இள மனச--EPI 26

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
923
-1,943
93
அத்தியாயம் 26



கண்கள் சிவந்துப் போய் கை முஷ்டிகள் இருக ஐய்யனார் சிலை போல நின்றிருந்தான் முத்து. ஆசையாய் ஓடோடி வந்தவனை ஏமாற்றம் எனும் புயல் அடித்து நொறுக்கி இருந்தது.

“இப்படி ஆகும்னு தெரியாதுப்பா முத்து” மண்ணெண்ணெய் விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் கூட அவனின் கோப முகம் தங்கத்துக்கு பயத்தைக் கொடுத்தது.

இன்றுதான் பினாங்கில் இருந்து வந்திருந்தான் முத்து. அவன் வீட்டுக்கு வந்த நேரம், முனியன் கழிப்பறைக்குப் போயிருந்தான். அவசரமாக முத்துவை சற்று தள்ளி இருந்த தங்கள் ஒன்றுவிட்ட மச்சான் வீட்டுக்கு அனுப்பி வைத்த தங்கம், இரவு பேசிக்கொள்ளலாம் என முடித்து விட்டார். விடிகாலை ஊரும், எட்வர்ட் வைத்த ஆளும் அசந்து இருக்கும் நேரம் முத்துவை சந்திக்கப் போனார் தங்கம்.

“என்ன தெரியாது சின்னக்கா? நம்ம புள்ள குணம் எப்படி, மனம் எப்படின்னு உங்களுக்குத் தெரியாது? பச்ச மண்ணுக்கா அவ. அவள இப்படி வேலைக்கு அனுப்பி வச்சிருக்கீங்களே! நான் கேட்டனா? காசு வேணும், நகை நட்டு வேணும்னு நான் கேட்டனா? அவள மட்டும்தானே கேட்டேன்! இப்படி பண்ணிப்புட்டீங்களே? வேலைக்கு மட்டும்தான் போயிருக்கான்னு சொல்லி அனுப்புனீங்களே, நாம போய் அழைச்சிட்டு வந்துரலாம்னு ஓடோடி வந்தனே! இப்படி என் தலையில பெரிய இடிய எறக்கிப்புட்டீங்களே” கோபத்தில் கையை ஓங்கி சுவற்றில் குத்தினான்.

“டேய் மாப்பிள்ளை! கோவத்த குறைலே! தங்கம் என்னத்த பண்ணும்! ஊருல எல்லாரும் அனுப்பற மாதிரி தானே அவளை வேலைக்கு அனுப்புச்சு. இப்படி அந்த தொரை அவ மனச கெடுத்துப் புடுவான்னு நாம என்ன கனவா கண்டோம்!” சமாதானப் படுத்தினார் முத்துவின் மச்சான் முறைக்காரர் வீராண்டி.

“எங்காத்தா மேல உள்ள கடுப்ப என் கிட்ட காட்டிட்டாங்க மச்சான். நான் சுப்புவ பார்க்க வந்தாலே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசுவாங்க. நானும் அக்காதானேனு பொறுமையா போவேன். ஆனா என் வாழ்க்கையையே நொறுக்கிப்புட்டாங்களே! எங்காத்தா மட்டு மருவாதை இல்லாம இவங்க கிட்டலாம் நடந்துகிச்சுனா அதுக்கு நான் எப்படி மச்சான் பொறுப்பாவேன்? நான் மரியாதையா தானே நடந்துகிட்டேன். வரப்போ போறப்போலாம் என் மனச ஜாடை மாடையா சொல்லிகிட்டு தானே இருந்தேன். எங்க மாமன் சாகறப்போ அந்தப் புள்ளைய, தோ இந்தக் கையில புடிச்சுக் குடுத்தாரு. அப்பவே அவ என் பாதி பொண்டாட்டி. என்னை கேக்காம அவள வேலைக்கு அனுப்பி இப்படி என் பொழப்புல மண்ணை அள்ளி போட்டுட்டாங்களே!” கோபம் அடங்காமல் சீறினான் முத்து.

தங்கத்தின் முதல் கணவரின் நெருங்கிய சொந்தம் தான் முத்துவின் அம்மா. தங்கத்தின் கணவர் ஆற்றில் விழுந்து உயிரை விட்டதில் இருந்து பெண்கள் இருவருக்கும் ஆகாது. எங்கு பார்த்தாலும் முட்டிக் கொள்ளும். அன்னத்தின் மகள் சுப்பு என்பதால் தான் முத்து அவளைக் கட்டிக் கொள்ள வேண்டா வெறுப்பாக சம்மதித்திருந்தார் அவர். தங்கத்தின் வயிற்றுப் பிள்ளை என்றால் பிரளயமே நடந்திருக்கும்.

“என்னயா அப்படி சொல்லிப்புட்ட! உன் ஆசை எங்களுக்குத் தெரியாதா? உங்காத்தா நாளை பின்ன சுப்புவ கரிச்சுக் கொட்டி கண்ணு கலங்க வச்சிற கூடாதுனு தான் நாங்க வேலைக்கு அனுப்புனோம். இப்படி ஆவும்னு கனவுல கூட நினைக்கல முத்து. சத்தியமா சொல்லுறேன் நம்புப்பா” சேலை தலைப்பால் வாயை மூடி கண் கலங்கினார் தங்கம்.

“அட ஏன் புள்ள நீ கண்ணு கலங்குறவ!” கிட்டே வந்து தங்கத்தின் கண்ணைத் துடைக்க முனைந்தார் வீராண்டி.

“மச்சான் அக்கா வார(வருகிற) சத்தம் கேக்குது!” என பின்னே நகர்ந்தார் தங்கம்.

முகம் பீதியடைய, அடுப்படியை நோக்கினார் வீராண்டி. அங்கே அவர் மனைவியும் பிள்ளைகளும் குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர். திரும்பி தங்கத்தை முறைத்த வீராண்டியை, முத்துவின் கலங்கிய குரல் நடப்புக்குக் கொண்டு வந்தது.

“சுப்புவ பொண்டாட்டியா என் மனசுல எப்பவோ வரிஞ்சிட்டேன் மச்சான். உங்க பொண்டாட்டி இன்னொருத்தன் கூட இருக்கான்னு சொன்னா, உங்களுக்கு எப்படி இருக்கும்?”

“டேய், உங்க பஞ்சாயத்துல என் பொண்டாட்டிய ஏன்டா இழுக்கற? அவ பூனை திருடாத கருவாடுடா! பத்திரை மாத்து தங்கம்”

“சுண்ணாம்புன்னு சொன்னா வாய் வெந்துறாது மச்சான். இப்ப என் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட இருக்கான்னு தெரிஞ்சும் இந்த ஜீவனுல ஏன் உசுரு ஒட்டிட்டு இருக்கு தெரியுமா? அவ மேல நான் வச்ச பாசம் மச்சான்.” கண் கலங்கியது அவனுக்கு.

“பினாங்குல போய் நாய் மாதிரி சாப்பாட்டுக்கு கூட நாதியத்து உழைச்சேனே, யாருக்கு மச்சான்? அவள ராணியாட்டம் வச்சிக்கனும்னு தானே. நெஞ்சில கத்திய வச்சு கீறிவுட்ட மாதிரி காந்துது மச்சான். என்ன ஆனாலும், அந்த தொரை அவள தொட்டிருந்தாலும் சரி அவ எனக்கு வேணும். என் உசுரு எனக்கு திரும்ப வேணும். மனசறிஞ்சு அவன் கூட இருந்திருக்க மாட்டா அவ. என்னமோ பண்ணி ஏமாத்தி வச்சிருக்கான் என் சுப்புவ. அவன கொன்னு போட்டுட்டு என் பொண்டாட்டிய நான் கூட்டிட்டு வரேன்” வீட்டுப் பின்னால் களை எடுக்க சொருகி வைத்திருந்த அருவாளை உருவினான் முத்து. கண்களில் ரௌத்திரம் தாண்டவமாடியது.

“டேய் முத்து! அடங்கமாட்டியாடா நீ? அருவா எடுத்துட்டு அவன் முன்னுக்குப் போறதுக்குள்ள, அவன் துப்பாக்கி வச்சு உன்னை குருவி மாதிரி சுட்டுருவாண்டா கேணைப்பயலே! ஆத்திரத்த விட்டுபுட்டு, அறிவ பாவிக்கனும்டா இப்ப. நேர் வழிலாம் சரிப்பட்டு வராது. வேற குறுக்கு வழிதான் பாக்கனும்” அருவாளைப் பிடுங்கி கீழே எறிந்தவர் அவனையும் அடக்கி அமர வைத்தார்.

கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்த தங்கத்தைப் பார்த்த வீராண்டி,

“பொம்பளைங்க ரெண்டு பேரும் ஜாதி சனத்த மதிக்காம தானா முடிவெடுத்து ஆடுனா இப்படித்தான் ஆகும் தங்கம்மா. விஷயம் இப்புட்டு தூரம் போற வரைக்கும் கமுக்கமா இருந்துருக்கீங்க. மக்கா மனுஷான்னு நாங்களாம் எதுக்கு இருக்கோம்?” கோபத்தை தங்கத்திடம் காட்டினார் வீராண்டி.

“மன்னிச்சிருங்க மச்சான்!” தலையைக் குனிந்து கொண்டார் தங்கம்.

“பொட்டக் கோழி கூரை மேல ஏறி எம்புட்டு தெனாவெட்டா கூவுனாலும், முட்டைப் போட கீழ இறங்கி தான் வரனும். அத வெவரமா புரிஞ்சு நடந்திருந்தா இம்புட்டு வெவகாரம் ஆகி இருக்குமா?” தன் கடுப்பையும் கோபத்தையும் ஒருங்கே காட்டினார் வீராண்டி.

‘என் கிரகம் நீயெல்லாம் பேசி நான் கேக்கற நெலைமைக்கு வந்து விட்டுருக்கு. புருஷன் செத்த பொம்பளைங்களாச்சே, ஆபத்து அவசரத்துக்கு அணுசரனையாவாடா இருந்தீங்க? பொணத்த தூக்குன ராத்திரியே, ஈன்னு இளிச்சிகிட்டு பின் வாச கதவை தட்டனவனாச்சே நீ! கட்டை வெளக்கமாத்தா தூக்கவும், கதறிகிட்டு ஓடிட்டு இப்ப நொரைநாட்டியம் பேசிட்டு திரியற! த்தூ!’ மனசிலே தான் துப்பினார் தங்கம். பெறாத மகளுக்காக மான ரோசத்தை வீட்டின் வாசலிலே விட்டு விட்டு வந்திருந்தார் அவர்.

“மச்சான் பழைய கதைய விடுங்க. இப்ப என் கதைக்கு வாங்க! சுப்பு எனக்கு வேணும். என்ன பண்ணறதுன்னு சொல்லுங்க. நீங்க எதாச்சும் பண்ணலன்னா நானே என் வழிய பாத்துக்கறேன்.” பொங்கினான் முத்து.

“இருடா டேய்! இவன் வேற அடுப்புல போட்ட ஆமை வடை மாதிரி பொங்கிட்டு திரியறான். இதெல்லாம் எடுத்தேன் கவுத்தென்னு செய்ய முடியாது. இவளுகள சுத்தி வேற காவல் போட்டிருக்கான் அந்த தொரை. கண்ணுல மண்ண தூவிட்டு தான் காரியம் முடிக்கனும். ஆனா மாப்புள, காரியம் மட்டும் சரியா முடியலைனா, அவள அங்கயே கண்டந் துண்டமா வெட்டிப் போட்டுட்டு வரேன்னு வாக்கு குடு. இல்லைனா நான் எந்த சகாயமும் செய்ய மாட்டேன்.”

“சரி மச்சான். அப்படியே ஆகட்டும்”

‘என் உசுர நானே வெட்டிப் போடுவேன்னா? அவ என் உசுருய்யா! பேசறான் பாரு வெளங்காவெட்டி பய! உன்ன மாதிரி ஜாதி வெறி ஊறி போய் கிடக்கலய்யா என் ஒடம்புல. ஊரு விட்டு ஊரு போய், வெயில் மழையில வேலை செய்யறப்ப, தவிச்ச வாயிக்கு தண்ணி குடுக்கற எல்லாரும் என் ஜாதிதான். பசிச்ச வயித்துக்கு சோறு போட்ட எல்லாரும் என் இனம்தான். உன் கிட்ட காரியம் ஆக வேண்டி இருக்கு. அதனால பொறுத்து போறேன். காரியம் முடிஞ்சதும், என் சுப்புவ கூட்டிட்டு உங்க யாரு கண்ணுக்கும் படாம கண் காணாம போயிருவேன்.’

“தோ, இதுதான் திட்டம். நம்ம முருகைய்யன் மவன் நடராசு இருக்கான்ல, அவன் அந்த எஸ்டேட்டுல தான் வேலைப் பாக்கறான். நம்ம சாதி சனம் நெறைய பேரு அங்க தான் குடியிருக்காங்க. அந்த நடராச வச்சு….” திட்டம் உருவானது.

ஒரு வாரமாக மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. வேலைக்குக் கூட யாரும் போக முடியாத நிலைமை. துரை பங்களாவில், பதட்டமாகவே சுற்றிக் கொண்டிருந்தான் எட்வர்ட். முத்து ஊருக்கு திரும்பி வந்த விஷயம் முனியனின் மூலமாக அவன் காதுக்கு எட்டி இருந்தது.

படிக்காத இவர்களுக்கே இவ்வளவு மூளை வேலை செய்யும் போது, பட்டப் படிப்பு முடித்திருந்த எட்வர்ட்டுக்கு எவ்வளவு மூளை வேலை செய்யும்! வீராண்டி தான் அவர்கள் ஜாதி தலைவர் என தெரிந்து அவரை கண்காணிக்கவும் சொல்லி வைத்திருந்தான். அப்படிதான் முத்து அவர்கள் வீட்டில் இருப்பது தெரிய வந்தது அவனுக்கு.

சக இனத்தவர்களின் உதவிகள் வேறு எட்வர்டுக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தன. முத்துவை இங்கிருந்து பினாங்குக்கு வேலைக்கு அனுப்பியது எல்லாம் தன் சக எஸ்டேட் பிரிட்டிஷ் நண்பர்கள் மூலமாகதான். இவர்களுக்குள்ளாகவே, இப்படிதான் கலகம் விளைவிப்பவர்களை, போர் கொடி தூக்குபவர்களை எல்லாம் அங்கேயும் இங்கேயும் பந்தாடி மகிழ்வார்கள்.

இப்பொழுது சுப்புவின் வரவினால், எட்வர்டுக்கு இந்த மாதிரி சலுகைகள் மறுக்கப்பட்டன. முத்து பினாங்கில் இருந்து ஓடி வந்தது கூட இவனிடம் பகிரப்படவில்லை. இவன் சுப்புவின் எஸ்டேட்டில் ஆள் வைத்திருக்காவிட்டால், கண்டிப்பாக விஷயம் தெரிந்திருக்காது.

இன்னேரம் தங்கள் திருமண விஷயம் முத்துவுக்கு தெரிந்திருக்கும். இருந்தும் அந்த ஊரை விட்டு அவன் வெளியேறிய அறிகுறி ஏதும் இல்லாமல் இருக்கவும், கண்டிப்பாக சுப்புவை கைப்பற்ற வருவான் என எட்வர்ட் திட்டவட்டமாக நம்பினான். பாதியில் வந்த தன்னாலேயே சுப்புவை விட்டு இருக்க முடியாது எனும் போது, அவள் பிறந்ததில் இருந்தே தனக்கு தான் என சொல்லி வளர்க்கப்பட்ட முத்து எந்த எல்லைக்கும் செல்வான் என இவனுக்குப் புரிந்து இருந்தது.

மாயன் குடித்து விட்டு உளறிய,

“காட்டுத்தனமா அந்த முத்துப்பய இந்த சுப்பு புள்ள மேல ஆசையா கெடக்கான். பாவம்யா அவன்! “ முனியன் இன்னும் கள்ளை அவனுக்கு ஊற்றிக் கொடுக்கவும், “

“எவன் எக்கேடு கெட்ட எனக்கு என்னய்யா! இந்த கள்ளு தண்ணிக்காக நான் விஷ காய்ச்சலுன்னு பொய்யி சொல்ல ஒத்துக்கறேன்.” என சொன்னது வேறு மனதில் வந்து பயமுறுத்தியது.

