Jagam Nee--EPI 1

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
WhatsApp Image 2026-06-26 at 1.31.57 PM.jpeg

அத்தியாயம் 1




அடிக்குது பாரு வெயிலு

அடி நீதான்டி என் குயிலு!!!




பஞ்சு பொதிகளைப் போல வெள்ளையாய், அழகாய் தெரிந்த மேகக் கூட்டங்களை கண் கொட்டாமல் பார்த்தபடி வந்தான் சரவணப்பாண்டியன். அந்த இருபத்தி இரண்டு வயது இளைஞனுக்கு இதுதான் முதல் விமானப் பயணம். எதிர்காலத்தை நினைத்து இதயம் திக் திக்கென அடித்துக் கொண்டாலும், ஜன்னல் ஊடே தெரிந்த மேகக் கூட்டங்களை இவன் பிள்ளை மனம் ரசிக்கத் தவறவில்லை.

“மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே!!!” என இவன் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

விமானம் தரை இறங்கப் போகிறது என அறிவிப்பு வரவும், அது வரை கழட்டி விட்டிருந்த சீட் பெல்ட்டை அணிய சொல்லி விமானப் பணிப் பெண்கள் வலியுறுத்த ஆரம்பித்தார்கள். கை அதன் பாட்டிற்கு பெல்ட்டை போட்டுக் கொண்டாலும், என்னவோ பாராங்கல்லைக் கொண்டு நெஞ்சை அழுத்தியது போல பாரம் ஏறிக் கொண்டது இதயத்தில்.

“ஐயா கருப்புசாமி! உன் மேல பாரத்தப் போட்டுட்டுத்தான் இந்த நாட்டுக்குள்ள காலெடுத்து வைக்கிறேன்! எல்லாம் நல்லா நடக்கனும்யா” என மனமுருக வேண்டிக் கொண்டான்.

கருப்பு இவனுக்கு செவி சாய்ப்பாரா??

விமானம் கீழே இறங்கத் துவங்க, காதடைத்தது இவனுக்கு! ஊரில் ஒருத்தர் சொல்லி இருந்தது போல, பெரிதாக வாயைத் திறந்து, இடமும் வலமும் கீழ் தாடையை அசைத்து காது வலியைப் பொறுத்துக் கொண்டான் சரவணப்பாண்டியன்.

ஒரு வழியாக விமானம் தரை இறங்கி நிற்க, எல்லோரும் அவசர அவசரமாக ஹேண்ட் லக்கேஜை எடுக்க ஆரம்பித்தார்கள். இவனும் எழுந்து நின்று தனது பேக்கைத் தூக்கிக் கொண்டான். மற்றவர்கள் முன்னே நடக்க, அவர்களைப் பின் தொடர்ந்து இவனும் வேக வேகமாக நடந்தான். பார்மாலிட்டி எல்லாம் முடித்து, லக்கேஜ் பேக்கையும் எடுத்துக் கொண்டு இவன் வெளியே வர, ஜே.எம் மேன்பவர்(J.M Manpower) எனும் அட்டையைத் தாங்கிக் கொண்டு ஒரு தமிழர் அங்கே நின்றிருந்தார்.

இவனது ஏஜண்ட் சொல்லி இருந்தது போல, அந்த அட்டையைத் தாங்கி நின்றவர் அருகே போய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, கையில் இருந்த லெட்டரை நீட்டினான்.

“சரவணப்பாண்டியனா? சரி, பக்கத்துலயே நில்லு! இன்னும் ஏழு பேரு வர வேண்டி இருக்கு” என்றார் அவர்.

பேச்சில் அலட்சியம் தெறித்தது. அமைதியாக அருகில் நின்றுக் கொண்டான் சரவணப்பாண்டியன். பல வகையானக் கடைகள், நடமாடிக் கொண்டிருந்த பல இனத்து மக்கள், காதில் கேட்ட கலவையான மொழிகள் என வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றான் இவன்.

