21/3/2026--Day 4

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
587
-2,639
93
வணக்கம் டியர்ஸ்,



இன்னிக்கு நாலாவது நாள்! எங்க போகிறோம்னு கெஸ் பண்ணீங்களா? சிலர் சரியா சொன்னீங்க! நாங்க போனது திருச்சிக்கு! அங்க முக்கியமானக் கோயில்லாம் ஏற்கனவே பார்த்துட்டேன். ஆனா ஜம்புகேஸ்வர் இன்னும் பார்க்கல! நம்ம ஹூரோ பேர் ஜம்பு இல்லையா கீச் கீச் கதைல! அதான் அந்த க்ளூ குடுத்தேன்.

ப்ளான்படி காலைலயே கிளம்பியாச்சு. போற வழில ப்ரேக்பஸ்ட் சாப்பிடலாம்னு பேசிக்கிட்டோம்! கும்பகோணம் டூ திருச்சி, ட்ரைவர் என்னவோ கொஞ்சம் உள் பாதை வெளி பாதைன்னு போனாரு! கண்ணுல ஹோட்டல் எதுவும் படல. பசி வேற! ஒரு பாதைல தாபா மாதிரி ஒரு ஹோட்டல். ட்ரைவர் தாண்டிட்டாரு அதை, திருச்சில போய் சாப்பிட்டுக்கலாம்னு! தங்கமலர் இங்கயே போலாம்னு சொல்லிட்டாங்க! ஹோட்டல் பேர் என்னன்னா செந்தோசா ஹோட்டல். சிங்கப்பூர்ல இருக்கு செந்தோசா! மெர்லையன் படம்லாம் போட்டிருந்தது. பேக்கரி ஐட்டங்களும் அடுக்கி வச்சிருந்தாங்க. நான் எப்பொழுதும் போல இட்லித்தான். ஆம்லேட் வேணுமான்னு கேட்டாங்க, சாமிய பார்க்கப் போறோம் வேணாம்னு சொல்லிட்டேன்! எவ்ளோ பக்தி பாருங்க! அவ்வ்வ்!

திருச்சில நாங்க ப்ளான்ல போட்டு வச்சிருந்தது கரிகாலன் கட்டிய கல்லணை, ஜம்புகேஸ்வர் ரெண்டும்தான். டைம் இருந்தா இரங்கநாதர் அண்ட் மலைக்கோட்டை. ஏன்னா இது ரெண்டும் ஏற்கனவே நான் போயிருக்கேன். ரங்கநாதர பார்க்காட்டி கூட பரவால்ல, ஜம்புவ பார்க்கனும்னு சொல்லிட்டே வரேன் நான். கல்லணை ஆரம்பத்துல எங்கள இறக்கி விட்டுட்டு, பார்த்துட்டே நடந்து வாங்கன்னு சொல்லிட்டு ட்ரைவர் இன்னொரு எண்டுக்கு போய்ட்டாரு! நாங்க போன நேரம் வெயில் மெல்ல கொளுத்த ஆரம்பிக்குது! காவிரில தண்ணி இருந்தது. அளவுக்கதிகமானு சொல்ல முடியாது! ஓரளவுக்கு இருந்தது. மணிமண்டபம் கூட இருக்கு! ஆனா பத்து மணிக்குத்தான் திறப்பாங்கன்னு சொல்லவும், நாங்க 2000 வருஷங்களுக்கு முன்ன கட்டப்பட்ட இந்தப் பேரதிசயத்த பார்த்தபடியும், போட்டோ எடுத்தபடியும் நடந்தோம். ஒரு வாவ் ஃபீல்தான்.

கல்லணை பாதி வந்ததும் கீழ ஒரு இராமர் கோயில் இருக்கு! மோலோட்டமா பார்த்தா தெரியாது! கீழ யாரையும் விடுவாங்களான்னும் எனக்குத் தெரியல. நாங்க நடக்கறப்ப, ஒருத்தர் கீழ இருந்து ஏறி வந்தாரு! மேல வந்து அந்த கேட்ட சாத்திட்டுப் போய்ட்டாரு! நாங்களும் அது வழியா கீழ இறங்கி லேசா எட்டிப் பார்த்தோம்! நல்ல நீர் வரத்து இருக்கறப்ப அந்தக் கோயில அபிசேகம் பண்ணிட்டே போகும் போல தண்ணி! வழுக்கிடுமோன்னு நான் கோயில் பக்கம் போகல! படிக்கட்டுலயே நின்னு அந்த இடத்த ரசிச்சிட்டு வந்துட்டேன்.(ரிஸ்க்கான இடம்தான்! சோ போகலாமா இல்லையான்னு தெரிஞ்சுக்கிட்டு போங்க! ப்ளீஸ்).

வெயில்ல அந்தப் பக்கம் நடந்து வந்துட்டோம்! அங்க சில கடைகள் போட்டிருதாங்க! நாங்க இளநீர் வாங்கிக் குடிச்சிட்டு கோயில் பார்க்கக் கிளம்பிட்டோம்! ட்ரைவர் நாங்க சொன்னத என்ன புரிஞ்சுக்கிட்டாருன்னு தெரில! இரங்கநாதர் கோயில்ல இறக்கி விட்டுட்டாரு! இங்க முதல்ல பாருங்க, பிறகு ஜம்புவ பார்க்கலாம்னு. சரி நம்ம இரங்கன் என்னைக் கூப்பிடறாரு போலன்னு உள்ள போயாச்சு! யம்மா சாமியோய்! என்ன கூட்டம்டா! அவ்வ்வ்! நகர்ந்திடும்னு ஒரு நம்பிக்கைல போய் கூட்டத்துல அலை மோதி நின்னாச்சு! இன்னும் டிக்கட் கவுண்ட்டர் போகற முன்னாடியே கூட்டம்! தங்கமலருக்கு நிக்க முடியல! நான் வரல, நீ போய்ட்டு வரியான்னு கேட்டாங்க! சரின்னு சொல்லிட்டு, நான் வரிசைல நின்னேன்! வேர்த்து ஊத்துது! என் பின்னாடி வந்து பொண்ணு பொலம்பிட்டே வரா! நான் வரலன்னு சொன்னேன்! இப்படி கூட்டத்துல கொண்டு வந்து நிப்பாட்டிட்டீங்கன்னு! என் மைண்ட் வாய்ஸ்,”ஜம்புவ பார்த்தா போதும்! இரங்கநாதரா நான் ஏற்கனவே பார்த்துட்டேன்னு பேச்சாடி பேசன! அதான் உன்னை வர வச்சி, வச்சி செய்யறாரு!” அப்படின்னு! மனசுக்குள்ளயே அவர்ட்ட மன்னிப்பு கேக்கறேன்! என்னை மன்னிச்சிடுங்க! பார்க்க வேணாம்னு நெனைக்கல, அதான் பார்த்துட்டோமே ஏற்கனவேன்னு நெனைச்சேன் அப்படின்னு அவர் கிட்ட மனசுக்குள்ளேயே சமாதானப் பேச்சு வார்த்தை நடத்திட்டு இருந்தேன். கூட்டம் நகரவே இல்ல! லஞ்சுக்கு டிக்கட் குடுக்கறத நிறுத்திருவாங்க போல! அப்புறம் கியூலயே ஓப்பன் பண்ணற வரை நிக்கனுமோன்னு கிலி பிடிச்சிருச்சு! கொஞ்சம் நகர ஆரம்பிச்சதும், டம்ளர்ல மோர் குடுத்தாங்க! அதை வாங்கிக் குடிச்சிக்கிட்டேன்! கொஞ்சம் பெட்டரா ஃபீலாச்சு.

