Pirithor Nesamithu--EPI 3

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
அத்தியாயம் 3

பூவுக்குள் ஒளிந்திருக்கும்

கனிக் கூட்டம் அதிசயம்!




“சித்தி!”

“என்னம்மா தென்றல்?”

“முருகன் சாமித்தானே அப்பாம்மாட்ட கோச்சிட்டு மலை மேல போய் உக்காந்தாரு?”

“ஆமாடா!”

“பின்ன ஏன் இந்த விநாயகர் சாமி மலை மேல போய் உக்காந்திருக்காரு இங்க? அவருக்குத்தான் மேங்கோ பழம் கிடைச்சிருச்சுல்ல” எனக் கண்ணை உருட்டிக் கருத்தாய் கேள்விக் கேட்ட அந்தச் சுட்டியை அள்ளி அணைத்துக் கொள்ளலாம் போல இருந்தது தாமரைக்கு.

அடிக்கடி பேத்தியைக் கண்ணால் பார்க்க முடியவில்லை எனத் தன் மாப்பிள்ளையிடம் சொல்லி வருத்தப்பட்டிருந்தார் அன்னபூரணி. வயோதிகத்தால் இவர்களால் அடிக்கடி சென்னைக்குப் பயணப்பட முடியவில்லை. தினகரனின் வேலையால், அவனாலும் அடிக்கடி திருச்சி வந்து மகளைக் காட்டி விட்டுப் போக முடியவில்லை. இந்த முறை அன்னபூரணி ஆசையாய் கேட்கவும், மகளை ஒரு வாரம் திருச்சியில் விட்டு விட்டுக் கிளம்பி இருந்தான் அவன்.

ஆசையாய் பேத்தியுடன் நேரத்தைச் செலவளித்த அன்னபூரணிக்கு வேகமாய் ஓடியதில் கால் சுளுக்கி விட்டது. துருதுருப்பாய் இருக்கும் பேத்தியை சமாளிக்கவும் முடியவில்லை! அதே வேளையில் அவளை சட்டென மறுபடி சென்னைக்கு அனுப்பி விடவும் பிரியமில்லை. அதனால்தான் தனது நிலையை தினகரனுக்குச் சொல்லாமல், தாமரையின் உதவியை நாடி இருந்தார்.

சின்னவளுடன் பழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருந்த தாமரைக்கு, என்ன செய்வது என்றே தெரியவில்லை. பெரியம்மாவைப் பார்க்கவும் பாவமாய் இருந்தது! அன்னபூரணி சொல்லிக் கொடுத்திருந்த சித்தி எனும் அழைப்புடன், பூனைக் குட்டி போல உரசியபடி வந்து நின்ற குழந்தையை ஒதுக்கி வைக்கவும் முடியவில்லை. ஆசையாய் அவளை அரவணைத்துக் கொண்டாள்.

‘இவ அப்பா, ஊருல உலகத்துல உள்ளவங்க மாதிரி என்னை ஆம்பளைப் பொறுக்கின்னு நெனைச்சா நெனைச்சிட்டுப் போகட்டும்! அதுக்கெல்லாம் கவலைப் பட்டு இந்தச் சின்னக் குழந்தை எனக்குக் கொடுக்கற ஆசுவாசத்தை ஒதுக்கி வச்சா, என்னைப் போல முட்டாள் வேற யாரும் இல்ல! குழந்தை இங்க இருக்கற வரை அவளுக்கு ஒரு பேபிசிட்டர் மாதிரி நான் இருந்துட்டு போறேன்! ஒருத்தருக்கு இன்னொருத்தர் ஆறுதல்’ என எண்ணியவள் சின்னவளுடன் ஒன்றிப் போனாள்.

சில நாட்கள் வீட்டிலேயே ஓடிப் பிடித்து விளையாடுவது, வண்ணம் தீட்டுவது, வாசலில் கோலம் போடுவது, கண்ணாமூச்சி விளையாடுவது எனப் பொழுது போனது தாமரைக்கும் தென்றலுக்கும்.

“சித்தி! வெளிய டாட்டா போகலாம் சித்தி” என ஆசையாய் சின்னவள் கேட்க மறுக்க முடியவில்லை இவளால்.

“பெரியம்மா! தென்றலை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டு வரட்டா?” எனக் கேட்டாள் தாமரை.

பேத்தியின் முகத்தில் கெஞ்சலைப் பார்த்தவருக்கு மறுக்க முடியவில்லை.

“பத்திரமா பார்த்துக்க தாமரை! அவங்கப்பாவுக்கு இவன்னா உசுரு. புள்ளைக்கு லேசா அடி கிடி பட்டுச்சுனா கூட இனி இங்க தனியா விடவே ரொம்ப யோசிப்பாரு”

“நான் பத்திரமா பார்த்துக்கறேன் பெரியம்மா!” எனச் சொன்னவள், அவளை வெளியே அழைத்து வந்திருந்தாள்.

“சித்தி! உங்களுக்கு ஆன்சர் தெரிலன, கூகுள் சாமிய கேளுங்க! அப்பா அப்படித்தான் அவர்ட்ட கேட்டு எனக்கு எல்லாம் சொல்லித் தருவாரு!”

“உங்கப்பாவுக்கு கூகுள் கூட சாமியா?”

“ஆமா! அப்பா அப்படித்தான் சொல்வாரு! கடவுள போல கூகுளுக்கும் எல்லாம் தெரியுமாம்! அதான் கூகுள் சாமி! இப்போ இன்னொரு சாமி கூட வந்திருச்சாம்! அது பேரு ஏ.ஐ சாமியாம்! அதுக்கும் எல்லாம் தெரியுமாம்!”

‘புள்ளைக்கு ஏ ஃபோர் ஆப்பிள்னு சொல்லித் தராம, என்னெல்லாம் சொல்லிக் குடுத்திருக்காங்க பாரு இந்தத் தினகர் மாமா’ என எண்ணியவளுக்குச் சிரிப்பு வந்தது.

சின்னவள் சொன்னது போலவே கூகுள் செய்து ராமர், விபீஷணனிடம் ரங்கநாதர் விக்கிரகத்தைக் கொடுத்து இலங்கையில் பிரதிஷ்டை செய்ய சொன்னதையும், அதை கீழே வைக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் சொன்னாள் தாமரை. அப்படி வைத்தால் எடுக்க முடியாது என்றும் சொன்னாள்.

“அப்புறம் என்னாச்சு சித்தி?”

“இவரு குளிக்கலாம்னு காவேரி கரையில நின்னாரு. அப்போ விநாயகர் சின்னப் பையன் வடிவில அங்க வந்தாராம். அவர்ட்ட சிலையைக் குடுத்துட்டு, கீழ வைக்காதே! நான் குளிச்சிடு வரேன்னு போனாராம். விநாயகர் வெய்ட் பண்ணி பார்த்துட்டு சிலையைக் கீழ வச்சிட்டு மலைல போய் உக்காந்திட்டாராம்.”

“பிறகு?”

“குளிச்சுட்டு வந்த விபீஷணனால சிலையைத் தரைல இருந்து எடுக்க முடியலை. மலைல உக்காந்திருந்த விநாயகர் தலைல கோபமா இவரு ஒரு கொட்டு வச்சிட்டாராம். அப்போ விநாயகர் வேஷத்தைக் கலைச்சி நான்தான் விநாயகர்னு சொன்னாராம். அவரே அங்கே இருந்து அருள் பாலிக்கறதாவும் சொல்ல, இந்த உச்சிப் பிள்ளையார் கோயில் வந்ததாம். ரங்கநாதர் தரைல வைக்கப்பட்ட இடம் திருவரங்கமா ஆகிடுச்சாம்”

“சூப்பர் சித்தி!” எனக் கைத்தட்டினாள் சின்னவள்.

