லக்கி வீடு - 15

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

Ush

Well-known member
Feb 8, 2026
71
174
93
15

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அம்மாவை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி அன்றைக்கும் லக்கியின் மருத்துவரின் முன்னே அமர்ந்திருந்தான் சாஹித்யன்.

வழக்கமான பரிசோதனைகளின் பின்னர் வந்து அவன் முன்னே அமர்ந்த மருத்துவர், எப்போதும் போல மருந்துகளின் மாற்றம் பற்றி அவனுக்கு விளக்கிச் சொல்லிக்கொண்டிருக்க, அங்கிருந்த புதிய நர்ஸ் அம்மாவோடு ஏதோ பேசி சிரித்துக்கொண்டே வெளியே வந்தார்.

“லக்கிம்மா, என்ன வர வர ரொம்ப ஸ்டைலிஷ்ஷா வர்றீங்க?” டாக்டர் சிரித்துக்கொண்டே கேட்க

அம்மாவிடம் மீண்டும் ஒரு மெல்லிய சிரிப்பு உருவானது

“அப்புறம் போன தடவை வரும் போது எனக்கு உங்களோட ஃபேவரிட் டேட்கேக் கொண்டு வந்து தர்றேன்னு சொன்னீங்களே, எங்கே?” என்று அவர் மீண்டும் வம்பிழுக்க

“அச்சோ! மறந்துட்டேன். சாஹி சொல்லவே இல்லையே.” என்று அம்மா அவனை பார்க்க “ மறந்துட்டேன்மா” என்று சிரித்தான் அவன்.

“என்ன சாஹி, இப்படி பண்றீங்க?” என்றவர், “ஆனந்தி, லக்கிம்மாவை வெளியே கார்டனுக்கு கூட்டிப்போய் காமிங்க,” என்று விட்டு, அவர்கள் வெளியேறியதும் இவனிடம் திரும்பினார்.

“இந்த ரெண்டு மாசத்துல ஏதாவது மாற்றம் தெரிஞ்சதா சாஹித்யன்?”

“ஹ்ம்ம்... போன மாசம் ரெண்டு தடவை...” என்று நிறுத்தியவன், பிறகு, “ரெண்டு தடவை அவங்களுக்கு என்னை அடையாளம் தெரியலை. வழக்கமா சாஹின்னு கூப்பிடுவாங்க. அப்போ நான் ஞாபகப்படுத்தினதும் தான் சட்டென்று ஞாபகம் வந்தது” என்றான்

“ஓ... வேற ஏதாவது?” என்று அவர் கேட்க

“இல்லை டாக்டர். வேற ஏதும் நான் கவனிக்கலை.”

“ஹ்ம்ம்... நீங்க தான் மனதை உறுதியா வச்சுக்கணும். அவங்களோட வியாதி நினைவுகளை இழக்கிறது தான். அப்படியிருக்கும் போது இது எதிர்பார்க்க வேண்டியது தான். ஒரு குழந்தைக்கு நம்மை அம்மான்னு கூப்பிடத் தெரியலைன்னாலும் அது நம்ம குழந்தை இல்லைன்னு ஆகிடாதுல்ல. அப்படித்தான் நீங்க எதிர்காலத்தை ஏத்துக்கணும். உணர்வுகளால் உங்களை விட்டு தள்ளிப் போனாங்களா? இல்லைல்ல.”

“இல்லை. ஒரு கொஞ்ச நேரம் இருப்பாங்க... அப்புறம் அவங்களுக்கு என்னைப் பார்த்தே ஆகணும்.” என்று அவனும் ஆமோதித்தான்

“சொன்னேன்ல. அவங்களோட வழக்கமான நடவடிக்கைகள், அவங்க இருக்கற இடம், சூழல் எல்லாம் அப்படியே இருக்கட்டும். வீட்டில் கூட அவசியம் இல்லாமல் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யாதீங்க. இப்போதைக்கு வழக்கங்களும் பழகிய காட்சிகளும் தான் அவங்களை சமநிலையில் வைக்கும்.”

