Jagam Nee--EPI 3

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
அத்தியாயம் 3



நைட்டுல போடனும் லைட்டு

ரதியே நீதான்டி என்னோட சைட்டு!!!




‘புக்கிட் ஜாலில்’ என அழைக்கப்படும் கோலாலம்பூரில் இருந்த ஓர் இடத்தில் அமைந்திருந்தது இந்த ‘காபிதியாம்’. இந்த புக்கிட் ஜாலில்லில்தான் மலேசியாவின் தேசிய விளையாட்டரங்கம் அமைந்துள்ளது. அலுவலகங்கள், வணிப மையங்கள் என அமைந்திருந்த அவ்விடத்தில்தான் அழகாய் நின்றது இவர்களின் காபிதியாம்.

தியாம் எனும் ஹொக்கியன் வார்த்தை கடை என்பதை குறிக்கும். ஆகவே காபிதியாம் என்றால் காபி கடை எனப் பொருள்படும். இங்கே பல வகையான பானங்களோடு, உணவு வகைகளும் விற்கப்படும். விதவிதமான ப்ரேட் டோஸ்ட், மலேசியர்களின் விருப்ப உணவான நாசி லெமாக், நூடுல்ஸ் வகைகள், டிசர்ட் வகைகள், மலாய் மற்றும் சீனர்களின் பலகாரங்கள் என ஆறு, ஏழு பக்கங்களுக்கு மெனு இருக்கும்.

அழகான மேசை நாற்காலிகள் (சில இடங்களில் சோபாக்கள் கூட இருக்கும்), வெய்ட்டரை அழைப்பதற்காக மேசையில் இருக்கும் பெல் பட்டன், அருமையான இண்டீரியர் (பார்க்க ட்ரடிஷனலாக இருந்தாலும் மார்டர்ன் லுக்கும் கலந்து நிற்கும்), குளு குளு ஏசி என வசூலிக்கப்படும் விலைக்கு ஏற்றது போல வருபவர்களுக்கு உணவை மட்டும் அல்ல மன நிறைவையும் தரும் இடமாக இருந்தது சரவணப்பாண்டியன் வேலைக்கு சேர்ந்திருந்த இந்த காபிதியாம்.

இந்தக் கடையில் பன்றி சம்பந்தப்பட்ட பொருட்களை சமையலில் சேர்ப்பதில்லை. அதனாலேயே மலாய்க்காரர்களும் இங்கே உணவுண்ண வருவார்கள். மூவின மக்களைத் தவிர்த்து, வெளிநாட்டவர்களும் இங்கே சாப்பிட வந்து போவார்கள்.

சரவணப்பாண்டியன் இங்கே வேலைக்கு வந்து சேர்ந்து ஒரு வாரம் ஓடி இருந்தது. இன்னுமே கூட கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல தவித்துத்தான் போய் விடுகிறான். கல்லாவில் அமரும் வேலை மட்டும்தான் இன்னும் இவனுக்குக் கொடுக்கப்படவில்லை. மற்றபடி எல்லா வேலைகளையும் மாற்றி மாற்றி சொல்லிக் கொடுத்து இவன் பெண்டை நிமிர்த்தினார்கள். இவனைத் தவிர இங்கே வேலை செய்யும் மற்றவர்கள் எல்லாருமே மலேசியர்கள்தான்.

சிலர் நட்பாய் புன்னகைத்தாலும், பலர் ஒரு கேவலமான பார்வையையே தந்தார்கள். வேலைச் சொல்லிக் கொடுக்கும் போது எதாவது தப்பு செய்து விட்டால், இது கூட செய்ய வரவில்லையா எனக் கடிந்து கொள்வதோடு, மலாயில் வேறு திட்டி வைத்தார்கள். புரியாத பாசையில் திட்டினாலும், அவர்கள் உடல் மொழியை வைத்து அறிந்து கொள்ள முடியாதா அவர்களின் நோக்கத்தை! மனது விண்டு வலித்தது இவனுக்கு. இவர்களிடம் கேவலப்படக் கூடாது எனும் நோக்கத்திலேயே இவனும் எல்லாவற்றையும் கற்றுத் தேற முழு மூச்சாய் முயன்றான்.