இவர்கள் இருவரும் பாதி வழியில் கால் வலிக்கிறதென படியில் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தார்கள். கதை பேசி முடித்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தார்கள் இருவரும். பெண் ஒருத்தி கால் வலிக்கிறது எனச் சொன்ன மகளை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு நடக்க, அதை ஏக்கமாகப் பார்த்தாள் பூந்தென்றல். அவள் பார்வை போன இடத்தையும் அவள் முகம் காட்டிய பாவத்தையும் கண்ட இவளுக்குத் தாளவே முடியவில்லை. இத்தனை வயதுக்கு இன்னும் இவளுக்கு அம்மாவைத் தேடும் போது, இந்தச் சின்னக் குருத்துக்கு எப்படி இருக்கும் எனப் புரிய அவளை அள்ளி மடியில் அமர்த்திக் கட்டிக் கொண்டாள் செந்தாமரை. இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சின்னவள் அழ, இவளும் தன் அம்மாவை நினைத்துக் கூட சேர்ந்து மௌனமாய் கண்ணீர் வடித்தாள். குட்டியின் உச்சியில் கண்ணீர் துளி விழ, நிமிர்ந்து பார்த்தவள்,

“அழாதீங்க சித்தி!” எனச் சொல்லி அவள் கண்ணீரைத் துடைத்தாள்.

இருவரும் மாற்றி மாற்றி மற்றவர் கண்ணீரைத் துடைத்துச் சமாதானமாகிப் போனார்கள்.

பிள்ளையாரை தரிசித்து விட்டு, மலை உச்சியில் இருந்து திருச்சியைப் பார்த்தார்கள் இருவரும்.

“அதோ பாரு! அதான் கதைல வந்த திருவரங்கம்” எனக் காட்டினாள் தாமரை.

“சரியா தெரியலை சித்தி” என்றவளைத் தூக்கிக் கொண்டாள் தாமரை.

சொகுசாக தாமரையின் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டாள் சின்னவள். பூந்தென்றலின் தீண்டல் இவள் உடலெல்லாம் ஒரு பரவசத்தைக் கொடுத்தது. குழந்தையின் முதுகை வருடிக் கொடுத்தாள் தாமரை.

“உங்களுக்கு எங்கம்மா மாதிரியே நீள முடி சித்தி” என்றவள் இன்னும் அவளுள் புதைந்தாள்.

அவளது அம்மாவைத் தனக்குள் தேடுகிறாளோ எனும் எண்ணம் வரப் பாவமாய் போய் விட்டது தாமரைக்கு.

“ஐஸ் கிரீம் சாப்பிடப் போலாமா?” எனக் கேட்டாள் இவள்.

“ஓ போலாமே!” எனக் குதூகலமாகிப் போனாள் பூந்தென்றல்.
பின் இருவரும் மெல்லப் படியிறங்கினார்கள். அடிக்கடி கால் வலிக்கிறது எனச் சொல்லி இவளைத் தூக்க வைத்தாள் இந்தத் தென்றல் குட்டி! தாமரையும் சலித்துக் கொள்ளாமல் தூக்கிக் கொண்டாள்.

சின்னவளை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துப் போனாள். ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்றால் முதலில் டிபன் சாப்பிட வேண்டுனெச் சொல்லி தோசை ஒன்று வாங்கிக் கொடுத்தவள் தனக்கும் ஒன்று சொன்னாள். சிந்தாமல் சிதறாமல் அழகாய் சாப்பிட்டாள் பூந்தென்றல்.

“அட! சுத்தமா, அழகா சாப்பிடறீங்களே” என இவள் ஆச்சரியப்பட,

“அப்பாத்தான் சொல்லிக் குடுத்தாங்க! ஃபோர்க் அண்ட் ஸ்பூன் வச்சி கூட சாப்பிடத் தெரியுமே எனக்கு! அதுவும் அப்பாத்தான் சொல்லிக் குடுத்தாங்க!” எனப் பெருமைப் பட்டுக் கொண்டாள் சின்னவள்.

அதன் பிறகு இவள் வாங்கிக் கொடுத்த ஐஸ்கிரீமையும் ஈஷிக் கொள்ளாமல் சுத்தமாய் சாப்பிட்டாள் பூந்தென்றல். சாப்பிட்டதும் குழந்தையை ஷாப்பிங் அழைத்துப் போனாள் தாமரை.

“நீ பொறந்தப்ப சித்தி உனக்கு சட்டை வாங்கிக் குடுத்திருக்கேன்! அதுக்குப் பிறகு அடிக்கடி சென்னைக்கு வர முடியல! நீயும் இங்க அடிக்கடி வரல. சோ இப்போ சித்தி உனக்கு எதாச்சும் வாங்கித் தர ஆசைப்படறேன். பூக்குட்டிக்கு என்ன வேணும்?”

கடையைச் சுற்றி வந்தவள்,

“சித்தி! அந்த பொம்மை போட்டிருக்கே அது போல ஃப்ராக் பச்சை கலர்ல வேணும்” எனக் கேட்டாள்.

கடைப் பெண்ணிடம் கேட்டு, அந்தச் சட்டையை ட்ரையல் ரூமில் போய் போட்டுப் பார்த்தார்கள். அழகாய் இருந்தது. அவளாகவே சட்டையைக் கழட்டுவது, போடுவது எனத் தானாகவே செய்து கொண்டாள் பூந்தென்றல். அவளைச் சொந்தமாக எல்லாம் செய்யும்படி பழக்கி இருந்த தினகரனின் மேல் மதிப்புக் கூடியது இவளுக்கு.

“குளிப்பாட்ட மட்டும்தான் அப்பா ஹெல்ப் பண்ணுவாரா?”

“ஆமா சித்தி! எனக்கு முதுகு எட்டாது இல்லையா! அதோட சோப் நுரை வழுக்கி ஓன் டைம் கீழ விழுந்துட்டேன். அப்பா அழுதுட்டாங்க! அதுல இருந்து சொந்தமா குளிக்க மாட்டேன்”

மனைவி இல்லாமல், மூன்று வயதில் இருந்து இப்பொழுது அவளுக்கு ஐந்து வயதாகும் வரை, தினகர் தன் தந்தையின் உதவியுடனும், வேலைக்காரியின் உதவியுடனும் மகளை வளர்த்து வருவதை நினைத்துப் பெரிய மரியாதையே வந்தது அவன் மேல்.

‘பொண்டாட்டி செத்தா மறு மாசமே புது மாப்பிள்ளை ஆகிடற காலத்துல, சின்னக் குழந்தைய வச்சிக்கிட்டு வேலைக்கும் போய்ட்டு வராரே!’ என எண்ணிக் கொண்டாள் தாமரை.

ஃப்ராக். அதற்கு ஏற்றது போல ஹேர் க்ளிப்கள், வளையல்கள் என வாங்கிக் கொண்டு இவளது பெரியம்மாவின் வீடு வந்து சேர இரவு மணி ஏழாகி இருந்தது.

“தென்றல்” எனும் குரலில் விலுக்கென நிமிர்ந்தாள் செந்தாமரை.

“அப்பா!” என இவள் கையை விட்டு விட்டுச் சந்தோஷமாக ஓடினாள் பூந்தென்றல்.

இவள் நிமிர்ந்து தினகரனின் முகத்தைப் பார்க்க, அங்கே எள்ளும் கொள்ளும் வெடித்தன.

‘செந்தா இன்னிக்கு செத்தா!’ என அலறியது அவள் மனம்.
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 3
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sai deepalakshmi

Active member
Dec 2, 2025
56
-36
28
நெற்றிக்கண் மட்டும் இருந்தால் அவளை சாம்பல் ஆக்கி இருப்பான் என்று நம்பலாம்.
அவனின் வளர்ப்பே அவனை நல்லவனாக காட்டுகிறது.
இருந்தாலும் ஏன் அவள் மீது இவ்வளவு கோபம்.
அழகாக ஆரம்பித்து கடைசியில் படபடப்புடன் முடிந்த பதிவு.
 
  • Love
Reactions: VanishaAdmin

CRVS2797

Active member
Aug 4, 2024
123
-47
43
அச்சோ.. செந்தாமரை ! செமையா மாட்டிட்டியா..? இப்ப தினகரன் டீச்சருக்கே பாடம் எடுக்கப் போறான்.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin