Jagam Nee--EPI 19

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
934
-1,801
93
அத்தியாயம் 19



தேய்ச்சுக் குளிக்க சோப்பு

லவ் யூ டி ஸ்வீட் பாப்பு!!!



“இந்த டோர்ம்ல வச்சு உன்னைப் பார்த்துக்க முடியாது! உன்னைத் தூங்க கூட விடாம இங்கிட்டும் அங்கிட்டும் ஆளுங்க நடந்திட்டும், பேசிட்டும் இருக்காங்க! நமக்கு இப்போ ஒரு ஹோட்டல் ரூம் தேவை! என்ன செய்யலாம்?” என முணுமுணுத்தவளை வாஞ்சையாகப் பார்த்தான் சரவணப்பாண்டியன்.

“என் கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு மேடம்! அதை முதல்ல யூஸ் பண்ணிக்கலாம்” என்றவனின் முகம் வலியில் சுளித்தது.

எல்லாவற்றையும் பிளான் செய்து வந்திருந்த ஷாமினி, எமெர்ஜென்சி தேவைக்காக தனியாகப் பணம் வைத்திருந்தாள். அந்த பணம் மருத்துவமனை செலவுக்கும், மருந்து வாங்குவதற்குமே சரியாகப் போயிருந்தது. இவன் ஒன்றுமில்லை எனச் சொன்னாலும், எக்ஸ்ரே அது இதுவென செலவை இழுத்து விட்டிருந்தாள் ஷாமினி.

“நீ சும்மா இரு பாண்டியா! அவ்ளோ ரத்தம் வந்திருக்கு! ஏற்கனவே உடைஞ்சிருந்த கால் வேற! உள்ளுக்கு எதாச்சும் பிரச்சனை இருக்கான்னு உன் நொள்ளைக் கண்ண வச்சுப் பார்த்தா தெரிஞ்சுடுமா? சரியான மெடிக்கல் கேர் குடுக்கனும்! விளையாட்டு இல்ல இதெல்லாம்!” என அவள் காய்ந்திருக்க, அமைதியாகி விட்டான் இவன்.

முன்பு இவன் அடி வாங்கிப் படுத்திருந்த போது இவனுக்காக எதையும் செய்ய முடியாத நிலையில் விதி வைத்திருக்க, இப்பொழுது எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும் என அவள் நினைப்பது இவனுக்குப் புரிந்தது. அதன் பிறகு அவள் இஷ்டத்துக்கு விட்டு விட்டான் சரவணன்.

எலும்பு முறிவு போன்ற பெரிய பிரச்சனைகள் ஏதுமில்லை. ஆனால் கால் முட்டியிலும், கை முட்டியிலும் காயங்கள் ஆழமாகத்தான் இருந்தன. கல் தரையில் விழுந்தது தோல் வேறு அங்கிங்கு வலண்டிருந்தது. காயம் ஓரளவுக்கு ஆறும் வரை நிறைய நடக்க வேண்டாம் என டாக்டர் சொல்லி இருந்தார்.

இந்த நிலையில் மறுபடியும் பத்து மணி நேரத்துக்கும் மேல் அமர்ந்தே ரயிலில் இவனால் பயணம் செய்ய முடியாது எனப் புரிந்தது ஷாமினிக்கு. இங்கேயே கொஞ்சம் வசதியான இடத்தில் அவனைத் தங்க வைத்துப் பார்த்துக் கொள்ள மனம் துடித்தது.

“என்னை நம்பித்தானே வந்திருக்க! நானே எதாச்சும் செய்யறேன்! உன் காசு உன் கிட்டவே இருக்கடும்” என்றவள் குறுக்கும் மறுக்கும் நடந்தாள்.

அவளையே பார்த்திருந்தவன்,

“மேடம்!” என அழைத்தான்.