சூப்பர்வைசராக ஒரு மலாய் பெண்மணி இருந்தார். மற்றவர்களையாவது தாங்கிக் கொள்ளலாம் போல! அவர் பார்க்கும் பார்வையிலேயே இவன் பஷ்பமாகி விடுவான். தேவைக்கு மட்டுமே பேசுவார் அவர். அந்தப் பேச்சு கூட பட்டுத் தெறித்தார் போல இருக்கும்.

‘அடேய்!!! எல்லாமே சுத்தி அடிச்சா, நான் என்னடா பண்ணுவேன்’ என மனதினுள் புலம்பிக் கொள்வான் சரவணன்.

இவனைக் கூட்டி வந்து இங்கு விட்ட பழைய சூப்பர்வைசர்,

“ராத்திரி கடை அடைச்சதும், சுத்தமா கூட்டி மோப் போட்டுரு! கடைசியா போறவங்க ஷட்டர இழுத்து மூடி உன்னை உள்ள விட்டுப் பூட்டிட்டுப் போய்டுவாங்க! உனக்கு எமெர்ஜென்சியா வெளிய போகனும்னா, பின்னாடி கதவை யூஸ் பண்ணிக்க. அதுவும் அவசியம்னா மட்டும்தான்! சும்மா ஊரு மேயலாம் போகக் கூடாது! புரியுதா?” எனக் கேட்டு, அவனுக்கு சேஃப்டி அலாரத்தின் நம்பரையும் கற்பித்திருந்தார்.

ட்ரை குட்ஸ் வைத்திருக்கும் அறையில் இவனது லக்கேஜ் பேக்கை வைத்துக் கொண்டான். கடையிலேயே டாய்லட் இருக்க, அங்கேயே குளித்துக் கொள்வான். இரவு உறங்க, கஸ்டமர் அமரும் இரட்டை சோபாவைப் பயன்படுத்திக் கொள்வான். அது இவன் வளர்த்திக்கு சரியாகவே இல்லை. காலை மடக்கிக் குறுக்கிப் படுத்தாலும் மிகவும் சிரமமாகவே இருந்தது. முதல் நாள் போராடியவன், மறு நாள் இவனது போர்வையை மோசேக் தரையில் விரித்து, அங்கேயே கால் நீட்டிப் படுத்துக் கொண்டான். குளிர் தரை சிலுசிலுப்பாய் இருந்தாலும், என்னவோ நாள் முழுக்கப் பார்க்கும் வேலையால் அடித்துப் போட்டது போல உறங்கி போவான்.

தினமும் அலாரம் வைத்து காலையில் ஐந்துக்கே எழுந்து கொள்வான் சரவணப்பாண்டியன். குளித்து முடித்து, பத்து நிமிடங்கள் கண் மூடி மனதை ஒரு நிலைப்படுத்தி கடவுளை வேண்டிக் கொள்வான். அதன் பிறகு ஒரே ஓட்டம்தான். இவர்கள் கடைக்கும் பானம் தயாரிக்கவென பாரிஸ்ட்டா (ஹை கிளாஸ் காபி மாஸ்டர்) இருந்தார். அதோடு காபி மிசினும் உபயோகித்தார்கள். அந்த மிசினைத் துடைத்து அதற்கான காபி தூள், சீனி, மாவு என நிரப்பி வைக்க வேண்டும். அதன் பின் பெரிய ரைஸ் குக்கரில் நாசி லெமாவுக்கான சாதம் தயாரிக்க வேண்டும். இத்தனை கப் அரிசி போட்டால் இத்தனை கப் தண்ணீர் ஊற்றி, தேங்காய் பால் கொடுக்கப்பட்ட அளவு கலந்து, பண்டான் இலை(வாசனை இலை) கலந்து, இஞ்சி கொஞ்சமாய் போட்டு சாதத்தை வேக விட வேண்டும். சூப்பர்வைசர் சொன்னதை எழுதி வைத்திருந்து அதன்படித்தான் முதல் முறை செய்தான். தண்ணீரின் அளவு கூடிப் போக, சாதம் குழைந்து விட்டது. அவனைத் திட்டித் தீர்த்ததோடு அன்று முழுக்க பார்க்கும் நேரமெல்லாம் அவனை முறைத்துத் தள்ளி விட்டார் சூப்பர்வைசர் பெண்மணி.

அதன் பிறகு மிகவுமே கவனமாக அந்தச் சாதத்தைத் தயாரிக்கப் பழகிக் கொண்டான். ஆறு மணி போல, பின் புற கதவு தட்டப்படும். வேனில் பலகாரங்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள் அந்த நேரத்தில். அதை கணக்குப் பார்த்து வாங்கி, அதற்கான இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும். ப்ரீஷரில் இருக்கும் கோழி, மட்டன், இவைகளையெல்லாம் வெளியே எடுத்து வைக்க வேண்டும். அதற்குள் பின் கதவு வழியே சமைப்பவர்கள் வந்து விடுவார்கள். அவர்கள் வருவதற்கு முன் கிடைக்கும் கேப்பில் அவசரமாக ஒரு காபி கலந்து, வந்திருந்த பலகாரத்தில் இவன் விரும்பி சாப்பிடப் பழகி இருந்த குவே லாப்பிஸ் (இனிப்பு பலகாரம்) இரண்டை அவசரகதியில் வாயில் திணித்துக் கொள்வான். அதற்கு பிறகு சமையல் அறையில் எடுபிடி வேலை செய்வான்.

சரியாக ஏழு நாற்பந்தைந்துக்கு சூப்பர்வைசர் வந்து முன் கதவின் ஷட்டரை திறந்து உள்ளே வருவார். அவரோடு வேலைப் பார்ப்பவர்களும் வருவார்கள். அதில் ஆரம்பித்து கடை அடைக்கும் வரை வேலை, வேலை, வேலை என ஓடுவான் சரவணப்பாண்டியன்.

கடை அடைத்ததும் மீதி இருக்கும் சாமான்களை கழுவிப் போட்டு, கடையைச் சுத்தம் செய்து, குளித்து விட்டு அக்கடாவென அமர்ந்து விடுவான். சாப்பிடக் கூட உடல் ஒத்துழைக்காது. தங்கைக்கு அழைத்து சிறிது நேரம் பேசி விட்டு, உடம்புக்குத் தெம்பு வேண்டுமே என எதாவது சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொள்வான். தொலைபேசியில் இதமாய் பாடல்கள் ஒலிக்க, இவன் சொர்க்கத்தில் சிறகடிக்க ஆரம்பித்திருப்பான்.

அன்றைய தினம் புதிதாய் ஒரு தமிழ் பையன் வேலைக்கு வந்திருந்தான். இப்பொழுதுதான் எஸ்.பி.எம் எனும் மலேசியாவின் உயர்தர பரிட்சையை முடித்திருந்தான். ரிசால்ட் வர இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும். காத்திருப்பு நேரத்தில் சம்பாதிக்கலாமே என பார்ட் டைம் வேலைக்கு வந்திருந்தான். நேர்முகத் தேர்வுக்கு அவன் வந்த போது, சரவணன்தான் குளிர்ந்த நீர் கொண்டு போய் கொடுத்தான். அவன் புன்னகைக்க, இவனும் புன்னகைத்து வைத்தான். அவனுக்கு வேலைக் கொடுத்திருந்த சூப்பர்வைசர், வேலை கற்றுக் கொடுக்கச் சொல்லி சரவணனிடம்தான் அனுப்பி வைத்தார்.

“ஹலோ ஜோ(ப்ரோ, மச்சி, மச்சான் என்பது போல ஒரு விளிப்பு)! என் பேரு இளமாறன். கால் மீ இளா” எனக் கை கொடுத்தான் சரவணப்பாண்டியனுக்கு.

“என் பேரு சரவணப்பாண்டியன்!”

“இவ்ளோ நீளமாலாம் கூப்ட முடியாது! சரான்னு கூப்டறேன்” எனச் சொல்லிப் புன்னகைத்தான் அவன்.

அவனது நட்பான பேச்சில் சரவணனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. தான் இந்த நாட்டுக்காரன் இல்லையெனத் தெரிந்தால் இவனும் முகத்தைத் திருப்புவானோ என எண்ணியவன்,

“அது வந்து..” எனத் தயங்கி,

“நான் இந்தியா ஆளு” எனச் சொல்லி விட்டான்.

மற்றவர்கள் இவனிடம் பழகாமல் ஒதுங்க, இவனும் அப்படித்தான் இருப்பான் எனப் பட்டெனச் சொல்லி விட்டான்.

சரவணனை ஆழ்ந்து பார்த்த இளா,

“ஜோ! நானுமே இந்தியா ஆளுதான்! ஏன் இங்க உள்ள நம்ம மக்களுக்கு எல்லாமே பூர்வீகம் அங்கத்தானே! முப்பாட்டன் இங்க வந்து செட்டிலாகி, நாங்களாம் மலேசியனா ஆகிட்டாலும், வேர் அங்கத்தானே! அதை நான் மறக்கல ஜோ! ஏன் நம்ம மக்கள் கூட அதை மறக்க மாட்டாங்க. இல்லாமலா திருச்சி ஏர்போர்ட்டும் சென்னை ஏர்போர்ட்டும் எங்க மக்களால நிரம்பி வழியுது!!” என்றான்.

அவனது பேச்சு இவன் நெஞ்சில் பாலை வார்க்க, கை குலுக்க கையை நீட்டினான் சரவணப்பாண்டியன். இளாவும் அவன் கைப்பற்றிக் குலுக்கினான். இளா வயதில் சின்னவனாய் இருந்தாலும், சரவணனுக்கு ஓர் அழகான நட்பு கிடைத்தது அங்கே.

சூப்பர்வைசரின் முறைப்பில் இருவரும் வேலையைப் பார்க்கப் போனார்கள். தான் கற்றுக் கொண்டதை இளாவுக்கும் கற்றுக் கொடுத்தான் சரவணன். கஸ்டமரிடம் எப்படி சிரித்த முகமாகப் பேசுவது, எந்த உணவுக்கு என்ன சைட் டிஸ் சேர்ப்பது, மேசை எண்ணைப் பார்த்து எப்படி உணவை கொண்டு போய் வைப்பது எனத் தனக்குத் தெரிந்த அளவில் கற்றுக் கொடுத்தான். இளாவும் சரவணனுக்குப் புரியாத சில மலாய் வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்தான். மதிய உணவு வேளையில் கூட இருவரும் கிச்சன் ஓரமாய் அமர்ந்து பேசிச் சிரித்தபடிதான் உணவு உண்டார்கள்.

“தெங்க்ஸ் ஜோ” என்றான் சரவணன்.

“எதுக்கு ஜோ?”
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 3
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
“எனக்கு இங்க பேச்சுத் துணைக்கு யாருமே இல்ல! எங்க இன்னும் கொஞ்ச நாளுல பைத்தியமாகிடுவேனோன்னு நெனைச்சேன்! இப்போ நீ கிடைச்சிருக்க”

“கவலைய விடுங்க, கண்ணீரைத் துடைங்க ஜோ! இனி உங்கள பேசி பேசியே டார்ச்சர் பண்ண நான் இருக்கேன்”

புன்னகைத்த சரவணன்,

“உங்க வீட்டுல ரொம்ப கஷ்டமா ஜோ?” எனக் கேட்டான்.

“ஏன் சரா அப்படி கேக்கறீங்க?”

“வேலைப் பார்க்க வந்திருக்கீங்களே! அதான் கேட்டேன்”

“அட போங்க சரா! எங்கம்மா ஒரு டார்ச்சர் திலகம்! இந்த ரெண்டு மாசத்துக்கு கோடிங் கிளாஸ் போ, லீடர்ஷிப் கோர்ஸ் போ, அப்டி இப்டின்னு ஒரே அழும்பு! இப்போத்தான் பெரிய பரிட்சைக்கு ராப்பகலா கஷ்டப்பட்டுப் படிச்சேன்! கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க விடாம, நொய் நொய்ன்னு! அதான் அப்பாட்ட கேட்டு வேலைக்கு சேர்ந்துட்டேன்! அனுபவப் படிப்பும் ஒரு ஸ்கில்தான்னு எங்கம்மாவ சமாளிச்சிட்டாரு! வேலைப் பார்த்தமா, கடைக்கு வர நாலு பொண்ணுங்கள சைட்டடிச்சமான்னு பொழுது போகும்ல! அதான் இந்த ஜாப்” எனச் சொல்லி கண்ணடித்தான் இளா.

அவனது செய்கையில் சிரிப்பு வந்தது இவனுக்கு.

“ஜோ!! ஜோ!!!” எனப் பதறினான் இளா.

“என்ன??? என்ன?”

“இப்படிலாம் சிரிக்காதீங்க! ரொம்ப ஹேண்ட்சமா தெரியறீங்க! அப்புறம் என்னை யாரும் சைட்டடிக்காம போய்ட போறாங்க”

“ஆமா! ஓவர் ஹேண்ட்சமாத்தான் இருக்கேன்! மலேசிய அழகி என் ஆட்டோகிராப்புக்குத்தான் வெய்ட்டிங்! போவியா!” எனச் சொல்லியவன், வேலையைப் பார்க்க எழுந்து கொண்டான்.

அதன் பிறகு வேலை வரிசைக் கட்டி நிற்க, பேச நேரமில்லாமல் போனது!

மாலை ஆறு மணி போல, கிச்சனுக்கு சென்று கொஞ்சம் காபி குடித்து விட்டு வந்தவனை ஒரு பெண் கை தட்டி அழைத்தாள்.

‘எடு அந்த தொடைப்பக்கட்டையை! டேபிள்ல பெல் பட்டன் இருக்கு! இல்லைனா ஹலோ, ஹோய், ஹாய்னு எதாச்சும் சொல்லி கூப்புடலாம்! அத விட்டுட்டு அவங்கப்பன் வீட்டுக் கடை மாதிரி கை தட்டி கூப்புடறாளே’ எனக் கருவிக் கொண்டே அவளருகே போய் நின்றான் சரவணப்பாண்டியன்.

“யெஸ் மேடம்!”

“வைட் காபி அண்ட் ஏக் டோஸ்ட்” என நிமிர்ந்து பார்க்காமலே சொன்னவள், தன் முன்னே இருந்த பாடப் புத்தகத்தில் மூழ்கி இருந்தாள்.

உடம்பை இறுக்கிப் பிடித்த டீஷர்ட், பாதி தொடை தெரியுமளவுக்கு ஒரு ஷார்ட் ஜீன்ஸ், மெஸ்ஸி பன் எனச் சொல்லப்படும் ஹேர் ஸ்டைல் என இக்காலத்துப் பெண்களின் பிரதிநிதியாக இருந்தாள். பார்க்கும் போதே தமிழ் பெண் எனப் புரிந்தது. இங்கே வேலைக்கு வந்ததில் இருந்து இன்னும் செக்சியாக உடை உடுத்தியவர்களைக் கூடப் பார்த்திருந்தான் சரவணன். ஆகையால் அவளது வெளித் தோற்றம் இவனைப் பாதிக்கவில்லை. ஆனால் அவள் கைத் தட்டி அழைத்ததுதான் எரிச்சலாய் இருந்தது. முகத்தில் கூட அதையெல்லாம் காட்டக் கூடாது என்பதால் விலகிப் போய் விட்டான்.

அவள் கேட்டது போல ஏக் டோஸ்ட் மற்றும் வைட் காபி கொண்டு வந்து வைத்தவன், பில்லையும் மேசை அருகே வைத்தான். அவனை நிமிர்ந்து அலட்சியமாகப் பார்த்தவள், மீண்டும் தனது வேலையில் மூழ்கினாள்.

‘திமிரப் பாரேன்’ என எண்ணியபடி மற்றவர்களைக் கவனிக்கப் போய் விட்டான் இவன்.

அரை மணி நேரத்தில் இன்னொரு வைட் காபி ஆர்டர் செய்து குடித்த அந்த பெண் பாடத்திலேயே கவனமாக இருந்தாள். மேலும் அரை மணி நேரம் கழித்து இன்னொரு காபி ஆர்டர் இவனிடம் வந்தது. கொண்டு வந்து வைத்தவன், அவளது பாட புத்தகத்தைக் கவனித்தான். கணக்கு போல இருந்தது. கல்குலேட்டரோடு அவள் அல்லாடிக் கொண்டிருக்க, இவன் ஆர்வமாய் அந்தக் கணக்கைப் பார்த்தான்.

என்னவோ அவளைக் கணக்குப் பண்ண பார்த்தது போல நிமிர்ந்து முறைத்தவள்,

“உனக்கு வேற வேலை வெட்டி இல்லையா? இப்படி மத்தவங்கள உத்து உத்துப் பார்க்கத்தான் உனக்கு சம்பளம் குடுக்கறாங்களா? இடியட்! போய் தொலை” என வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, அவமானமாய் போய் விட்டது இவனுக்கு.

“பேரழகி கிளியோபாட்ரா இவ! அப்படியே பார்த்து ஃப்ரீஷாகி நின்னுட்டாங்க!” என இவன் முணுமுணுத்துக் கொண்டே போக,

“ஹேய்!” என அழைத்தாள் அவள்.

“யெஸ் மேடம்!” என வந்து நின்றான்.

“என்ன சொன்ன?”

“ப்ரீஷர்ல ஸ்டாக் செக் பண்ணனும்னு எனக்குள்ள பேசிட்டே போனேன் மேடம்”

அவனை முறைத்துப் பார்த்தவள், வேறு ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.

அன்றைய தினம் கடையை இவனையே அடைத்து விடச் சொல்லி ஐந்து மணிக்கே அவசர வேலையெனக் கிளம்பி போயிருந்தார் சூப்பர்வைசர். இரவு மணி எட்டாகிக் கூட அவள் இன்னும் கிளம்பாமல் பாடம் செய்து கொண்டிருக்க, மற்ற வேலைப் பார்ப்பவர்கள் கிளம்பி விட்டார்கள். இவன் மட்டும்தானே அங்கேயே தங்குபவன்.

“ஜோ!!! நான் கிளம்பறேன்! நீ இப்படியே நின்னுட்டு இருக்காம, க்ளோசிங் டைம்முன்னு அந்த கொக்கோய் (இது பலகாரத்தைக் குறிக்கும்! ஆனால் மடையா/மடச்சி என்பது போல திட்டவும் உபயோகிப்பார்கள் மலேசியர்கள்) கிட்ட போய் சொல்லி, கெளப்பி விடு” என்றான் இளா.

நூல் விட பார்த்த இளாவையும் அவள் நோஸ் கட் செய்து விட்டிருக்க, கொக்கொய் எனப் பட்டப் பெயரே வைத்து விட்டான் அவளுக்கு.

“ஹ்ம்ம்!” எனச் சொல்லியவன், அந்த பெண்ணிடம் போய் நின்றான்.

“மேடம்!”

“என்ன?”

“க்ளோசிங் டைமாச்சு”

“சோ???”

“பில் பே பண்ணிட்டு கிளம்புங்க”

“முடியாதுடா! என்ன செய்வ?” எனத் திமிராகச் சொன்னவள், அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

‘இதென்னடா நமக்கு வந்த சோதனை!’ என நொந்து போனான் சரவணப்பாண்டியன்.

இவள் கிளம்பினால்தானே, பூட்டி விட்டு மற்ற வேலைகளை முடித்துப் படுக்க முடியும்!

“மேடம்! ப்ளிஸ்”

“கிளியோபாட்ரானு கூப்புடு! கெளம்பறேன்”

“எதே!!!”

“கி..ளி..யோ..பா..ட்..ரா…!!! கூப்புடு” என ஒவ்வொரு வார்த்தையாக அழுத்திச் சொன்னவள், கால் மேல் கால் போட்டு நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.

கருப்பு எனவும் சொல்ல முடியாது! மாநிறம் எனவும் சொல்ல முடியாது! டார்க் கேரமல் வண்ணத்தில், இவன் படத்தில் பார்த்த எகிப்தின் ராணி கிளியோபாட்ராவின் கம்பீரத்தில் இவன் கண்ணோடு கண் நோக்கித் திமிராய் அமர்ந்திருந்தவளைப் பார்த்து அள்ளு விட்டது இவனுக்கு!

“சா..சாரி மேடம்!” எனத் திக்கினான் சரவணப்பாண்டியன்.
 

CRVS2797

Active member
Aug 4, 2024
123
-47
43
அடப்பாவி..! கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்து, ஒரு லுக்கு விட்டதுக்கே இவனுக்கு அள்ளு விட்டுப்போச்சா?

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin