லக்கி வீடு - 13

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

Ush

Well-known member
Feb 8, 2026
59
105
93
காரில் இருந்து இறங்கும் போது சாஹித்யனின் கண்கள் ரியர் வியூ கண்ணாடியில் இருந்த பொட்டில் அனிச்சையாய் படிய, அவனது இதழ்களில் சின்னதாய் ஒரு புன்னகை ஏறிக்கொண்டது, எப்போதும் போலவே! பச்சை நிறத்தில் கறுப்பு அவுட்லைன் போட்டு, கீழே நீர்க்குமிழி போல ஆரம்பித்து மேலே நெளிந்து செல்லும் அந்த பொட்டு டிசைனை பார்க்கும் போதெல்லாம், அவனுக்கு ஒருத்தியின் கண்களும் புருவங்களும் நினைவு வருவது என்ன விந்தையோ தெரியவில்லை!

அன்று மழை நாளின் மறுநாள் காலை அவனது முகத்தை எதிர்கொள்ள முடியாமல் வர்ணி தலைமறைவாகியிருக்க, அந்த இரவின் மௌன சாட்சியாய் அவனது ஜிம்மின் குளியலறை கண்ணாடியில் புதிதாய் முளைத்திருந்தது இந்த பச்சைப்பொட்டு. எல்லாரும் வரும் இடத்தில் அதை விட்டு வைக்க மனதில்லாமல் அப்படியே பொத்தினாற்போல அதைக் கடத்திக்கொண்டு வந்து, கார் கண்ணாடியில் ஓரமாய் ஒட்டி வைத்திருக்கிறான் சாஹித்யன். "ஒருதடவை உரித்தால் பொட்டு மீண்டும் ஒட்டுமா?" போன்ற பொட்டு டெக்னாலஜி குறித்த கேள்விகளெல்லாம் அவனுக்குள் முளைத்திருக்க, அதை எல்லாம் உடைத்து எப்படியோ அப்படியே ஒட்டிக்கொண்டு அவனது நாளாந்த வாழ்க்கையில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டது அந்தப் பொட்டு வர்ணியை போலவே!

தன்னை நினைத்தே தலையை அசைத்துக்கொண்டு இறங்கிப்போனவன், போட்டி நடைபெறும் இடம் நோக்கி போனான். இன்றைக்கு நடைபெறும் மாவட்ட மட்ட போட்டியில் கலந்துகொள்ளும் திரு, அவனிடம் பயிற்சி எடுத்துக்கொள்பவன் தான். வழக்கமாக இது போன்ற போட்டிகளுக்கு நவீனையும் இன்னும் இருவரையும் தான் மாறி மாறி அனுப்பி வைப்பான் சாஹித்யன். இன்றைக்கு அவனே தன்னுடைய போட்டிக்கு நேரில் வந்திருந்ததில் திரு மிகவும் உற்சாகமாகிவிட்டான்.

நான்கு கட்டங்களாக போட்டி நடக்க, முதற்கட்ட போட்டியில் பங்குகொள்ள அவன் மேடைக்குப் போக, மேடைக்குக் கீழேயே இருந்து கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் சாஹித்யன்.

"என்ன தம்பி, அதிசயமா இன்னிக்கு நீயே வந்திருக்க?" ஒரு வயதான பிரபல பயிற்சியாளர் கேட்க வெறுமனே புன்னகைத்து வைத்தான் அவன்.

"உன்னோட பயிற்சியில் நிறைய பேர் ஜெயிக்கிறாங்க. ஆனால் நீயும் முன்னாடி வந்து அவங்களோட கூட நிக்கணும். பயிற்சி கொடுத்ததோட என் வேலை முடிஞ்சதுன்னு நிக்க கூடாது. அடிக்கடி உன்னை நான் இனிமே இங்கே பார்க்கணும்" என்று அவர் ஆதுரமாய் சாஹித்யனின் முதுகில் தட்ட சரி என்று மரியாதையாய் தலையசைத்து வைத்தான் அவன். வேறே என்ன சொல்ல முடியும்?

பக்கத்தில் நின்ற இன்னொருவரும் அவரோடு சேர்ந்து கொண்டு, "இந்த காலத்து பசங்க, கொஞ்சம் வெற்றியை பார்த்ததுமே அவங்களை பெரிய கொம்புன்னு நினைச்சுகிட்டு கீழே இறங்கி வேலை பார்க்க மாட்டேங்குறாங்க. தொழிலில் நுட்பத்தை கத்துக்க முன்னாடி ரீல்ஸ் போட்டு வைரலா ஆகறதுலயே அவங்க கவனம் இருக்கு. இங்கெல்லாம் வந்து எது எது எப்படி நடக்குதுன்னு பார்த்தால்தானே தொழிலில் மேலேறி மேலே மேலே போக முடியும்? நான் கூட நீயும் அப்படித்தானோன்னு நினைச்சேன். இனிமே அடிக்கடி வாப்பா" என்று சொல்லிக்கொண்டே போக, "அட போங்கடா" என்றிருந்தது அவனுக்கு.

அவனது கடமைகளும் பொறுப்புக்களையும் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? மூச்சு முட்டிப்போய் சுற்றிக்கொண்டிருந்தவனுக்கு இப்போதுதான் மெலிதான அவகாசம் கிடைத்திருக்கிறது. இதில் மேலும் மேலும் தொழிலில் முன்னேறுவது பற்றி சிந்திப்பதற்கே கொடுத்து வைத்திருந்தால்தான் முடியும் போல. ஒவ்வொரு நாளையும் வாழ்ந்து முடிப்பதே இப்போதெல்லாம் அவன் வரையில் பெரிய சாதனை!

"அண்ணா!" என்று ஆச்சர்யமாய் அழைத்தபடி ஓடி வந்த நவீனைப் பார்த்தவன், "என்னடா போன வேகத்துல வந்துட்ட?" என்று கேட்டான்.

"நேத்து பதிவு பண்ற வேலை மட்டும்தான்; விரிவுரைகள் எல்லாம் அடுத்த வாரம் தான் ஆரம்பிக்கும். அங்கே சும்மா இருந்து என்ன பண்ண?, அதுதான் வந்துட்டேன்" என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் திருவின் முறை வந்து விட, இருவரும் அங்கே கவனத்தை குவித்து விட்டனர்.

முதல் ரவுண்டில் ஜெயித்தவன் அடுத்து அடுத்து என்று இறுதி வரை சென்று, அவர்களின் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூவரில் ஒருவராக வர, இவர்களுக்கும் பேசக்கூட நேரமில்லை. அவனுக்கு தேவையானதை செய்து, அவனுக்கு என்ன தேவை என்று பேசி, சமயங்களில் அவனை அமைதிப்படுத்தி என்று அவர்களுக்கும் வேலை இருந்து கொண்டே இருந்தது.

"வாழ்த்துக்கள் நண்பா!" வென்று வந்தவனை அவர்கள் இருவரும் வாழ்த்த, "சார், உங்களை கண்டதும் பெரிய பூஸ்ட்டே கிடைச்சது போலிருந்தது. கடைசிவரை கூடவே நின்னதுக்கு பெரிய நன்றி" என்று அவனும் நெகிழ்ந்து, சாஹித்யனுக்கும் நவீனுக்கும் நன்றிகளை சொல்லிக்கொண்டு அகல, இவர்கள் இருவரும் வெளி வாசல் பக்கம் நடந்தனர்.

"அண்ணா, அம்மா யார் கூட இருக்காங்க?" என்று நவீன் கேட்க

"வர்ணி கூட." என்றான் சாஹித்யன் கார் சாவியை பாக்கட்டுக்குள் இருந்து எடுத்து உள்ளே அமர்ந்தபடி.

ஓடிவந்து அவனது பக்கத்தில் ஏறிக்கொண்ட நவீன் "ஹை ஜாலி! அப்போ பிரியா ஒரு ஹாட் சாக்லேட் கிடைக்கும்னு சொல்லுங்க.. டார்லிங் காபேக்கு போலாம், ரைட்!" என்று குதூகலமாக

அவனது பின்னந்தலையில் ஒரு அடியை வைத்தவன் , "ஞாயிற்றுக்கிழமை எப்போடா கடை திறந்தது?" என்று கேட்க,

"அப்போ அம்மா வர்ணிக்கூட இருக்காங்கன்னு சொன்னீங்க?" என்று இப்போது குழப்பமாய் அவனது முகத்தை பார்த்தான் நவீன்.

காரை வெளியே எடுத்துக்கொண்டிருந்தவனும் "வர்ணி வீட்லடா." என்று இதைக்கூட சொல்லணுமா உனக்கு என்று அலுப்பாய் புரியவைக்க

"எதே?" என்று அவன் புறமாய் திரும்பியே அமர்ந்து விட்டான் நவீன்

"என்னடா?” என்று கடுப்பாய் கேட்டவனுக்கு எதுக்கு இவன் இப்படி ரியாக்ஷன் கொடுக்கிறான் என்றிருந்தது.

"இல்லை, வர்ணி வீட்லயா?" நவீன் மீண்டும் கேட்டான்

"அதுக்கென்ன?" என்று கேட்டபிறகுதான் இவனுக்கு மெதுவாய் பல்ப் எரிந்தது.

புரிந்த பிறகு பிறகு, "அதுக்கிப்ப என்ன?" என்ற நிமிர்வும் வர, கண்களில் கூலரை மாட்டிக்கொண்டு அவன் பிரதான தெருவுக்கு வண்டியை விட முகமே 'ஈஈ' என்ற சிரிப்பில் பளபளக்க ஹம் செய்ய ஆரம்பித்திருந்தான் நவீன்.

"இந்தாடா. காலேஜுக்கு போய் ஒழுங்கா படிச்சு PhD க்கு அட்மிஷன் வாங்குற வழியை பார். மறுபடி மறுபடி இங்கே சுத்துறது, ஊர்க்கிழவிகள் போல வம்பு பேசுறதுன்னு சுத்திட்டிருந்தேன்னா தோலை உரிச்சிடுவேன்." என்று அவன் என்ன செய்வான் என்று ஊகித்து சாஹி மிரட்ட

"சரிண்ணா, சரிண்ணா" என்று சொன்னவன் இன்னும் சிரிப்பை அடக்காமல் அமர்ந்திருக்க, கடுப்பாகிப்போனவன் அதன் பிறகு அவனிடம் எதுவுமே பேசவில்லை.

ஒரு பரோட்டாக்கடையில் இறங்கி நான்கு பார்சல்களை வாங்கிக்கொள்ள, இப்போது மீண்டும் நவீன் முகத்தில் குறும்பு புன்னகை முளைக்க, "அடி வாங்கப்போறடா" என்று அடிக்குரலில் மிரட்டியவனுக்கும் இப்போது வெட்கச் சிரிப்பு வரப்பார்த்தது.

ஒரு வழியாய் ஒரு பரோட்டா பார்சலோடு அவனை இறக்கி விட்ட பிறகுதான் அவனுக்கு மூச்சே வந்தது. காரை விட்டுவிட்டு அப்பார்ட்மென்டில் ஏறியவனுக்கு, எப்போதும் போல அது எப்போது இடியுமோ என்ற எண்ணம் வர, 'உப்பென்று' ஊதிக்கொண்டே மேலே வர, "அடடா சாஹித்யா, அம்மாவை கூப்பிட வர்றியா?" என்று கேட்டுக்கொண்டே பதிலுக்கு காத்திருக்காமல் கையசைத்துக்கொண்டே நந்தன் படிகளில் இறங்கிப் போய்விட, நெற்றியை தேய்த்துக்கொண்டே மேலேறி வந்தவன் வர்ணி வீட்டின் முன் இருந்த காலிங் பெல்லை ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை தட்டினான்.

அவளிடம் எல்லாமே இருக்கும், ஆனால் எதுவுமே அதற்கான வேலையை செய்யாது. எப்படித்தான் தேடி கண்டுபிடிக்கிறாளோ ஆண்டவா!

அரை நிமிட தாமதத்தின் பின் பெரிய சிரிப்போடு கதவை திறந்தாள் வர்ணி. கிளிப்பச்சையில் ஒரு பைஜாமாவும், சிவப்பு கையில்லாத டாப்பும் என்று ஒரு கண்ராவி காம்பினேஷனில் அவள் இருக்க இவன் கண்களோ அதை கூட விட்டு வைக்காமல் மேய,

"அஹீம், எப்படிப்போச்சு உங்க காம்பிட்டிஷன்?" என்று கேட்டவளின் கன்னங்களில் லேசான சிவப்பு.

"அவன் செலக்ட் ஆயிட்டான். அடுத்து வலய மட்ட போட்டிக்கு போகணும்."

"வாவ்!"

அந்த நேரம் கதவை திறந்து கொண்டு வந்த நித்யா இவர்களைக் கண்டதும் அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு அப்புறம் வர்றேன் என்று வர்னியிடம் வாயசைத்து விட்டு மீண்டும் வீட்டுக்குள் போக, நொந்து போய்விட்டவன் வர்ணியை பார்க்க அவளும் உதட்டுக்குள் சிரித்தபடி கதவை அகலத் திறந்தாள். உள்ளே வாங்க

"இல்லல்ல, அம்மாவை கூப்பிடணும், டைம் ஆச்சு" என்றபடி அவளிடம் பரோட்டா பார்சலை நீட்டினான் சாஹி.

"வாசல்ல வச்சு எதுவும் வாங்க கூடாதுன்னு சிஸ்டர் சொல்லிருக்காங்க."

அவளும் தன்னுடைய கூச்சத்தை மறைத்துவிட்டுதான் வம்பு செய்கிறாள் என்று புரிய, அவளை ஏறிட்டுப் பார்த்தவன், "ஏனாம்?" என்று குறும்பாய் கேட்டான்.

"கொடுக்கற பொருள் குறைஞ்சு போய்டுமாம்."

"வீட்டுக்குள்ள போய் கொடுத்தா கூடிருமா? நான் ரெடிதான். நீதான் வெட்கப்பட்டு அப்புறம் நாளைக்கு கடைக்கு லீவ் போட்டுடுவ."

"ஏய், நான் என்ன சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்க?" என்று படபடத்தவளை பார்த்து அவன் வாய்விட்டு சிரிக்க, "இந்த ட்ரஸ் ரொம்ப நல்லாருக்கு" என்றபடி உடையை தொட்டு பார்த்துக்கொண்டே வந்த அம்மாவை கண்டதும் சாஹியின் விழிகள் விரிந்தன.

பாட்டிக் துணியில் நீளமாய் சட்டை போல முன்புறம் பட்டன்களும் பெல்ட்டும் வைத்து ஒரு உடையை அணிந்து கொண்டு வந்திருந்தார் அம்மா.

பட்டென்று ஒரே நிமிடத்தில் மாட்டிக்கொண்டு விடலாம்!

அவன் விழிகள் விரிய அவரையே பார்த்துக்கொண்டே இருக்க, அவன் மறுக்கப்போகிறான் என்று நினைத்தாளோ என்னமோ "வெளியே தான் போட்டுக்க வேண்டாம். வீட்டுக்காவது இதை போட்டுக்கட்டும் விடுங்க. அழகா இருக்காங்கல்ல பொம்மை மாதிரி?” என்று மெலிதாய் கெஞ்சும் குரலில் கேட்க

அம்மாவையே இன்னும் விழி எடுக்காமல் பார்த்திருந்தவன் “இதே போல இன்னும் கொஞ்சம் தச்சு வாங்கி தர்றியா?" என்று மெல்ல கேட்டான்.

உடனே கண்களில் சந்தோசம் வெளிச்சம் போட்டுக்கொள்ள "அதெல்லாம் அஞ்சு செட் தான் தைக்க சொல்லியிருந்தேன். சும்மா உங்ககிட்ட பர்மிஷன் கேட்கற போல சீனை போட்டா உடனே நம்பிடறதா?" என்று அவள் குறும்பாய் கண்சிமிட்ட, அவனுக்கும் சிரிப்பு வந்தது.

"என்கிட்டே சொல்லிருக்கலாம்ல. பணம் கொடுத்திருப்பேன். அஞ்சு ட்ரெஸ்ஸுக்கு நிறைய பணம் செலவாயிருக்குமே..." என்று அவன் வருத்தமாய் கேட்க

"ஆங்.. அதெல்லாம் வாங்கிப்பேன். சும்மா யாராவது கொடுப்பார்களா?" என்று அவள் சிரிக்க, இவளோடு முடியாது என்பது போல தலையசைத்துக்கொண்டே "நன்றி" என்று முணுமுணுத்தவன், "கதவை பூட்டினாலும் உள்ளேயும் ஒரு பார் வச்சு பூட்டு. ஒரு தட்டு தட்டினா கதவு கழன்று விழுந்திரும் போல." என்று அந்த கதவை இழுத்து பார்த்தான்.

"இந்த கதவு கழன்று விழுதா? திருடன் உங்களை மாதிரி ஜிம்பாயா இருந்தா தான் சாத்தியம்" என்றாள் அவள் பதிலுக்கு குறும்பாய்.

மீண்டும் எதிர்வீட்டு கதவு திறந்து தலையை நீட்டிய நித்யா அசடுவழிய உள்ளே மறைய, சாஹிக்கு 'ஹையோ' என்றிருந்தது.

"நான் கிளம்பறேன். ரொம்ப தாங்க்ஸ். குட்நைட்" என்று அம்மாவை ஏறக்குறைய இழுத்துக்கொண்டு அவன் அகல, "நாளைக்கு லன்ச் செய்யாதீங்க, கொண்டு வர்றேன்" என்று குரல் கொடுத்தாள் அவள் பின்னிருந்து.

"இதுக்கு மேல லன்ச் பண்ணிட்டு இருக்காத. நான் சமாளிப்பேன்."

"அதெல்லாம் ஆன்ட்டியும் நானும் அப்போவே பண்ணிட்டோம்."

வேறேதும் சொல்ல முடியாமல் "சரி" என்று தலையசைத்தவன், தன் அம்மாவை அழைத்துக்கொண்டு இறங்க, காரில் ஏறும் வரை அவளின் பார்வை அவர்கள் மீதே படிந்திருந்தது. இதமாய் அவனை சுற்றி படர்ந்திருந்த அந்த உணர்விலேயே அவனுக்குப் புரிந்தது.

மறுநாள் எப்போதும் போல அவன் டார்லிங் காபேக்கு உணவுக்குப் போக, லன்ச் கேரியரோடு வந்து அருகில் அமர்ந்தாள் வர்ணி.

"லேட் பண்ணிட்டேனா? கஷ்டமர் அதிகம் வர்றாங்க, சமாளிக்க முடியலை. பிரபலமான ஷாப்பா இருக்கறது ரொம்ப கஷ்டம். அது உங்களுக்கு புரியாது"எடுத்த எடுப்பிலேயே அவனை சீண்டியவளை மேலும் கீழும் பார்த்தவன்

"அது சரி. ஆமா, அப்புறம் எதுக்கு காபி விக்கலைன்னு ஈவினிங் டோர் டெலிவரி பண்றியாம்?" என்று சிரித்தான் அவன்.

"ஹலோ, நான் ப.மு.க. வுக்கு டோர் டெலிவரி கொடுக்கறது ஒரு வியாபார தந்திரம். காபி விக்கலைன்னு ஒன்னும் பண்ணலை. கொடுக்கறதுக்கு காசு வாங்கிக்கிறேன்ல..."

பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே அவள் செய்திருந்த நாணை எடுத்து சன்னா மசாலாவில் தோய்த்து சாப்பிட ஆரம்பித்தான் சாஹித்யன்.

நிஜமாகவே நல்ல உணவகத்தில் சாப்பிடும் சுவையில் இருந்தது அந்த உணவு. "பேசாம காபிக்கடையை விட்டுட்டு ரெஸ்டாரண்ட் ஆரம்பி, நல்லா போகும்." என்று அவன் சொல்ல

"தேங்க் யூ. ஆண்ட்டிதான் எனக்கு குரு. இல்ல ஆண்ட்டி?" என்று அம்மாவை கூட சேர்த்துக்கொண்டாள் அவள். அவளை அதற்காகவாவது பாராட்டி விட்டால் கண்ணை பார்க்க முடியாமல் திணறி ஏதேனும் கிறுக்குத்தனம் செய்வது வழக்கம் தானே..

"ஹ்ம்ம்.. சொன்னா டக்குனு பிடிச்சுக்கிறா கற்பூர புத்தி" என்று அம்மா அவர் போக்கில் சொல்லிவிட்டு சந்தோஷமாய் சாப்பிட ஆரம்பித்திருக்க, சாஹிக்கு சிரிப்பு வந்து விட்டது.

'இதேதடா கற்பூரத்துக்கு வந்த சோதனை!'

"இப்போல்லாம் நீங்க என்னை கிண்டல் பண்ணிட்டே இருக்கீங்க. நான் ஆரம்பிச்சேன், அப்புறம் என்னை குத்தம் சொல்லக்கூடாது என்று மிரட்டலாய் சொன்னவள் அப்பா, இப்போதுதான் வயிறு ஹாப்பியா ஆகுது. உங்களால என் பயோலாஜிக்கல் க்ளாக்கே மாறிடுச்சு தெரியுமா?"என்றபடி ரசித்து இன்னொரு துண்டை வாயிலிட்டு கொள்ள

அவனுக்கு அப்போதுதான் புரையேறிவிட்டது. அப்போதுதான் அவளுக்கும் புரிந்திருக்க வேண்டும்; முகம் சிவந்து, "நான்... நான்... எனக்கு பதினொன்று நாற்பத்தைந்துக்கு பசிக்கிறதைத்தான் சொன்னேன்" என்றாள்.

"நான் ஒண்ணுமே சொல்லலையே" அவன் சிரிப்போடு சொல்ல,

"கடைல யாரும் இல்லையா?" என்றபடி டார்லிங்ஸுக்குள் நுழைந்தார் ஒருவர். வர்ணி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பித்து ஓட நினைத்து சாப்பாட்டை மூட, பட்டென்று அவள் கரம் மேல் தன் கரத்தை வைத்தான் சாஹி.

அதற்குள் முன் வாயில் வழியாய் உள்ளே நுழைந்து கொண்டிருந்த சிவபெருமான், "ஓனருக்கு லன்ச் நேரம் இது. பன்னிரண்டு மணிக்கு வந்துருவாங்க. அஞ்சே நிமிஷம் தான் இருக்கு, வந்துருவாங்க. அதுல உக்காருங்க" என்று மெல்லிய சிரிப்போடு அந்த கஸ்டமருக்கு கைகாட்டி விட்டுப் போக, இப்போது சாஹிக்கும் லேசாய் முகம் சிவந்தது.

'அஹீம்!' மெல்ல அவள் கையை உருவ முற்படவும் தான் , சுய உணர்வுக்கு வந்து கையை விலக்கியவன் , "சாப்பிட்டுப் போ" என்றான் மெல்லிய குரலில்.

அவள் அவசரமாய் எல்லாவற்றையும் வாய்க்குள் அடைத்துவிட்டு ஓடிப்போக, வந்திருந்த புதிய கஸ்டமரை ஒரு ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான் சாஹி. இப்போல்லாம் மாலுக்குள் புதிய ஆட்கள் அடிக்கடி தென்படுகிறார்கள். இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமோ? சரியாக கண்டுகொள்ள முடியவில்லை. வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை இன்னும் முற்றாய் சரி செய்து முடிக்காத காரணத்தால், அதை சரி செய்யும் நோக்கில் அடிக்கடி புதியவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

சாப்பிட்டு முடித்துவிட்டு அம்மா குமாரின் கடைக்குப் போய்விட, டிபன் கேரியரை எடுத்துக்கொண்டு காபேயின் வெளிப்புறமாய் இருந்த கைகழுவும் பகுதியில் கழுவி, பக்கப்புறமாய் உள்ளே வைத்தவன் வர்ணியை ஏறிட்டுப் பார்த்தான். இன்னும் அந்த ஆளுக்கு எதையோ எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தவளின் கண்களும் இவன் மேலேதான் இருந்தன. ஏனோ தப்பித்து ஓடியவளை வம்பிழுக்க தோன்ற

"இன்னிக்கு அமெரிக்கானோ வேணாம்" என்று காபேயில் இருந்த போர்டில் அமெரிக்கானோவை தொட்டு சைகையில் சொன்னவன், "அப்புறம்?" என்று அவளும் சைகையில் விழி விரிக்க, ஹாட் சாக்லேட் படத்தை தொட்டுக்காட்டி விட்டு லேசான சிரிப்போடு வெளியே வர, அந்த ஆள் இவர்களையே மாறிமாறி பார்ப்பது புரியவும், நேராக அவனையே ஊன்றிப் பார்க்க, மெல்ல பார்வையை விலக்கிக்கொண்டு பம்மி விட்டான்,

சாஹி வெளியே வர

'இது நானா இல்ல?

பழசெல்லாம் சொல்ல?

புது சந்தேகங்கள் உருவானது!' என்று ஐஸ்கிரீம் கடையில் பாட்டு பிட்டாய் வர, குமாரையும் ஒரு முறைப்பு முறைத்து அதை நிறுத்த வைத்தவன் அம்மாவை கூட்டிக்கொண்டு போய்விட்டான்.

ஹப்பா, ஒவ்வொரு நாளும் மதியத்தை கடக்கறதே எனக்கு பெரிய டாஸ்க்கா இருக்கு என்று அவனது மேல் மனம் சொன்னாலும், உதடுகளில் சின்ன சிரிப்பு அழகாய் பூத்திருந்தது.
 
Last edited by a moderator:

Author: Ush
Article Title: லக்கி வீடு - 13
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.