Sorkam Madhuvile--EPI 7

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
942
-1,671
93
அத்தியாயம் 7

நீதானே என் தோட்டத்தில் மணம் வீசும் மல்லிகை!




“அப்பா”

“என்னடா ஷாலு குட்டி?”

“நான் பஸ்லயே போறேனேப்பா!”

மகளை முறைத்துப் பார்த்தார் மனோகர்.

“ஏன்பா இந்த மாதிரி பண்றீங்க! நான் தைரியமா சைக்கிள் ஓட்டலியா, இல்ல ஸ்கூல் பஸ்ல தனியா ஸ்கூலுக்குப் போய்ட்டு வந்தது இல்லையா? பப்ளிக் பஸ்ல ஏறி நான் காலேஜ் போறேன்னா மட்டும் ஏன் முடியாதுன்னு வம்பு பண்றீங்க!” எனச் சிணுங்கினாள் மதுஷாலினி.

கல்லூரி போக ஆரம்பித்ததில் இருந்து, காலையில் ஆறரை மணிக்கே வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள் அப்பாவும் மகளும். பைக்கில் ஷாலுவை அவளது அம்மாயி வீட்டில் விட்டு விட்டு, வேலைக்குப் போய் விடுவார் மனோகர். அங்கே போய் சோபாவில் ஒரு குட்டித் தூக்கம் போடுவாள் இவள்.

இவளது மாமா வேலைக்குக் கிளம்பும் எட்டரை மணிக்கு அவனோடு காரில் போய் கல்லூரியில் இறங்கிக் கொள்வாள். மாலையில் அவனே வீட்டுக்கு அழைத்து வந்து விடுவான். இரவில் இவளை அம்மாயி வீட்டில் இருந்து ஏற்றிக் கொள்வார் மனோகர். நிறைய பாடங்கள், அசைண்ட்மேண்ட் என இருக்க, அதோடு அங்கிங்கு அலைவது ஒரு விதச் சோர்வைத் தந்தது பெண்ணுக்கு. அதற்காகத்தான் தந்தையிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள்.

வீட்டில் இருந்து ஐந்து நிமிட நடையில் பஸ் நிறுத்தம். ஒரே பஸ் எடுத்தால் போதும் கல்லூரிக்குப் போய் விடலாம். அதோடு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் வகுப்புக்கு இவள் ஏழே முக்காலுக்கு எழுந்தால் போதும். அதே போல நேராக வீட்டுக்கு வந்து விட்டால், வீட்டுப் பாடம், சமையல் என இவளுக்கு நேரம் ஒதுக்கிச் செய்ய சரியாய் இருக்கும்.

“பஸ்ல கண்டவனும் வருவான்மா! வேணும்னே இடிச்சுக் கிடுச்சி வைப்பானுங்க! காலேஜ் போய்ட்டியா இல்லையான்னு தெரியாம எனக்கு நிம்மதியாவே வேலைப் பார்க்க முடியாது! அதனால, கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் இப்ப போற மாதிரியே போம்மா” என்றார் மனோகர்.

“அப்பா!!!” எனத் தயங்கினாள் மகள்.

“சொல்லு!”

“இன்னும் எவ்ளோ காலம்பா நாம அம்மாயிக்கும் மாமாவுக்கும் தொல்லைக் குடுக்கறது? மாமாவுக்குன்னு ஒரு குடும்பம் இருக்குப்பா! அம்மாயிக்கும் வயசாகுது! நான் காலையிலயே வரேன்னு, எழுந்து எனக்காக உக்காந்துட்டு இருக்காங்க! அத்தை ஒன்னும் சொல்றது இல்லைத்தான். ஆனாலும் எனக்கு ஒரு மாதிரி ஃபீலாகுதுப்பா! எத்தனையோ பேர் பஸ் ஏறி போய்ட்டு வரது இல்லையா! நானும் அப்படி போய்ப்பேன்பா! காலேஜ் போய்ட்டு, பே போன்ல நான் வந்துட்டேன்னு போன் போட்டுடறேன் உங்களுக்கு! முடிஞ்சா கொஞ்சம் விலை கம்மியா ஒரு மொபைல் போன் வாங்கி தாங்க! அம்மாயி இனியாச்சும் ரெஸ்ட் எடுக்கட்டும்பா”

அமைதியாகவே மகளைப் பார்த்தபடி இருந்தார் மனோகர்.

“ப்பா! எனக்கும் அண்ணாங்க மாதிரி யூனிவெர்சிட்டி போகனும், வெளி உலகத்த பார்க்கனும், சொந்தமா எல்லாம் செஞ்சு பழகனும்னு ஆசைங்க இருக்குப்பா! பரிட்சையும் நல்லாத்தான் எழுதிருக்கேன்! கண்டிப்பா ஓரளவு நல்ல ரிசல்ட் வரும். ஆனாலும் உங்க நிம்மதிக்காகத்தானேப்பா இங்கயே உங்க கூடவே இருந்து படிக்கறேன்னு ஒத்துக்கிட்டேன்! ஆம்பளப் புள்ளைங்கள ஒரு மாதிரி, பொண்ணு என்னை ஒரு மாதிரி பார்க்கறீங்கன்னுலாம் எதாச்சும் சண்டைப் போட்டேனாப்பா நானு? ப்ரைவட்ல படிக்கறதுனால அண்ணாங்கள விட என் படிப்பு செலவு அதிகம்! எனக்காகத்தான் அந்தச் செலவ ஏத்துக்கிட்டீங்கன்னு புரியுதுப்பா! கண் காணாத தூரத்துல என்னை விட்டுட்டு நீங்க தவிச்சுப் போவீங்கன்னுத்தானே யூனிவர்சிட்டி போக கனவு இருந்தும் நான் காலேஜ் போக ஒத்துக்கிட்டேன்! உங்களுக்காக நான் இதை செய்யறப்ப, மக கொஞ்சம் வெளி உலகத்த கத்துக்கட்டும்னு ஏன்பா நீங்க யோசிக்கக் கூடாது! எதாச்சும் பிரச்சனைன்னா, ஒரு போன் போட்டா நீங்க வந்துடுவீங்க! இல்ல மாமா வந்து நிப்பாரு! பிறகு என்னப்பா? நான் கேட்கறது லிமிட்டுக்குள்ளான சுதந்திரம்பா! ப்ளிஸ்! புரிஞ்சுக்கோங்க!” என்றவளைக் கனிவாய் நோக்கினார் மனோகர்.

“நீ சொல்ற கோணத்துல நான் யோசிச்சுப் பார்க்கல கண்ணு! புள்ளன்னு வரப்ப, மத்தவங்க சுக துக்கம்லாம் கண்ணுக்குத் தெரிய மாட்டுது போல! சரிடாம்மா! நீ பஸ்லயே போ! வெளி உலகத்த உன் கண்ணால பாரு! அப்பா உனக்கு ஒரு போனு வாங்கி தந்திடறேன்” என்றவரைக் கட்டிக் கொண்டாள் மதுஷாலினி.

அன்றைய இரவே சாரதாவுக்கு அழைப்பெடுத்து விஷயத்தைச் சொல்லி விட்டாள் ஷாலினி.

“சோம்பேறி சோறு கேட்டான், தின்னுப்புட்டு திண்ணைக் கேட்டான்ங்கற கதையா நீ காலைல எழும்ப சோம்பேறி பட்டுக்கிட்டு என்னை ஏன்டி சாட்டு சொல்ற!” என எகிறினார் அவர்.

“யார பார்த்து சோம்பேறின்னு சொன்னீங்க! இந்த ஷாலு பத்து நிமிசத்துல பத்து வீட்டுக்குச் சமைச்சுப் போடுவா!”

“ஹ்க்கும்! வாயாலயே சமைச்சுப் போடுவடி நீ!”

“அம்மாயி!!”

“என்ன?”

“இனி காலைல எட்டு மணிக்கு எழுந்துக்குங்க போதும்! ஆறு மணிக்கே ஆந்தை மாதிரி முழிச்சிட்டு எனக்காக வெய்ட் பண்ண வேணாம்! எவ்ரி சனிக்கிழமை வரேன் அங்க! ஃபுல் டே உங்க கூடத்தான்”

“வெளாட்டுத்தனமா இல்லாம, கவனமா பஸ் ஏறிப் போகனும் கண்ணு! நீயும் சுய காலுல நின்னு பழகனும்னுதான் அம்மாயி இதுக்கு ஒத்துக்கறேன்! பத்திரம்டா ராஜாத்தி!”

“சரி அம்மாயி! நான் என்னைப் பத்திரமா பார்த்துப்பேன்” எனச் சமாதானப்படுத்தித்தான் அழைப்பைத் துண்டித்தாள் ஷாலு.

மறுநாள் மெதுவாய்த்தான் எழுந்து கொண்டாள் இவள். எந்த அவசரமும் இல்லாமல் மெல்ல குளித்துக் கிளம்பி, காபி கலந்து ப்ரெட் சாப்பிட்டாள். காலேஜ் பேக்கை எடுத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டியவள் மெல்ல பஸ் நிறுத்தத்தை நோக்கி நடையிட்டாள்.

காதில் இயர்போனுடன் பஸ் வரும் வழி பார்த்து நின்றிருந்த விஜயின் கண்கள் இவளைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் விரிந்தன. ஷாலினி கல்லூரிக்குத் தினமும் காரில் வந்து இறங்குவதைப் பார்த்திருந்தவன், இங்கு அவளை எதிர்ப்பார்த்திருக்கவில்லை.

இவன் வீட்டுக்கு அவள் வந்திருந்த தினத்தில் இருந்து, கல்லூரியில் விஜயைப் பார்த்தால் முறைப்பதில்லை அவள். சாதாரணமாய் கடந்து போனாள்.

“அவதான் பாப்பான்னு கூப்புட கூடாதுன்னு சொன்னா, நீயும் ஏன்டா அதையே சொல்ற?” என மதுஷாலினி கிளம்பிப் போனதும் கேட்டிருந்தார் அகிலா.

அவரிடம் நடந்ததைச் சொல்லி இருந்தான் விஜய்.

“குட்டி ரௌடிதான் போல இந்தப் பாப்பா! அவள விட மூனு மடங்கு பெருசா இருக்கற உன்னையே மிரட்டிருக்கா பாரேன்” எனச் சிரித்தபடி போனார் அகிலா.

பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்த இவனைப் பார்த்தும், பார்க்காதது போல அமர்ந்து கொண்டாள் மதுஷாலினி. அவர்கள் இருவர்தான் இருந்தார்கள் அங்கே. அவனும் பேச முயற்சிக்கவில்லை. இவளும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. ஐந்து நிமிட காத்திருப்புக்குப் பின் பேருந்தும் வந்தது. இவள் முதலில் ஏறிக் கொள்ள, அடுத்ததாய் விஜய் ஏறினான். முன் சீட்டில் காலியாய் இருந்த ஓரிடத்தில் அமர்ந்து, பஸ் டிக்கட் வாங்கிக் கொண்டாள் பெண். அவனோ எப்பொழுதும் போல கடைசி சீட்டுக்குப் போய் அமர்ந்து கொண்டான். அமர இடம் கிடைத்தால், பாடப் புத்தகத்தை புரட்டிக் கொண்டு வருபவன், அன்று மதுஷாலினியின் பின் பக்கத் தலையை வைத்தக் கண் வாங்காமல் பார்த்தபடி வந்தான்.

இறங்கும் இடம் வந்ததும், அவள் முதலில் இறங்க பின்னாடியே இவனும் இறங்கினான். சற்று இடைவெளி விட்டு பெண்ணவளைத் தொடந்து காலேஜ் போனான் விஜய்! அன்றைய தினம் கல்லூரி முடிந்து அவள் பஸ் நிறுத்தம் போக, பாடி கார்டாய் அவள் பின்னாலேயே போனான் இவனும்! அவள் பஸ் நிறுத்தத்தில் போய் அமர்ந்த பிறகுதான், அரக்கப் பறக்க வேலையிடத்துக்கு ஓடினான் விஜய். இதுவே அவர்களின் வழக்கமாய் ஆனது!

விஜய் இவளைப் பின் தொடர்ந்து வருவது மதுஷாலினிக்கும் தெரியும்தான். கண்டுக் கொள்ளாதது போல இருந்தாலும், உள்ளுக்குள் கர்வமாய் இருக்கும் பெண்ணுக்கு! எத்தனை வயதாய் இருந்தால் என்ன, தனக்காக ஒருத்தன் மெனக்கெடுகிறான் என்பது பெண் மனதில் மென் சாரலை அள்ளித் தெளிக்கும் விஷயமில்லையா!

அன்றைய தினம் பகுதி நேர வேலை முடித்து வீட்டுக்கு வந்த விஜய், கண்களும் முகமும் சிவந்து நின்ற அன்னையைக் கேள்வியாய் பார்த்தான். இவன் தங்கையோ, அமைதியாய் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள்.

“என்னச்சுமா?”

“நீ போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு முதல்ல”

அவர் சொன்னதைச் செய்யாமல் எந்த விஷயமும் வெளியே வராது என அறிந்திருந்தவன், குளிக்கப் போனான். சாப்பாட்டு மேசையில் அமர்ந்த மகனுக்கும், மகளுக்கும் உணவு பரிமாறினார் அகிலா. அமைதியாய் போனது அன்றைய சாப்பாட்டு நேரம்.

பாத்திரங்களைக் கழுவிப் போட்டு, சமையலறையை ஒதுக்கி வைத்ததும் அஸ்மி அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அகிலாவின் அருகே வந்தவன்,

“என்னாச்சுமா? உங்க புருஷன் சேட்டையை ஆரம்பிச்சிட்டாரா?” எனக் கேட்டான்.

பெருமூச்சுடன் இவனைப் பார்த்தார் அகிலா.

“சேவா(ரெண்ட்) காசு, இருநூறு வெள்ளி குறைவா குடுத்துருக்காருடா! ஓனர் கிட்ட, அடுத்த மாசம் சேர்த்து தரோம்னு சொல்ல சொல்றாருடா என்னைய”

கோபத்திலும் அவமானத்திலும் முகம் சிவந்தது விஜய்க்கு.

“எங்கம்மா அவரு?”
“காச கைல குடுத்துட்டு வெளிய போய்ட்டாருடா! கீழ அப்படியே கேக்குமேன்னு என்னால சத்தமா சண்டை கூட போட முடியல!” என்றவருக்குக் கண்களில் கண்ணீர் துருத்தி நின்றது.

சண்டைப் போட்டாலும் ஒரு புண்ணியம் இருக்காது! எடுத்த சம்பளத்தை முடித்து விட்டுத்தான் வந்திருப்பார். இந்தளவுக்கு கைக்கு வந்ததே பெரிய விஷயம் என்பது அம்மாவுக்கும் மகனுக்கும் புரிந்துதான் இருந்தது.

பெரிய மூச்சை இழுத்து விட்டவன்,

“கம்ப்யூட்டர் ஒன்னு வாங்கனும்னு காசு சேர்த்துட்டு வரேன்மா! அதுல இருந்து பணம் எடுத்துத் தரேன்! ஓனர் அங்கிளுக்குக் குடுத்துடுங்க! மறுபடி இன்னொரு வீடு தேடி அலையற சக்தி எனக்கு இல்லைமா” என்றவனின் குரல் உள்ளே போயிருந்தது.

கண்களில் வலியுடன் மகனைப் பார்த்தார் அகிலா.

“இன்னும் கொஞ்ச நாள்மா! நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய்ட்டா, எல்லாம் சரியாகிடும்! நீங்க எதையும் மனசுல போட்டு உளப்பிக்காம போய் படுங்க! எனக்கு கொஞ்சம் படிக்கறதுக்கு இருக்கு” என்றவன், புத்தகப் பையை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனான்.

அங்கே ஊஞ்சலை மெல்ல எந்தி ஆடியபடியே படித்துக் கொண்டிருந்தாள் மதுஷாலினி. அவளைப் பார்த்ததும் இவன் இள மனதில் கலக்கம் சூழ்ந்து கொண்டது. நெஞ்சில் ஏதோ அடைப்பது போல பாரமாய் இருக்க, கண்களை மூடி தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.

‘ஒழுங்கா வீட்டு வாடகையைக் கூட குடுக்க வக்கில்லாத குடும்பத்தில இருந்து வந்த உனக்கு, இந்த ஈர்ப்பு, ஈர வெங்காயம்லாம் தேவையாடா? அவ மேல ஆசை வைக்கக் கூட ஓர் அந்தஸ்த்து வேணும்! இதையெல்லாம் முளையிலயே கிள்ளிப் போட்டுட்டு படிக்கற வேலைய மட்டும் பாரு’ என அறிவு வலியுறுத்த அப்படியே திரும்பிப் போக முனைந்தான் விஜய்.

“விஜய்!” எனும் மயக்கும் குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது.

முதன் முறையாக அவன் பெயரைச் சொல்லி அழைக்கிறாள் பெண். மன பாரம் சட்டென நீங்கிப் போக, அப்படியே மிதப்பதை போல உணர்ந்தான் விஜய்.

ஆச்சரியமாக அவளை ஏறெடுத்து நோக்கினான் இவன்.

“இங்க வாங்க விஜய்” என அழைத்தாள் மதுஷாலினி.

தானாகவே இவன் கால்கள் அவளை நோக்கிப் போனது. ஊஞ்சல் அருகில் போய் விஜய் நிற்க, நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் ஷாலு.

“என்ன?” எனக் கேட்டவனின் குரல் மெலிதாய் ஒலித்தது.

“எப்படி கேக்கன்னு தெரில” என லேசாய் முகம் சிவந்து நின்றவளை, படபடப்புடன் பார்த்தான் இவன்.

‘என்ன கேக்க போறா? முகம் வேற சிவந்து போச்சு! என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்ல போறாளோ!’ எனப் பல எண்ணங்கள் இவன் மனதில் உலா வந்தன.

“ஒவ்வொரு தடவையும் உங்கள பார்க்கறப்ப சண்டைப் போட்டிருக்கேன்! திமிரா பேசிருக்கேன்! மரியாதை குடுத்ததே இல்ல” என அவள் நிலம் பார்த்து சொல்ல, இவன் இதயம் டமார் டமாரென அடித்துக் கொண்டது.

“இப்போ..இப்போ..” என அவள் தயங்க,

“இப்போ என்ன?” எனப் படபடப்புடன் கேட்டான் இவன்.

“இப்போ உங்க கிட்ட உதவி வேணுங்கறப்ப மட்டும், கூப்பிட்டு வச்சு நல்லபடி பேசறது எனக்கே ஒரு மாதிரி செல்ஃபிஸா இருக்கு”

இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றியவனின் குரலில் லேசாய் ஏமாற்றம் இருந்தது.

“என்ன உதவி?”

“எனக்கு கிளாஸ்ல சொல்லி தர எதுவுமே புரியல! ரொம்பக் கஷ்டமா இருக்கு! ஆசையாத்தான் ஐ.டி கோர்ஸ்ல சேர்ந்தேன்! இப்போ பேசாம மெனேஜ்மெண்ட்கு மாத்திக்கலாமான்னு யோசிக்கற அளவுக்கு ஸ்ட்ரெஸ்ல இருக்கேன்! அண்ணாங்க போன் போடற பத்து நிமிஷத்துல இதெல்லாம் சொல்லி புரிய வச்சு அட்வைஸ் கேக்க முடியாது! அப்பாவுக்கும் இதெல்லாம் அவ்ளோ புரியாது! அதான் ஏற்கனவே இந்த கோர்ஸ் படிக்கற உங்க கிட்ட கேக்கனும்னு நெனைச்சி வச்சிருந்தேன். நான் நடந்து கிட்ட விதத்துல, பேசவே தயக்கமா இருந்தது! வந்து..எனக்கு இந்த விஷயத்துல என்ன முடிவெடுக்கறதுன்னு கைட் பண்ணறீங்களா விஜய்? ப்ளீஸ்” எனத் தன் பெரிய கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க பாவமாய் கேட்டவளை அள்ளி அணைத்து ஆறுதல் சொல்ல பரபரத்தது இவனுக்கு.

சட்டென நகர்ந்து சுவரில் சாய்ந்து தரையில் அமர்ந்து கொண்டவன், சைகையால் அவளையும் அருகே அமர சொன்னான். ஊஞ்சலில் இருந்து இறங்கி சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டாள் மதுஷாலினி.

வானத்தில் தெரிந்த முழு மதியைப் பார்த்தபடியே சற்று நேரம் அமைதியாய் இருந்தான் விஜய். இவளும் அவனைப் பின்பற்றி வானத்தை வெறித்துப் பார்த்தாள்.

“எதுக்கு ஐ.டி கோர்ஸ்ல சேர்ந்த மது?”

“மதுவா?”

“இப்போ அதுதான் முக்கியமா?”

“சரி, சரி! அப்படியே கூப்புடுங்க!” என்றவள்,

“எங்க ஸ்கூல்ல கம்ப்யூட்டர் க்ளப் இருக்கு! அதுல காசு கட்டி லெசண்ஸ் போனேன். வோர்ட்ஸ், பேய்ண்ட், பவர்பாய்ண்ட்லாம் படிக்கறப்ப ஈசியா இருந்தது! அது மாதிரித்தான் இதுவும் இருக்கும்னு சேர்ந்தேன்! அதோட மாமா சொன்னாங்க, இனிமே எல்லாம் கம்ப்யூட்டர்தான்! அதை படிச்சுக்க, வேலை ஈசியா கிடைக்கும்னு! இங்க ப்ரோக்ராமிங், நெட்வோர்க், அது இதுன்னு டீப்பா போகவும் கண்ணக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு! டெக்ஸ்ட் புக்லாம் இங்கிலீஸ்ல வேற இருக்கு! ஸ்கூல்ல ஃபுல்லா மலாய்ல படிச்சிட்டு, திடீர்னு எல்லாமே இங்கிலீஸ்ல படின்னா எப்படிப் படிக்க! ரொம்பத் தடுமாற்றமா இருக்கு விஜய்”

அவளது பிரச்சனை நன்றாகப் புரிந்தது இவனுக்கு. விஜயும் ஆரம்பத்தில் தட்டுத் தடுமாறித்தான் ஸ்டெடியாகி இருந்தான்.

“மது!”

“ஹ்ம்ம்”

“பேசாம மேனேஜ்மெண்ட் கோர்ஸ்க்கு மாறிடு”

“அதுல நிறைய மனப்பாடம் பண்ணனும் விஜய்! அதோட பக்கம் பக்கமா அசைன்மெண்ட் செய்யனும்! எந்த வித்தியாசமும் இல்லாம ஒரே மாதிரியா போரிங்கா போகும் படிப்பு” எனக் காரணங்களை அடுக்கியவளை நன்றாகத் திரும்பி அமர்ந்து பார்த்தான் இவன்.

“என்ன?”

“சும்மா உன்னை டெஸ்ட் பண்ணத்தான் அப்படிச் சொன்னேன்! கணிணி மேல உனக்குக் காதல் மது! வாய் வார்த்தையா வேற கோர்ஸ் போகலாம்னு சொன்னாலும், உன் மனசும் மூளையும் அதை ஒத்துக்க மாட்டுது! அதனால கோர்ஸ் மாறறத பத்தி பேசாம, இதுலயே எப்படி ஜெயிச்சுக் காட்டறதுன்னு மட்டும் பாரு! ஆரம்பத்துல எல்லாமே கஷ்டமாத்தான் இருக்கும்! போகப் போக கை வசமாகிடும். என்னோட பழைய நோட்ஸ்லாம் தேடித் தரேன். அதுல மலாய்லயும் எழுதி வச்சிருப்பேன்! அதை வச்சி இப்போ மேனேஜ் பண்ணிக்கோ! எதாவது தெரியலைனா என்னைக் கேளு! எனக்கு நைட்லத்தான் டைம் கிடைக்கும். இங்கத்தான் உக்காந்து படிப்பேன். உங்க அப்பாட்ட கேட்டுட்டு, இங்க வா! நான் கைட் பண்ணறேன்!” என ஆதரவாய் சொன்னான் விஜய்.

இவள் முகம் அப்படியே மலர்ந்து போனது!

“தேங்க்ஸ் விஜய்! தேங்க் யூ” என அவன் கை பற்றிக் குலுக்கி நன்றி சொன்னாள்.

மகளைத் தூங்க வருமாறு அழைக்க வந்த மனோகரின் காதில் இவர்களின் பேச்சு வார்த்தை விழுந்தது.

“உங்க அப்பாட்ட கேட்டுட்டு, இங்க வா” என விஜய் சொல்லியதைக் கேட்டவருக்கு முகம் மலர்ந்து போனது!

“நல்ல பையன்தான்!” என அவர் மனம் விஜய்க்கு சர்டிபிகெட் வழங்கியது.
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 7
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: yasotha