சாஹித்யன் யோசனையில் இருக்க,

“என்ன, ஏதாவது சொல்லணுமா?” என்று கேட்டார் டாக்டர்

வர்ணியின் கதை முழுவதையும் பகிர்ந்துகொண்டவன்,

“ரெண்டு மாசம் ஆகுது. இவங்க அங்கே போறதை மறக்கவே இல்லை டாக்டர்,” என்று கேட்டான்.

லேசாய் சிரித்தவர்,

“டிமென்ஷியாவுக்கு இந்த நினைவுதான் முதலில் மறக்க வேண்டும், இந்த அறிமுகம் தாமதமாய் வந்தது, இதற்கு ஆயுள் குறைவு, ஆகவே இது ஞாபகம் இருக்கக்கூடாது என்று சட்டம் ஏதும் இல்லை. உங்க கூட இருக்கற போலவே கம்பர்ட்டபிளா தன்னோட வீடு போலவே அங்கேயும் உணர்றாங்க போலிருக்கு. இதுவும் எவ்வளவு நாளைக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது. இருக்கும் வரை அப்படியே விடுங்க. அதைத் தவிர நான் முன்னர் சொன்னது தான். பழசை ஞாபகப்படுத்துறதோ, பழசைக் கேள்வி கேட்கறதோ தேவையில்லாதது. அவங்களை இயல்பா அப்படியே விட்டுடுங்க.”

என்று வழக்கமாய் அவர் சொல்வதைச் சொல்லி முடிக்க, சாஹித்யனும் நன்றி சொல்லிவிட்டு எழுந்தான்.

“அப்புறம் சாஹித்யன், எங்ககிட்ட புதுசா ரெண்டு நர்ஸ் வந்திருக்காங்க. இப்போ கூட வெளியே போனாங்க பார்த்தீங்களே. ரெண்டு பேருமே டிமென்ஷியா நோயாளிகளை கையாளுவதற்காகவே சிறப்பு பயிற்சி எடுத்தவங்க. மருந்துகள், தினசரி ரூட்டீன், குழப்பம் வந்தா எப்படி கையாளணும், சேஃப்டி இதெல்லாம் தெரிஞ்சவங்க. உங்க கூடவே வீட்டுக்கு வந்து பார்த்துக்குவாங்க. உங்களுக்கு தேவைன்னா சொல்லுங்க. கொஞ்சம் செலவு அதிகம் தான்.”

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு சாஹித்யன் யோசனையாய் வெளியே வர, வெளியே இருந்த நர்ஸோடு அம்மா ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

அவனைக் கண்டதும் அவர் அந்தப் பெண்ணுக்குக் கையசைத்து விடைபெற்றுக்கொண்டு வர, இவனும் அந்த நர்ஸுக்கு மரியாதையாய் தலையசைத்துவிட்டு வெளியே வந்தான்.

இப்படி ஒரு பயிற்சி பெற்ற நர்ஸ் இருப்பது மனதுக்கு நிம்மதியைத் தான் தந்தது. ஆனாலும் இப்போதைக்கு அவனுக்கு அவர்கள் தேவையில்லை. அம்மாவுக்கு முடியாத நிலை, அதாவது அடிப்படைத் தேவைகளை அம்மாவால் நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை வரும்போது அழைத்துக்கொள்ளலாம் என்று அவன் நினைத்தான்.

இப்போது அவனோடு மாலுக்கு வருவது அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கிறது. ஆக, அவரால் முடிந்தவரை வரட்டுமே என்பது தான் அவன் எண்ணம். அதெல்லாம் விட, அம்மாவை இனிமேல் அனுப்ப மாட்டேன் என்று வர்ணியிடம் சொன்னால் அவள் அவனை ஊறுகாய் போட்டு விடுவாள்.

அவளை நினைக்கவே அவள் நினைவில் உதடுகளில் சிரிப்பு இழையோட, அம்மாவுக்கு சீட் பெல்ட் போட்டு விட்டவன்,

“வர்ணி கிட்ட போலாமா?” என்று கேட்டான்.

“யாரு?” என்றார் அவர் குழப்பமாய்

“உங்க டார்லிங் தான்.” என்று அவன் இன்னும் சிரிக்க

“ஆ... டார்லிங்,” என்றவர், “அவளுக்கு நாலு அடி போடு,” என்றார் முறைப்பாய்.