ஒரு வழியா 100 ரூபா டிக்கட் வாங்கிட்டேன். கியூவும் ஆமை வேகத்துல நகருது! அப்புறம் திடீர்னு வேகமா நகர்ந்தது கியூ! கரேக்டா என் டர்ன் வந்ததும் படார்னு, கேட்டை சாத்திட்டாங்க! சார், சார்னு நான் கெஞ்சறேன்! விடலியே! பாவமா போச்சு என்னைப் பார்த்து எனக்கே! லஞ்சுக்கு சாத்திட்டாங்க போலன்னு, சோகமா நிக்கறேன்! ஒரு அரை மணி நேரத்துல ஓப்பன் பண்ணாங்க! அப்புறம் என்ன குடுகுடுன்னு ஓடு! ஆனா அங்க நின்னப்ப நான் கவனிச்சது என்னன்னா, குழந்தைகளோட இருக்கற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் இவங்களையும், விஐபிகள விடற வழில விடறாங்க! எங்க போய் யார இதுக்கு கேக்கனும்னு தெரியல! அந்த கேட்டகரில உள்ளவங்க விசாரிச்சு பாருங்க!

என் கேட் திறந்ததும் மின்னல் வேகம்தான். எனக்கு முன்னாடி பல தெலுங்கர்கள். ஏலு கொண்டலவாடா கோவிந்தா! கோவிந்தான்னு சத்தம். இது கோவிந்தா இல்லைன்னு யாரோ சொல்ல, எல்லாமே அவர்தான்னு யாரோ பதில் குடுக்கன்னு, எனக்கு ஒரே சிரிப்பு! யப்பா இரங்கநாதா, என்னை நாலு மணி வரைக்கும் காக்க வைக்காம, இப்பவே கூப்புட்டுட்டியேன்னு மனசுல அவருக்கு நன்றி சொல்லிட்டே அலை மோதுற கூட்டத்தோட, அசைஞ்சு போனேன். அவ்ளோ நேரம் நின்னதுக்கு, நல்லா அவர் முகத்த பார்த்தேன்! மனசுல உள்ளத ஒன்னுமே அவர்ட்ட சொல்லல, அதுக்குள்ள நகரும்மான்னு தள்ளிட்டாங்க! மைண்ட் யூ! இங்கயும் திருப்பதி மாதிரி ஆகிடுச்சு! எப்பவும் இப்படித்தானா இல்லை நான் போயிருந்த டைம்ல மட்டும் இப்படியான்னு தெரில! தெரிஞ்சவங்க வந்து கமேண்ட்ல சொல்லுங்க! செக்குரிட்டிலாம் ரெண்டுப் பக்கமும் நின்னு, விநாடிகள் கூட நமக்குக் குடுக்காம அனுப்பிடறாங்க! அவர் முகத்த பார்த்ததே போதும்னு திருப்தியோட வந்துட்டேன்!

வேர்த்து வழிஞ்சு வெளிய வந்து, தங்கமலர தேடி சேர்ந்து, ரெண்டு பேரும் தண்ணி தண்ணின்னு அங்கிருந்த வாட்டர் டிஸ்பென்சர்ல தண்ணிப் புடிச்சு குடிச்சிட்டு அப்பாடான்னு மூச்சு விட்டோம். ஆயிரங்கால் மண்டபம் பார்க்கனும்னு அங்கிங்க விசாரிச்சு அந்த இடத்துக்குப் போனோம்! என்னமோ ஒரு நாள்தான் அந்த இடத்த திறப்பாங்களாமே! நான் மறந்துட்டேன் எந்த நாள அவங்க சொன்னாங்கன்னு! அங்க போய் வெளிய இருந்தே சில போட்டோ எடுத்துட்டு கோயில விட்டு வந்தோம். கடை வரிசைல கொடுக்காப்புளி வித்தாங்க! நான் அதை டேஸ்ட் பண்ணதில்லைன்னு தங்கமலர் கொஞ்சம் வாங்கனாங்க! பக்கத்துலயே இருந்த இன்னொரு கடைல லெமன் சோடா வாங்கிக் குடிக்கவும்தான் தாகமே அடங்குச்சி!

