லக்கி வீடு - 20

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

Ush

Well-known member
Feb 8, 2026
71
174
93
இரண்டு நாட்கள் மால் பக்கமே போகவில்லை வர்ணி. வீட்டிலேயே சோபாவுக்குள் சுருண்டு கொண்டு விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

மெலிதாய் கதவு தட்டும் சத்தம் அவளது தவத்தை கலைக்க கதவை திறக்கப்போனவள் நினைத்தபடி சிட்டு தான் வெளியே நின்று கொண்டிருந்தாள்.

இந்தாங்க என்று அவள் சாவியை நீட்ட வாங்கிக்கொண்டவள்

உள்ளே வா. கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போலாம் என்று என்று அவள் சிட்டுவை அழைக்க பின்னிருந்து அவளை இடித்துக்கொண்டு உள்ளே வந்தான் குமார்

“வர்ணி ஏன்டி இப்படி இருக்க?” அவனது அதிர்ந்த விழிகள் அவளையே ஆராய

சிட்டுவின் முன்னே பேசாத என்று கண்ணை காட்டினாள் வர்ணி.

“ஆங் எனக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் நானும் கூடவே இருப்பேன்னெல்லாம் அடம்பிடிக்க மாட்டேன், சாப்பிட ஏதாவது இருக்கா பார்க்கிறேன்” என்று நொடித்துக்கொண்டு கிச்சனை நோக்கி போய் விட்டாள் சிட்டு

“அவ கிடக்குறா. நீ அழுதுட்டே இருந்தியா?? சாப்பிடலையா? கண்ணையே காணோமேடி, இப்படி வீங்கிப்போயிருக்கு” என்று அவன் கேட்கவும்

ப்ச். என்று உதட்டை சுழித்தவள் மௌனமாய் இருக்க சில கணங்கள் அவளையே பார்த்திருந்தவன்

“நான் போய் அந்தண்ணாவை நாலு கேள்வி நாக்கை புடிங்கிக்கற போல கேட்டுட்டு வரவா?” என்று கேட்டான்.

“ப்ச் சும்மா இரு வேணாம்.”

“இப்படியே சொல்லிட்டு இரு. அவர் மேலே எவ்ளோ மரியாதை வச்சிருந்தேன் தெரியுமா? இப்படி பேசிட்டு போயிருக்கார்! நேர்ல பொய் பேசக்கூடாதுனு வாயை கட்டி வச்சிருக்க.. அதுதான் நவீனை பிடிச்சு கத்தி விட்டுட்டேன்” என்று அவன் கோபமாய் சொல்ல

ஏண்டா இப்படி பண்ற..” என்று நொந்து கொண்டவளின் நாவில் கேள்விகள் முட்டி நின்றன ஆனால் கேட்கத்தான் முடியவில்லை.

“ப்ச் கஷ்டமாயிருக்குடி. அவர் பண்றதெல்லாம் நல்லாவே இல்லை. லக்கிம்மாவை மாலுக்கே கூட்டிட்டு வரல..ரெண்டு நாளா. கேர் டேக்கர் வச்சு வீட்லயே வச்சிருக்காராம். இவருக்கு ஏன் இப்படி ஒரு பிடிவாதம். அவங்க பாட்டுக்கு ஜாலியா நான்சிங்க்ல எல்லாரையும் கலாய்ச்சிட்டு சுத்திட்டிருப்பாங்க. அவங்க இல்லாம மாலே ஒரு மாதிரியா அ மைதியா இருக்கு. இவரு வேற எங்களையெல்லாம் பார்க்கறதே பாவம் என்றது போல முன்பக்கம் வர்றதே இல்லை” என்று அவன் பொரும

லக்கிம்மா வந்தாங்களா என்ற கேள்வி தானே நுனி நாவில் பாரமாய் .அதற்கு கிடைத்த விடையில் அவளது கண்ணில் மீண்டும் நீர் கட்டிக்கொண்டது.

அவரது கணவரும் சொந்தங்களும் எழுதிய திரைக்கதையை இப்போது மகன் மீள எழுதிக்கொண்டிருக்கிறான் பாவம்.