அது மலேசியாவின் கே.எல்.ஐ.ஏ விமான நிலையம். தமிழ்நாட்டின் மதுரை மாநகரில் இருந்து மலேசிய நாட்டுக்கு வேலைக்காக வந்திருந்தான் சரவணப்பாண்டியன். நெடு நெடு உயரம், மாநிறம், ஒல்லி உடல்வாகு, மதுரைக்காரன்டா என மார்த்தட்டி சொல்லும் முறுக்கு மீசை, அலை அலையாய் புரளும் கேசம் எனப் பார்க்க நன்றாகவே இருப்பான் இவன். இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருக்கும் போதே குடும்பத்தில் நடந்த அசம்பாவிதத்தால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். ஆட்டோமோபைல் கம்பெனி ஒன்றில் வேலைப் பார்த்துக் கொண்டே பணம் சேமித்தவன், ஒரு தொகை வந்ததும், அதை ஏஜெண்டிடம் கொடுத்து வெளிநாட்டு வேலைக்குக் கேட்டிருந்தான். இப்பொழுது மலேசியாவுக்கு மட்டும் ஆள் அனுப்புகிறோம் என அவர் சொல்ல, எங்கானாலும் பரவாயில்லை. பணம் அதிகம் சம்பாதித்தால் போதும் எனும் எண்ணத்தில் ஒத்துக் கொண்டு இங்கே வந்திருந்தான்.

என்ன மாதிரி வேலை, எங்கே அனுப்புவார்கள், எங்கே தங்குவது எல்லாம் மலேசியாவுக்கு போய்தான் தெரியும் என ஏஜெண்ட் சொல்லி விட, ஒரே கலக்கமாக இருந்தது இவனுக்கு. பெயர் பலகையைப் பார்க்கும் வரை, எங்கே வேலை எனச் சொல்லி ஏமாற்றி அயல் நாட்டில் பரதேசியாய் நிற்க வைத்து விடுவார்களோ எனும் பயம் இருந்து கொண்டே இருந்தது. இப்பொழுது மனம் கொஞ்சம் சமன்பட, இதற்கு மேல் ஏதானாலும் சமாளிப்போம் எனத் தோன்றி விட்டது! இத்தனைக் காலம் எல்லாவற்றையும் கடந்து வரவில்லையா என மனதைத் தேற்றிக் கொண்டு, நிமிர்வாய் நின்றிருந்தான் சரவணன். இந்த நிமிர்வு, தெளிவு எல்லாம் இன்னும் கொஞ்ச நாளிலேயே காணாமல் போகப் போகிறது என அவனிடம் யார் போய் சொல்வது!

இவனது விமானத்தில் பயணப்பட்ட இன்னும் சிலரும் வந்து சேர, சரவணனின் மலேசிய வாழ்க்கைப் பயணம் ஆரம்பித்தது. எல்லோரையும் ஒரே வேனில் கோழி அடைப்பதை போல அடைத்து ஓரிடத்துக்கு அழைத்துப் போனார் அந்த மனிதர். அது ஒரு கடை வளாகம். சைடில் படி இருக்க, அதில் ஏறி மேலே போனார்கள். அங்கே ஒரு அலுவலகம் இருந்தது.

மலாய் பெண்ணொருத்தி அங்கே அமர்ந்திருந்தாள். எல்லோரிடமும் இருந்து பாஸ்போர்ட்டை அவள் வாங்கிக் கொள்ள, சரவணன் ஏனெனக் கேட்டான்.

“டேய் தம்பி! கேட்டா குடு! அதென்ன கேள்விலாம் கேக்கற? நாங்க பணம் போட்டு வேலைக்குக் கொண்டு வரோம்! திடீர்னு கொழுப்பெடுத்து நீ ஓடிப் போய்ட்டா எங்க பணத்துக்கு என்ன வழி? அதுக்குத்தான் பாஸ்போர்ட்ட வாங்கி வச்சிக்கறோம்! சும்மா என்ன ஏதுன்னு கேட்டு நிக்காம, சொல்றத அப்படியே ஃபோலோ பண்ணி பழகு!” என மிரட்டல் போட்டார் இவர்களை அழைத்து வந்தவர்.

மனமில்லாமலேயே தனது பாஸ்போர்ட்டை அந்தப் பெண்ணிடம் கொடுத்தான் சரவணப்பாண்டியன். அதன் பிறகு, பக்கத்தில் இருந்த கிளினிக் ஒன்றுக்கு இவர்கள் எல்லோரையும் மெடிக்கல் செக்கப்புக்கு அழைத்துப் போனார் அவர். ஏற்கனவே இந்தியாவிலேயே ஒரு முறை செக்கப் செய்திருக்க, இங்கேயும் செய்தே ஆக வேண்டும் என்பது விதிமுறை. அதற்கு பிறகுதான் வர்க் பெர்மிட் ஏற்பாடு செய்வார்கள். அது வரை, அப்ரூவல் லெட்டர் வைத்து வேலைப் பார்க்கலாம். வர்க் பெர்மிட் இல்லாமல் இந்நாட்டில் வேலைப் பார்ப்பது என்பது பெரிய குற்றமாகும். பலர் கள்ளத்தனமாய் வந்து இப்படி வேலைப் பார்த்தாலும், பிடிபட்டால் வேலை கொடுத்தவருக்கும், செய்பவருக்கும் கடுமையான தண்டனைக் கிடைக்கும்.