“அது சரி. ஏன்? என்ன பண்ணினா?”

ஏன் என்று அவருக்குத் தெரியாது. மௌனமாய் வேறேதோ சிந்தனைக்கு மாறி, அவன் காரில் ஒலிக்க விட்டிருந்த இளையராஜா பாடல்களோடு சந்தோஷமாய் கூடச் சேர்ந்து பாட ஆரம்பித்து விட்டார்.

அங்கே பரமேஸ்வரி மாலுக்குப் போனவன் காரை நிறுத்திவிட்டு அம்மாவை முன்னே விட்டுவிட்டு பின்னே நடக்க, விடுவிடுவென அவர் காபேக்குள் நேராய் போவதைக் கண்டு அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

கம்பளைண்ட் பண்ணி அவளை அடிக்க சொல்லிட்டு முதல் ஆளா அவளை தேடி போறாங்க பார்!

“என்ன மானேஜர், லேட்டா வரீங்க? நீங்க இல்லாம உங்க அசிஸ்டன்ட்டுக்கு குளிர் விட்டுப் போச்சு, என்னன்னு கேளுங்க,” என்று அவரை அங்கிருந்த கஸ்டமர்களும் சேர்ந்து கொண்டு வரவேற்றவர்கள், பின்னாலேயே உள்ளே வந்த இவனைக் கண்டு மெல்லிய சிரிப்போடு தங்கள் உணவுகளுக்குத் திரும்பிவிட, கவுண்டரில் அவனைக் கண்டைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தவளைப்பார்த்து , ஜிம்மை ஒரு தடவை எட்டிப்பார்த்துவிட்டு வருகிறேன் என்று சைகை செய்துவிட்டுப் போய்விட்டான் சாஹித்யன் .

அவன் திரும்பி வந்தபோது அவளும் அம்மாவும் ஒரு லார்ஜ் சைஸ் பீட்சாவை வைத்துக்கொண்டு அவர்களுடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்திருந்தனர்.
 

Author: Ush
Article Title: லக்கி வீடு - 15
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Ush

Well-known member
Feb 8, 2026
71
174
93
“உங்களுக்காக வெயிட் பண்ணி பீட்சா ஆறியே போச்சு.” என்று வர்ணி முயைப்பாடு செய்ய

இன்னும் ஆவி பறந்துகொண்டிருந்த பீட்சாவை ஒரு பார்வை பார்த்தவன்,

“டயட் கன்ட்ரோல்ல இருக்கறவன் இதெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா?” என்று கேட்டான்.

“ஆஹான். டெய்லி தக்காளி சாதம், வெங்காய சாதம் எல்லாம் சாப்பிடும்போது டயட் வெக்கேஷன் போயிருந்துதா?” என்று அவள் தலைசரித்து பதில் கேள்வி கேட்க

சிரித்துக்கொண்டே ஒரு துண்டை எடுத்து கடித்தவன்,

“கடை மெனுவுல பீட்சாவை சேர்க்கப் போறியா?” என்று கேட்டான்.

“எப்படித் தெரிஞ்சது?” என்று அவள் விழி விரிக்க

“சோழியன் குடுமி சும்மா ஆடுமா? வழக்கமா என்னை வச்சுத்தான் டெஸ்ட் பண்ணுவ.” என்று தோள்களை குலுக்கினான் சாஹித்தியன்

“தெரிஞ்சிருச்சா?”

அவளைப் பார்த்து அவன் இமைகளை உயர்த்த, பேசாமல் வாய்க்குள் ஒரு துண்டை அடைத்துக்கொண்டாள் அவள்.

“கொஞ்சம் காரம் பத்தலை. இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கோ. மத்தபடி நல்லா இருக்கு.” என்று அவன் ரிவியூ கொடுக்க

“ஹ்ம்ம்,” என்று தலையசைத்தவள், “கொஞ்ச நாள்ல பாருங்க, பரமேஸ்வரி மால் இந்த பீட்சாவாலேயே களை கட்டப்போகுது. உங்க ஜிம்முக்கு கூட பிசினஸ் கூடலாம்.” என்று மிதப்பாய் அவனை பார்த்து குறும்பாய் ஒரு பார்வை பார்த்தாள்

“எப்படி? பீட்சா சாப்பிட்டு வெயிட் போடப்போறதாலயா?”

சிரிப்பு மறக்க அவள் இப்போது அவனை முறைத்துப் பார்க்க, சிரித்துவிட்டவன்,

“என் ஜிம்முக்கு இப்போது வர்ற கூட்டமே போதும். நீ ஒண்ணும் பொதுச் சேவை பண்ண வேணாம். உன்னால முடிஞ்சா மட்டும் பாரு. வேற யாரையும் வேலைக்கும் வச்சுக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிற... தனியா எவ்வளவை பண்ணுவ?” என்று உண்மையிலேயே சாஹி ஆயாசமாய் தான் கேட்டான்.

பூஜா போன நாளில் இருந்து மெனு நீண்டு கொண்டே போகிறதே தவிர இவள் கடைக்கு யாரும் உதவியாளரை சேர்ப்பதாய் காணோம். மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் இவளை விட அம்மாவே தேவலாம். அவனுக்கு உண்மையிலேயே இவளால் ஸ்ட்ரெஸ் ஏறியது. பீட்சாவை மெனுவில் சேர்த்தால் அதற்காகவே ஒரு பெரிய கூட்டம் வரும். எல்லாவற்றையும் இவள் ஒருத்தியே எப்படி சமாளிப்பது?

“நான் பண்ணுவேன்.” என்று தலையை குனிந்து கொண்டே வர்ணி சொல்ல

“அப்படியென்ன வேற யாரையும் சேர்க்க மாட்டேன்னு பிடிவாதம்?” என்று கேட்டான் சாஹி அவளையே ஊன்றி பார்த்தபடி

“ப்ச்.” அவள் பதில் சொல்லவில்லை.

“நீ பண்றதெல்லாம் நல்லால்ல. அந்த ஸ்கூட்டியைக் கூட வித்துர சொல்லி கடைக்காரன் சொல்லியும் உனக்காகத்தான் பார்ட்ஸ் மாத்திக் கொண்டு வந்து விட்டேன். அப்பப்போ மாற்றம் வரும்போது ஏத்துக்கற மனசை வளர்த்துக்கணும். இல்லைன்னா ரொம்ப கஷ்டப்படுவ.” என்றான் மெதுவாய்

அவள் அமைதியாய் இருக்க அவனுக்குத்தான் மீண்டும் பாவமாகி போனது.

“என்ன?” என்று மென்மையாய் விசாரித்தான்.

“பூஜா பக்கத்துல இருந்தே எனக்குப் பழகிட்டு, சரியா? வேற யாரும் உள்ளே வர்றதை மனசு ஏத்துக்க மாட்டுது. கொஞ்ச நாள்ல சரியாயிடுவேன்.”

இருவருமே பீட்சாவை மௌனமாய் மெல்ல ஆரம்பித்திருந்தனர்.

“அம்மா வரும்போது ஒண்ணு சொன்னாங்க.” என்றான் சாஹி திடும்மென

“என்னது?” இப்போது அவளும் நிமிர்ந்து ஆர்வமாய் கேட்க

“உனக்கு நாலு அடி போடணுமாம்.” என்று சிரிக்காமல் அவன் சொல்ல

“மேனேஜர்!” என்று அவள் நெஞ்சில் கைவைத்து போலியாய் அதிர்ந்தாள் வர்ணி

“அப்படி என்ன பண்ண?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் அவன். அவனுக்கே தெரியும், சாப்பிடும்போதே அவளால் சும்மா இருக்க முடியாது. அம்மாவை எதற்கேனும் வம்பிழுத்துக்கொண்டே தான் இருப்பாள். தனியாக ஒரு காரணம் எல்லாம் இருக்க முடியாது.

நான் உங்க நொம்மாவை ஒண்ணும் பண்ணல. அவங்க என்னை பண்ணலைன்னா தான் அதிசயம்! என்று அவள் இவனை முறைத்தாள்

தலைசரித்து அவளை பார்த்தவன் “காரணம் எதுவா இருந்தாலும் அம்மா சொன்னா செய்யணும்ல.” என்றான்

“அதுக்கு?”