பிறகு ட்ரைவர் வந்ததும், ஜம்புவ பார்க்கப் போலாம்னு சொன்னா, இந்நேரம் நடை சாத்திருப்பாங்களேன்னு சொல்றாரு! வந்தது பாரு கோபம்!!! நாங்க பார்த்தே ஆகனும்னு சொன்னதுல, சரி வாங்க போய் விசாரிக்கலாம்னு கூப்பிட்டுப் போனாரு! திருச்சில சனி, ஞாயிறு நடை சாத்த மாட்டாங்களாம்! அபிசேகம், அலங்காரத்துக்கு மட்டும் படுதா போட்டு ஓன் ஹவர் மூடிருப்பாங்களாம் சந்நிதானத்த! இப்படித்தான் சொல்லிக்கிட்டாங்க! எதுக்கும் விசாரிச்சிக்குங்க!

கோயில் திறந்திருக்குன்னு தெரியவும்தான் அப்பாடான்னு இருந்தது! ஸ்லிப்பர் வைக்கற இடத்துல அதை கழட்டிப் போட்டுட்டு கோயில் உள்ள ஓடறதுக்குள்ள கால் பொத்துப் போச்சி! அவ்ளோ வெயில். என்னைப் பார்க்க முதல்ல வராம, இரங்கநாதர போய் பார்த்தியான்னு ஜம்பு கோச்சிட்டாரு போல!! கால் சூடு தாங்கவே முடியல! அந்த டைம்லயும் கூட்டம்தான். டிக்கட் கவுண்டர் எங்கன்னு விசாரிச்சப்ப, லன்ச்சுக்கு மூடிட்டாங்கன்னு சொன்னாரு ஒருத்தரு!! ஃப்ரீ கியூலத்தான் போகனும்! ஆனா அங்க ஆள் அவ்ளோ பேர் வரிசைக் கட்டி நிக்கறாங்க! நாங்க முழிக்கறத பார்த்துட்டு, உள்ள போக சங்கிலிய திறந்து விட்டாரு அவரு! நெஜமா ஒரே ஷாக்! அவர் கையில கொஞ்சம் குடுத்துட்டு, ஓடிப் போய் ஜம்புகேஸ்வரர கண் குளிர பார்த்துட்டு வந்தோம்! அந்தக் கோயில்ல சிற்பங்கள் எல்லாம் த்ரீ டீ(3D) கணக்கா இருக்குமாம்! கல் தூண்ல செதுக்கிருந்த சிற்பங்கள் எல்லாம் உண்மையாலுமே அபாரம். நான் அதையெல்லாம் கொஞ்சம் பார்த்துட்டு, அம்மனையும் போய் தரிசனம் பண்ணிட்டு வந்தேன். அம்மன் சந்நிதில இருந்து வரப்ப, குபேர லிங்கம் இந்த வழின்னு போட்டிருந்தாங்க! அட! வந்ததே வந்தோம்! அவரையும் போய் கும்பிட்டுரலாம்னு, பாதத்த சுட்டுப் பொசுக்கற வெயில்ல, ஓடி, நடந்து, ஆடின்னு எப்படியோ போய் தரிசிச்சிட்டேன்!

அந்தக் கோயில்ல இருந்து வெளிய வரப்பத்தான் பசியே தெரிஞ்சது! ட்ரைவர் ஒரு கடைல கொண்டு போய் நிறுத்தனாரு! மீல்ஸ் மட்டும்தான் இருந்தது! சாப்பிட்டதும் எங்கள கொண்டு போய் ஹோட்டல்ல விட்டுட்டு ட்ரைவர் கும்பகோணம் கிளம்பிட்டாரு! இனி நாங்களே பார்த்துக்கனும் ட்ரான்ஸ்போர்ட்லாம்!