மெடிக்கல் செக்கப் முடிந்து எல்லோருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது! சாதம், சாம்பார், ஒரு கூட்டு என வயிற்றை நிறைக்கப் போதுமானதாக இருந்தது அது.

“யாருக்கு எங்க வேலைன்னு நாளைக்குத்தான் தெரியும்! இன்னிக்கு இங்கயே எல்லாரும் தங்கிக்கங்க!” என அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்ட அறைக்குப் பக்கத்து அறையைக் காட்டினார் அவர்.

படுக்க ஒன்றுமே இல்லை அங்கே. கடகடவென ஒரு ஓட்டை காற்றாடி மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. ஹேண்ட் லக்கேஜை தலையணைப் போல வைத்துக் கொண்டு எல்லோரும் அங்கங்கே முடங்கிக் கொண்டார்கள். இவனும் ஓரிடத்தில் படுத்துக் கொண்டான்.

கண் மூடியதுமே தங்கையின் ஞாபகம் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது. செண்பகா! இவன் செல்லமாக செம்பாவென அழைப்பான் அவளை. அவர்கள் குடும்பத்தின் கடைக்குட்டி! இப்பொழுது வயது பத்தாகிறது! அன்பானப் பாசமானக் குடும்பம் அவனது குடும்பம். அம்மா, அப்பா, அக்கா, இவன், செம்பா என சிரித்து வாழ்ந்த அழகான கூடு அது! இவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். சின்னதாய் சொந்த வீடு, அப்பாவுக்கு பிரைவெட் கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை! அம்மா வீட்டரசி! மாலை வேளைகளில் ஹோட்டல் ஒன்றுக்கு வடை, பஜ்ஜி, போண்டா என வாடிக்கையாக செய்து கொடுத்து அதில் கொஞ்சம் சம்பாதித்தார். தினம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் அதில் நல்ல வேட்டை!

படித்து விட்டு வீட்டில் இருந்த அக்கா மல்லிகாவுக்கு நல்ல வரன் வர, தனது சக்தியையும் மீறி திருமணம் முடித்து வைத்தார் இவன் அப்பா. அவளும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்க்கை நடத்தினாள். சரவணப்பாண்டியன் நன்றாகப் படிக்க, அவன் அப்பாவுக்கு மகன் தலையெடுத்து செம்பாவைப் பார்த்துக் கொள்வான் எனும் நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. அடிக்கடி அவனிடமும் அதை சொல்ல செய்வார்.

“பாண்டி! பாப்பா உன்னோட பொறுப்புய்யா! அவள நல்லா படிக்க வச்சி, நல்ல எடத்துல கட்டிக் கொடுக்கனும்யா!”

இவனுக்கு நன்றாக விவரம் தெரியும் போது பிறந்தவள் அவள். தங்கையை ஒரு மகள் போலவே பார்த்துக் கொள்வான் சரவணன். அவளும் அக்காவை விட, இவனையே தேடி வருவாள் எல்லாவற்றுக்கும்! அவன் அம்மாவுக்கோ, பெண் பிள்ளைகளை விட இவன் மேல் ஒரு சிட்டிகை பாசம் அதிகம்தான்.

“பாண்டிய்யா! என் தங்கம்! வைரம்” எனக் கொஞ்சாத நாளில்லை.

காலேஜ் படிப்புக்காக இவன் ஹாஸ்டல் போய் தங்கி விட, வாரம் நான்கு முறையாவது போன் போட்டு பாசத்தைப் பிழிவார் அவர். அவருக்காகவே மாதம் ஒரு முறையாவது வீட்டுக்கு ஓடி வந்து விடுவான் சரவணப்பாண்டியன். அவன் வரும் போதெல்லாம் சமையல் அமர்க்களப்படும்.