அன்றிரவு முழுக்க நினைவுகளை அடக்க க்ரைம் சீரீஸ் பார்த்துக்கொண்டிருந்தவள் அதிகாலை வரை தூங்கவே இல்லை. ஒரு உறவை வெட்டப்போகிறோம் என்று அறிவு முடிவு செய்யம் போது மனமும் ஒத்துழைத்தால் தானே அது செயல்படும்? அவ்வப்போது நினைவுகளை ஆதாரங்களை கொண்டு வந்து பரப்பி இதையா விட்டுப்போகிறாய் என்று அப்பாவியாய் கேட்கிறது!

அவன் மனதில் யாருமில்லாதவள் என்ற எண்ணம் இல்லாவிட்டால் அது கோபத்தில் வெளிவந்திருக்குமா? இருந்ததால் தானே..என் முகத்தில் விழிக்காதே என்றான். நான் அவனுக்கு இனிமேல் யாருமில்லை என்றான்.. ப்ச் நினைக்காதே மனமே நினைக்காதே..

அதற்கு மேலும் வீட்டில் இருக்க முடியாமல் காபேக்கு போனவளுக்கு குற்றஞ்சாட்டும் பார்வைகளும் அனுதாபப்பார்வைகளும் சம அளவிலேயே அவளை நோக்கி வர தலையை குனிந்து கொண்டே இருந்தவளின் கண்கள் என்ன தான் மனதில் வேண்டாம் என்று உறுதியாய் சொல்லியும் அடிக்கடி அவன் தென்பட மாட்டானா என்றே அலைபாய்ந்து கொண்டிருந்தன. அவன் இருந்த தடயமே தென்படவில்லை.

பதினொன்று நாற்பதுக்கெல்லாம் வழக்கம் போல பசியும் வந்து விட அழுகை அழுகை தான் பொங்கிப்பொங்கி வந்தது.

மனதை தடுக்க முடியாமல் பார்க்கிங் மூலையில் ஒளிந்து கொண்டு சாஹித்யன் காரை எடுத்துக்கொண்டு போவதை பார்த்துக்கொண்டே நின்றவளுக்கு எப்படி உணர்கிறாள் என்றே தெரியவில்லை.

அவனது உடல்மொழியில் முகத்திலும் அப்படி ஒரு இறுக்கம். அவளோடு பழக முன்னரான காலத்தில் கூட ஒட்டாமல் திரிந்தாலும் இயல்பாய் இருப்பான். இப்போது அப்படியே மாறிநின்றவனை பார்க்க அவளுக்கு ஏதோ புரிந்தது. விம்மி வெடித்து வந்த அழுகையை வாய்க்குள்ளேயே அடக்கிக் கொண்டவளுக்கு வர்ணியை எப்படி மீட்டெடுக்க போகிறோம் என்றே புரியவில்லை.

அன்று வேலை முடிந்ததும் மழை மெல்ல மெல்ல தூறல் போட்டு வேகமெடுக்க நனைவது கூட தெரியாமல் ராக்கியை செலுத்திக்கொண்டிருந்தவள் பூஜாவின் வீட்டுக்கு போகும் பாதைக்கு தானாகவே வந்திருந்தாள்.

தெப்பலாய் நனைந்து போய் அப்பார்ட்மெண்ட் கதவை தட்ட கதவை திறந்த பூஜா வர்ணியின் கோலத்தை கண்டு அதிர்ந்தே போய்விட்டாள்.

என்னடி இது?

பாய்ந்து அவளை கட்டிக்கொண்டு அவள் அடக்கி வைத்த அழுகையை எல்லாம் திறந்து விட என்னவென்று புரியாமல் கூட சேர்ந்து பூஜாவும் அழ வேலை முடிந்து வந்த பிரதீப் தான் இருவரையும் அதட்டி சமநிலைக்கு கொண்டு வர வேண்டியிருந்தது.

லக்கி தொலைந்து போய் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைக்கு மனோகரின் காரில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த லக்கியின் புகைப்படத்தை குமார் அவளுக்கு அனுப்பி அவரது முன்கதையை சொன்னதில் இருந்து ஆரம்பித்து கடைசியில் சாஹித்யன் வந்து அவனது குடும்பத்தில் தலையிட அவள் யார்? குடும்பம் பற்றி அவளுக்கு என்ன தெரியும் ? என்று கேட்டது வரை ஒப்பிக்க அவளை தோளில் தயங்கியபடியே அமர்ந்திருந்தாள் பூஜா,

“நம்மை பத்தி சொல்றதையெல்லாம் தலைக்குள்ளே எடுத்துக்க கூடாதுன்னு நீதானா சொல்லுவ..நீயே இப்படி அழறியேடி..” என்று பூஜா தவிப்பாய் கேட்க

“சொன்னது யாரோ இல்லையேடி. அவன் சொல்லிட்டானே ..” என்று சொல்லி முடிக்கும் முன்னரே வர்ணிக்கு கேவல் முட்டி விட்டது.

“நீ சொல்லு நீயும் நான் செஞ்சதை தானே பண்ணியிருப்ப?” அவள் ஏக்கமாய் கேட்க

“பின்னே..இந்த உப்பு சப்பில்லாத விஷயத்தை எல்லாம் பெரிய விஷயமா எடுத்து ஊதி பெருசாக்க நம்ம என்ன பத்தாம் நூற்றாண்டுலயா இருக்கோம்? சாஹி அண்ணாக்கு கோபத்துல புத்தி மழுங்கிப்போச்சு. சும்மா விடாதடி அவரை ” என்று பொங்கினாள் மற்றவள்

“எனக்கு அவன் வேணாம்” என்றாள் இவள் பதிலாய்

“சரி வேணாம்” என்று பூஜாவும் அதை ஆமோதித்தாள்

ஒரு வழியாய் வர்ணியை அமைதிப்படுத்தி வற்புறுத்தி கொஞ்சம் சாப்பிட வைத்து விட்டு இருவருமாக பால்கனியில் அமர்ந்திருக்க வர்ணி பூஜாவை திரும்பி பார்த்தாள்.

பூஜா..

ஹ்ம்ம்..

நீ அங்கே திரும்பி வந்துடுறியா?. என்னால இனிமே அங்கே இருக்க முடியும்னு தோணல,,நான் எல்லாத்தையும் மறக்கணும் பூஜா,, நீ வந்துடேன். நான் எங்கயாவது போறேன்” அவ்வளவு நேரமும் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்ததை சொல்லியே விட்டாள் வர்ணி.

அதிர்ந்து போன பூஜா “என்னடி பேசற? எவ்ளோ கஷ்டப்பட்டு டார்லிங் காபேயை ஆரம்பிச்சோம். அதை விட்டுட்டு போறேன்னு சொல்ற?” என்று கொதிக்க

“அதனால் தான் உன்னை வர சொல்லி கேட்கிறேன். ப்ளீஸ்டி. சிட்டு உன்னை ஒரு வேலை பண்ண விடாம பார்த்துப்பா..நீ வந்தா மட்டும் போதும். என்னால அங்கே ...அவனை... முடியலைடி.”. அவள் அழ ஆரம்பிக்க

வர்ணி என்றாள் பூஜாவும் தவிப்பாய்

அவளது கையை பற்றிக்கொண்டவள் “ரொம்ப கனவு கண்டுட்டேன். அதெல்லாம் இல்லைன்னு போய்டுச்சுன்னு நினைக்கும் போதே…” என்று வசனத்தை முடிக்கும் முன்பே வர்ணி உடைந்து விட்டாள்

“அந்தாளை!!!” என்று வெறியாகிப்போன பூஜா போனை எடுக்க போனை பறித்து வைத்து விட்ட வர்ணி “முடிஞ்சு போனதை கிளறி எதுவும் ஆகப்போறதில்லை. என்னோட கணிப்பு தப்பா போய்டுச்சு. இதுல இருந்து வெளியே வர எனக்கு ஹெல்ப் பண்ணு அது போதும்” என்று அவசரமாய் கண்ணை துடைத்து கொண்டாள்

அவளையே பார்த்திருந்த பூஜாவும் “வர்றேன்டி. உனக்காக நான் என்ன வேணா பண்ணுவேன். இதை செய்ய மாட்டேனா? ஆனா நீ எங்கேயும் போகக்கூடாது.” என்று அவளிடம் கேட்க

பூஜா என்றாள் வர்ணி..இவளுக்கு புரியவே இல்லையே என்றிருந்தது அவளுக்கு

“இங்க பார். நமக்கு வேறு போக்கிடம் கிடையாது. உயிரைக்கொடுத்து வேலை செய்து நாம சேர்த்த மொத்த காசும் காபேயில் தான் இருக்கு. வெளியே போனா பணத்துக்கு எங்கே போறது? அப்படி நீ எதுக்காக வெளியே போய் கஷ்டப்படணும்? தப்பு பண்ணவர் அவர். எங்க முகத்தை பார்க்க பிடிக்கலைன்னா அவர் மாலை விட்டு வெளியே போகட்டும். நம்ம அங்கே தான் இருப்போம். பிசினஸை பெருசாக்கிறோம். அதை தாங்கிக்க முடியலைன்னா அவர் போகட்டும் வெளியே!” என்று ஒரே முடிவாய் பூஜா சொன்ன பிறகு தான் வர்ணிக்கும் உறைத்தது. இருக்கும் பணமெல்லாம் காபேக்கு உள்ளேயே தான் சுழன்று கொண்டிருந்தது. வெளியே போனால் கஷ்ட ஜீவனமாக தான் இருக்கும்.

“அத்தான் ஒத்துப்பாரா?”

“இங்கே ரொம்ப தனிமையா இருக்குன்னு நாங்க பாப்பா பிறக்க முன்னாடியே அங்கே வந்துரணும்னு தான் நினைச்சிட்டு இருக்கோம். சந்தேகமா இருந்தா நீயே அவர் கிட்ட கேளு”

அரைமனதாய் தலையசைத்தாள் வர்ணி. வெளியே வந்து முதல் சோதனைக்கே உடைஞ்சு போய்ட்டா பின்னாடி வாழ்க்கையை எப்படி நடத்துவேன். என்று அவளுக்கும் தோன்றி விட்டது. அது தான் பூஜா வருகிறாளே அதுவே யானைப்பலம் வந்தது போன்ற உணர்வு அவளுக்குள்

நீ வா நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்டி” என்று அவளை அணைத்துக்கொண்டாள் வர்ணி

 

Author: Ush
Article Title: லக்கி வீடு - 20
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Ush

Well-known member
Feb 8, 2026
71
174
93
இந்தப்பக்கம் தனிமையில் சுற்றிக்கொண்டிருந்தவனோ அவனாகவே இல்லை. தன்னுடைய வாழ்க்கை திடீரென்று எல்லாம் மாயமாகி போன அதிர்ச்சி. மொத்தமாய் எல்லாவற்றையும் கவிழ்த்து கொட்டி விட்டு வந்து ஒரு வாரம் ஆகி விடப்போகிறது. கோபம், குற்ற உணர்ச்சி, அவமானம், தனிமை, ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து கொள்ள எல்லாரையும் கடித்து குதறிக்கொண்டு இருந்தான். இப்போதும் நவீனை முறைத்துக்கொண்டு தான் இருந்தான்

“உனக்கு காலேஜ் இல்லையாடா..படிக்கிறேன்னு போனவன் இங்கேயே தான் சுத்திட்டு இருக்க!” என்று சாஹி பல்லைக்கடிக்க

“அண்ணா இன்னிக்கு சனிக்கிழமை” என்றான் நவீன் பாவமாய்

“அதுக்கு?” என்று அவனை முறைத்தான் சாஹி.

“ஒரு பிரண்ட் இந்தப்பக்கமா வரவும் அவன் கூடவே வந்துட்டேன். நாளைக்கு அவன் கூடவே போய்டுவேன்” என்று சொல்ல தலையசைத்தானே தவிர ஒன்றும் சொல்ல முடியவில்லை. நான் தான் அவளை வேண்டாம் என்று விலக்கி வைத்திருக்கிறேன் என்று தெரியுதுல்ல, நீயும் பேசக்கூடாது என்று சொல்ல முடியுமா?

மால் முழுவதும் எப்படியோ விஷயம் பரவி விட்டது. பாதிப்பேர் அவளை ஆதரித்து அவனை முறைத்து விட்டு போகிறார்கள். அவனை ஆதரிப்போரும் சின்னப்புள்ளை தெரியாம விளையாட்டுத்தனமா பண்ணிருப்பா. ஆனா மனசுல எதுவும் இருக்காது. மறந்துடுப்பா. என்று சுற்றி வளைத்து அவனையே சொல்லி செல்ல அவனுக்குள் ஆத்திரமான ஆத்திரம். அவனை சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்று அவனுக்கு தான் தெரியும்.