“ஜிம் பக்கமா வரியா?”

“என்னது?”

“நாலு அடி போட்டுட்டு அனுப்புறேன்.”

அவளின் விழிகள் விரிய,

“அடியைத் தான் சொன்னேன். நீ என்ன நினைச்ச?” என்று வாய் விட்டு சிரித்தான் சாஹித்யன்

அவனது கையில் கிள்ளியவள், கண்களால் மெதுவாய் அவர்களைக் கடைக்கண்ணால் கவனித்துச் சிரித்துக்கொண்டிருந்த கூட்டத்தைக் காண்பிக்க,

“ஐயோ, இது ஒரு தொல்லை. என் வாழ்க்கையே பன்னிரண்டு மணி சீரியல் மாதிரி போய்ட்டிருக்கு,” என்று கடுப்பானவன், “எல்லாம் இவளால,” என்று அவளை ஒரு முறைத்துவிட்டு அவசரமாய் அந்த பீட்சாவை சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்துகொண்டான்.

“சாஹி.” இப்போது அவள் தான் அவனை நிறுத்தினாள்

“ஹ்ம்ம்?”

“நாளைக்கு நான் காலைல பாங்குக்கு போகணும். நான் வர பத்தரை ஆயிடும். லக்கிம்மா பத்திரம். அவங்க பாட்டுக்கு இந்தப் பக்கம் வந்துரப் போறாங்க.”

“ஹ்ம்ம்.”

“டெய்லர் அக்கா கிட்ட நான் கடைல இல்லைன்னு சொல்லி அம்மாவை விடுங்க. இல்லைன்னா அவங்க லக்கிம்மா இங்கே தானே வர்றாங்கன்னு இருந்துருவாங்க.”

“ஹ்ம்ம்.”

“அவங்களுக்கு பத்து மணிக்கு காபி கொடுப்பேன். மறக்காம வாங்கிக் கொடுங்க. ஆர்டர் போடும்போது சுகர் இல்லைன்னு சொல்லணும்.”

“ஹ்ம்ம்.”

“என்ன, பதில் கூட சொல்லாம போறீங்க...”

சாஹி எங்கே அவள் சொன்னதை கேட்டான் அவனது கண்கள், எழுந்து நின்றபோது தெளிவாய் தெரிந்த லேசாய் டாப் விலகி மின்னலாய் தெரிந்து கொண்டிருந்த இடையை பார்த்துக்கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தவள் படக்கென்று டாப்பை இழுத்துவிட்டு அவனை முறைக்க, ரகசியச் சிரிப்போடு வெளியே போனவனுக்கு அன்றைய நாள் முழுவதும் அந்தச் சிரிப்பு உதட்டில் நிலைத்திருந்தது.

மறுநாள் வங்கியில் அவர்கள் கடைக்காக வாங்கியிருந்த லோன் மற்றும் மற்றைய விவரங்களை எல்லாம் சரிபார்த்துவிட்டு வர்ணி கடைக்கு வர நேரம் பத்தரை ஆகி இருந்தது.

வேகமாய் போகாவிட்டால் அன்றைக்குக் காலை பிசினஸ் கொஞ்சமும் இருக்காது என்று எண்ணிக்கொண்டே அவள் வேகமாய் போக, மாலின் முன்புறம் பதட்டமாய் எல்லாரும் குழுமி இருந்தார்கள்.

வர்ணிக்குள் ஏதோ ஆபத்து என்று மனதுக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்து விட்டது.

நடுவில் நின்று கொண்டிருந்த டெய்லர் அக்காவின் பதட்டமான முகத்தைப் பார்த்தே அவளுக்குள் நெஞ்சுக்குள் படபடக்க, ராக்கியை விழுத்தாத குறையாய் பார்க் செய்துவிட்டு அவர்களை நோக்கி ஓடிப்போனாள் வர்ணி.

அவள் பயந்ததே தான். லக்கியை ஒரு மணி நேரமாய் காணோமாம்.

