லக்கி வீடு - 14

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

Ush

Well-known member
Feb 8, 2026
71
174
93
வர்ணி ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தாள். என்னமோ திடீரென்று அவளது வாழ்க்கையை யாரோ தூக்கி மேகமூட்டங்களின் மேல் வைத்ததை போலிருந்தது. வழக்கமான சிரிப்பை விட ஒரு படி அதிகமாகவே அவளது உதடுகள் சிரித்துக்கொண்டிருக்க, அது அவளுக்கு எதிரே இருந்த கஸ்டமருக்கும் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும். அவரும் புன்னகைத்தார்.

“அண்ணா, இன்னிக்கு ப்ரீ ப்ரோமோஷன் சீஸ்கேக் பைட்ஸ் போட்டிருக்கோம். எந்த பிளேவர் வேணும்?” என்று அவள் கேட்க,

அந்த அண்ணா சந்தோஷமாய் ஸ்ட்ராபெரியை வாங்கிக்கொண்டு போக,

“சமூகம் பெரிய இடம் போல, சீஸ்கேக் பைட்ஸ் எல்லாம் இலவசமா கொடுக்குது” என்று ஹனி ஐஸ்கிரீமில் இருந்து குமரனின் குரல் வந்தது.

“டேய் போடா” என்று அவனை நிறுத்த முயன்றாள் அவள்.

“என்னன்னு சொல்லு?” அவன் எங்கே விட்டான்!

“இங்கிருந்து சொல்ல முடியாது. நீ வேலையை முடிச்சிட்டு வா, சொல்றேன்” என்றாள் வர்ணி.

“நீ ஒண்ணும் சொல்ல தேவலை.. நான் கண்டுபிடிச்சிட்டேனே..” என்று அவன் செய்த சைகையில் விழி விரித்தவள், “எப்பட்றா” என்று அதிர்ந்தே விட்டாள்.

“ஹி ஹி, அதெல்லாம் பிரதீப் அண்ணா காலையிலேயே எனக்கு போன் பண்ணி சொல்லிட்டாங்க.. துரோகிகள் நடுவில் சில நல்ல உள்ளங்களும் வாழத்தான் செய்கின்றன” என்று இப்போது அவன் பொய்க்கோபமாய் முறைக்க

“சரி சரி, வெளியே சொல்லாத..” என்று அசடு வழிந்து விட்டு, 5 விரல்களைக் காட்டியவள், “அது வரை வெளியே சொல்லக்கூடாது” என்றும் கவனமாய் எச்சரித்து விட்டு வரிசையில் காத்திருந்த அடுத்தவரை விசாரிக்கலானாள்.

பின்னே என்ன? சும்மாவே மகிழ்ச்சி கடலில் சுற்றிக்கொண்டிருந்தவளை பூஜா கர்ப்பமாக இருக்கும் செய்தி என்ன செய்யும்! அவளைக் கையில் பிடிக்கவே முடியவில்லை. உறவே இல்லை என்று வாழ்ந்தவர்களுக்கு, அவர்களுக்கே அவர்களுக்கென்று ஒரு ரத்த சம்பந்தம் வரப்போகும் நிகழ்வு அத்துணை நெகிழ்ச்சியாய் இருக்க, டார்லிங் காபேயில் என்ன விஷயம் என்று சொல்லாமல் ப்ரீ ப்ரோமோஷனாக இனிப்புகளை எல்லாருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தாள் வர்ணி.

பூக்கடையில் என்னமோ சலசலப்பு கேட்க நிமிர்ந்து பார்த்தவளுக்கு, அங்கே சிவனும் பார்வதியும் மறுபடியும் ஏதோ வாய்தகராறில் இருப்பதையும், ஆனால் முன்னர் போல யாரும் வெளிநடப்பு செய்யாமல் வாய்க்குள் முணுமுணுத்தபடி கடைக்குள்ளேயே இரண்டு பக்கமாய் திரும்பிக்கொள்வதைப் பார்க்க சிரிப்புத்தான் வந்தது அவளுக்கு. அந்த மழை நாளுக்குப் பிறகு தினமும் பழையபடி சண்டையே போட்டாலும் யாரும் கடையை விட்டு வெளிநடப்பு செய்யாததால், இவர்களுக்கெல்லாம் முன்னரைப் போல என்டர்டெயின்மெண்ட் கிடைப்பது இல்லை.