“ஹ்ம்ம்”

“ரொம்ப தாகமா இருக்கு! எனக்கு லெமன் சோடா மாதிரி எதாச்சும் வேணும்”

“சரி! சாஞ்சுப் படுத்துக்கோ பாண்டியா! நான் கீழ இருக்கற கடையில போய் வாங்கிட்டு வரேன்” என்றவள் அவனை வசதியாக சாய்த்துப் படுக்க வைத்து விட்டுக் கிளம்பினாள்.

அவள் இவனுக்கு பானம் வாங்கிக் கொண்டு மேலே வர, நிதினிடம் இருந்து அழைப்பு வந்தது. ஸ்ட்ரோ போட்டு பானத்தை சரவணனிடம் நீட்டியவள், போனை எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்.

“சொல்லு நிதினு”

“எப்படி இருக்கக்கா?”

“நான் நல்லா இருக்கேன்”

“வேலையா?”

“இல்லடா! வந்து..”

“சொல்லுக்கா”

“நான் ப்ராக்(Prague) வந்திருக்கேன்டா”

“ப்ராக்கா? கொஞ்சம் இரு, ஜன்னல எட்டிப் பார்த்துட்டு வரேன்”

“என்னடா?”

“மழை வருதான்னு பார்த்தேன்! செம்மையா அடிச்சு ஊத்துது”

“என்னடா கிண்டலா?”

“வானமே இடிஞ்சு விழுந்தாலும் போலந்து நாட்ட விட்டு ஓரடி எடுத்து வைக்க மாட்டேன்னு வைராக்கியமா இருந்த எங்கக்கா எங்க போனா?” என நக்கலாகக் கேட்டான் நிதின்.

“என்னடா உனக்குப் பிரச்சனை? அங்கயே இருந்தாலும் திட்டற, வெளி நாட்டுக்குப் போனாலும் திட்டற! இப்போ நான் என்ன செய்ய?”

“ஒன்னும் செய்ய வேணாம்! சந்தோஷமா ட்ரிப்ப எஞ்சாய் பண்ணிட்டு வா! ஆனா, தயவு செஞ்சு இந்த மாதிரி போகறப்போ, எனக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போ! எங்கயாவது நீ காணாப் போய்ட்டா, எங்கன்னு நான் தேடுவேன்? எனக்கு இருக்கற ஒரே சொந்தம் நீதான்கா” என அவன் கரகரத்தக் குரலில் சொல்ல,

“சரிடா பெரிய மனுஷா!!! இனிமே உன் கிட்ட சொல்லிட்டே செய்யறேன்!” என்றவளுக்கும் குரல் உள்ளே போனது.

தம்பியிடம் சரவணனைப் பற்றி இவள் சொல்லி இருக்கவில்லை! ஏதோ ஒரு தயக்கம்! சரவணனிடமே தனது மனதை திறந்திறாதவள், தம்பியிடம் எப்படி சொல்வாள்? ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மனதில் அடைத்து வைத்திருந்தது எல்லாம் வெளியே வந்திருக்க, அதன் பிறகு கூட ஒன்றுமே நடவாதது போலத்தானே நடித்துக் கொண்டிருக்கிறாள்.

சரவணப்பாண்டியன் கொடுத்த முத்தத்தை இன்னும் கூட நினைக்கும் போதே காரமல்(caramel) சுவைப் போல தித்தித்தாலும், அதை நினைக்காதே மனமே என ஒதுக்கித்தான் வைக்க முயன்றாள். அவனது இரத்தத்தைப் பார்த்துக் கதறியவளின் வாயை அவனது முத்தம் சட்டென மூட வைத்தது. முதலில் அதிர்ந்து, பின் அரண்டு, ஆடிப் போனவளுக்கு அந்நேரம் அதனை ரசிக்கவோ, ஆராதிக்கவோ முடியவில்லை. அழுகை சட்டென நின்றுப் போக, அவனைப் பிடித்துத் தள்ளி விட்டிருந்தாள் ஷாமினி.

“பைத்தியமாடா உனக்கு? ஸ்டுப்பிட்!”

அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை மென்மையாகத் துடைத்தவன்,

“எனக்கு ஒன்னும் இல்ல கிளி” என்றான்.

“எனக்கு எப்படிடா நீ முத்தம் குடுக்கலாம்?” என இவள் ஆத்திரப்பட,

“தோ, இப்படித்தான் மேடம்” என அவன் மீண்டும் நெருங்க, சாரமாரியாக அடி விழுந்தது அவனுக்கு.

“ஆ!!!!!!” வென இவன் கத்த,

“வலிக்குதா பாண்டியா?” எனப் பதறினாள் இவள்.

“ஆமாம் மேடம்”

“அப்போ சரி! நல்லா வலிக்கட்டும்!” எனச் சொன்னவள் தள்ளி அமர்ந்து கொண்டாள்.

“அசந்த கேப்ல முத்தம் குடுத்துட்டான் பரதேசி!!” எனத் திட்டிக் கொண்டே, புறங்கையால் வாயைத் துடைத்துக் கொண்டவள்,

“இனி இன்னொரு முறை இப்படி செஞ்ச, உதட்டைக் கடிச்சுத் துப்பிடுவேன் பார்த்துக்கோ! எனக்கு வர வெறிக்கு உன்னை அடி வெளுக்கனும் மாதிரி இருக்கு! ஆனா ஏற்கனவே அடிப்பட்டுக் கிடக்கறியேன்னு சும்மா விடறேன்!” எனச் சொல்லியபடி மீண்டும் உதட்டைத் துடைத்தாள்.

அவளது செய்கையில் உடல் வலியை மீறி அவனுக்குப் புன்னகை வரும் போல இருந்தது.

“வேணும்னு குடுக்கல மேடம்”

“அப்போ வேணாம்னு குடுத்தியா?” எனக் கேட்டபடியே, பேக்கில் இருந்த டிஷீ பேப்பர்களை எடுத்து அவன் ரத்தத்தில் வைத்து அழுத்தியவள்,

“இதை அழுத்திப் புடிச்சுக்கோ!” என்றாள்.

“அழுதுட்டே இருந்தீங்களா, எனக்கு சட்டுன்னு அதை எப்படி நிறுத்தறதுன்னு தெரியல! கை, காலுலாம் அடி வேற!! என்னோட வாய் மட்டும்தான் ஃப்ரீயா இருந்தது! அதான் அதை வச்சி உங்க அழுகைய நிறுத்தினேன்” என அப்பாவியாகச் சொன்னவனை முறைத்துப் பார்த்தாள் ஷாமினி.

“நல்லவனே, நம்பிட்டேன்டா நீ சொன்னத! பொண்ணுங்கள முறைச்சு முறைச்சுப் பார்க்கறவனுங்கள கூட நம்பிடலாம்டா! உன்னை மாதிரி கண்ணியவான் வேஷம் போடறவனுங்கள நம்பவே முடியாது! கேப் கிடைச்சதும் கே.எஃப்.சி தின்னுடுவீங்க!” எனச் சரமாரியாகத் திட்டியவள்,

“இரு வரேன்” என எழுந்து போனாள்.

பைக் தனியே ஆள் தனியே என விழுந்து கிடந்தவனை நெருங்கினாள் ஷாமினி. கிட்டே நெருங்கும் போதே அல்கஹோல் வாடை வந்தது. அப்படி ஒரு கோபம் இவளுக்கு.

“எருமை மாடே! நீ தண்ணிப் போட்டு இடிக்கறதுக்கு என் பாண்டியாத்தான் கிடைச்சானா? பரதேசி” எனத் திட்டியவள், அவன் கன்னத்தில் பளிச் பளிச்சென விட்டாள் நான்கு அறை.

அவன் மெல்ல கண் விழிக்க, இடுப்பிலேயே நான்கு எத்து விட்டாள் இவள்.

“மேடம் வேணா! விடுங்க! இது அவங்க நாடு! அடிதடி பிரச்சனைல உள்ள போய்ட போறீங்க! விடுங்க” என்ற சரவணன், மெல்ல எழுந்து கொண்டான்.

அவன் சிரமப்பட்டு எழுவதைப் பார்த்தவள், அவனிடம் விரைந்தாள். அதற்குள் அங்கிருந்த இன்னும் சிலர் இவர்களை நெருங்கி வர, போலீஸூம் ஆம்புலன்சும் அழைக்கப்பட்டது. போலிஸ் வாக்குமூலம் எடுத்ததும் ஆம்புலன்சில் மூவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். அதன் பிறகே டோர்ம்முக்கு டாக்சியின் மூலம் வந்திருந்தார்கள் இருவரும். அங்கிருந்த பரபரப்பில் வேறு எதையும் பேசிக் கொள்ள முடியவில்லை இருவராலும்.

“மினி, மினி! மினிக்கா!!!!!!” எனும் சத்தத்தில் நிகழ்காலத்துக்கு வந்தாள் இவள்.

“சொல்லுடா நிதின்”

“உனக்கு எதாச்சும் வேணுமா?”

“என்ன வேணும்?”

“செலவுக்கு காசு!!”

“அது..” எனத் தயங்கினாள் இவள்.

இவள்தான் இது வரை தம்பிக்கு எல்லாம் செய்திருக்கிறாள். அவன் டாக்டராகி கூட பணம் தா, அதை வாங்கிக் கொடு, இதை செய்து கொடு எனக் கேட்டதில்லை இவள். தம்பி இவளிடமிருந்து இனிமேல் பணம் வேண்டாமென சொல்லி விட, குட்டி மருமகனுக்கு எதாவது வாங்கி அடிக்கடி அனுப்பி விடுவாள்! அவர்கள் இவளைப் பார்க்க வந்தால், இவளே எல்லா செலவுகளையும் கவனித்துக் கொள்வாள்.

இப்பொழுது பாண்டியனுக்காக தம்பியிடம் பணம் கேட்கலாமா எனும் எண்ணம் தோன்றி விட்டது ஷாமினிக்கு.

“சரி தா! ஆனா கடனா தா! ரெண்டு மூனு மாசத்துல திருப்பிக் குடுத்துடுவேன்! சரியா?”

“ஏன்கா? ஏன்? என் கிட்ட கூட இதென்ன கணக்கு? நீ எனக்கு செய்யலாம், ஆனா நான் உனக்கு செய்யக் கூடாதா?” எனக் கோபமாக அவன் கேட்க.

“அப்படிலாம் இல்லைடா நிதினு! என்னமோ மனசு ஒப்பல! உன்னைப் படிக்க வச்சேன்! அதனால நீ எனக்குக் கடமைப் பட்டிருக்க! எனக்கு திருப்பி நீ செய்யனும்னு நெனைக்கறதெல்லாம் ஒரு மாதிரி சுயநலமா தோணுதுடா! இப்போ என்னால சமாளிக்க முடியுது! என்னைக்கோ என்னால சமாளிக்க முடியலன்னா, வேற யார் எனக்கு செய்யப் போறா??? நீதானே!! அதனால் இப்போ இந்த செண்டிமெண்டு பேச்ச விட்டுட்டு, எனக்குப் பணம் போட்டு விடு!” என்றவள், எவ்வளவு வேண்டும் என்பதையும் சொன்னாள்.

“இப்பவே ட்ரான்ஸ்ஃபேர் பண்ணுறேன்! நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வா! கவனமா இரு! லவ் யூக்கா”

“லவ் யூடா நிதினு” என அழைப்பைத் துண்டித்தாள்.

சரவணனைப் பார்த்துப் புன்னகைத்தவள்,

“பணப் பிரச்சனை செட்டில் ஆகிடுச்சு! இனி உன்னை ஒரு நல்ல ஹோட்டல் ரூம்ல தங்க வைக்கனும்! நல்லா ரெஸ்ட் எடுத்து கொஞ்சம் தேறுனதும் கிளம்பிடலாம் பாண்டியா” என்றாள்.