இப்படி சந்தோஷமாகப் போய் கொண்டிருந்த வாழ்க்கையில்தான் விதி தன் கோரத் தாண்டவத்தை ஆடித் தீர்த்தது. வகுப்பில் இருந்தவனுக்கு வந்த ஒரு போன் காலில், அவன் வாழ்க்கையே தடம் மாறிப் போனது!
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 1
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
சின்னவளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு, பேரப் பிள்ளையை பார்க்க பைக்கில் போன கணவன் மனைவி இருவரையும் காலன் அள்ளிக் கொண்டு போய் விட்டான். விஷயம் கேள்விப்பட்டு இடிந்து போனான் சரவணப்பாண்டியன். மலங்க மலங்க விழித்தவனை நண்பர்கள்தான் தேற்றி வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்கள். இவனது கத்தலுக்கும் கதறலுக்கும் விழித்து வரவேயில்லை இவனைப் பெற்றவர்கள். அண்ணாவைப் பார்த்ததும் ஓடி வந்து அவனிடம் ஒண்டிக் கொண்டாள் செம்பா.

மனமொடிந்து போய் செயலற்று நின்றவனுக்கு இறந்தவர்களின் உடல் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது! அடுத்து என்ன செய்ய வேண்டும் என எதுவுமே புலப்படவில்லை. இவனது அக்காவின் கணவரே எல்லாவற்றையும் எடுத்துச் செய்தார். காரியங்கள் முடிந்தும் அப்படியே பித்துப் பிடித்தது போலத்தான் இருந்தான் இவன். செம்பாத்தான் இவனுக்கு உணவு ஊட்டுவது, அண்ணா அண்ணா என அழைத்து அவன் மடியில் படுத்துக் கொள்வது என அவன் அருகிலேயே இருந்தாள்.

அவன் அக்கா மல்லிகாவுக்கு தன் கணவர், பிள்ளைகள் என நேரம் சரியாக இருந்தது. இப்படியே இரண்டு நாள் போக, அவனது மாமா பேச அழைத்தார் சரவணனை.

“பாண்டி”

“ஹ்ம்ம்”

“போனவங்க போய்ட்டாங்க! அதையே நெனச்சிட்டு இருந்தா மத்தத எல்லாம் யார் பார்க்கறது?”

“என்ன மாமா?”

“நான் உடைச்சி சொல்லிடறேன் பாண்டி! நானே ரெண்டு புள்ளைங்கள வச்சிக்கிட்டு, வயசான பெத்தவங்கள வச்சிக்கிட்டு அல்லாடிட்டு வாடகை வீட்டுல இருக்கேன். உங்க ரெண்டு பேருக்காக, போட்டத போட்டபடி இங்க உக்காந்திருக்க முடியாது! உங்க ரெண்டு பேர் வழிய இனி நீதான் பார்த்துக்கனும்” எனச் சொல்ல, அக்காவை நிமிர்ந்து பார்த்தான் இவன்.

அவள் இவன் முகத்தைப் பார்க்காமல் கீழே குனிந்து கொண்டாள். பெருமூச்சொன்றை விட்டவன்,

“மாமா! செம்பா சின்னப்புள்ள மாமா! நான் எப்படி வச்சிப் பார்த்துக்க முடியும்? அவளுக்கு அக்காவோட ஆதரவு தேவை மாமா” எனக் குரல் உடைந்து போகக் கெஞ்சினான்.

“அதெல்லாம் சரி வராதுப்பா! இன்னொரு வயித்துக்கு சோறு போட்டு எல்லாம் பார்க்க, எனக்குக் கட்டுப்படியாகாது” என முகத்தில் அடித்தது போல சொல்லி விட்டார் அவர்.

மடியில் படுத்திருந்த தங்கையைப் பார்த்தான் இவன். இன்னும் சில வருடங்களில் பெரிய பெண்ணாகி விடுவாள். இவளுக்கு ஒரு பெண்ணின் அன்பும் அரவணைப்பும் தேவையல்லவா! அம்மாவுக்குப் பிறகு அக்காத்தானே!!!

சட்டென முடிவெடுத்தவன்,

“மாமா! இனி நீங்க வாடகை வீட்டுல இருக்க வேணா! இங்கயே வந்திடுங்க! நான் படிச்சு முடிக்கற வரைக்கும் மட்டும் இவள பார்த்துக்கங்க! அப்புறம் நானே பொறுப்பெடுத்துக்கறேன்!” எனச் சொல்ல, அவர் முகத்தில் திருப்தியானப் புன்னகை.

“ஏதோ நீ கெஞ்சற! சரிப்பா! நான் ஒத்துக்கறேன்” என்றார் அவர்.

நிம்மதியான மனதுடன், அழுதபடி நின்ற தங்கைக்கு முத்தமிட்டு, படிக்கக் கிளம்பிப் போனான் இவன். இன்னும் இரண்டு வருடம் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்ட வேண்டும்! அதன் பிறகு வேலைப் பார்த்து கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில் கண்ணும் கருத்துமாகப் படித்தான். இவனது தந்தையிடம் சேமிப்பு என ஒன்று இருக்கவில்லை. ஆனால் தாயிடம் நகைகள் இருந்தன. அதை இவன்தான் லாக்கரில் வைத்திருந்தான். அதை வைத்துப் படிக்கலாம் எனக் கணக்குப் போட்டவனின் வாழ்வில் இன்னொரு இடி விழுந்தது.

அடுத்த லீவுக்கு ஊருக்குப் போனவன், தங்கையின் நிலையைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்தான். அந்த வீட்டுக்கு சம்பளமில்லா வேலைக்காரியாகிப் போயிருந்தாள் அவள். வாரத்தில் பல நாட்கள் பள்ளிக்குப் போகாமல், வீட்டில் இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறாள் என பஸ் ஸ்டாண்டில் இறங்கிய போதே பெட்டிக் கடை வைத்திருந்த இவனது நண்பனின் தந்தை காதில் ஓதி விட்டார்.

“பாண்டி டேய்! உன் தங்கச்சிய இங்க விட்டு வச்ச, அவ மண்ணோடு மண்ணா போய்டுவா! பொண்ணுங்களுக்கு கூடப் பொறந்தவங்க மேல பாசம்லாம் சொந்த புள்ளன்னு ஒன்னு வர வரைக்கும்தான்! தாயா புள்ளயா இருந்தாலும் வாயும் வயிறும் வேறடா! பார்த்து நடந்துக்க!” என அவர் சொல்ல, உடைந்து போனான் சரவணப்பாண்டியன்.

கருத்து, ஒல்லியாய், தன்னைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொண்ட செம்பாவைப் பார்த்ததும் செய்வதறியாது திகைத்தான் இவன்.

“செம்பா!”

“அண்ணா” எனக் கட்டிக் கொண்டு அழுதவளை, இறுக்கி அணைத்துக் கொண்டான்.

கோபமாய் இவன் வீட்டின் உள்ளே போக,

“வாடா” என வரவேற்றாள் மல்லிகா.

“என்னக்கா இதெல்லாம்?” என ஆற்றாமையாகக் கேட்க,

“என்னவாம் இப்போ?” எனக் கேட்டார் இவன் மாமா.

“இவ என்ன இந்த வீட்டு வேலைக்காரியா மாமா?” எனப் பொங்கி விட்டான் இவன்.

“அக்கா வீட்டுல, உதவியா வேலைப் பார்க்கறது என்ன குத்தமா? ஓசில சோறு போட்டு, துணிமணி எடுத்துக் குடுத்து பார்க்கறமே, இது கூட செய்யலனா என்ன அர்த்தம்?” எனக் குத்தலாக அவர் கேட்க, அப்படி ஒரு கோபம் வந்தது இவனுக்கு.

“அவள பார்க்கத்தான் இந்த வீட்டுல வாடகை கூட வாங்காம உங்கள உக்காத்தி வச்சிருக்கேன்” என இவனும் ஆத்திரமாக மொழிந்தான்.

“எதே!!! இது நீ சம்பாரிச்சு கட்டன வீடில்ல! என் மாமனாரு கட்டனது! மூனு பேருக்குமே இதுல பங்கிருக்கு! இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல, வீட்ட வித்து எங்க பங்க எங்களுக்கு குடு! அப்படி முடிலனா இதோ உங்கக்காவையும் அவ பெத்த புள்ளைங்களயும் நீயே கூட்டிட்டு போய் வச்சி சோறு போடு!” எனத் திமிராக சொன்னவர், மல்லிகாவை ஓங்கி அறைய, சகலமும் ஆடிப் போனது இவனுக்கு.

சின்ன வயதுதானே இவனுக்கும். குடும்ப அரசியல் விளங்கவில்லை. அக்கா பெருங்குரலெடுத்து அழ, ஆடிப் போய் நின்றான் தம்பிக்காரன். நாளெல்லாம் அமர்ந்து யோசித்தான் என்ன செய்வதென்று! அங்கேயே இருந்து சண்டைப் போட்டு அவர்களை வெளியேற்றி இருக்க முடியும்தான். ஆனால் கூடப் பிறந்த அக்காவாயிற்றே! அப்பா, அவள் மேல் எவ்வளவு பாசம் வைத்திருந்தார் எனத் தெரியுமே இவனுக்கு. மனதைத் தேற்றிக் கொண்டவன், தங்கையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு கிளம்பி விட்டான். கண்களில் கண்ணீர் வழிந்தாலும், போகாதே என் ஒற்றை வார்த்தை சொல்லவில்லை மல்லிகா. இனி அந்த வீடு தங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது எனும் நிதர்சனம் முகத்தில் அறைய, சந்தோஷமாய் தாங்கள் வாழ்ந்த வீட்டைக் கண்ணீர் கண்களுடன் ஒரு முறை பார்த்தவன், தங்கையுடன் விடுவிடுவென நடந்து விட்டான்.

தங்கையை ஹாஸ்டலோடு கூடிய பள்ளியில் சேர்க்கப் பெரும் பணம் தேவைப்பட்டது! தன் படிப்புக்காக வைத்திருந்த நகைகளை விற்று தங்கையை நல்ல பள்ளியில் சேர்த்தான்.

“செம்பா! நீ நல்லா படிக்கனும்டா ராஜாத்தி! அண்ணா அடிக்கடி வந்து உன்னைப் பார்ப்பேன்! ஸ்கூல் லீவ் கூட இங்கத்தான் நீ இருக்கனும்! இனிமே உனக்கு நான், எனக்கு நீ! அம்மாவும் அப்பாவும் மேல இருந்து நம்மள நல்லா பார்த்துப்பாங்க! குட் கேர்ளா இருக்கனும்! சரியா?” எனக் கேட்க, புன்னகை முகமாகத் தலையாட்டினாள் அந்தக் குட்டி.

“அண்ணா! ரொம்ப இளைச்சிட்ட நீ! நல்லா சாப்புடு! நல்லா படி, நல்லா தூங்கு” எனத் தனக்குத் தெரிந்த அளவில் அவனைத் தேற்றினாள் சின்னவள்.

தங்கையை இறுக்கி அணைத்துக் கொண்டவன்,

“அண்ணா வில் மிஸ் யூடா செம்பாக்குட்டி” என்றான்.

“மீ டூ அண்ணா” என்றவள், அவன் வெளியேறியதும் தேற்றுவார் இன்றி கதறி அழுதாள்.

தன் படிப்பை விட, தங்கை வாழ்க்கையே முதன்மையாய் போய் விட, படிப்பைப் பாதியிலேயே விட்டான் சரவணப்பாண்டியன். முடிக்காத படிப்புக்கு என்ன வேலைக் கிடைக்கும்!! கிடைத்த வேலையைப் பிடித்து செய்தான். அதோடு மேன்ஷனில் தங்கிக் கொண்டு பணமும் சேர்த்தான். இன்னும் தங்கையை டிகிரி வரை படிக்க வைக்க வேண்டும், சீர் செனத்தி கொடுத்து திருமணம் செய்து வைக்க வேண்டும்! அதற்கு இப்பொழுது கிடைக்கும் சம்பளம் கட்டாது எனப் புரிய, வெளிநாட்டு வேலைக்கு முயன்றான்! அதுவும் கிடைத்து விட்டது. இரண்டு வருடம் கஷ்டப்பட்டு உழைத்துப் பணம் சேர்த்தால், தாய் நாட்டுக்கே திரும்பி சொந்தமாய் எதாவது தொழில் வைத்துப் பிழைக்கலாம் எனும் திட்டத்தில் இருந்தான்.

அற்ப மனிதர்கள் ஆகாயக் கோட்டைக் கட்டலாம்! அது எழுந்து நிற்பதும், சரிந்து விழுவதும் அந்த ஆண்டவன் கையில் அல்லவா உள்ளது!!!!
 

CRVS2797

Active member
Aug 4, 2024
123
-47
43
அக்காவாவது, சொக்கவாவது பணம் இருக்கிறவரைக்கும் தான் எல்லாமே. பாண்டியும் செம்பாவும் ரொம்பவே பாவம் தான்.

😌😌😌
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin

Thani

Active member
Nov 27, 2025
144
-39
43
பணத்துக்கு முன்னாடி உறவுகள் தோற்று போகும் காலம் இது.
 
  • Love
Reactions: VanishaAdmin