வீட்டை சுற்றி காவலை அதிகப் படுத்தினான் எட்வர்ட். மழையில் கூட சாக்குப் பையைத் தலைக்குப் போர்த்திக் கொண்டு காவல் இருந்தனர் அவன் நியமித்த ஆட்கள். சுப்புவின் அருகிலேயே பட்டு மாற்றி பவுனு இருக்கும் படி கட்டளையிட்டு இருந்தான். ஜோனி வேறு அவிழ்த்து விடப்பட்டு எப்பொழுதும் வீட்டை சுற்றிக் கொண்டிருந்தது.

பலதையும் நினைத்து ஹால் நாற்காலியில் முகம் இருக அமர்ந்திருந்தான் அவன். அவனுக்கு வரும் ஆத்திரத்துக்கு முத்துவை வெட்டி ஆற்றில் எறிந்து விடலாம் எனும் அளவுக்குக் கொதித்தது. ஆனால் என்றாவது விஷயம் தெரிந்தால் சுப்பு தன்னை மன்னிக்கவே மாட்டாள் என புரிந்ததால் அமைதி காத்தான் எட்வர்ட்.

தனக்குப் பின்னால் கேட்ட கொலுசொலி மெல்ல மனதை வருடி அவனை சாந்தப்படுத்தியது. நாற்காலியின் பின்னால் வந்து நின்ற சுப்பு, அவன் கழுத்தை வளைத்துக் கட்டிக் கொண்டாள். மஞ்சள் வாசம் அவன் நாசியை நிறைத்து, மீதி சஞ்சலங்களையும் விரட்டி அடித்தது.

“துரை”

“ஹ்ம்ம்” அவள் தாடையை அவன் கழுத்து வளைவில் தேய்க்கவும், சுகமாக முனகினான் எட்வர்ட்.

“துரை”

“சொல்லு ப்ளேக்கி”

“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”

“இல்லையே, எப்பொழுதும் மாதிரி தானே இருக்கேன்”

“என்னமோ நெனைச்சிகிட்டே இருக்கீங்க! என்னன்னு தான் எனக்கு தெரியல. என் கிட்ட சொல்லக்கூடாதா துரை?” தன் மெல்லிய விரலால் அவன் நெற்றியைப் பிடித்து விட்டாள் சுப்பு.

சில நாட்களாக மன உளைச்சலில் தூக்கம் இன்றி தவித்தவன், இன்னும் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்டான். நெற்றியைப் பிடித்து விட்டவள், அவன் தோள்களையும் பிடித்து விட்டாள்.

“இதென்னா நரம்பெல்லாம் இப்படி பின்னி பினைஞ்சி கெடக்கு! மண்டை வேற இப்படி சூடா இருக்கு. இந்த மழையில கூட மேனி இப்படி சுடுது. இருங்க துரை, காய்ச்சி வச்ச தேங்காய் எண்ணெய் இருக்கு. எடுத்துட்டு வரேன். நடு மண்டையில ஊத்தி நாலு இடி இடிச்சா சூடெல்லாம் ஓடி போயிரும்.”

“வேணா ப்ளேக்கி. அந்த வாடைய யாரு தாங்கறது? என்னை விட்டுரு” மூக்கை சுருக்கி விரித்தான்.

“வாடை எல்லாம் என்னை மாதிரி மூக்கு பொடப்பா இருக்கறவங்களுக்கு தான் அடிக்கும். உங்களுக்குத்தான் மூக்குக்கு பதிலா ரெண்டு ஓட்டை போட்டு அனுப்பிருக்காரே வெள்ளை சாமி, அந்த ஓட்டைக்கு வாடை எல்லாம் ஏறாது. அதனால ஷட்டப்பூ(shut up) பண்ணுங்க” என அவன் சப்பை மூக்கை கிண்டலடித்து விட்டுப் போனாள் சுப்பு.

இறுக்கமான அவன் முகத்தில் சிரிப்பு எட்டிப் பார்த்தது. அவன் மூக்கை மூடிக் கொண்டு, முனகி தள்ள, கொஞ்சம் கூட அசராமல் தலைக்கு எண்ணையை அப்பி, சட்டையை கழட்ட சொல்லி உடம்புக்கும் தேய்த்து விட்டாள் சுப்பு. கையோடு எழுப்பி சுடுதண்ணீர் ஊற்றி குளிக்கவும் வைத்தாள். குளித்து வந்தவனுக்கு கட்டிலில் சரிந்தது தான் தெரியும். சில நாட்களாக நழுவிய தூக்கம் ஓடி வந்து கண்களை தழுவிக் கொண்டது.

கட்டிலில் அவன் அருகில் அமர்ந்து, உறங்கும் அவனையேப் பார்த்திருந்தாள் சுப்பு.

‘என்ன ஆச்சுன்னு தெரியலையே! வீட்டு வெளிய எல்லாம் புதுசு புதுசா ஆளுங்க சுத்துறாங்க. இந்தக்காங்க வேற காவல் தெய்வம் கணக்கா என் பின்னாலேயே திரியறாங்க! அவங்கள கேட்டாலும் ஒன்னும் தெரியலை. சித்தப்பூவ கேட்டாலும் ஒன்னும் தெரியல. துரையும் நான் எது கேட்டாலும் சிரிச்சு மழுப்புறாரு! என்னை சின்னப்புள்ளயாவே நடத்துறாங்க எல்லாரும். கொஞ்ச நாளா மனசு வேற சஞ்சலமா இருக்கு. கோயிலுக்குப் போயி எலுமிச்சை வெளக்குப் போட்டுட்டு வரலாமா? இவரு தூங்கி எழும்பறதுக்குள்ள போயிட்டு வந்தரலாம்’ என முடிவெடுத்தாள்.

கட்டிலில் இருந்து எழும் முன் மீண்டும் எட்வர்டின் முகத்தை ஒரு முறை பார்த்தாள் சுப்பு. வாயை இருக மூடி, ஏதோ பயங்கர கனவு காண்பவன் போல புருவத்தை நெறித்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான் அவன். எட்வர்டை நெருங்கி அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டாள் சுப்பு.

“ப்ளேக்கி” தூக்கத்தில் கூட அவளை அறிந்தவன், இழுத்து அணைத்துக் கொண்டான். சற்று நேரம் அவன் மீண்டும் ஆழ்ந்து உறங்கும் வரை கையணைப்பில் இருந்தவள், மெல்ல நகர்ந்து எழுந்து வந்தாள்.

ஓடிப் போய் குளித்து விட்டு வந்தவள், அன்று அவளுடன் இருந்த பவுனுவைத் தேடி அடுப்படிக்கு சென்றாள்.

“என்னப்புள்ள காப்பி தண்ணி கலக்கவா? மழைக்கு இதமா இருக்கும்.” என கேட்டார் பவுனு.

“வேணாக்கா! கோயிலுக்குப் போலாமாக்கா? மனசு சரியில்ல. போய் விளக்குப் போட்டுட்டு வரலாம்” என அழைத்தாள்.

“என்ன புள்ள வெளையாடுறியா? வானம் பொத்துகிட்டு ஊத்துது. இந்த நேரத்துல கோயிலுக்கா? அதோட துரை உன்ன எங்கயும் அனுப்பக்கூடாதுன்னு சொல்லிருக்காரு” மறுத்தார் பவுனு.

“அக்கா நான் துரைகிட்ட கேட்டுட்டேன். அவரு தான் உங்கள துணைக்கு கூட்டிட்டு போவ சொன்னாரு. இப்ப தூங்கிகிட்டு இருக்காரு, வேணும்னா நீங்க போயி எழுப்பி கேளுங்க.”

“அட, என்ன கருமத்துக்கு தூங்கற மனுசன போய் எழுப்ப சொல்லுற. சரி வா, கெளம்பு விரசா போயிட்டு வந்துரலாம்.” பட்டுவாக இருந்தால் அவளின் பொய்யைப் பட்டென கண்டுபிடித்து தலையில் கொட்டி இருப்பார். பவுனுவுக்கு அந்த அளவு கூறு இல்லையே.

விதி, மதியைத்(எட்வர்டை) தூங்க வைத்து விட்டு தன் ஆட்டத்தை அபாரமாக ஆரம்பித்தது.
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: இள மனச--EPI 26
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.