சில கணங்கள் மௌனமாய் கழிய

“அண்ணா..அம்மாவை இங்கே கூட்டிட்டு வாங்களேன். இனிமே அங்கேலாம் அனுப்ப வேணாம். ஆனா நம்ம கூட இருந்துக்கட்டுமே” என்றான் நவீன்மெல்லிய குரலில்

நவீன்” என்று இந்த பேச்சை விடு என்பது போல எச்சரிக்கையாய் சாஹி அழைக்க

“அண்ணா கேர் டேக்கரே இருந்துக்கட்டும், ஆனா இங்கே நம்ம கூட இருந்தா சந்தோஷமா இருப்பாங்க..அங்கே வீட்டுல தனியா..பாவம்ணா” என்று சொல்லிவிட்டு எதிர்பார்ப்பாய் அவன் முகத்தையே பார்த்திருந்தான் அவன்.

“இது நிரந்தரம் இல்லைடா. சந்தோஷத்தை காட்டி காட்டி மறுபடி ஏமாத்த என்னால முடியாது. என்ன பண்ண, அவங்களுக்கு நான் மட்டும் தான் இருக்கேன். எங்களுக்கு அந்த வீடு தான் இருக்கு. அதை பழகிக்கறது நல்லது” அவனது கண்கள் தூரமாய் வெறித்தன. அன்பு காட்டி கூட இருந்து விட்டு….அவனால் அதற்கு மேல் நினைக்க முடியவில்லை.

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க. ஒரு பையனா உங்க உணர்வுகள் புரியுது. ஆனா வர்ணி செஞ்சது தப்பில்லைண்ணா” நவீன் மெல்ல சொல்ல

“தேவையில்லாத விஷயம் பேசாதேன்னு சொன்னேனா இல்லையா?” என்று எரிந்து விழுந்தான் அவன். இவனுக்கு கூட என்னை புரியலையா?

“அண்ணா வர்ணி பாவம்..”

யார் பாவம் அவளா? அவளால் பாதிக்கப்பட்ட ஜீவன்கள் நாங்கள் தான் பாவம்! அவன் பதில் பேசாமல் முறைக்க

“பேசுங்க..சரியாயிடும்” என்றான் அவன் சின்னச்சிரிப்போடு

“எதுவும் வேணாம். தேவையே இல்லாம என் வாழ்க்கையை நானே சிக்கலாக்கிட்டேன். இனிமே இதெல்லாம் எனக்கு வேணாம். இதை பத்தி பேசறது இது தான் கடைசி தடவையா இருக்கணும்” என்று சாஹி கடுமையாய் சொல்ல சில நொடிகள் நின்றவன் பிறகு சோக முகமாய் போய்விட்டான்.

“பாவமாம் பாவம் அவளே வந்தா, வாழ்க்கை முழுக்க கூட வர்றபோல இருந்தா அப்புறம் துரோகம் பண்ணிட்டு போய்ட்டா. சரி கோபம் தான் கத்திட்டேன் தான், வார்த்தை தடித்தது தான், ஆனாலும் அவனது காயம் அவளுக்கு மனதில் படவில்லையா ? எனக்கு விளக்கம் சொல்லும் கடமையே இல்லையா அவளுக்கு?”

ஒரு வாரம் இருக்கிறேனா இல்லையா என்று கூட அவள் பார்க்கவில்லை. உன்மேல் கோபப்பட அத்தனை நியாயங்களும் எனக்கு இருக்கிறது என்று உனக்கு தெரியும். இரண்டு வாரம் என் வாழ்க்கையில் நடந்த அவ்வளவு பெரிய விஷயத்தை தெரிந்து கொண்டு அதை என்னிடம் சொல்லாமல் மறைத்து அதனால் என்னவாகும் என்று யோசிக்காமல் அம்மாவுக்கு கெட்ட பெயர் வாங்கித்தந்தது அவள் தானே. என்னை ஒரு வார்த்தை கேட்கவில்லை. எனக்கு கோபம் வருவது நியாயம் தானே..தினமும் ஏதாவது ஒரு சாக்கை சொல்லிக்கொண்டு தேடி தேடி பின்னாலேயே வருபவளுக்கு என் மனம் எப்படி உடைந்து போயிருக்கும் என்று தெரிந்தும் தேட மனதில்லை.

என்னை விடு அவள் தான் என்னை ஒரு மனுஷனாகவே மதிக்கலையே.. இழுத்துக்கொண்டு போய் பிரச்சனையில் மாட்டி விட்டாளே அந்த அம்மா என்ன செய்கிறார் நல்லா இருக்காரா என்று கூட கேட்க தோன்றவில்லையே அவளுக்கு. ரெண்டு நாள் இந்த பக்கமே வரவில்லை. மூன்றாவது நாள் வந்தாள். என்னதான் அந்த பக்கம் தலைவைத்து படுக்காவிட்டாலும் அந்த ஓட்டை ஸ்கூட்டி கண்ணில் படாமல் போகுமா? வந்தவள் இந்தப்பக்கம் எட்டியும் பார்க்கவில்லை.

அவளை கண்ணில் படாதே..நீ வேண்டாம் என்று பேசியவன் நான் தான் என்று மறந்து போய் மனதில் அவளோடு சண்டை போட்டுக்கொண்டே இருந்தான் சாஹித்யன். நமக்கு தான் வேண்டாம் என்று வெட்டிவிட்டோம், அவளாய் வந்து பேசினால் கூட பழைய கதையை மீள எழுதும் எண்ணம் அவனுக்கு கொஞ்சம் கூட இல்லை. அப்படியிருக்க ஏன் அவளையே நினைத்து திட்டிக்கொண்டு இருக்கிறோம் என்று அவனுக்கே புரியவில்லை.

“சாஹி உன்னை பார்க்க ஒருத்தர் வந்திருக்கார் உன் மாமாவாம்” என்று பிரேம் வந்து சொல்லவும்

எவன் அவன் என்று நிமிர்ந்தவன் உள்ளே வந்தவரை பார்த்து பல்லை கடித்தான் வந்தவர் வாய் திறக்கும் முன்னரே அவர் சொல்லப்போகும் செய்தி அவனுக்கு புரிந்து விட்டது.

அவன் ஏறெடுத்து பார்த்ததையே வரவேற்பாய் எடுத்துக்கொண்டு “என்னப்பா தம்பி பரமேசன் என்னென்னமோ சொல்லிட்டு போறான். இதெல்லாம் அசிங்கம் இல்லையா?” என்றார் எடுத்த எடுப்பிலேயே வந்தவர். இந்த வாரம் இப்படி எத்தனை கேட்டு விட்டான்!

“அதுக்கு?” என்று கேட்டவனின் குரல் வெடிக்கப்போகும் குண்டின் அறிகுறியில் இருந்தது.

அவருக்கு அது புரியவில்லை. “அம்மாவை நர்ஸ் எல்லாம் வச்சு பார்க்கிறியாமே எவ்ளோ காசு செலவாகும்? என் தங்கையோட இரண்டாவது பொண்ணு, நல்லா புடிச்சிருக்கா. பேசாம அவளை கல்யாணம் பண்ணிக்கோ.நர்செல்லாம் தேவையில்லை. நம்ம புள்ளை ஜாக்கிரதையா பார்த்துப்பா. பேசவா?”

“வெளியே போங்க” என்று வார்த்தைகளை கடித்து துப்பியவனை அதிர்வாய் பார்த்தார் அவர்.

“தம்பி என்னப்பா”

“பிரேம்..” என்று கத்தியவன் “இனி என் சொந்தம் பந்தம்னு சொல்லிட்டு எவன் வந்தாலும் வாசலோட அடிச்சு துரத்து” என்று சொல்லிவிட

நம்ம வீட்டு புள்ளை தனியா கஷ்டப்படறியேன்னு வந்தேன். நல்ல மரியாதை கொடுக்கறப்பா” என்று கொண்டு அவர் கோபமாய் எழுந்து போய்விட

தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டான் சாஹி. அப்போது தான் முழங்கை பட்டு மொபைல் ஸ்க்ரீன் உயிர்க்க வர்ணியின் சிரிப்பு திரையில் ஒளிர்ந்தது.

இப்போ மொத்த கோபமும் அவள் மேலே குவிய அதையே முறைத்துக்கொண்டிருந்தவனுக்கு இத்தனை அவமானமும் இவளால் தானே. போதுமா? நாங்கள் படும் அவமானம் எல்லாம் உனக்கு போதுமா என்று அவளை உலுக்க வேண்டும் போலிருந்தது.