“என்னால உங்களோட சுத்திப் பார்க்கற ப்ளான்லாம் சொதப்பிடுச்சு மேடம்”

“அட! சுத்திப் பார்க்கன்னு போறது எதுக்காக? நம்ம மனசையும், உடம்பையும் ஹேப்பியா, ரிலேக்‌ஷா, வச்சிக்கறதுக்குத்தான். அது உன் கூட இருக்கறப்பவே எனக்குக் கிடைக்கும் போது, எதுக்கு வெளிய போய் சுத்தனும்! ரூம்லயே இருக்கலாம்” என்றாள் இவள்.

குறும்புடன் அவளைப் பார்த்தவன்,

“மேடம்! நீங்க கமலோட கலைஞன் படம் பார்த்திருக்கீங்களா?” எனக் கேட்டான்.

“இல்லையே!!”

“கிட்டத்தட்ட இப்படித்தான் வரும்னு நெனைக்கறேன் அந்த வசனம்! ஹீரோயின் ஹனிமூனுக்கு இங்க போலாமா அங்க போகலாமான்னு லிஸ்ட் போடுவாங்க! அதுக்கு கமல் சொல்வாரு, எங்க போனாலும் ஹனிமூனுக்கு நமக்கு நாலு சுவரு போதாதான்னு! அது போல நான் கூட இருந்தா உங்களுக்கு நாலு சுவரு ரூமே போதும்ல மேடம்!”

முகம் சட்டென சிவந்து விட, கண்ணை உருட்டி அங்கும் இங்கும் எதையோ தேடினாள் இவள்.

“என்ன மேடம் தேடறீங்க?”

“என் கூட பாண்டியா பாண்டியான்னு ஒரு பால்வாடி பாப்பா இருந்துச்சே, அதை காணோம்! நீ பார்த்தியா?”

“அந்த பாப்பாவுக்கே ஒரு பாப்பா வேணுமாம்!” என மெல்லியக் குரலில் இவன் முனக,

“என்ன அங்க சத்தம்?” எனக் கேட்டாள் இவள்.

“கால் வலிக்குது மேடம்”

“இவ்ளோ நேரம் ஹனிமூன் சனிமூன் பத்தி பேசனப்போ வலிக்கலல! நான் ரூம் வேற இடத்துல அரேஞ் பண்ணற வரைக்கும் கண்ண மூடித் தூங்கு! ராஸ்கல்” எனத் திட்டியவள், அந்த டோர்மை விட்டு வெளியேறி இருந்தாள்.

பணம் அக்கவுண்டுக்கு வந்த நோட்டிபிகேஷன் வந்ததும், மற்ற வேலைகள் மடமடவென நடந்தன. இந்த டோர்ம்கு அருகிலேயே இருந்த ஒரு நடுத்தரமான ஹோட்டலில் ஓர் அறை புக் செய்தாள் ஷாமினி! டாக்சி அழைத்து வந்தவள், வேகமாய் தங்களது பொருட்களை அடுக்கி வைக்க ஆரம்பித்தாள். அதை கொண்டு போய் காரில் வைத்து விட்டு, கைத்தாங்கலாக இவனை நடக்க வைத்து டாக்சியில் ஏற்றினாள். கட்டுப் போட்டிருந்த காலை மடக்கி அமர மிகவுமே கஷ்டப்பட்டான் இவன். ஆனாலும் அதை காட்டிக் கொள்ளவில்லை அவளிடம்.

ஹோட்டல் லாபியில் அவனை அமர வைத்தவள், ஆன்லைன் புக்கிங் காட்டி ரூம் கீ கேட்க, இப்பொழுதுதான் அறை சுத்தம் செய்யப்படுவதாக அவர்கள் அறிவித்தார்கள். இவளுக்குப் பொறுமை பறந்தது.

