக்கெல்லாம் காரணம் வேணுமா ப்ளேக்கி? அப்படினா பூமிக்கு மழைய பிடிக்கறதுக்கு காரணம் இருக்கா? குழந்தைக்கு அம்மாவ பிடிக்க காரணம் இருக்கா? இல்ல உன்னோட காக்காவுக்கு வடைய பிடிக்க காரணம் இருக்கா?“ மெல்லிய சிரிப்புடன் கேட்டான் எட்வர்ட்.

“நீங்க என்னன்னவொ பேசி என்னைக் குழப்பறீங்க. எனக்கு தெரியனும், சொல்லுங்க துரை! ஏன் என்னைப் பிடிச்சது?” பிடிவாதமாக கேட்டாள் சுப்பு.

அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன்,

“இன்னிக்கு உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல ப்ளேக்கி. ரொம்ப இமோஷனலா இருக்க!” என சொன்னான்.

“அப்படினா என்ன துரை?”

“ஹ்ம்ம், ரொம்ப உணர்ச்சிவசப்படுறன்னு சொன்னேன்.”

“ஆமா, ரொம்ப இமோசனா தான் இருக்கேன். நீங்க சொல்லுங்க துரை, என் மேல ஆசை இன்னும் இருக்கா இல்ல தீர்ந்து போச்சா?” உயிரை கண்ணில் தேக்கிக் கேட்டாள் சுப்பு.

சற்று நேரம் அவனிடம் பேச்சில்லை. அவள் கண்களையே ஆழ்ந்து பார்த்தான். பின் தன் கண்களை மூடி இரு நிமிடம் அப்படியே இருந்தவன், கண் திறக்கும் போது அவை இரண்டும் செக்கச்செவேர் என சிவந்திருந்தன.

“யார் என்ன சொன்னது ப்ளேக்கி?” சரியாக விஷயத்தைப் பிடித்துக் கேட்டான் எட்வர்ட்.

“அது வந்து துரை.. யாரும் ஒன்னும் சொல்லல. நானா தான் கேக்கறேன்.” தலையைக் குனிந்துக் கொண்டாள் அவள்.

தன் அணைப்பிலிருந்து அவளை விலக்கியவன், கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அவளையே பார்த்திருந்தான். அவனிடம் இருந்து எந்த சத்தமும் இல்லாமல் போகவும், தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள் சுப்பு.

“இப்போ எதுக்கு ப்ளேக்கி இப்படி பாவமா பாக்கற? நீ கேட்ட கேள்விக்கு நான் தான் அப்படி பாவ பார்வைப் பார்க்கனும். கொஞ்ச நாள் ஆனா, என் மேல உள்ள ஆசை உனக்கு காணா போயிருமா?” கோபமாக கேட்டான் எட்வர்ட்.

“இல்ல, இல்ல. அதெல்லாம் காணா போகாது துரை” அவசரமாக மறுத்தாள்.

“அப்போ எனக்கு மட்டும் எப்படி காணா போயிரும்னு நீ நினைக்கலாம்?”

பதில் சொல்ல திணறி அவனை மீண்டும் பாவமாக பார்த்தாள் சுப்பு. தள்ளி அமர்ந்திருந்தவளை அருகே வர சொல்லி சைகை காட்டினான் எட்வர்ட்.

அவனுக்கு கோபம் இல்லை என தெரிந்ததும், நகர்ந்து வந்து அவன் நெஞ்சில் ஒட்டிக் கொண்டாள் சுப்பு. சற்று நேரம் அங்கே அமைதியே ஆட்சி செய்தது.

“ப்ளேக்கி, எப்போ நீ உன் மேல ஆசை விட்டுப் போயிருமோனு பயப்பட ஆரம்பிச்சிட்டியோ, எல்லா விஷயத்தையும் பேசி தீர்த்தறது நல்லதுன்னு எனக்கு தோண ஆரம்பிச்சிருச்சு. பேசிறலாமா? முதல்ல இருந்து எல்லாத்தையும் சொன்னாதான் உனக்குப் புரியும். கேட்க ரெடியா இருக்கியா ப்ளேக்கி? நான் எல்லாத்தையும் சொல்லி முடிச்சதும் என்னை வெறுத்துற மாட்டியே?” பயத்தை கண்களில் வைத்துக் கேட்டான் எட்வர்ட்.

“உங்கள என்னால வெறுக்க முடியுமா? சத்தியமா முடியாது துரை. நீங்க ஒன்னும் சொல்ல வேணா. நான் தான் மடச்சி மாதிரி கண்டதையும் நினைச்சு உங்கள கஷ்டப்படுத்துறேன். ஒன்னும் சொல்ல வேணாம், எதுவும் எனக்கு தெரிய வேணாம்” அவன் வாயைத் தன் கைக்கொண்டு பொத்தினாள். அடக்க முயன்றும் அவள் கண்களில் இறங்கியது நீர்வீழ்ச்சி. வெள்ளை மனதில், கண்டவர்களும் விட்டெறிந்த கல் குறிப்பார்த்து அவள் மனதை கிழித்ததும் இல்லாமல், அவள் மூலமாக அவன் மனதையும் அறுத்து தள்ளியது.

“அழக்கூடாது ப்ளேக்கி. ஒரு சந்தேகம் அப்படின்னு வந்தா பேசி முடிச்சரனும். அப்படியே விட்டா, கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து நம்ம ரெண்டு பேரோட அன்பையும் அது சாய்ச்சிரும். அழாம நான் சொல்லறத கேக்கனும். சரியா?” அவள் கண்களைத் துடைத்து, மடியில் சாய்த்துக் கொண்டான்.

“அழமாட்டேன், சொல்லுங்க துரை!”

அவனுக்கும் குற்ற உணர்ச்சி பிடுங்கித் தின்றது. அவள் அன்பைக் கொட்டும் போதெல்லாம், அதை அடைய தான் செய்த காரியங்கள் அவனைக் குத்தி கிழித்தன. அவளோ கோயிலில் கேட்ட பேச்சுக்களில் மனம் நொந்து போயிருந்தாள். அவன் வாய் வழி அவனின் நேசத்தை அறிய விழைந்தாள்.

“நான் முதன் முதலா உன்னைப் பார்த்தப்போ, கண்ணுல தண்ணி வச்சிக்கிட்டு, உதடு துடிக்க, நடுங்கிட்டு ஜோனி முன்ன நின்னிருந்த.”

இன்னும் கூட அந்த நினைவில் நடுங்கினாள் சுப்பு. அவளின் கையை அழுத்திக் கொடுத்தவன்,

“உன்னை ஜோனி கிட்ட இருந்து காக்கனும்னு மட்டும்தான் முதல்ல தோணுச்சு. வேற எதுவும் என் மனசுல இல்ல அப்போ. நீ ஒரு இந்தியன்னோ(இந்தியன்னு ஏன் குறிப்பிடறேன்னா, அந்த கால கட்டத்துல இந்தியாவுல இருந்து வந்தவங்கள இந்தியன்னு தான் குறிப்பிட்டாங்க. நாடு சுதந்திரத்துக்கு அப்புறம் தான் மலேசியன் என்று மாறியது. மலேசிய பிரஜை என்றாலும், இனம் எனும்போது இந்தியன் என்றே இன்றும் இம்மக்கள் அறியப்படுகிறார்கள்), எங்களுக்கு கீழ் பணியும் வர்க்கம்னோ எதுவும் தோணல. உன் இடத்துல ஒரு ஆம்பிளை இருந்திருந்தா எப்படியோ போகட்டும்னு போயிருப்பேன். பெண்ணா போயிட்ட, சீ போன்னு விட முடியலை. கல்லுக்குள் ஈரம்னு வச்சிக்கயேன்” புன்னகைத்தான் எட்வர்ட். அவளுக்கும் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

அவன் குமட்டில் செல்லமாக இடித்தாள்.

“என் மேல விழுந்து கிடந்த உன்னை, தள்ளி விடனும்னு எவ்வளவோ முயற்சி பண்ணேன். என் கை ஒத்துழைக்கவே இல்ல. நான் சொல்ல சொல்ல கேக்காமா, நடுங்கிட்டு இருந்த உன்னை என் கை அதுவா தடவி குடுத்து சமாதானப் படுத்த ஆரம்பிச்சிருச்சு. ரொம்ப கஷ்டப்பட்டுதான் உன்னை தள்ளி விட்டு எழுந்தேன்.”

“அப்புறம்?” அவன் மடியில் இருந்து எழுந்து அமர்ந்தவள், கதை கேட்க ஆரம்பித்தாள்.

“அப்புறம்தான் உன்னை நல்லா கவனிச்சுப் பார்த்தேன். உன் நிறம், இனம் எல்லாம் அப்போதான் என் கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சது. சட்டுன்னு ஒரு கோபம். ஆபத்துன்னாலும் உன்னை எப்படி நான் தொடலாம்னு”

அவள் முகம் சிறுத்துப் போனது. தலையைக் குனிந்து கொண்டாள் சுப்பு.

“ப்ளேக்கி! இப்படி முகத்த தொங்க போட்டீனா, நான் சொல்ல மாட்டேன். என்னோட அப்போதைய மனநிலைய அப்படியே மறைக்காம உன் கிட்ட சொல்லனும்னு நினைக்கிறேன். நீ இப்படி சோகமானா, நிறைய விஷயத்தை மறைச்சிதான் சொல்லுவேன். பரவாயில்லையா?” அவள் முகம் தாங்கி கேட்டான் எட்வர்ட்.

“மறைக்க வேணா, அப்படியே சொல்லுங்க துரை”

“கோபமா யார் நீன்னு கேட்டா, நீ எந்த பயமும் இல்லாம மெதுவா எழுந்து நிக்கற. பாவாடைல ஒட்டி இருந்த புல்லையும் மண்ணையும் தட்டி விட்ட மாதிரி என் கோபத்தையும் தட்டிவிட்டுட்டு நின்ன. என்ன பார்த்தாலே உன் இனத்துல எல்லாம், அப்படி பயப்படுவாங்க. நீ என்னடான்னா நான் தான் சுபூலெட்சும்மின்னு சிரிச்சிக்கிட்டே சொன்ன. எனக்கு கோபம் இருந்த இடத்துல ஆச்சரியம் வந்து உட்கார்ந்துகிச்சு. உன் சிரிப்புக்கு பதில் சிரிப்பு கூட வரப்பார்த்துச்சு, கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டேன்” அந்த நாள் நினைவில் அவனுக்கு சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“ஜோனியா நீங்களான்னு பாத்தா, அது மேல தான் ரொம்ப பயமா இருந்துச்சு. அதுட்ட இருந்து என்னை காப்பாத்தவும், உங்கள எனக்கு சட்டுன்னு பிடிச்சிருச்சு. அதான் பயம் வரல உங்கள பாத்து” சிரித்தாள் சுப்பு. இருவரும் மன இறுக்கம் தளர்ந்து பழைய கதைகளை பேச ஆரம்பித்தனர்.

“நீ அன்னைக்கு பர்சுவ படுத்தன பாட்ட மறக்க முடியுமா? அவன் ஒத்த ஆளா எத்தனைப் பேர சமாளிப்பான் தெரியுமா? அவனே உன் கிட்ட முழி பிதுங்கி போய் நின்னப்ப, எனக்கு உள்ளுக்குள்ள அவ்வளவு சிரிப்பு. ஆனா வெளிய கோபமாவே கத்தினேன்.”

“ஏன் , ஏன் அப்படி செஞ்சீங்க துரை?”

“கோபப்படாம அவன் முன்னுக்கு சிரிச்சு வைக்க சொல்லுறியா? அப்படியே கோபமா இருந்தே பழகிருச்சு ப்ளேக்கி. நீ பக்கத்துல இருக்கறப்ப தான் மனசு விட்டு சிரிக்கவே பழகனேன்” குரல் கம்மியது அவனுக்கு.

“என் கிட்ட மட்டும் சிரிச்சா போதும். வெளிய போய் அடிக்கடி இப்படி சிரிச்சு வைக்காதீங்க துரை” காட்டமாக சொன்னாள் சுப்பு.

“ஏன் ப்ளேக்கி?”

“நீங்க சிரிக்கறப்ப விழுற கன்னக் குழிய பார்த்து எவளாச்சும் மயங்கிட்டானா? அப்புறம் நான் கொலைகாரியா மாற வேண்டி இருக்கும். எதுக்கு வம்பு! வெளிய சிரிக்காதீங்க” மடியில் இருந்து எழுந்து அவன் அருகே இடித்தப்படி அமர்ந்தவள், மிரட்டினாள்.

அவள் பொறாமை பேச்சில் இவனுக்கு சிரிப்பு வந்தது. சிரிப்புடனே தொடர்ந்தான்.

“பர்சுக்கு என்னமோ சரியில்லைன்னு தோணிருச்சு போல, உன்னை அனுப்பறதுலயே குறியா இருந்தான். எனக்கு உன்னை அனுப்ப இஷ்டம் இல்ல. நீ பேசுன கொஞ்ச நேரத்துலயே, எவ்வளவு இன்னசண்டா ஹ்ம்ம் வெள்ளந்தியா இருக்கேன்னு தெரிஞ்சுப் போச்சு எனக்கு. உன் குழந்தைத்தனத்து மேல ஒரு ஈர்ப்பு. தப்பாலாம் இல்ல ப்ளேக்கி. தனிமைல இருக்கற குட்டி பாப்பா, தன்னோட பொம்மை கூட பேசி பழகுமே அப்படி, தனிமை சிறையில பேச்சு துணைக்குக் கூட ஆள் இல்லாம இருந்த எனக்கு நீ அந்த பொம்மை மாதிரி தெரிஞ்ச. என் கூடவே வச்சிக்கனும், பேசனும், பழகனும்னு ஆசை வந்துருச்சு. என்னால அத அடக்கவே முடியல. அதான் வேலைக்கு மட்டும்தான் நீன்ற மாதிரி போக்கு காட்டனேன் பர்சுகிட்ட”

“பாவம் சித்தப்பூ, உங்க கிட்ட ஏமாந்து போயிட்டாரு. அவர் மட்டும் இல்ல நானும்தான். என் கிட்ட பழகனும், பேசனும்னு ஆசைப்பட்டுட்டு அப்புறம் ஏன் அப்படி கோபப்பட்டீங்க? நான் மனசுக்குள்ள அந்த நாயே தேவலாம் போல இருக்கே, இவரு குரைக்கற குரைப்புக்குன்னு நினைச்சேன்”

“சந்தடி சாக்குல என்னை ஜோனி ரேஞ்சுக்கு இறக்கிட்ட ப்ளேக்கி!” முகத்தைத் திருப்பிக் கொண்டான் எட்வர்ட்.

“ஐயோ துரை! நீங்களும் ஜோனியும் ஒன்னு இல்ல. ஜோனிய விட நீங்க நல்ல வாசமா இருக்கீங்க”

அவன் முறைக்கவும், என்ன தப்பாக சொல்லி விட்டோம் என முழித்தாள் சுப்பு.

“நீ திடீர்ன்னு கையப் பிடிக்கவும் முதல்ல அதிர்ச்சிதான். ரெண்டு கையையும் கிட்ட பார்க்கறப்போ, பட்டுன்னு வாயில ப்ளேக்கின்னு வந்துருச்சு. இன வெறில அப்படி கூப்பிடல ப்ளேக்கி. தானா வந்துருச்சு வாயில. அதோட சொல்லிப்பார்க்கறப்ப நல்லாவும் இருந்துச்சு. அதான் அதையே உன் பேரா பிக்ஸ் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் உன்ன பார்த்த முதல் நாளுலயே ரொம்ப உரிமை எடுத்துக்கற மாதிரி எனக்கு தோண ஆரம்பிச்சிருச்சு. அதெப்படி நான் அப்படி நடந்துக்கலாம்னு கோபம் வந்துருச்சு. பார்த்த நொடியே, என்னோட கேரக்டர மாத்துனா உன் மேல கோபம் திரும்புனுச்சு. அதுதான் உன்னை மிரட்டி அனுப்பனேன். ஆனா மிரட்டலுக்கெல்லாம் அடங்கற ஆள் நானில்லைடா மடையான்னு வந்த அன்னிக்கே டவல்ல கைய வச்சி புரிய வச்சிட்டே”

அந்த சம்பவத்தை நினைத்துப் பொங்கி சிரித்தாள் சுப்பு.

“நீ சுடுதண்ணிய தூக்க முடியாம தூக்கிட்டு வந்து என் ரூமை சுத்தி சுத்தி வந்தியே, உன்னையே தான் பார்த்துட்டு இருந்தேன். பாவமா இருந்தது. அதனால தான் இனிமே வெளியவே வைன்னு சொன்னேன்”

“ஓ, நான் கூட தண்ணி வெளாவி வச்ச லட்சணத்துல பயந்துட்டீங்கன்னு நினைச்சேன் துரை” சிரித்தாள் சுப்பு.

“நீ என் கிட்ட சில நேரம் பயந்தாலும், பல நேரம் திருப்பி வாயடிக்கறது ரொம்ப பிடிச்சிருந்தது ப்ளேக்கி. தனிமைல என் கிட்டயே பேசி பேசி எங்க பைத்தியம் பிடிச்சிருமோன்னு பல தடவை பயந்துருக்கேன். என் லெவல விட்டு இறங்கி யார் கிட்டயும் நட்பு பாராட்டவும் பிடிக்கல. நான் வளர்ந்த விதம் அப்படி. அதோட நான் பேசுனாலும், பல அடி தள்ளி நின்னுதான் மத்தவங்க பேசுவாங்க பர்சு உட்பட. நீ மட்டும் கொஞ்சம் கொஞ்சமா என் மனசுக்குள்ளயும் வாழ்க்கைக்குள்ளயும் நுழைய ஆரம்பிச்ச. எனக்காக பாடுனது, ஆடுனது எல்லாமே எனக்கு பிடிச்சது. உனக்காக விட்டுக் குடுக்க ஆரம்பிச்சேன். ஆனா மனசுக்குள்ள ஒரே போராட்டம். நான் செய்யறது தப்பு தப்புன்னு. என் தாத்தா ரெண்டு பேரும் வந்து மாறி மாறி காறி துப்புனாங்க. எங்க பேரனாடா நீன்னு ராத்திரி கனவுல எல்லாம் டார்ச்சர் பண்ணாங்க. ஆனா உன் பக்கத்துல இருக்கறப்போ, எல்லாமே மறைஞ்சிடும்.”

“மனசுக்குள்ள இவ்வளவு வச்சிக்கிட்டு கஷ்டப்படீங்களா துரை?”

“உன்னோட பாசத்துல நனையற சுகத்துல, மத்ததெல்லாம் பெருசா தெரியல ப்ளேக்கி.”

“அப்புறம் ஏன் என்ன தொட விடல?”

“எப்படி விட முடியும்? நீ தொடறப்போ, எனக்குள்ள போட்டு வச்சிருக்கற வேற்று இன வேலிலாம் உடஞ்சி போயிருது. அதனால தான் என்னை தொடக் கூடாதுன்னு பயமுறுத்தி வச்சேன். ஆனாலும் கேக்கற ஆளா நீ! ” செல்லம் கொஞ்சிக் கொண்டான் தன் ப்ளேக்கியை.

“என் வேலைலாம் நீயே செய்யனும், முன்ன இருந்த பையன் திரும்ப வந்தா நீ என் கிட்ட வர மாட்டன்னு அந்த கருவாயன வேற எஸ்டேட்டுக்கு அனுப்பி வச்சேன்.”

“அடப்பாவி! வெள்ளையா உள்ளவன் பொய் சொல்ல மாட்டான்னு ஆத்தா சொல்லுமே! இப்படி என்னை ஏமாத்தி வச்சிருக்கீங்களே துரை! அடுத்த ஜென்மத்துல கன்னங்கரேல்னு தான் பொறப்பீங்க!”

அவள் சாபத்தில் வாய் விட்டு சிரித்தான் எட்வர்ட்.

இங்கே இவர்கள் மனம் விட்டுப் பேசி தங்கள் மனக்கிலேசங்களை போக்கி கொண்டிருக்கும் வேளை, அங்கே இரு ஜீவன்கள் சத்தமில்லாமல் சதி திட்டம் தீட்டிக் கொண்டிருந்தன.

“யக்கா, இன்னும் எத்தனை நாளைக்கித்தான் இப்படி அழுவ?” குரலைத் தழைத்து கோபமாக பேசினார் தங்கம்.

“வேற என்னடி பண்ண சொல்லுற? இந்த சிறுக்கி இப்படி வேத்து இனத்துக்காரன் கூட கூத்தடிப்பான்னு நான் கனவுல கூட நினைக்கலியே. உங்க மாமா வேற ஜாதி ஆளுங்க கையால ஒரு வாய் தண்ணி கூட குடிக்க மாட்டாரே. அவரு ஆவி மக பண்ணத நினைச்சு அந்தரத்துல தொங்கிகிட்டு இருக்கும்டி” மூக்கை உறிஞ்சினார்.

“இது அழற நேரம் இல்லைக்கா. நாம சொத்து சுகம் இல்லாத வெறும் ஆளா இருக்கலாம். ஆனா மானம் மருவாதி உள்ள ஜாதிக்கா. எம்புட்டு தைரியம் இருந்தா நம்ம வீட்டுக்கே வந்து, உங்க மகள கண்ணாலம் பண்ணிருக்கேன்னு நெஞ்சை நிமித்தி சொல்லுவான் அந்த வெள்ளைக்காரன்!” கருவித் தள்ளினார் தங்கம்.

முத்துவுக்கு சேதி சொல்ல தங்கம் ஆள் அனுப்பிய இரண்டாம் நாள், அவர்கள் வாசலில் முனியனுடன் வந்து நின்றான் எட்வர்ட்.
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: இள மனச--EPI 24
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Geethazhagan

Active member
Aug 11, 2025
58
39
28
துரையின் காதல் சுபூக்கு தெரிகிறது.
அச்சோ இந்த அம்மாக்கள் என்ன பண்ணபோறாங்க
 
  • Love
Reactions: VanishaAdmin