அதன் பிறகு வழக்கம் போல அவளது நாள் மதியம் வரை லக்கியும் கஸ்டமர்களும் என்றே ஓட, சாஹித்யனுக்காக ஒரு சின்னப்பெட்டியில் சீஸ் கேக் பைட்ஸைப் பத்திரப்படுத்திக்கொண்டவள் மதிய உணவு நேரத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தாள். ஆனால் சாஹித்யன் வரவில்லை, அவனுக்கு பதிலாய் நவீன் போனபிறகு புதிதாய் ஜிம்மில் வேலைக்கு சேர்ந்திருக்கும் பிரேம் சாப்பாட்டுப் பையோடு வரவும் இவளுக்கு ஏமாற்றமாகிப் போனது.

அப்பாவியாய் புன்னகைத்த ப்ரேம் “சாஹித்யன் சார் அம்மாவை இன்னும் ஒரு மணி நேரத்துல வந்து வீட்டுக்கே கூட்டிட்டு போயிடறதா சொல்லிவிட்டார். இந்த மருந்தை சாப்பிட்டதும் அம்மாவுக்கு கொடுக்க சொன்னார்” என்று ஒரு பெட்டியையும் கையில் தர உர்ரென்று வாங்கிக்கொண்டவளுக்கு செம கோபம்.

லக்கியை அவளோடு சாப்பிட அமரவைத்துக்கொண்டவள் “உங்களை மாலை வரை நான் பார்த்துக்க மாட்டேனாமா? நடுவுல அவரு வந்து கடமை செஞ்சே ஆகணுமா?” என்று பாவம் லக்கியோடு சண்டைக்கு போக

அவரோ வழக்கம் போல அதை ஊதி தள்ளி விட்டு சாப்பாட்டில் கவனமாகி விட்டார்

அவன் செய்திருந்த காய்கறி சாதம் சந்தேஉதட்டை பிதுங்கிக்கொண்டு சாப்பாட்டை ஒரு வாய் எடுத்து வாயில் வைத்தவளுக்கு உடனேயே புரிந்து போனது.

சந்தேகத்துக்கிடமின்றி இது வர்ணியின் ரெசிப்பியே தான்!

‘இவன் நம்ம கிட்ட இருக்கற மொத்த சரக்கையும் ஆட்டையை போட்டுடுவான் போல இருக்கே.. இனிமே சொல்லிக் கொடுக்கக் கூடாது’ என்று நினைத்தாலும் உதடுகளில் சிரிப்பு நெளிய சாப்பிட்டு முடிந்து, ஆன்ட்டிக்கும் மருந்துகளையும் கொடுத்து காபேக்குள்ளேயே இருந்த பெரிய நாற்காலியில் இளையராஜா பாடல்களோடு அமர வைத்துக்கொண்டாள்.

பாடல்களை ஒலிக்கவிடும் வரை படபடப்பாகச் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தவர், அதன் பின் அப்படியே தலையை பின்னே சாய்த்து கண்களை மூடிக்கொண்டார்.

அவருக்கு இப்போதெல்லாம் நினைவுக்கோவை வேகமாய் அறுந்துவிடுகிறது, சட்டென்று குழம்பிப்போய்விடுகிறார். கண் முன்னே கடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து செல்லும் தீவைப்போல அவளது மனதிலும் ஒரு பாரம் ஏறிக்கொண்டது. ப்ச்... சற்று நாட்களில் அவர் இந்த இசையைக்கூட மறந்து போய்விடலாம். ஆனாலும் அந்த ‘சுயமாய் வாழ வேண்டும்’ என்ற ஓர்மம் மட்டும் மறக்காமல் அவ்வப்போது வந்து போகிறதென்றால், எந்தளவுக்கு அந்த வாழ்க்கைக்காய் ஏங்கி இருப்பார்?