“இவனுக்கு ரெஸ்ட் வேணும்! காலை மடக்கி ரொம்ப நேரம் உட்கார முடியாது! நாங்க ரூம்ல இருக்கோம்! எங்கள வச்சிக்கிட்டே சுத்தம் பண்ண சொல்லுங்க!” என வாதாடி, ஒரு வழியாக இவனை அறைக்கு அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தாள்.

“வலிக்குதா பாண்டியா?”

“இல்ல மேடம்”

“தூக்கம் வருதா?”

“இல்ல மேடம்”

“எதாச்சும் சாப்படறியா?”

“வேணா மேடம்”

“வேற எதாச்சும் வேணுமா?”

“ஆமா!”

“என்ன?”

“வந்து கொஞ்சம் நேரம் அந்த பக்கம் படுங்க மேடம்! எவ்ளோ நேரம்தான் எனக்காக அங்கயும் இங்கயும் ஓடுவீங்க! ப்ளிஸ்! கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க!”

அவனுக்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் பாத்ரூம் போய் வந்தவள், கட்டிலின் மறுபக்கம் வந்து படுத்துக் கொண்டாள். கச்சிதமான அறை அது. குவீன் சைஸ் பெட் ஒன்று, சுவரில் மாட்டி இருந்த தொலைக்காட்சி, கட்டில் இரு பக்கமும் குட்டி மேசை, அதன் மேலே மேசை விளக்கு, இன்னொரு பக்கம் ஒரு வட்ட மேசை, இரண்டு நாற்காலிகள் என மிக சுத்தமாக இருந்தது.

படுத்த கொஞ்ச நேரத்தில் அவள் அடித்துப் போட்டது போல உறங்கி விட, இவன் அணு அணுவாய் அவளை ரசிக்க ஆரம்பித்தான். முகத்தில் எப்பொழுதும் தெரியும் கண்டிப்பு பாவனை இல்லாமல், தூங்கும் போது பச்சைக் குழந்தை போல இருந்தாள் ஷாமினி. அங்கங்கே எட்டிப் பார்த்த பிங்க் வர்ண முடி, அவளது நிறத்துக்கு அழகாய் இருந்தது. உதட்டில் போட்டிருந்த சில்வர் பியர்சிங் அந்த அறையின் மெல்லிய வெளிச்சத்தில் கூட டாலடித்தது.

எத்தனை வருடக் காதல் அவனுடையது! அது கை கூடுமோ, கனவாகவே போய் விடுமோ எனும் பயத்திலேயே ஒவ்வொரு நாட்களையும் கழித்திருந்தவனுக்கு, அவள் காதலை புலம்பலாக சொன்ன நொடி தன்னையே கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை! இத்தனை நாள் கட்டிக் காத்திருந்த பொறுமைக் காற்றில் பறக்க, சட்டென முத்தமிட்டிருந்தான். அதன் பிறகே அவள் எப்படி எதிர்வினையாற்றுவாளோ எனப் பதட்டமாகப் போய் விட்டது. அதையும் இதையும் சொல்லி சமாளித்திருந்தாலும், தனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த காயங்களுக்காகவே நடந்த சம்பவத்தை பெரிதாக்கவில்லை அவள் எனப் புரிந்திருந்தது இவனுக்கு.

அநாதரவாய் உறங்கிக் கொண்டிருப்பவளைத் தனது கை வளைவில் இழுத்துப் படுக்க வைத்துக் கொள்ள மனது தவித்தாலும், இன்னொரு முறை யோசிக்காமல் எதையும் செய்யக் கூடாது என முடிவெடுத்தவன், மருந்தின் வேலையால் அவனும் கண் மூடினான்.
 

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 19
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
134
-29
43
அடேய் பால்வாடி, அப்ப நீயும் ஷாலினியை உள்ளுக்குள்ளயே காதலிச்சிருக்கியா...? அமுக்கன் டா நீ.

😀😀😀
CRVS (or) CRVS 2797