வேண்டாம் என்று வெட்டி விட்டிருந்தது மறக்க வாட்சாப்பை திறந்து “என்கிட்ட உனக்கு எந்த கடமையும் இல்லைல்ல?” என்று டைப் செய்து அனுப்பியவன் அதற்கு பிறகு தான் கவனித்தான் குறுஞ்செய்தி போகவும் இல்லை. அவளுடைய புகைப்படமும் இல்லை. பிளாக் செய்து விட்டாள்.

கோபம் உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்தது அவனுக்கு.

இவளால் ஊர் முழுக்க அசிங்கப்பட்டது நான். கேவலமான பெயரை சுமப்பது என் அம்மா. ஆனால் போனை பிளாக் செய்வதும், துக்கம் கொண்டாடுவதும் எல்லாராலும் தங்கப்படுவதும் அவள். இன்றைக்கு நேரிலேயே பொய் அவளை கேள்வி கேட்காவிட்டால் மனது ஆறாது” என்று கருவிக்கொண்டு பிரேமிடம் சொல்லிக்கொள்ள கூட இல்லாமல் வர்ணியின் வீட்டுக்கு போனவன் எதிரே வந்த நித்யா அவனை முறைத்துக்கொண்டு கடக்க வெறியாகிப்போனான்.

கதவை பட் பட்டென்று தட்ட

கதவு திறக்கப்பட்டது, ஆனால் திறந்தது வர்ணி இல்லை. பிரதீப்!

இவன் ஏன் இங்கே வந்தான்? இவனிடம் இப்போது என்ன சொல்ல? வர்ணியை பார்க்க வந்தேன் என்று எப்படி சொல்ல முடியும்..அவன் பார்க்க வரவில்லையே..சண்டை போடவல்லவா வந்தான்? அதனால் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே முறைத்தபடி நிற்க

“வர்ணி தூங்கிட்டிருக்கா. இப்போதைக்கு நீங்க அவ கிட்ட பேச முயற்சி பண்ணாதீங்க. அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. சாரிண்ணா” என்று படபடவென சொல்லிவிட்டு இவனது பதிலுக்கு கூட காத்திராமல் அவன் கதவை பூட்டிக்கொள்ள தன் முகத்துக்கு நேரே கதவு சாத்தப்படத்தில் சாஹிக்கு உடலே பற்றிக்கொண்டு எரிந்தது.

அன்னிக்கு அடிச்சதுக்கு இன்னிக்கு பழி வாங்குறான்.

மகாராணி எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு அவங்க பீல் பண்ணிட்டு தூங்கறாங்களா? என்னை சொல்லணும் எதுக்கு வந்தேன்..இனிமேல் நீ இருக்கும் திசையில் தலை வைத்தே படுக்க மாட்டேன் என்று தன்னையே திட்டிக்கொண்டு வீட்டுக்கு போக கேர்டேக்கரோடு வெளியே பெஞ்சில் உட்கார்ந்திருந்தார் லக்கி.

பார்வை எங்கோ பதிந்திருக்க கேர் டேக்கரின் பேச்சுக்கு அனிச்சையாய் உதடசைத்து கொண்டிருந்தவரில் அவனது பார்வை சற்றே அதிகமாகவே பட்டு மீண்டது.

 

Mano Ramesh

Member
May 28, 2026
36
28
18
அநியாயம் பண்றான் இவன். இதுல எல்லாரும் அவளுக்கு support னு feeling வேற.
பூஜா on point. வர்ணி பிளாக் பண்ணிவிட்டது தான் கரெக்ட். குமார் கு எல்லாம் தெரிஞ்ச கதை இவனுக்கு எப்படி தெரியல. பிரதீப் பழிவாங்கல உன்னைய காப்பாத்தி இருக்கான் பூஜா வந்து இருந்தா காலி பண்ணி இருப்பா
 
Last edited:

Chitra ganesan

Active member
Aug 3, 2024
92
-13
43
சாஹி ரொம்ப ஓவரா போறியேடா..பின்னாடி இதெல்லாம் திருப்பி அடிக்குமே.. வர்ணி அடிப்பாளேன்னு நினைச்சேன்😁