ஹொட்டல் ஆனந்த்! டீசண்டா இருந்தது. கீழயே ரெஸ்டாரண்ட் இருந்தது! ரூம்ல மெனு கார்ட் வச்சிருந்தாங்க! சும்மா திருப்பிப் பார்க்கறப்ப கசாட்டா போட்டிருந்தது! ரமணிம்மா கதைல படிச்சிருக்கேன்! சாப்பிட்டது இல்லை! வேணுமான்னு தங்கமலர் கேட்டாங்க! தலைய வேகமா ஆட்டிட்டேன்! ரூம் சர்வீஸ்ல ஐஸ்க்ரீம் ஆர்டர் செஞ்சு சாப்பிட்ட ஆட்கள் நாங்களாத்தான் இருப்போம்!! கசாட்டா செம்மப்பா!

ஈவ்னிங் உச்சிப் பிள்ளையார் பார்க்கப் கிளம்பனோம். நான் சொன்னேன், கால் வலிக்குது! முடிஞ்சா ஏறுவேன்! இல்லைனா கீழயே கும்பிட்டுட்டு வந்துடலாம்னு! ஏற்கனவே நம்ம புள்ளையார நான் பார்த்திருக்கேனே! ஷூ போட போன இடத்துல, எத்தனைப் படின்னு தங்கமலர் விசாரிச்சாங்க! சும்மா ஜாலியா பேசிட்டே போய்ட்டு வாங்கன்னு அவர் சொல்ல, சரின்னு மெல்ல ஏறனோம். தாயுமானவர் கிட்ட போய்ட்டு, இதோட நிறுத்திக்கலாமான்னு ஒரு எண்ணம்! பிறகு, இவ்ளோ ஏறிட்டோம் இன்னும் கொஞ்சம்தானேன்னு மனச சமாதானம் பண்ணி ஏறிட்டேன்! மெது மெதுவாத்தான் ஏறுனேன்! ஆனா ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணேன்! என் முன்னாடி ஒரு வடநாட்டுக் குடும்பம்! அந்த மனுஷன், போன குடுத்து எங்கள போட்டோ புடிங்கன்னு ரிக்வேஸ்ட்! எங்க??? நடு படில!!! அதையும் புடிச்சுக் குடுத்துட்டு நிறைவா பிள்ளையார பார்த்துக் கும்பிட்டுட்டு கீழ இறங்கிட்டேன்! ஷூ போட்டுக்கிட்டு அவர் சஜஸ்ட் பண்ண டீ கடைல போய் ஒரு டீ குடிச்சிட்டு, ஹோட்டலுக்கு போய்ட்டோம்! அங்க கீழ இருந்த ரெஸ்டாரண்ட்லயே டின்னர் சாப்பிட்டோம்! பன் பட்டர் பரோட்டான்னு வெய்ட்டர் சஜஸ்ட் பண்ணாரு! ஓ வாவ்!! வாய்ல கரையுது போங்க! ரசிச்சு சாப்பிட்டேன்! ரெஸ்டாரண்ட் பேரு சங்கீதான்னு நெனைக்கறேன்! ஹோட்டல் ஆனந்த் கீழயே இருக்கும்.

படுக்கற முன்ன கால்ல தைலத்த தேய்ச்சிட்டு படுத்தாச்சு! அன்றைய தினம் ரொம்ப டயர்ட்டாகிட்டாலும், என்னமோ மனசு மட்டும் நிறைஞ்சு இருந்தது!

அடுத்த நாள் எங்களுக்கு வந்தே பாரத்ல பயணம்! எங்கன்னு கெஸ் பண்ணுங்க?? அறுபடை வீடுல ஒன்னு இருக்கற இடம்! அது மட்டும்தான் க்ளூ!


இதோட அடுத்த அப்டேட்ல பார்க்கலாம் டியர்ஸ்!!
 

Author: VanishaAdmin
Article Title: 21/3/2026--Day 4
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Thani

Thani

Active member
Nov 27, 2025
78
-60
43
சாமியை பாக்கணும் என்றால் நமக்கு ஒரு தையிரயம் வந்திடும் ஜி😀அதான் அத்தனை படிகளையும் தாண்டி போய் தரிசனம் பண்ணீங்க❤️
இரண்டு கண் பாத்தாது ஜி இவங்களை பாக்க😀🙏