அவளுக்கே இப்படி என்றால் சாஹித்யனுக்கு எப்படி இருக்கும்? பாவம்! என்று நினைத்துக்கொண்டவள், பிறகு, ‘ச்சே சச்சே அந்த அந்நியனுக்கு பாவம் பார்ப்பதா? ஒரு வார்த்தை எனக்கு மெசேஜ் போட்டு சொல்லியிருக்கலாம் தானே’ என்று மீண்டும் உர்ர் என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.

அந்தப்பக்கம் அவனோ, சொல்லிவிட்டதைப் போலவே ஒரு மணிக்கு டிப்டாப்பாய் வர, இங்கே மாலின் முன்பக்கம் மதிய நேரம் யாரும் இல்லாததால் ஒன்றாய் கூடி ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தனர் இவர்கள் எல்லாரும்.

அவன் தான் ஆட்கள் இருக்கும் போது எதையும் காண்பித்துக்கொள்ள மாட்டானே. மெல்ல வர்ணிக்கு மட்டும் ரகசியமாய் தலையசைத்துவிட்டு அம்மாவை அழைத்துக்கொண்டு வர, அவன் தலையசைத்ததை கழுகு கண்களால் கவனித்துச் சுற்றி நின்றவர்கள் ஓஒ என்று அவளை ஓட்டஆரம்பித்து விட்டனர்.

கான்டாகி போனவன் “யாருக்கும் வேற வேலையே இல்லை, வெட்டியா அரட்டையடிங்க” என்று அவளையும் சேர்த்து முறைத்துக்கொண்டு இறங்கிப்போனான்.

இப்போ வர்ணிக்கு அவனை விட செம கோபம் பொங்கிவிட்டது. அவள் எவ்வளவு ஆசையாய் சந்தோஷமான விஷயத்தை அவனிடம் சொல்லவேண்டும் என்று காத்திருக்க, வராமல் விட்டது மட்டுமல்லாமல் வந்தும் அவளோடு பேச முயற்சி எடுக்காமல் போறான் பார்…

ப்ச்..நீ சொல்லப்போறன்னு அவனுக்கு என்ன தெரியும்?

அதெல்லாம் தெரியாது. அவன் சும்மா போனா கூட மன்னிச்சிருப்பேன். முறைச்சிட்டு கூடவே திட்டிவிட்டும் வேறு போகிறான். மன்னிக்கவே முடியாது

விடுவிடுவென காபேக்குப் போனவள் போனை எடுத்து வாட்ஸாப்பில் அவனுக்கு குறுஞ்செய்தி டைப் செய்ய ஆரம்பித்தாள்:

  • தக்காளி - அரைகிலோ - 5cm
  • வெங்காயம் - கால் கிலோ -5cm உயரம்
  • பூண்டு - 1 (காய்ந்து போகாதது)
  • இஞ்சி - 1 துண்டு
  • கொத்தமல்லி இலைகள் - வாடாதது
  • புதினா - 1 சென்டிமீட்டர் விட்டமுள்ள இலைகள்

என்று மொட்டையாய் குறுஞ்செய்தியைத் தட்டிவிட, அவன் உடனடியாய் பார்த்தானே தவிர அவள் எதிர்பார்த்த எதிர்விளைவு எதுவும் வரவில்லை.

அது இன்னும் அவளது ஊடலுக்கு தூபம் போட அன்றைய நாள் முழுவதும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள் அவள்.

நாளைக்கு அவளுடைய சமையல் முறை ‘உங்க ரெண்டு பேருக்கும் வெறும் தயிர் சாதம் தான் கொண்டு வருவேன்’ என்று மனதுக்குள் சவால் வேறு.

அன்று மாலை காபேயை மூடும் நேரமும் வந்துவிட்டது. சாஹித்யன் இன்னும் திரும்பி வந்திருக்கவில்லை. ‘ஆன்ட்டியை மதியமே வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டான். அதனால இங்கே வராமலே போய்டுவானோ? இருக்கும் இருக்கும்.. நான் தான் உளறுவாய் மாதிரி எல்லாத்தையும் அவன் கிட்ட சொல்லிடுறேன். அவன் எதுவுமே சொல்றது கிடையாது’

ப்ச் இப்ப என்ன? அந்த ஹல்க் மூஞ்சியை ஒரு நாள் பார்க்காம உன்னால வீட்டுக்கு போக முடியாதோ? என்று மனம் நக்கல் செய்ய

அவனை போய் யாராவது தேடுவாங்களா? இவ்ளோ நாளும் அவர் மூஞ்சியை கண்ணை திறந்து பார்த்து கன்னத்துல போட்டுட்டு தான் கடையை பூட்டினேனா? என்று தன் மனத்தோடேயே சண்டை போட்டுக்கொண்டு கடையை பூட்டிக்கொண்டு வந்தவள், அவனை மனதில் அர்ச்சிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை

“கொழுப்பு.. கொழுப்பு.. அவ்வளவும் கொழுப்பு” என்று முறைத்துக்கொண்டே ஸ்கூட்டிக்குப் போனால், அவள் கேட்ட பொருட்கள் ஸ்கூட்டியில் தொங்கிக்கொண்டிருந்தன.

அந்த பையை பார்த்ததுமே வர்ணியின் உதடுகளில் வெட்கச் சிரிப்பு தாமரையாய் மலர்ந்தது.

‘அப்போ நடுவுல வந்தானா? கடையிலேயே கொண்டு வந்து கொடுத்திருக்கலாம்ல.. அட்லீஸ்ட் வாங்கிட்டேன் என்றாவது சொல்லியிருக்கலாம்ல’

என்று அதற்கும் அவன் மேலே குறை கண்டுபிடித்தாலும் தக்காளிகளைத் தடவிக்கொண்டிருந்தாள்.

திடும்மென அவளுக்கு பின்னே “என்ன வர்ணி, திடீர்னு தக்காளி மேல அவ்ளோ பாசம்?” என்று பார்வதி கேட்டுக்கொண்டே போக,

ஹி ஹி என்று அசடு வழிந்து தன்னிலைக்கு வந்தவள் ராக்கியை நிமிர்த்தி ஏறி அமர்ந்தாள்.

‘இவனை நினைத்தாலே இப்படித்தான் பல்ப் வாங்குகிறோம், இனிமேல் உன்னை நினைக்க மாட்டேன் போ’ என்று வீர சபதமும் செய்து அந்த காய்கறிப் பையை கவனமாய் உட்புறமாய் மாட்டிக்கொண்டவள் வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.
 

Author: Ush
Article Title: லக்கி வீடு - 14
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Ush

Well-known member
Feb 8, 2026
71
174
93
அன்றைக்கும் ராக்கியை கொஞ்சம் போராடித்தான் ஸ்டார்ட் செய்ய வேண்டி இருந்தது. இப்போ கொஞ்ச நாளாகவே இது அடிக்கடி நடந்து கொண்டிருப்பதை அவளது மனம் ஏற்க தயாராய் இல்லை.

“என் தங்கமில்ல, வெல்லமில்ல” என்று அதனோடு போராடிச் செல்லமாய் உதைகளைக் கொடுத்து அதை ஒரு வழியாய் ஸ்டார்ட் செய்து கொண்டு போனவள், வீட்டுக்கு போகும் வழியிலபோகாமல் பிரதான வீதியின் எதிர்ப்புறமாக திரும்பும் வீதியில் ஏறினாள்.

இன்றைக்கு அவள் அந்த வழியில் போனது, தலைமுடிக்கு வைக்கும் எண்ணெய் தீர்ந்து போனதால் அதை வாங்கும் சித்த வைத்தியசாலைக்குப் போய்விட்டு வீட்டுக்குப் போக வேண்டும்’ என்று வர்ணி கண்டு பிடித்த காரணமா? சாஹித்யன் வருவதானால் அந்த வழியாய் தான் வருவான் என்பதா எது உண்மை என்று அவளை கேட்டாலும் தெரிந்து கொள்ள முடியாது.

