Sorkam Madhuvile--EPI 19

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
934
-1,801
93
அத்தியாயம் 19

நீதானே என் நரம்பில் ஓடிக் கொண்டிருக்கும் உதிரம்!



“நடுவுல பிறக்கற பிள்ளைங்க எப்பவுமே பாவம்ப்பா! எனக்கு அம்மாங்கற ஸ்தானம் கொடுத்தது முதல் பிள்ளைத்தான்னு அம்மாங்களுக்கு எக்ஸ்ட்ரா பாசம் மூத்தவங்க மேல! என் ஆண்மைக்கு இந்தப் புள்ளைத்தான் அத்தாட்சிங்கற மாதிரி கடைசி புள்ளை மேல அப்பாங்களுக்கு எப்பவுமே அதிக பாசம். நடுவுல பொறந்துட்டு நாங்க படற கஷ்டம் இருக்கே! என்னமோ தெண்டத்துக்குப் பெத்து வச்சிருக்காங்களோன்ற மாதிரி ஃபீலாகும்!” எனச் சொல்லிப் புன்னகைத்தான் மகேன்.

வீட்டின் பின் பக்க வாசலில் அமர்ந்திருந்த மனோகர், பேசியபடியே பக்கத்தில் அமர்ந்த மகேனை முறைத்துப் பார்த்தார். அவரது உர்ரென்ற முறைப்பில் இவனுக்குச் சிரிப்பு வந்தது.

“முறைச்சா மட்டும் அதெல்லாம் உண்மை இல்லைன்னு போய்டுமாப்பா? எப்போ பாரு மகேனு கடைக்குப் போய்ட்டு வா! மகேனு செடிக்குத் தண்ணி ஊத்துனியா? மகேனு சாமி விளக்க கழுவி வச்சியான்னு எத்தனை மகேனு போட்டிருப்பீங்க! இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்!” என முறுக்கினான் மகன்காரன்.

“டேய்! என்னடா நீ! ஹாலுல எல்லாம் உக்காந்திருக்க, இங்க வந்து என் கிட்ட வம்பிழுத்துட்டு இருக்கற!”

“நீங்க மட்டும் சடார்னு எழுந்து வந்து இங்க உக்காந்துக்கலாமாப்பா? மரியாதையா இது?”

“அந்தக் குடும்பத்துக்கு இந்த மரியாதை போதும்” எனச் சடைத்துக் கொண்டவரை ஆதுரமாகப் பார்த்தான் மகேன்.

தோல் சுருங்கி இருந்த அவர் கையைப் பற்றித் தன் கைக்குள் பிணைத்துக் கொண்டவன்,

“ஷாலுதான்பா உங்க தேவதை! அவ கண்ணீர் விட்டா நம்மளால தாங்க முடியுமா?” எனக் கேட்டான்.

“மகேனு, மகேனுன்னு ஏலம் போட்டேன்னு சொன்னியேடா, யாரு மேல பாசம் அதிகமோ அவங்களத்தான் அடிக்கடி கூப்பிட்டு வேலை சொல்ல தோணும்! வெளிய காட்டிக்கிலனாலும் அதான் நெஜம். நம்ம மகேனு என்ன சொன்னாலும் செய்வான், நல்லப் பையன்னு அவங்க ரெண்டு பேரையும் விட உன் மேல எனக்குப் பாசம் அதிகம்தான். ஒரு அப்பனுக்குக் கிடைக்கக் கூடாத சாபக்கேடு என்னன்னு தெரியுமாடா? அவன் உசுரோட இருக்கறப்ப அவன் புள்ள உசுருக்குப் போராடறத பார்க்கறதுதான்! உன் புண்ணியத்துல அதையும் நான் அனுபவிச்சிட்டேன்! அந்த நேரம் என்ன தவி தவிச்சிருப்பேன்னு உனக்குத் தெரியுமாடா? உங்கம்மா படத்து முன்ன நின்னு, புள்ளய என் கிட்டயே விட்டுடுடி! உன் கிட்ட கூப்டுக்காதே! அவன் வாழ்ந்து அனுபவிக்க வேண்டியது எவ்ளவோ இருக்குன்னு நான் கதறனது எனக்கு மட்டும்தான்டா தெரியும்! உன்னை அந்த நிலைக்கு ஆளாக்கன குடும்பத்துக்கிட்ட என் செல்ல மகள எப்படிடா தூக்கிக் குடுப்பேன்! முடியலடா மகேனு” எனச் சொல்லிக் கலங்கியக் கண்களை மறைக்க வேறு புறம் திரும்பிக் கொண்ட தகப்பனைக் கலக்கத்துடன் பார்த்தான் மகேன்.

தங்கைக்கு அந்த வீட்டு விஜய்யை எவ்வளவு பிடித்திருக்கிறது என ராஜாவின் மூலம் தெரிந்து கொண்டவனுக்கு, அந்தச் சம்பந்தத்தில் மறுப்பேதும் இல்லை. அஸ்மியைப் பார்க்கும் போது சின்னதாய் சங்கடம் இருக்கும்தான். அது கூட காதலினால் அல்ல. அந்த உணர்வெல்லாம் மருத்துவமனையில் இருந்து மறு ஜென்மம் எடுத்து வந்த நாளிலேயே செத்துப் போயிருந்தது. இந்தப் பெண்ணிடமா ஏமாந்தோம் எனும் சிறு சங்கடம் வாழ்நாள் முழுதும் இருக்கத்தான் செய்யும். ஆனால் தங்கையின் சந்தோஷத்தை விட அந்தச் சங்கடம் பெரிதாய் தெரியவில்லை இவனுக்கு.

“எனக்கும் தெரியும்பா உங்களுக்கு என் மேல எவ்ளோ பாசம்னு! அவங்க வீட்டுப் பொண்ணு காதல்னு என்னை ஏமாத்தனது வலிச்சதுதான். இல்லைன்னு சொல்ல மாட்டேன்! அதை விட என் செல்ல அப்பா என்னை ரத்தம் வர மாதிரி அடிச்சதுதான் ரொம்ப வலிச்சதுப்பா! உடம்புல இல்ல! மனசுல!”

மகேன் மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு, தப்பை உணர்ந்து தந்தையிடம் மன்னிப்புக் கேட்டிருந்தான்! மனோகரும் அவனை அரவணைத்துக் கொண்டார். ஆனால் அவன் மனதில் என்ன இருந்தது என மகேன் தன் தந்தையிடம் இன்று வரை மனம் விட்டுப் பேசியது இல்லை. நடந்ததை மறந்து, நடக்கப் போவதைப் பார்ப்போம் எனப் படித்து முடித்து, வேலைக்கும் சேர்ந்திருந்தான். முற்றுப் புள்ளி வைத்திருந்த வாக்கியத்துக்கு தங்கை கமா போட்டிருக்க, பேசி விடுவது என முடிவெடுத்தவன், மனோகரை ஏறிட்டுப் பார்த்தான்.

“இப்போ இருக்கற மனத்திடம், தைரியம், நல்லதையும் கெட்டதையும் பிரிச்சுப் பார்க்கற பக்குவம்லாம் அப்போ என் கிட்ட இல்லப்பா! வயசுதான் இருபது கிட்ட ஆகி இருந்தது. ஆனா முதிர்ச்சி சுத்தமா இல்ல. அஸ்மி செஞ்சதுல ஏற்கனவே ரொம்ப டவுனா இருந்த நான், உங்களோட அடியிலயும், அடிக்கடி திட்டிட்டே இருந்த வார்த்தைகளாலயும் ரொம்ப டிப்ரெஸ்ட் ஆகிட்டேன்! அப்பன் காசுல காதல், உருப்படாத தெண்டம் அப்படி இப்படின்னு ஏசிட்டே இருந்தீங்கப்பா! மகேஷீக்கு எப்படியோ, எனக்கு ரொம்ப வலிச்சிருச்சு! அம்மா இருந்தா இப்படிலாம் திட்டுவாரா? அம்மா இருந்திருந்தா தப்பு செஞ்சிருந்தாலும் தோளுக்கு மேல வளந்த மகன அடிக்க விட்டிருப்பாங்களான்னு ஒரே ஃபீல்பா!” என்றவன் தொண்டையைச் செறுமிக் கொண்டு மீண்டும் தொடர்ந்தான்.

“அதான் அம்மா கிட்டயே போய்டலாம்னு, ஒரு வீக்கான மோமண்ட்ல பூச்சி மருந்த குடிச்சிட்டேன்” என்றவனின் குரல் கலங்கி ஒலித்தது.

இது நாள் வரை மகன் தற்கொலைக்கு முயன்றது அஸ்மியால்தான் என எண்ணி இருந்தவருக்கு, தனக்கும் அதில் பாதிப் பங்கு உள்ளது எனத் தெரிய வரவும், தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படியே தளர்ந்து போய் பக்கவாட்டில் இருந்த சுவரில் தலை சாய்த்துக் கொண்டார்.

“அப்பா!!”

“ஏதோ ஆதங்கத்துல, ஆத்திரத்துல திட்டிட்டே இருந்துட்டேன்! அதுக்குன்னு அம்மாட்ட போகனும்னு முடிவெடுத்திருவியாடா? உங்கம்மா மேல உசுர வச்சிருந்தேன்டா நான். அவ போனதும் அவ கூடவே போய்டுன்னு என் மனசு எவ்ளோ அழிச்சாட்டியம் பண்ணுச்சு தெரியுமா! பெரியவன் கொஞ்சம் நிலமைய புரிஞ்சுக்கிட்டான். ஷாலுக்கு அவ்ளோ விவரம் தெரியல! அம்மாயி மடியே கதின்னு கெடந்தா! எப்பவும் அம்மா பின்னாடியே சுத்திட்டு இருக்கற நீ, என்னைக் கட்டிக்கிட்டு கதறுவ! அம்மா வேணும்! அம்மா வேணும்னு சாப்பிடாம, தூங்காம என் கையைப் புடிச்சிட்டே நிப்ப! நீதான்டா மகேனு, இந்த உலகத்துல என்னை உசுரோட இருக்க வச்ச சக்தி. கேட்டத வாங்கிக் குடுத்தா அப்பன் நல்லவன். பிடிச்ச படிப்ப படிக்க விட்டா அப்பன் நல்லவன். எதுக்கும் நோ சொல்லாட்டி அப்பன் நல்லவன். அதே புள்ளைங்க நலனுக்காக திட்டிட்டாலோ, அடிச்சிட்டாலோ மட்டும் அப்பன் கெட்டவன் இல்ல! உடனே மருந்த குடிச்சு அப்பனுக்குத் தீரா சோகத்த தந்திடுவீங்கல்ல?” எனக் கேட்டவரின் தோளில் சாய்ந்து கொண்டான் மகேன்.

“என் தற்கொலை முயற்சிக்கு அந்தப் பொண்ணு ஒரு காரணம்னா, நீங்களும் ஒரு காரணம்தான்பா!”

“டேய்! டேய்! அப்படிலாம் சொல்லாதடா!” எனத் தவித்தார் மனோகர்.

“உங்க மேல பழி போட்டது தப்புன்னா, அவங்க வீட்டுப் பொண்ணு மேல பழி போடறதும் தப்புப்பா! உங்க மகன் சரியில்ல! அவன் முட்டாள்தனமா தற்கொலைக்கு ட்ரை செஞ்சான்னா, அது அவனோட தப்பு மட்டும்தான்! எத்தனையோ ஆம்பளைங்க பொண்ணுங்க சூப் குடுத்துட்டாலும், போடின்னு வாழ்க்கையப் பார்த்துப் போயிடறது இல்லையா? ஏன் நம்ம மகேஷ் இல்ல? அவன் என்ன வாழ்க்கைய வெறுத்துட்டானா? தில்லா மறுபடி காதல் பண்ணி, கல்யாணம் செஞ்சு இப்ப வளைக்காப்பு வரைக்கும் வந்திடல? நான் கோழையா என் வாழ்க்கைய முடிக்கப் பார்த்ததுக்கு யார குத்தம் சொல்ல? சொன்னா உங்களையும் அந்தப் பொண்ணையும் சேர்த்து சொல்லனும்! இல்லைனா என்னை மட்டும்தான் சொல்லனும்! புரியுதாப்பா?”

அவர் அமைதியாகவே வெளியே வெறித்துக் கொண்டிருக்க,

“என்னைக் காரணம் காட்டி இந்தக் கல்யாணத்த மறுக்காதீங்கப்பா! என்னால தாங்கிக்க முடியல! விஜயோட பதவிக்கும் அந்தஸ்த்துக்கும் உங்க பொண்ணுக்காக இத்தனை வருஷம் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்ல! ஆனா காத்திருக்கான்! ஏன்? அவ மேல வச்சிருக்கற நேசத்துனால! உங்க மக மட்டும் சளைச்சவளா? கல்யாணம் பண்ணிக்கோன்னு எப்படிலாம் தலையால தண்ணிக் குடிச்சீங்க! சம்மதிச்சாளா? மாமாட்ட ரெண்டு வருஷம்னு கணக்கு சொன்னவ, அது முடிஞ்சதும் வேற காரணம் சொல்லி தப்பிக்க ட்ரை பண்ணிருப்பாளே தவிர, இன்னொரு கல்யாணம் பண்ணிருப்பாளாங்கறது சந்தேகம்தான்பா! ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணி போனதுக்கு அப்புறம்தான் மாமியாரோட சுயரூபம், நாத்தனாரோட குணநலன்லாம் தெரியும். அந்த விஷயத்துல நம்ம ஷாலு குடுத்து வச்சவப்பா! நாத்தனார் எப்படிங்கறது இப்பவே தெரிஞ்சிருச்சு! சோ அவ வாழ்க்கைய அவ கவனமா பார்த்துப்பாப்பா”

“வளந்துட்டீங்கடா நீங்களாம்! அப்பன் பேச்சு இனி அம்பலத்துல ஏறாது!”

“இப்போ உங்க முன்ன இருப்பவன், அப்பான்னா சும்மா இல்லேடா, அவர் இல்லேனா யாருமில்லேடான்னு பாடற அளவுக்கு உங்க மேல மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கறவன். திட்டுங்க, அடிங்க என்ன வேணா பண்ணுங்க! உங்கள எதிர்த்து விரல கூட அசைக்க மாட்டேன்! ஆனா உங்க ஷாலு குட்டி வாழ்க்கைல மட்டும் விளக்கேத்தி வைங்கப்பா!” என உணர்ச்சிகரமாகச் சொன்னான் இவன்.

கடலில் வேலை பார்ப்பதால் கருத்து, ஆஜானுபாகுவாக இருக்கும் மகனைப் பார்த்த மனோகர்,

“உன்னை அடிச்சு என் கை உடையறதுக்கா?” எனக் கேட்டவர் பெருமூச்சுடன் வீட்டின் உள்ளே நுழைந்தார்.

ஆறு மாத கடல் வேலை முடித்து, ஆறு மாத ஓய்வுக்காக வீட்டுக்கு வந்திருந்தான் மகேன். அவன் வருகையின் போது, மகேஷீன் மனைவியின் வளைக்காப்பையும் வைத்து விடலாம் என எல்லா ஏற்பாடும் செய்து இன்று நடத்தி முடித்திருந்தார்கள். மதுஷாலினியும் முந்தைய தினம்தான் அவ்விசேஷத்துக்காக வீட்டுக்கு வந்திருந்தாள்.

ராஜாவின் மூலம் மகளின் காதலைப் பற்றி அறிந்து கொண்ட மனோகருக்கு ஒரே கோபமாகிப் போய் விட்டது. வீட்டுக்கு வந்த மகளிடம் ஒற்றை வார்த்தைப் பேசி இருக்கவில்லை அவர். அவளுக்குத் திருமணத்தை நடத்தி விட இவர் துடித்திருக்க, உள்ளுக்குள் காதலை மறைத்து இவருடன் கண்ணாமூச்சி ஆடியிருக்கிறாள் என அத்துணை கோபம். திட்டக் கூட அவளிடம் பேசக் கூடாது எனும் வீராப்பில் ஷாலு அழுதபடியே பின்னால் வந்தும் கூட கண்டுக் கொள்ளாமல் கதறடித்தார் அவளை.

மகேன்தான் விசேஷ வீட்டில் அழாதே, சீக்கிரம் சரியாகி விடுவார் எனத் தேற்றி வைத்திருந்தான் தங்கையை. விஜய்யோ அவள் அழுவதை அறிந்து கொண்டவன், ராஜாவிடம் பேசி வளைக்காப்பு நடக்கும் தினத்தன்றே அவர்களின் விஷயத்தைப் பற்றிப் பேச பெற்றவர்களையும் கூட்டி வருவதாகச் சொல்லி விட்டான். ராஜாவுக்கு மனோகரையும் சமாளிக்க முடியவில்லை. மனோகருக்கு மருமகனாகப் போகிறவனையும் சமாளிக்க முடியவில்லை.

வளைகாப்பு நிகழ்வு நடந்து முடிந்திருந்தது. பெண் வீட்டின் சொந்தங்கள் எல்லாம் கிளம்பி போய் இருக்க, வீட்டு மக்கள் மட்டும் இருக்கும் நேரம் பார்த்துதான் விஜய்யும் அவன் பெற்றோரும் வந்திருந்தார்கள். அவர்கள் வருவார்கள் என மனோகருக்குத் தெரியும்தான். வந்தவர்களைப் பார்த்ததும் ஒரு மாதிரி ஆகி விட்டது அவருக்கு.

வாக்கிங் ஸ்டிக் துணையுடன் மெல்ல அடி எடுத்து நடந்து வந்த அகிலாவைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சியாகிப் போனது இவருக்கு. இவரைப் பார்த்து லேசாகக் கோணிய வாயுடன் அகிலா புன்னகைக்க உள்ளுக்குள் உடைந்து போனார் மனோகர். ராஜா சொல்லி இருந்தான்தான்! சண்டை நடந்த தினம் மயங்கி விழுந்த அகிலாவுக்கு கை கால் இழுத்துக் கொண்டு விட்டது என. ஒருத்தர் சொல்லிக் கேட்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா! அகிலாவைப் பார்த்தவருக்கு அங்கு அமர முடியவில்லை. சட்டென எழுந்து பின் பக்க வாசலுக்குப் போய் விட்டார். அன்று நடந்தது அதிர்ச்சியான சம்பவம்தான். ஆத்திரத்தில் ரியாக்ட் செய்யாமல், கொஞ்சம் நிதானித்து இருக்கலாம். தங்களுக்கு மட்டும் அந்தச் சம்பவத்தால் துன்பம் இல்லை. அவர்களும் போதும் போதுமெனும் அளவுக்குத் துன்பப்பட்டிருக்கிறார்கள் எனப் புரிந்தது மனோகருக்கு. அங்கு அமர்ந்து கண்டதையும் எண்ணிக் கொண்டிருந்தவரைத்தான் மகேன் வந்து பேசி, அவர் சிந்தனையைக் கலைத்திருந்தான்.

உள்ளே வந்து மீண்டும் அமர்ந்த மனோகரையே எல்லோரும் ஒரு வித எதிர்ப்பார்ப்புடன் பார்த்தார்கள்.

ஞானவேல்தான் மெல்ல ஆரம்பித்தார்.

“நாங்க ஏன் வந்திருக்கோம்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். பழசை எல்லாம் மறக்க முடியாதுதான். அதை கொஞ்சம் ஓரமா ஒதுக்கி வச்சிட்டு, வாழப் போற பிள்ளைங்கள பத்தி கொஞ்சம் யோசிங்க! ரெண்டு பேருக்கும் வயசும் ஆகிட்டுப் போகுது”

அதற்கு எந்த வித எதிர்வினையும் ஆற்றாது அமர்ந்திருந்தவரின் பார்வை மட்டும் அகிலாவின் மேல்தான் இருந்தது.

கண் எதிரே தென்படும் போதெல்லாம்,

“சாப்பிட்டீங்களா அண்ணா?” எனச் சிரித்த முகமாகக் கேட்கும் அந்த அகிலாவையும், மதுஷாலினியின் கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த இந்த ஒல்லியான அகிலாவையும் ஒப்பிட்டுப் பார்த்தவருக்கு நெஞ்சுக் குலுங்கியது.

அந்த இடமே அமைதியாக இருக்க,

“பொண்ணோட அப்பா கூட நான் கொஞ்சம் தனியா பேசனும்” எனக் குரல் கொடுத்தான் விஜயவேல்.

“பொண்ணுப் பார்க்க வந்தா பொண்ணு கூடத்தானே தனியா பேசனும்னு மாப்பிள்ளை கேப்பாரு! இங்க மாமனார் கூட பேசனும்னு கேக்கறியே விஜய்” எனச் சிரித்த ராஜாவை மொத்தக் குடும்பமும் முறைத்தது.

“உங்களுக்கு நான் எதையும் எடுத்துச் சொல்ல தேவையில்ல. எப்பவுமே அப்பா, மக நடுவுல நான் வந்ததும் இல்ல! பெத்தப் புள்ளைக்கு எது நல்லது கெட்டதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்! போங்க தம்பி! போய் பேசுங்க! நல்ல முடிவா எடுங்க” என மருமகனைப் பார்த்துச் சொன்னார் சாரதாம்மா.

அவர் எழுந்து மீண்டும் பின் பக்கம் போக, அவரைப் பின் தொடரப் போனான் விஜய்.

“விஜய்!! மண்ட பத்ரம்!” எனச் சிரித்தான் மகேஷ்.

“எங்கப்பா அடிச்சா, ஐயோ அம்மான்னு குரல் குடு விஜய்! நாங்க எல்லாரும் ஓடி வர மாட்டோம்!”

ஓடி என இழுத்து வர மாட்டோம் என முடித்தான் மகேன்.

கலக்கமாக அவனைப் பார்த்தாள் மதுஷாலினி. கண் மூடித் திறந்து எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்வேன் என்பது போல சைகை செய்தான் விஜய்.
 

Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 19
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sai deepalakshmi

Active member
Dec 2, 2025
70
-23
28
அழகான அழுத்தமான கலகலப்பான புரியும் வகையில் அமைந்த பதிவு.
 
  • Love
Reactions: VanishaAdmin