இள மனச--EPI 27

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
924
-1,939
93
அத்தியாயம் 27



எழுமிச்சைக் கனியை வெட்டி சுத்தம் செய்து, தீப்பெட்டியுடன் ஒரு தாளில் மடித்து எடுத்துக் கொண்டாள் சுப்பு.

“அக்கா, சீக்கிரம் வாங்க!”

“இருடி, குடைய எடுத்துட்டு வரேன். இவ ஒருத்தி காலுல சுடுதண்ணீ ஊத்திக்கிட்ட மாதிரி குதிச்சிகிட்டே இருப்பா! கொட்டுறேன் பாரு மண்டையில!”

“அக்கா, பின்னாடி துரை வராரு பாருங்க”

“துரையம்மா, சொல்லுங்கம்மா! என் மண்டையில மாவு கொட்டிருச்சுன்னு சொல்ல வந்தேன்மா” பல அம்மாக்களைப் போட்டு தந்தியடித்தார் பவுனு.

“அந்த பயம் இருக்கட்டும். பின்னால யாரும் இல்லக்கா! நல்லா ஏமாந்தீங்களா? அஸ்க்கு புஸ்க்கு, அக்கா வாயில கார முறுக்கு” சிரித்தபடி வெளியே ஓடினாள் சுப்பு.

“அடிப்பாவி! கொஞ்ச நேரத்துல கலங்கடிச்சிட்டீயே! ஓடாத நில்லுடி. கைல மாட்டுன, கண்டமாயிருவ!” தூக்க முடியாமல் உடம்பைத் தூக்கிக் கொண்டு அவள் பின்னால் ஓடினார் பவுனு.

இருவரும் வீட்டின் வெளியே அடி எடுத்து வைக்கும் நேரம், மின்னல் வெட்டி இடி இடித்தது.

“அர்ஜுனா, அர்ஜுனா!”

உருப்போட்டுக் கொண்டே குடையை விரித்தாள் சுப்பு. ஒரு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள், அவள் காலை சுரண்டியது ஜோனி.

“கோயிலுக்குப் போய்ட்டு வரேன்டா. நீ வீட்டுல இரு. மழை கொட்டுது பாரு”

குனிந்து ஜோனியை கொஞ்சினாள் சுப்பு. அதுவோ நாக்கை நீட்டி அவள் கையை நக்கியது.

“படவா! கோயிலுக்கு சுத்தபத்தமா போலாம்னா, கையை நக்கி வைக்கிற!”

செல்லமாக திட்டியவள், நடையை எட்டிப் போட்டாள். அவள் பின்னாலேயே இன்னொரு குடையுடன் பவுனு தொடர்ந்தார். சுப்பு சொன்னதையும் கேளாமல், அவர்களுடனே வந்தது ஜோனி. திரும்பி பார்த்து அதை உள்ளே போக சொல்லி கைக்காட்டினாள் சுப்பு. அது சைகையைப் பார்க்காதது போல திரும்பிக் கொண்டது.

“உன் முதலாளி மாதிரியே உனக்கு பிடிவாதம் ஜாஸ்திடா. சரி வா!”

வேலியைத் தாண்டி வெளியேறும் போது, காவலுக்கு நின்றவர்களில் ஒருவன் அவர்கள் அருகே வந்தான்.

“துரையம்மா எங்க போறீங்க?”

“போகும்போதே எங்க போறீங்கன்னு கேக்கறீங்களேண்ணே! போற காரியம் வெளங்குமா?அதோட துரையம்மான்னு கூப்புடாதீங்க! சுப்புன்னு கூப்புடுங்க. எங்க சொல்லுங்க பாக்கலாம், சுப்பு” பெயரை ஒவ்வொரு வார்த்தையாக கூட்டி சொல்லிக் கொடுத்தாள்.

“அப்படி கூப்புட்டா துரை என் தோலை உரிச்சு, தொவைச்சி, தொங்க போட்டுருவாரு துரையம்மா”

“ஏ புள்ள, அடிக்கற மழைக்கு இங்கன நின்னு என்ன பாடம் நடத்திக்கிட்டு இருக்க! யப்பா, நாங்க ரெண்டு பேரும் கோயிலுக்குப் போறோம்பா. துரை போகறதுக்கு சரி சொல்லிட்டாரு. அதான் துணைக்கு நானும் கூட போறேனே, பயம் ஒன்னும் இல்ல” என்றார் பவுனு.

மழையில் ஏற்கனவே அவன் தொப்பலாக நனைந்திருந்தான். முகத்தில் வழியும் மழை நீரை துடைத்தபடியே பேசினான் அவன்.

“யக்கா, மழை நின்னதும் துரை ஜீப்புலயே போகலாமே!”

“அது வரைக்கும் கோயில தொறந்து வச்சிருப்பாங்களாண்ணே? நாங்க சீக்கிரம் வந்துருவோம். ” என்றாள் சுப்பு.

“அப்ப நானும் கூட வரேன்” அவனும் கிளம்பினான். இப்படிதான் சுப்புவின் கோயில் பயணம், பவுனு, ஜோனி மற்றும் காவல்கார அண்ணனுடன் ஆரம்பித்தது.

கோயிலை அடைவதற்குள், குடைப் பிடித்தும் தொப்பலாக நனைந்திருந்தாள் சுப்பு. கோயில் வாசலிலே லேசாக தூக்கி பாவாடையைப் பிழிந்தவள், உள்ளே நுழைந்தாள். ஆள் அரவமற்று கோயில் வெறிச்சோடி கிடந்தது. விநாயகரின் சந்நிதியில் போய் நின்று மனமுருக வேண்டிக் கொண்டாள் சுப்பு. பின் அம்மனின் சந்நிதிக்கு வந்தவள்,

“ஆத்தா துரை நல்லா இருக்கனும். அவருக்கு நல்ல ஆயுள குடு. அப்படியே எங்க ஆத்தாங்களும், தங்கச்சிகளும் நல்லா இருக்கனும். ஊருல எல்லாரும் நல்லா இருக்கனும். கொஞ்ச நாளாவே மனசுக்கு படபடன்னு வருது. யாருக்கும் எந்த குறையும் வைக்காம காப்பாத்து ஆத்தா!” கண்ணீர் வழிய வேண்டியவள், எழுமிச்சை விளக்கை ஏற்றினாள்.

அடித்த காற்றுக்கு விளக்கு அணைந்துப் போனது. மீண்டும் ஏற்றினாள், மறுபடியும் அணைந்தது. பாவமாக பவுனுவைப் பார்த்தாள் சுப்பு.

“அக்கா, என்ன இப்படி ஆகுது? அடி வயிறு கலங்குதுக்கா, என்னமோ கெட்டதா நடக்கப் போகுது” கண்ணீர் முட்டியது அவளுக்கு.

“ஒன்னும் இல்ல புள்ள. காத்துக்கு அமியிது. இதப் போயி பெருசா எடுத்துகிட்டு. கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு வா, போகலாம்” அழைத்தார் பவுனு. வெளியே ஜோனி வேறு வெறித்தனமாக குரைத்தது.

கோயில் வெளியே வந்தவர்கள், துணைக்கு வந்த ஆளைக் காணாமல் முழித்தனர்.

“எங்க புள்ள, உங்க புது அண்ணன காணோம். வாசலுல தானே நின்னுகிட்டு இருந்தாரு” ஆச்சரியப்பட்டார் பவுனு.

“அண்ணே!” கத்தி அழைத்தாள் சுப்பு. எந்தப் பதிலும் இல்லை.

ஜோனி செம்பணைக் காட்டைப் பார்த்து பார்த்து வேகமாக குலைத்தது.

“ஜோனி, ஷட்டப்பூ” அதன் காட்டு குரைச்சலை தாங்காமல் கத்தினாள் சுப்பு. ஜோனியோ இவளைத் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் குரைத்தது.

“ஏ புள்ள, வாடி கிளம்பலாம். இந்த பேய் மழைக்கு நாலு மணிகே எப்படி இருட்டிருச்சு பாரேன். பயமா இருக்கு. உன் பேச்சை கேட்டு இந்த நேரத்துக்கு வெளிய வந்துருக்க கூடாதுடி. சீக்கிரம், சீக்கிரம்” விரட்டினார் பவுனு.

இருவரும் கோயிலை விட்டு வெளியேற எத்தனித்தனர்.

“சுப்பூ”

பரிச்சயமான குரலில் முகம் முழுக்க பரவசமாக திரும்பி பார்த்தாள் சுப்பு.

“முத்து மாமா!” ஆச்சரியத்தில் குடை கூட கையிலிருந்து பறக்க, நனைந்தபடியே அவனை நோக்கி ஓடினாள் சுப்பு. அவள் பின்னாலேயே பவுனுவும் ஓடினார்.

அவனை நெருங்கி கையைப் பற்றிக் கொண்டாள் சுப்பு.

“மாமா, மாமா! நீயேதானா? எப்போ மாமா வந்த? ஏன் இங்கன இருக்க? வீட்டுக்கு வர வேண்டியது தானே!”

சொந்தத்தைப் பார்த்த ஆனந்தத்தில் மூச்சு விடாமல் கேள்வி கேட்டாள் சுப்பு. கண்களில் வேறு கண்ணீர் கரை புரண்டு ஓடியது. மழை நீர் முகம் நனைக்க, மூக்கை உறிந்து கொண்டே தேம்பினாள்.

“நம்ம வீட்டுக்குப் போனியா? ஆத்தா, தங்கச்சிங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா? நான் தெனமும் அவங்கள நினைச்சிக்குவேன்” பற்றிய அவன் கையை விட்டுவிட்டு கண்களைத் துடைத்தாள் சுப்பு.

அவ்வளவு அவள் பேசியும், கண் இமைக்காமல் அவள் முகத்தையே தான் பார்த்திருந்தான் முத்து. அவள் தோற்றத்திலும், பேசும் விதத்திலும் தென்பட்ட மாற்றங்கள் அவன் கண்களில் விழுந்தாலும், அவன் பார்வை முழுக்க அவள் முகத்தில் வந்து போன சந்தோஷ பாவனையிலேயே நிலைத்திருந்தது.

‘என் சுப்பு என்ன மறக்கல! பார்த்ததும் முகம் எம்புட்டு மலர்ந்து போச்சு இவளுக்கு. ஆனா அவங்க ஆத்தா ரெண்டு பேரும் இவள தலை முழுகிட்ட மாதிரி பேசனது இவளுக்குத் தெரியாது போல இருக்கே! இப்படி பாசமா கண்ணு கலங்க விசாரிக்கறாளே! தினமும் அவங்கள நினைக்கறேன்னு வேற சொல்லுறாளே! அந்த துரை வீட்டுக்கு வந்து இவ ஆத்தாங்க கிட்ட பேசிட்டுப் போனத சொல்லல போல இருக்கே!’ அவன் மனம் சட்டென கணக்குப் போட்டது.

அவள் அழுவது வேறு இவனுக்கு எட்வர்டின் மேல் கோபத்தைக் கிளப்பியது. அவன் எவ்வளவு கொடுமைப் படுத்தி இருந்தால், ரத்த சொந்தத்தைக் கண்டதும் கண் கலங்குவாள்! இவளின் இஷ்டத்துக்கு விரோதமாக வீட்டில் சிறை வைத்திருக்கிறான் என நினைத்தான். கழுத்தில் தங்க சங்கிலி தவிர ஒன்றும் இல்லாததால் கல்யாணம் ஆகி விட்டது என பொய் சொல்லி இருக்கிறான் எனவும் முடிவெடுத்தான் முத்து.

“சுப்பூ, யாரு புள்ள இது?” கேட்டார் பவுனு.

“அக்கா, இவரு என் முத்து மாமா.”

என் முத்து மாமா எனும் வார்த்தைகள் வேறு வெளியில் அடிக்கும் சாரலோடு சேர்த்து அவன் நெஞ்சிக்குள்ளும் சாரல் அடிக்க வைத்தது. அதுவே அவள் மனதில் தாம் தான் இருக்கிறோம் எனும் மாயையை அவனிடம் விளைவித்தது.

“அக்கா, கோயிலு உள்ள போய் கொஞ்ச நேரம் உட்காருங்க. நான் சுப்பு கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்” என்றான் முத்து.

அவரோ நகராமல் நின்றார்.

“போக சொல்லு சுப்பூ. ஆத்தாவ பத்தி முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றான் முத்து.

“ஆத்தாவுக்கு என்ன? அக்கா நீங்க போய் உட்காருங்க. நான் உங்க கண்ணு முன்ன தானே இருக்கேன். போங்கக்கா” கெஞ்சினாள் சுப்பு.

பவுனு அந்தப் புறம் நகர்ந்ததும்,

“சொல்லு மாமா! ஆத்தாவுக்கு என்ன? கொஞ்ச நாளா எனக்கு மனசே சரியில்ல! அவங்களாம் நல்லா இருக்காங்க தானே? சொல்லு மாமா” அழுதுக் கொண்டே அவனின் சட்டையைப் பற்றி உலுக்கினாள் சுப்பு.

அவளை சுற்றி சுற்றி வந்து குரைத்தது ஜோனி. முத்து தள்ளியே நிற்கவும், அவனைப் பார்த்து தன் பற்களைக் காட்டி மிரட்டியது. அதன் செய்கையே, இவளை நெருங்கினால், குரல்வளையை கடித்து துப்பி விடுவேன் என்பது போல இருந்தது.

“சுப்பூ, எப்படி புள்ள இருக்க?” பாசமாக கேட்டான் முத்து.

“நான் எப்படியோ இருக்கேன்! நீ சொல்லு முதல்ல, அங்க எல்லாம் எப்படி இருக்காங்க?” தன் பிடியிலேயே நின்றாள் சுப்பு.

‘புள்ள எப்படியோ இருக்கேன்னு வெறுப்பா சொல்லுறாளே’ மனம் குமைந்தான் அவன்.

“வா புள்ள நாம இங்கிருந்து போயிரலாம். ரொம்ப நேரம் இருக்க முடியாது. ஆபத்தாயிரும்” தான் போர்த்தி இருந்த சாக்குப் பையை எடுத்து அவளுக்குப் போர்த்தி விட்டான் முத்து.

“கெளம்புனுமா?” அதிர்ச்சியாக கேட்டாள் அவள்.

அவள் முக மாற்றத்தைப் பார்த்தவன், எட்வர்ட் தான் அவளை இங்கிருந்து போக கூடாது என மிரட்டி வைத்திருப்பதாக நினைத்தான். சொந்தங்கள் மீது உயிரை வைத்திருப்பவள், கிளம்ப யோசிக்கவும் அவனுக்கு அப்படி தோன்றியது.

“ஆமா, கிளம்பலாம். அந்த துரை வந்துட்டா எல்லாம் கெட்டுரும்" அவசரப்படுத்தினான்.

அவள் காலை சுற்றிக் கொண்டிருந்த ஜோனி, அவனைப் பார்த்து வேகமாக குரைத்தது.

“ஷ் ஜோனி! சும்மா இருடா” கீழே குனிந்து கழுத்தைக் கட்டிக் கொண்டாள் சுப்பு.

“நம்ம சொந்தக்காரு தான். பயம் காட்டாத” என்றவள் நிமிர்ந்து நிதானமாக முத்துவைப் பார்த்தாள்.

“என் உசுரு இந்த உடம்புல இருக்கற வரைக்கும், நான் இங்கிருந்து வர மாட்டேன் மாமா!” கண் கலங்கி குரல் கரகரத்தாலும், வார்த்தைகள் அழுத்தமாக விழுந்தன.

“என்ன புள்ள சொல்லுற? விளையாட இது நேரமில்ல, வாடி போலாம்”

“துரைக்கு வாக்குக் குடுத்துருக்கேன் மாமா. அவரே போக சொல்லாம அந்த வீட்ட விட்டு போக மாட்டேன்னு”

‘டேய் துரை! எங்கக்கா மக நல்லா தள தளன்னு இருக்கவும், உன் கிட்டயே புடிச்சு வச்சிக்கப் பார்க்கறயா! மானங்கெட்டவனே! புள்ளயே மிரட்டி வச்சது மட்டும் இல்லாம வாக்கு வேற வாங்கி வச்சிருக்கியா? பாக்கலாம்டா உன் மிரட்டல் ஜெயிக்குதா இல்ல என் காதல் ஜெயிக்குதான்னு.’

“உங்காத்தா அன்னம் சாக கிடக்கறா! அப்ப கூட குடுத்த வாக்கு தான் முக்கியம்னு இப்படி பிடிச்சு வச்ச புள்ளையாரு மாதிரி நிப்பியா புள்ள? அங்க அக்கா என் புள்ள, புள்ளன்னு உசுர கையில புடிச்சுகிட்டு உன்னை ஒரு தரம் பார்த்திர மாட்டோமான்னு எமன் கிட்ட போராடிகிட்டு இருக்கு. இங்க நீ அடம் புடிச்சுட்டு நிக்கறே” பொய்யை அவிழ்த்து விட்டு வராத கண்ணீரை துடைத்தான் முத்து.

“ஆத்தா!!!! நான் பயந்தது மாதிரியே நடந்துருச்சே! ஐயோ கடவுளே, அதனால தான் ஒரு வாரமா சோத்தாங்கை பக்கம் கண்ணு துடிச்சுகிட்டே இருந்துச்சா?” மடிந்து சகதி மண்ணில் அமர்ந்து முகத்தில் அடித்துக் கொண்டு அழுதாள் சுப்பு.

அவள் அழுவதை சகித்துக் கொள்ள முடியாமல்,

“தோ புள்ள! விரசா வா. உன்னைப் பார்த்தாலே அவங்களுக்கு உசுரு உடம்புல நின்னுரும்” என சமாதானப் படுத்தினான்.

அப்பொழுதும் கதறிக் கொண்டே முடியாது என தலையை இடம் வலமாக ஆட்டினாள் சுப்பு. அவன் எறிந்த தாய்ப்பாசம் எனும் அஸ்த்திரம் அணைந்துப் போனதில் ஆடிப்போய்விட்டான் முத்து.

“நீ வீட்டுக்கு என் கூட வா! துரை கிட்ட சொல்லலாம். அவரு ஆத்தாவப் பார்க்க கூட்டிட்டுப் போவாரு. துரை கிட்ட சொல்லாம நான் ஒரு அடி கூட இங்கிருந்து நகர மாட்டேன். அவருக்கு என்னை விட்டா யாரும் இல்ல. பாவம் மாமா, சொல்லிட்டே போலாம்”

கீழே முழங்காலில் அமர்ந்திருந்தவள், முத்துவை நிமிர்ந்துப் பார்த்து கையேந்தி கண்ணீர் வழிய கெஞ்சினாள்.

“அட கருமாந்திரம் புடிச்சவளே! குலத்தை கெடுக்க வந்த கோடாரி காம்பே! ஆத்தா செத்தாலும் பரவாயில்ல, எனக்கு வெள்ளைக்காரன் குடுக்கற சொகுசு தான் வேணும்னு அலையிறியே! நீயெல்லாம் எங்க ஜாதிக்காரிதானாடி? என்னடா இவ கிட்ட கெஞ்சிட்டு இருக்க? அருவாவ எடுத்து சீவுடா அவ தலைய!” கர்ஜித்தார் வீராண்டி.

இவர்கள் பேசுவதை காட்டுக்குள் ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தவர், ரத்தம் கொதிக்க வெளியே வந்திருந்தார். வீராண்டி திட்டமிட்டப்படியே, இவர்கள் ஜாதிக்காரன் ஒருவனை எட்வர்டின் எஸ்டேட்டுக்கு நடராசுவைப் பார்க்க அனுப்பினார்கள். அவன் மட்டும் போனால் பரிசல்காரனுக்கு சந்தேகம் வரும் என்பதால், அவன் மனைவி பிள்ளைகளையும் அவனோடு சேர்த்து சொந்தங்களைப் பார்க்க போவது போல அனுப்பி வைத்தார்கள்.

நடராசுவின் மூலமாக பங்களாவைச் சுற்றி காவல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொண்டார்கள். அவர்கள் திட்டமே ஜாதி கலவரம் செய்து வீடுகளை அடித்து நொறுக்கி கலகம் செய்வதுதான். எப்படியும் எட்வர்ட் வெளியே கலகத்தை அடக்கப் போகும் போது, இவர்களில் சிலர் சென்று சுப்புவை தூக்கி வருவது என முடிவெடுத்தார்கள். அதற்காக நான்கு நான்கு பேராக வேறு வேறு நாட்களில் எட்வர்டின் எஸ்டேட்டுக்கு இருந்த பக்கத்து எஸ்டேட்டுக்கு சென்று பரிசலில் இறங்கினார்கள். அவர்கள் இறங்கிய எஸ்டேட்டில் திருவிழா சமயம் அதனால் நிறைய பேர் வந்த வண்ணம் இருக்கவும், யாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்லாமல் போனது. முனியனும் பரிசல்காரனும் கூட இவர்களின் தந்திரத்தில் ஏமாந்துதான் போனார்கள்.

அடுத்த எஸ்டேட்டில் இறங்கி, காட்டுப் பாதையாக எட்வர்டின் எஸ்டேட்டுக்கு நடந்தே வந்தவர்கள், காட்டுக்குள் ஒழிந்தே இருந்து நல்ல நேரம் பார்த்திருந்தார்கள். மழைக்கு யாரும் வேலைக்கு வராதது வேறு அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. நடராசுவின் உதவியால் சாப்பிட்டு, செம்பணை மட்டையால் ஓய்வெடுக்க சின்ன கூடாரம் கட்டி சமாளித்தார்கள்.

வேறு மாநிலத்தில் சுப்புவோடு தங்க முத்து இடம் கூட பார்த்துவிட்டான். இதெல்லாம் முடிக்க தான் நாட்கள் நகர்ந்து விட்டன. இவர்கள் வீடு புகுந்து தூக்க நினைக்க லட்டு மாதிரி சுப்புவே கோயிலுக்கு வந்து இவர்களிடம் மாட்டிக் கொண்டாள்.

சுப்புவைத் தேடி கண்டிப்பாக எட்வர்ட் தங்களிடம் வருவான். பெண்களிடம் அவனால் வாலாட்ட முடியாது, தங்களிடம் வந்தால் தெரியவே தெரியாது என சமாளித்து விடலாம் என நினைத்தார்கள். அதோடு அவர்களுக்கு சாதகமாக மலாயாவின் சுதந்திர தினமும் நெருங்கி இதோ நாளை என்னும் நிலையில் நின்றது. இப்பொழுதே பாதி பிரிட்டிஷ்காரர்கள் பல் பிடுங்கிய பாம்புதான். இனிமேல் அவர்களும் தங்களைப் போலவே குடியேறிகள் தான். படித்த தங்கள் எஸ்டேட் மண்டோரிடம்(சூப்பர்வைசர்) கேட்டு தெளிவாக திட்டமிட்டிருந்தார்கள். ஜாதிக்காக ரத்தம் சிந்துவது இவர்களுக்கு தியாகமாக பட்டது. இந்த யுகத்தில் குற்றத்துக்கு தண்டனை கிடைக்கும் என தெரிந்தும் கௌரவக் கொலைகள் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. அந்தக் காலத்தில் பெயரிலேயே ஜாதியை சேர்த்து வைக்கும் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலையை நான் சொல்லத்தான் வேண்டுமோ?

வீராண்டியைப் பார்த்ததும் ஜோனி பாய்ந்து கடிக்கப் போனது. முத்துவை ஒன்றும் செய்யாத ஜோனி வீராண்டியின் காலை ஆக்ரோஷமாக கௌவியது. மனிதனால் பகுத்தறிய முடியாத சில விஷயங்களை ஐந்தறிவு ஜீவனால் உணர்ந்து கொள்ள முடிவது விந்தையல்லவா! வலியில் அலறிய வீராண்டி கையில் வைத்திருந்த பெரிய கட்டையால் ஓங்கி அடித்தார் ஜோனியை. ஜோனி பல்டி அடித்து பல அடிகள் தாண்டி விழுந்தது. அதன் உடம்பில் இருந்து ரத்த ஆறு பெருகி மழை நீரோடு கலந்தது.

“ஐயோ ஜோனி!” கதறிய சுப்பு, அதன் அருகில் ஓடினாள். அவளைப் பார்த்து தீனமாக குரைத்தது அந்த பாவப்பட்ட ஜீவன்.

“ஜோனி, டேய். செத்துறாதடா! கடவுளே, வீட்டுலயே இருக்க சொன்னேனே, இப்படி வந்து சாவ கிடக்கறியே. ஐயோ ஜோனி!’ அதன் ரத்தத்தை துடைத்தவாறே நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினாள் சுப்பு.

நடப்பதைப் பார்த்து கத்திக் கொண்டு ஓடி வந்த பவுனுவை மேலும் சிலர் காட்டில் இருந்து ஓடி வந்து, மறைத்துக் கொண்டனர்.

“டேய், பாவிகளா! என்னடா பண்ணுறீங்க! விடுங்கடா எங்கள, பரதேசி பொட்ட பயலுகளா!” அரைப் போச விடாமல் வாயிலே குத்தினர் சுப்புவின் ஜாதிக்கார மனிதர்கள். அவர் கதற கதற கோயில் சுவற்றில் வைத்து கட்டிப் போட்டனர்.

அருவாளை ஓங்கிக் கொண்டு சுப்புவை வெட்ட வந்த வீராண்டியை தடுத்த கீழே தள்ளினான் முத்து. திக்பிரமை பிடித்து முழித்துக் கொண்டிருந்த சுப்புவை ஓங்கி ஒரு அறை விட்டான் அவன். அந்த ஒரு அறையிலேயே மயங்கி சரிந்தாள் சுப்பு. ஒற்றைக் கண்ணால் அதை பார்த்த ஜோனி தீனமாக அவளை விடுங்கடா என்பது போல குரைத்தது.

“தோ பாரு மச்சான், ஒனக்கு வேண்டியது நம்ம புள்ள இங்க அந்த துரை கூட இருக்க கூடாது, அம்புட்டு தானே? அதுக்கு நான் பொறுப்பு. அவ மேல ஒரு சின்ன காயம் கூட படக்கூடாது” என கத்தினான். எங்கே சுப்பு முரண்டு பிடித்தால் இவர் ஏடாகூடமாக ஏதேனும் செய்து விடுவாரோ என்ற பயத்தில் தான், பூப்போல பார்க்க விருப்பப்பட்டவளை பேய் போல அறைந்திருந்தான் முத்து.

“அது சரி! உன் பிரச்சனை உனக்கு! இந்தக் கழுதைய தூக்கிட்டு கிளம்பு. இங்க முடிக்க வேண்டியத நாங்க முடிச்சுட்டு வரோம்.” ஜாதி கலவரத்தை மூட்டி, சுப்புவைத் தேடி எட்வர்ட் போகும் நேரத்தை இழுத்தடிக்க ஊருக்குள் நுழைந்தார் வீராண்டி. அவரோடு அவரது எடுபிடிகளும்.

கீழே கிடந்தவளை பூப்போல தன் கைகளில் ஏந்திக் கொண்டான் முத்து. எட்வர்டுக்கு கொடுத்த வாக்கின் படி, அவளாக அவனை விட்டுப் போகவில்லை. சுயநினைவு இல்லாமல் தூக்கி செல்லப்பட்டாள் சுப்புலெட்சுமி.
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: இள மனச--EPI 27
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.