கொஞ்ச நேரம் எதையோ ஹம் செய்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தவளுக்கு அன்றைக்கு என்ன காலமோ, ராக்கி மீண்டும் கைவிட்டுவிட்டது.

போச்சு போ..

அந்த நேரம் வீதி வெறிச்சோடித்தான் இருந்தது. அது கொஞ்சமே கொஞ்சம் அவளை பதட்டப்படுத்தத்தான் செய்தது. ப்ச். ஆனாலும் பஸ் வந்தாலும் ராக்கியை ரோட்டில் விட்டுவிட்டுப் போக முடியுமா? அவள் போராடி அவனை உருட்டிக்கொண்டே நடக்க, மனமோ ஒரு வளர்ந்தவனை திட்டி தள்ளிக்கொண்டிருந்தது. எல்லாம் அவனாலே தான்.

அவள் திட்டியதெல்லாம் அச்சொட்டாய் அவனை சென்றடைந்ததோ என்னமோ ஹாரன் சத்தம் அவளுக்கு பின்னிருந்து கேட்க முளைக்க முயனற சிரிப்பை அடக்கிக்கொண்டு விடு விடுவென நடக்கலானாள் வர்ணி.

காரை நிறுத்திவிட்டு சாஹித்யன் வேகமாய் இவளின் பின்னே வர, இவள் அவன் வருவதைத் தெரியாததை போலவே இன்னும் வேகமாய் தொடர்ந்து நடக்க, விடுவிடுவென வந்து ஸ்கூட்டியை பிடித்து நிறுத்திவிட்டவன், “இன்னிக்கும் போச்சா?” என்று கேட்டான் அவளையும் ராக்கியையும் ஒரு பார்வை பார்த்தபடி; அப்படியே குரலில் கிண்டல் தெறித்தது.

“மழைல நனைஞ்சிட்டான். அதனாலதான்.. கொஞ்சம் வெயில்ல விட்டேன்னா சரியாயிடுவான்” என்று தலையை நிமிர்த்திக்கொண்டே வர்ணி சொல்ல,

“உன்னை திருத்தவே முடியாது. ஒரு நாளைக்கு இந்த ஸ்கூட்டியால நீ கஷ்டப்படப்போற, அவ்வளவுதான் சொல்லிட்டேன். நான் வர்றேன்னு தெரியுதுல்ல, அப்புறம் என்ன வீம்புக்கு நடந்து போறது? வந்து கார்ல ஏறு” என்றான் சாஹித்யன்.

“அப்போ ராக்கி?” என்று முகத்தை முறைப்பாய் வைத்துக்கொண்டே இவள் ஓரக்கண்ணால் அவனை பார்க்க

“அதையும் ஏத்தித் தொலைக்கிறேன், நீ போய் ஏறு முதல்ல.” என்றான் அவன்

முன் சீட்டில் ஓடிப்போய் ஏறிக்கொண்டவள், அவன் பின் சீட்டை மடித்துவிட்டு ராக்கியை ஒரு வழியாய் உள்ளே ஏற்றுவதை மென்சிரிப்போடு பார்த்திருந்தவள், அப்போதுதான் எதேச்சையாய் கண்ணாடியைக் கவனித்தாள்.

ஒய்யாரமாய் வீற்றிருந்தது அவளது பொட்டு!

‘ஐயோ இது நம்மளோடதுல்ல? இது இப்படி இங்கே வந்தது?’

கன்னம் சிவக்க மனம் மீண்டும் மேகங்களில் ஏறி உலாப்போக, அதையே பார்த்துக்கொண்டிருந்தாள் வர்ணி.

ஸ்கூட்டியை ஏற்றி விட்டு வந்தவனும் அவள் பார்த்ததை கவனித்தாலும் எதுவும் சொல்லவில்லை.

இவளுக்கும் எதையும் கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை.

கார் சற்று தூரம் சென்றதும் கைப்பையில் வைத்திருந்த சின்ன பெட்டியை எடுத்து மெல்ல அவன் புறமாய் தள்ளினாள் வர்ணி.

“என்ன விஷேஷம்?” என்றான் அவன் மெல்ல சீஸ் கேக் பைட் ஒன்றை உரித்தபடி.

“பூஜா ப்ரெக்னண்டா இருக்கா.”

“அப்படியா? நான் வாழ்த்துகள் சொன்னதா சொல்லிடு என்ன.”

“ம்ஹ்ம்” என்று இவள் உற்சாகமாய் தலையசைக்க, புன்னகையோடு சீஸ் கேக்கை வாயிலிட்டுக்கொண்டவன் ஏனோ உல்லாசமாய் லேசாய் விசிலடித்துக்கொண்டே வண்டியோட்ட, இவளுக்குத்தான் படபடப்பாகிப் போனது.

இருவருமே எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. வார்த்தைகள் தேவைப்படாத மௌனம் மட்டுமே காருக்குள் நிறைந்திருக்க, அப்படியே அவனோடு இப்படியே போய்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

நீண்ட தூரம் போக ஆசை, ஆனால் அந்த குட்டி ஊருக்குள் எவ்வளவு தூரம் தான் போக முடியும்? அவளது வீடு வந்தே விட்டது.

அவளையே இப்போது விழியெடுக்காமல் அவன் பார்த்திருக்க, “நா.. நான் கிளம்பறேன். குட் நைட்” என்றவள் அவசரமாய் கார் கதவைத் திறந்து தப்பித்து ஓடப்பார்க்க, அவனும் இறங்கி வந்தான்.

“காலைல என்ன அந்த பேக்கரி காரன் கிட்ட மறுபடி சண்டை?”

இருவருமாக லிப்டை நோக்கி நடந்தனர்.

“எனக்கு இன்னொரு பேக்கரி கிட்ட இருந்து ஆஃபர் வந்தது. டெலிவரி சார்ஜும் கம்மி, அதை சொல்லப் போனேன். அந்தாள் இப்படியெல்லாம் உடனே சொல்லாதம்மான்னு சண்டைக்கு வர்றார். சரி பாவம்னு ஒரு மாசம் டைம் கொடுத்திருக்கேன்.” என்று வர்ணி சொல்ல

“அந்த புது பேக்கரியை சரியா விசாரிச்சியா? ஒழுங்கா கொடுப்பாங்களா?” என்று கேட்டான் அவன்

“ஆமாம். பூஜா தான் கான்டாக்ட் பிடிச்சு கொடுத்தா.”

“அப்போ சரி.” என்று அவனும் திருப்தியாகி விட லிப்ட் அவளது ப்ளோரில் வந்து நின்றது.

சாஹித்யனின் பார்வை ஏனோ அவளை விட்டு விலகுவதாயில்லை.
என்றைக்கும் இல்லாமல் என்னதிது? இன்றைக்கு இவன் சரியில்லையே.. ‘அடேய் ஹல்க் இப்படி பார்க்காதே’ என்று மனதுக்குள் அலறியபடி அவள் வீட்டுக்கதவைத் திறந்து உள்ளே எஸ்கேப் ஆக முயல,

“வர்ணி” என்றான் அவன் அவளையே பார்த்தபடி.

ஹ்ம்ம்.. கைப்பிடியை பிடித்துக்கொண்டே நின்று விட்டாள் வர்ணி

“பூஜாவுக்கு உனக்கும் ஒரே வயசுதானே?”

“ஆமாம். நாங்கள் பிறந்த மாசம் கூட ஒண்ணுதான்” என்றவள், “ஆமாம் ஏன் இப்போ இந்த ஹிஸ்டரி?” என்று அவனைப் பார்க்க, குறும்பு சிரிப்போடு அவளை அவன் பார்த்த பார்வையிலேயே அவன் சொல்ல வருவது புரிந்துவிட்டது.

‘அச்சச்சோ என்ன இவன் இப்படி ஆயிட்டான்’ என்று இவளுக்கு உள்ளுக்குள் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலே ஓடிற்று.

“உனக்கு வாய் மட்டும்தான்” அவன் மேலும் சீண்ட,

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் “ஆங் நான் மட்டுமா?” என்று பொங்கி “அப்படி பார்த்தால் பிரதீப்புக்கு உங்களை விட வயசு கம்மிதான்” என்று சவாலாய் இமைகளை உயர்த்தியவள் ,

“உங்களுக்கும் பாடி மட்டும்தான்” என்றாள் அவன் சொன்னதை போலவே..

சொன்னபிறகுதான் அவளுக்கு வழக்கம் போல விட்டு விட்ட வார்த்தைகள் உறைக்க,

“நித்யாக்கா வராங்க” என்று சட்டென்று நிலைமையை மாற்ற வாய் திறந்தாள், ஆனால் ரொம்ப தாமதம் அடுத்த கணம் வீட்டுக்குள் வந்திருந்தவன் அவளை கதவோடு சாய்த்திருந்தான்.

அவனது முகம் அவளது முகத்துக்கருகில் ஆபத்தான இடைவெளிக்கு வந்திருக்க, படபடக்கின்ற இமைகளோடு அவனையே பார்த்திருந்தாள் வர்ணி.

“ஓகே தானா?” அவன் முணுமுணுக்க, அவளுக்கு பட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.

“பாடி மட்டும்தான் சொன்னேன்ல” என்று சொல்லிவிட்டு அவள் சிரிக்க, “உன்னைப்போய் கேட்டேன் பார், என்னை சொல்லணும்” என்றபடியே அவளை இறுக அணைத்தவன் இதழ்களைத் திருடிக்கொண்டான். முத்தங்கள் தொடர வர்ணியோ எங்கோ மீண்டும் மீண்டும் மேகங்களுக்கிடையில் நழுவிக்கொண்டே இருந்தாள்.

சில பல நிமிடங்களுக்குப் பின்னர் அவனேதான் அவளை விடுவித்தவன், மெல்ல வெளியேறி, “கதவை பார் போட்டுக்க” என்று சொல்ல, அப்போதுதான் சுய உணர்வு வந்து இமை தட்டி விழித்தவளைப் பார்த்து அவன் இதழ்களில் மெல்லிய சிரிப்பும் ஏறிக்கொள்ள, “வரேன்” என்பது போல தலையசைத்துவிட்டு அவன் திரும்பி நடக்க ஆரம்பித்ததும் தான் வர்ணிக்கு ராக்கியின் ஞாபகமே வந்தது.

“அச்சோ ராக்கியை இறக்கி விட்டுட்டுப் போங்க” என்று குரல் கொடுத்தபடி அவனுக்கு பின்னே அவள் ஓடிவர, அதற்குள் லிப்டுக்குள் ஏறிவிட்டவன் வாய்விட்டு சிரித்தபடி, “இவ்வளவு நேரம் ஞாபகம் வர்லைல்ல உனக்கு!” என்று விட்டு, “நாளைக்கு பஸ்ல வா. மெக்கானிக் கிட்ட காமிக்காம அதையெல்லாம் இனிமே ரோட்ல அனுமதிக்க முடியாது” என்று அசால்ட்டாக சொல்ல, இவளுக்கு ‘ஆஹா’ என்றிருந்தது.

மெக்கானிக்கிடம் போனால் அதை இதை மாற்றி அவளுக்கு பெரிய செலவு வைப்பார்கள், ‘இது ஓடாது புதுசு வாங்கு’ என்பார்கள், தேவையா இதெல்லாம் என்று தான் அவள் அந்தப்பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை. ஒரு ரெண்டு தடவை தட்டினால் அவன் சொல் பேச்சு கேட்பான் அவனைப்போய்!!!

புரியாமல் இல்லை.. ஆனால் அவளாக அதை செய்ய அவளால் முடியாது.

“ஓனர் நான் இருக்கேன், நீங்க எப்படி முடிவு பண்ணலாம்? அப்புறம் காய்கறியை வேற கார்ல விட்டுட்டு வந்துட்டேன். அதையும் ராக்கியையும் கொடுத்துட்டுப் போங்க.” என்றாள் அவள் லிப்ட் கதைவை திறக்க முயன்றபடி

“ப்ச்.. தக்காளி சாதம் தானே.. நானே கொண்டு வரேன். நீ பஸ்ல வந்து சேரு.” என்றவன் அவளை விலக்கி திருப்பி விட்டுவிட்டான்.

ராக்கி காரில் ஏறிய கணமே அதன் விதி முடிவாகி விட்டது. இனிமேல் ஹல்க் ராக்கியை கொடுக்க மாட்டான் என்று அவளுக்கு தாமதமாய் புரியவும் கடுப்பாய் அவள் தரையில் காலை உதைக்க, சிரித்துக்கொண்டே லிப்டை மூடியவன் அந்த இடைவெளியில் ஏதோ சொல்லி சிரிக்க லிப்ட் கதவு மூடிக்கொண்டது.

“ஓனருக்கே ஓனர் நான்தான்.. எல்லாம் நான் முடிவு பண்ணலாம்” என்பதாய் அது வர்ணியின் காதில் விழுந்து தொலைத்தது.

‘எதே ஓனருக்கு ஓனரா? அப்படி சொன்னானா அவன்? நான் என்ன ராக்கியா? என்ன சொல்லிட்டுப் போறான் ராஸ்கல்! எல்லாம் நீ கொடுக்கற இடம் வர்ணி’ தொம்மென்ற காலடிகளுடன் வீட்டை நோக்கி கோபமாய் நடக்க ஆரம்பித்தாள் வர்ணி.

அப்போ ராக்கியை கடத்திக்கொண்டு போகவேண்டும் என்று முதலிலேயே முடிவு செய்துவிட்டுத்தான் அவளைப் பேசிப் பேசியே ராக்கியை மறக்க வைத்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறான்.

‘அடியேய் வர்ணி! நீ இவ்ளோ வீக் பாடியா? இவன் கொஞ்சமா ரொமான்ஸ் பண்ணினா நீ உலகத்தையே மறந்து போய்டுற? அதுமட்டுமில்லை.. அந்த விஷயம் அவனுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதை வச்சு என்ன நேக்காப் பிளான் பண்ணி காய் நகர்த்தி இருக்கான்!’

இவன் சாமான்யப்பட்டவன் இல்லை..என்ன இருந்தாலும் அவங்கப்பா ரத்தம் இல்லாம எப்படி போகும்? அவர் நேரடியா பேசி அடக்கி வைச்சிருக்கார், இவன் செய்றது தெரியாம கண்ட்ரோல் பண்றான், என்று அவனுடைய அப்பாவை நன்றாக தெரிந்தவள் போல ஒப்பீடு செய்து கொண்டு படபடத்த உணர்வுகளுக்கு கோபம் என்று பெயர் சூட்டிக்கொண்டாள்

இவனை இப்போவே தட்டி வைக்கணும், இல்லையா நம்ம ரொம்ப கஷ்டப்படுவோம் என்று அவளுக்குள் இருந்த பெண்ணியவாதி போர்க்கொடி தூக்க, காதல் மனமோ வெட்கமே இல்லாமல் பல்லைக்காட்டிக்கொண்டிருந்தது.

‘அடச்சீ.. என்று தன்னையே நொந்து கொண்டவள்

வரட்டும் பெரிய இவன் மாதிரி கொண்டு போனேல்ல.. என் ராக்கிக்கு ஏதாவது ஆகட்டும், அப்போ இருக்கு! எவ்வளவு செலவானாலும் நான் ஒரு சதம் கொடுக்க மாட்டேன். நானா கேட்டேன்?’ என்று சபதமும் செய்து கொண்டாள்

அந்தப் பொட்டா? முத்தமா? அவனது பிரகடனமா? ராக்கியா? எதுவோ தெரியாது.. அன்றிரவு தூக்கமே வராமல் படுக்கையில் உருண்டுகொண்டேதான் இருந்தாள். அந்தத் படபடப்பில் 99 வீதம் சந்தோஷமும் 1 வீதம் கோபமும் இருந்தது என்று நான் உண்மை சொன்னால் வர்ணி ஒத்துக்கொள்ள மாட்டாள்.