மால் முழுக்கத் தேடிவிட்டோம். எங்கே என்றே தெரியவில்லை. டெய்லர் அக்கா கடையில் தான் இருந்தார்களாம். அக்கா ‘மெஷினில் ஒரு தடவை குனிந்துவிட்டு நிமிர்ந்தது தான் தெரியும், அவங்களை காணோம்’ என்று குற்றவுணர்வோடு இதழ்க்கடித்து நின்றுகொண்டிருக்க, யாரை நோவது என்று தெரியாமல் பதட்டமாய்,

“சாஹித்யன் எங்கே?” என்று கேட்டாள் வர்ணி.

“குமாரும் அவனும் பரமசிவன் சாரும் வெளியே தேடிப்போயிருக்காங்க,” என்று சொல்ல, இவளுக்குள் பய அலைகள் விகசித்துப் பரவ, நாமும் போகலாம் என்று எண்ணிக்கொண்டு ராக்கியை நோக்கி ஓடினாள் வர்ணி.

அவள் ராக்கியை ஸ்டார்ட் செய்துகொண்டு முன்னே வரவும்,

“லக்கிம்மா!” என்று பல குரல்கள் உற்சாகமாய் கூவும் சத்தம் கேட்க, ராக்கியை போட்டுவிட்டு வர்ணி மீண்டும் முன்னே ஓடி வந்தாள்.

அங்கே சிரிப்போடு ஒரு லாலிபாப்பை சாப்பிட்டுக்கொண்டு சுவாதீனமாய் நடந்து வந்துகொண்டிருந்தார் லக்கி.

அடப்பாவி! எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.

ஓடிப்போய் அவரைக் கட்டிக்கொண்டவள், பிறகுதான் அவரைப் பயமுறுத்தக்கூடாது என்று உறைக்க, சாதாரணமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவரை மாலின் உள்ளே அழைத்து வந்தாள்.

“வர்ணி, நீதான் அவங்களுக்கு இனிப்பே தரக்கூடாதுன்னு அடக்கி வச்சிருக்க. அதனாலதான் லக்கிம்மா வெளியே தப்பிச்சுப் போயிருக்காங்க.”

என்று எல்லாரும் வர்ணியை ஓட்ட,

“இப்போ எல்லாத்துக்கும் நான் காரணமா ஆயிட்டேன்ல? சொல்லுங்க, சொல்லுங்க, இன்னும் சொல்லுங்க,” என்று போலியாய் முகத்தைத் தூக்கி வைத்தபடி சாஹித்யனுக்குப் போன் செய்தாள் வர்ணி .

பிறகு குமார், பரமசிவனுக்கும் தகவல் செல்ல, எல்லாரும் ஆசுவாசமாகத் திரும்பி வந்துவிட்டனர்.

சாஹி இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்று அவனது உர்ர் முகமே சொல்ல, மாலை ஹாட் சாக்லேட் எடுத்துக்கொண்டு போய் அவனது டயட்டை கெடுத்து விட்டு ,

“கொஞ்ச நேரம் வர்ணி இல்லாம உங்களால சமாளிக்க முடியலல்ல. ஒத்துக்கோங்க, நான் தான் உங்க வாழ்க்கையோட முக்கியமான அங்கம்,” என்று அவனிடம் வம்பிழுத்து அவனை வழமைக்குக் கொண்டு வந்துவிட்டுத்தான் அன்றைக்கு அவள் வீட்டுக்குப் போனாள்.

இரவு ஒன்பது மணி இருக்கும்.

வழக்கம் போல ப.மு.க. குரூப்பில் யாரோ பகிர்ந்த வீடியோவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தவளுக்குப் ஒரு குறுஞ்செய்தி வந்து சேர்ந்தது.

இவன் என்ன இந்த நேரம் தனியா அனுப்புறான் என்று அதைத் திறந்து பார்த்தால்…

ஒரு புகைப்படம்.

ஒரு நிமிஷம் அதையே ஊன்றி பார்த்தவளின் விரல்கள் அனிச்சையாய் அனுப்புனருக்கு அழைத்திருந்தன .

தொடரும் . .
 
Last edited: