Jagam Nee--EPI 21

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
934
-1,801
93
அத்தியாயம் 21



உன்ன பார்த்தாலே பொங்குது தாபம்

கிளியே வேணாண்டி என் மேல கோபம்!!



‘கல்யாணம் ஆகல, ஹனிமூன் போகல! ஆனா ரூம விட்டு வெளிய தள்ளி கதவடைக்கறத மட்டும், பொண்டாட்டி மாதிரியே கரேக்டா பண்ணறாங்க இந்த மேடம்! அவங்க முகத்த பார்க்காம எப்படி தூக்கம் வரும்? அவங்க மூச்சு விடற சத்தம் கேக்காம எப்படி உறக்கம் வரும்? அவங்க முதுகை பார்க்காம எப்படி நித்திரை வரும்?? அந்த உதட்டை உப்பிட்டு குழந்தை மாதிரி படுத்துருக்கறத பார்க்காம எப்படி எனக்கு சயனம் வரும்! இத்தனை வருஷமா இவங்க பக்கத்துல இல்லாம எப்படி தூங்கனேன்னு கூட யோசிக்க முடியலையே! இப்போ இப்படி என்னை அடிக்ட் பண்ணி வச்சிட்டாங்களே, இனி எப்படி விட்டுட்டுத் தூங்குவேன்!!!’ என மனதில் புலம்பியபடியே விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தான் சரவணப்பாண்டியன்.

அந்த நேரம் போனில் அழைப்பு வர, எடுத்துப் பார்த்தான். தங்கை அழைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹலோ செம்பா குட்டி”

“ஹலோ மிஸ்டர் ஷாமினி! எப்படி இருக்கீங்க? அண்ணி நல்லா இருக்காங்களா? எப்போத்தான் என்னை அவங்கட்ட பேச விடுவ நீ?” என கேள்விகளால் துளைத்தாள் தங்கை.

“உன் அண்ணி பக்கத்துல இருக்கறப்போ என் நலத்துக்கு என்ன குறைச்சல்! நல்லா இருக்கேன் நான்! நீ எப்படிடா இருக்க?”

“மீ ஃபைன்ண்ணா! சீக்கிரம் ஆன்சைட் வேலை வரும் போல இருக்கு! அப்படி ஆஃபர் கிடைச்சா போகவாண்ணா?”

“கண்டிப்பாடா! குண்டு சட்டியிலயே குதிரை ஓட்டாம, நாலு நாட்டுக்குப் போனாத்தான் நமக்கும் நிறைய எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்! உங்க அண்ணி அடிக்கடி அதைத்தான் சொல்வாங்க!”

“அண்ணா!!”

செம்பாவின் குரலில் கெஞ்சல் எட்டிப் பார்த்தது.

“இப்போதைக்கு உங்க அண்ணி சமாதானமாகற மாதிரி தெரியலடா செம்பா! கொஞ்சம் டைம் குடு! கால்ல விழுந்தாவது என்னை ஏத்துக்க வைக்கறேன்! அப்புறம் நீ வாழ்நாள் முழுக்க அண்ணிட்ட பேசலாம்! கொஞ்சம் பொறுத்துக்கடா குட்டி”

“சீக்கிரம் விழுந்துடுணா! அவங்க பாவம்ல, எவ்ளோ நாள் இப்படி தனியா இருப்பாங்க! தனிமை கொடுமைன்னு நமக்கு நல்லாவே தெரியும்லண்ணா! அவங்க மட்டும் நம்ம கூட வந்துட்டா, தனியா இருந்த நீ, தனிய வளந்த நான், இப்போ தனிச்சு வாழற அவங்க மூனு பேரும் குடும்பமா ஆகிடுவோம்! எங்கண்ணிய நான் உள்ளங்கைல வச்சுப் பார்த்துப்பேன்!”

“அவங்களும் உன்னை ராஜாத்தி மாதிரி பார்த்துப்பாங்கடா! உன் மேல அவ்ளோ அன்பு இருக்கு உன் அண்ணிக்கு!”

சரவணனுக்கு முப்பது வயதானதும், இந்தச் செம்பா குட்டிதான் பெரிய மனுஷி போல அவனது கல்யாண பேச்சை எடுத்தாள். இவன் ஒரு நிலைக்கு வந்ததும், சொந்தத்தில் பெண் இருப்பதாக சொல்லிக் கொண்டு இவனுடன் நெருங்க முயன்ற அக்காவின் குடும்பத்தை இவன் ஓர் எல்லைக்குள்ளே வைத்து விட, அண்ணாவுக்கு நல்லது நடப்பதென்றால் அதற்கு தான் தான் எதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றி விட்டது இவளுக்கு. அண்ணனை திருமணம் முடி என நச்சரிக்க, தனது மனதில் உள்ளதை மறைக்காமல் தங்கையிடம் சொல்லி விட்டான் சரவணப்பாண்டியன்.

“எனக்கு கல்யாணம், குடும்பம் இப்படி எதாவது நல்லது நடக்கனும்னா அது என் மேடத்தோட மட்டும்தான்! பல வருஷமா அவங்கள இந்த மனசுல பொத்தி வச்சிருக்கேன்! சிறு விதையா நுழைஞ்சு, இப்போ ஆலமரமா வளந்து நிக்கறாங்க செம்பா! அவங்க என் வாழ்க்கைல வந்தா மினிக்கு புருஷனா சந்தோஷமா வாழ்வேன்! இல்லைனா மினிஸ் காபிதியாம் ஓனரா, பொறந்துட்டேன், இனி வாழ்ந்து முடிப்போம்னு வாழ்வேன்! அண்ணா மனச புரிஞ்சுக்கடா! இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு அவங்க குடுத்த டைமுக்கு! என் வாழ்க்கையைத் தேடிப் போவேன்! நான் வாழறதா இல்ல வீழறதான்னு உன் அண்ணி கைலத்தான் இருக்கு” என அவன் சொல்லி விட, அதன் பிறகு இவள் திருமணம் என அவனை வற்புறுத்தியது இல்லை.

அண்ணா வாழ்வு அவனது மேடத்தோடு அமைய வேண்டும் என இவள் வேண்டாத நாளில்லை.

“ரொம்ப கோபமா இருக்காங்களாண்ணா?” எனக் கேட்டாள் செம்பா.

“ரொம்ப ரொம்ப உக்கிரமா இருக்காங்க!” என்றவனுக்குச் சிரிப்பு வந்தது.

“சீக்கிரம் மலை இறக்குண்ணா! உனக்கு நல்லபடி மேடம் கூட கல்யாணமானா என் வருங்காலத்துக்கு அலகு குத்தி மொட்டைப் போடறதா வேண்டிக்கறேன்”

“செம்பா!!!” என்றவன் வெடித்துச் சிரித்தான்.

“பாவம்டா உன் வருங்காலம்! எந்த அப்பாவி மாட்டப் போறானோ உன் கிட்ட” எனச் சொன்னவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

சோக கீதம் வாசித்துக் கொண்டிருந்தவனுக்கு தங்கையிடம் பேசியதில் கொஞ்சம் மனநிலை மாறி இருந்தது. பாய் சொல்லி அழைப்பைத் துண்டித்தவன், இவனைப் பார்த்தாலே கண், காது, மூக்கு, முழி எல்லாவற்றுக்கும் பூட்டுப் போட்டுப் பூட்டிக் கொள்ளும் கிளியை எப்படி அணுகுவது என யோசிக்க ஆரம்பித்தான்.

கால் காயம் கொஞ்சம் காய்ந்ததும், ட்ரேனில் பயணப்பட்டு மறுபடியும் போலந்து வந்து சேர்ந்தார்கள். இவன் ஓய்வில் இருக்க, ஷாமினி ஹோட்டல் வேலையை மட்டும் பார்த்தாள். பார் வேலைக்கு சில நாட்கள் விடுப்பு எடுத்திருந்தாள்.

இது காதல் காலமடி என்பது போல இருவரும் சந்தோஷ வானில் சிறகடித்தார்கள். அவள் காதலை முத்தத்தோடு சொல்லி இருக்க, ஆனந்தமாய் அதை ஏற்றுக் கொண்டவனுக்கு நித்தம் கொண்டாட்ட மனநிலைதான். இவனது காதலையும் அவளிடம் ஒத்துக் கொண்டவன், தனது தற்போதைய நிலையை மட்டும் மறைத்தே வைத்திருந்தான்.

ஷாமினியின் குணம் அறிந்திருந்தவன், தன்னுடய பொருளாதார நிலையை அவளிடம் சொல்ல பயந்தான். ஆம் பயம்தான்! ஏழை பாண்டியனை அரவணைத்து ஆதிக்கம் செய்பவள், அவன் பணம் படைத்தவன் எனத் தெரிந்தால் எப்படி மாறிப் போவாளோ என பயமாய் இருந்தது இவனுக்கு. கொடுத்து சிவந்த கரம் அவளுடையது! அக்கரம் மற்றவர் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுமா? அவன் கட்டி அமைத்திருக்கும் சாம்ராஜ்யம் அவளால் வந்தது, அவளுக்காய் வந்தது என எப்படி புரிய வைப்பது எனத் தெரியாமல் தவித்தான் கிளியின் பாண்டியன்!

உண்மைத் தெரிந்தால் தன்னை ஏற்றுக் கொள்வாளா என எதிர்காலம் அச்சுறுத்த, நிகழ்காலத்தையாவது அவளுடன் சந்தோஷமாய் வாழ்ந்து பார்க்க வேண்டுமென ஆவல் கொண்டான்! ஒரு காலத்தில் தன்னைப் பாடாய்படுத்தியவளின் பரிவை அனுபவிக்க ஆசைப்பட்டான். ஆட்டி வைத்தவளின் அன்பை அனுபவிக்க ஆவல் கொண்டான். பார்க்கும் போதெல்லாம் காய்ந்தவளின் காதலை அனுபவிக்க பேராசை கொண்டான். திட்டித் தீர்த்தவளின் திகட்டாத பாசத்தில் திளைக்க ஏங்கினான். அவன் சம்பாதித்தது எல்லாம் அவளுக்கானது எனும் போது, இவன் பிச்சைக்காரன்தானே! ஆகையால்தான் சாதாரண பாண்டியனாகவே அவளிடம் வந்து சேர்ந்தான்.

மீண்டும் அவன் வாழ்க்கையில் நுழைந்ததற்கு எப்படி எதிர்வினையாற்றுவாளோ என இவன் தவித்து நிற்க, இடையே எதுவுமே நடக்காதது போல அவனை ஏற்றுக் கொண்டாள் அவன் கிளி. ஆதரவாய் அவனைத் தாங்கிக் கொண்டாள். தன்னோடேயே வைத்துக் கொண்டாள். இது என் பொம்மை என்பது போல, அருமையாய் பார்த்துக் கொண்டாள். இன்று சொல்லி விடலாம், நாளை சொல்லி விடலாம் என நாளைத் தள்ளிப் போட்டவனுக்கு, சொல்ல மட்டும் வாய் வரவேயில்லை. அவளது அன்பு அவனை சுயநலக்காரனாய் மாற்றி வைத்திருந்தது.

அன்பு மட்டும் இல்லாமல் காதலையும் இப்பொழுது அவள் சேர்த்து தர, அது இன்னும் இன்னும் வேண்டும் என அவள் பின்னாலே நாய் குட்டிப் போலத் திரிந்தான் சரவணன்.

“பாண்டியா!” என அவள் குரல் குழைந்தால்,

“சொல்லுங்கள் ஆலம்பணா!” என அடிமை சாசனம் எழுதி வைக்கும் நிலைக்குப் போனான்.

காதல் சொல்வதற்கு முன்பும் அவளுக்கு இவன் மேல் அக்கறை இருந்தது. அதெல்லாம் சொல்லின் வழியே மட்டுமே வெளிப்படும்! இப்பொழுதோ செயலின் வழியும் சேர்ந்து வெளிப்பட்டது.

“தலையை ஒழுங்கா துவட்டு! தண்ணி எப்படி சொட்டுது பாரு” எனச் சொல்லித் துண்டைத் தூக்கி அவனிடம் வீசுபவள்,

“கட்டிலுக்கு கீழ வந்து உக்காரு! இன்னும் சின்னப்புள்ள மாதிரி தண்ணி சொட்ட, சொட்ட நின்னுட்டு இருக்க” எனச் சொல்லி, இவளே துவட்டி விட ஆரம்பித்தாள்.

“என் பாண்டியாக்கு எவ்ளோ சாஃப்டா இருக்கு தலை முடி! அப்படியே பட்டுப் போல” எனச் சொல்லி அவன் முடியை பாசமாய் கோதிக் கொடுப்பாள் அந்நேரம்.

அப்படியே மயங்கி போய் அவள் தொடையில் தலை வைத்துப் படுத்துக் கொள்வான் இவன்.

“என்னவாம் என் பாண்டியாவுக்கு!”

“பாண்டியா சொர்க்கத்துல இருக்கான்! இன்னும் கொஞ்சம் நேரம் அப்படியே தடவிக் குடுங்க மேடம்! ப்ளீஸ்” என இறைஞ்சுபவனின் கன்னம் கிள்ளி முத்தமிடுவாள் ஷாமினி.

சாப்பிடும் போது பக்கத்தில் ஆள் இருக்கிறார்கள் எனவெல்லாம் பார்க்க மாட்டாள் இவள்.

“ஆ காட்டு!” எனச் சொல்லி ஒரு வாயாவது இவனுக்கு ஊட்டி விடுவாள்.

அம்மா ஊட்டி விட்ட ஞாபகம் வர, தாரமாகப் போகுபவளை தாய் போல பாசமாய் நோக்குவான் சரவணன்.

“நான் யாருக்குமே இப்படி ஊட்டி விட்டது இல்ல தெரியுமா பாண்டியா! என் தம்பி நிதினுக்கு அம்மாவே எல்லாம் செஞ்சிடுவாங்க! அம்மா இறந்தப்போ அவன் பெரியவனாகிட்டான்! அதோட இப்படிலாம் ஊட்டி விடறதுலாம் அவனுக்கும் பிடிக்காது! அவனோட மகன் இருக்கானே, அவன் அப்பனுக்கும் மேல! நான் ஊட்ட வந்தா நாக்கைத் துருத்திக் காட்டுவான், அவங்கம்மாத்தான் வேணும்னு! இப்போ நீ என் கிட்ட மாட்டிக்கிட்ட! இனி வாழ்நாள் பூராவும் இந்த டார்ச்சர்ல இருந்து உனக்கு விடுதலை இல்ல” எனச் சொல்லிச் சிரிப்பாள்.

“இது டார்ச்சர் இல்ல மேடம்! இதெல்லாம் பாக்கியம்” என உருகி நிற்பான் சரவணன்.

இவன் அசந்து தூங்கியதும், மெல்ல இவனருகே வந்து ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி அவனைத் தொட்டபடி படுத்திருப்பாள். அவளது வாசத்துக்கே தூக்கம் விலகி விட, அசைந்தால் விலகிப் போய் விடுவாளோ எனும் பயத்தில் தூங்குவது போல நடித்தபடியே படுத்திருப்பான் சரவணப்பாண்டியன்.

மனம் மட்டும்,

“சகியே

என்னை கொஞ்சம் கொஞ்சம்

கொத்தித் தின்னும் கிளியே

என்னை கொல்லும் எண்ணமோ” எனப் பாடி வைக்கும்.

அவர்களின் உறவு இப்படி இனிமையாய் போய் கொண்டிருக்கும் போதுதான் உண்மை வெளியே வந்திருந்தது.

தனது நிர்வாக அதிகாரிக்கு அலைப்பேசி வழி கட்டளைகளைப் பிறப்பித்து விட்டுத் திரும்பியவனுக்குத் திக்கென ஆகிப் போனது.

“மேடம்!!”

“யார் யாருக்கு மேடம்? சார் பெரிய பருப்புன்னு இப்போத்தானே தெரியுது! இனியும் எதுக்கு இந்த வேஷம்? மேடம், கூடம்னு ட்ராமா போடாம, ஏய் வா போன்னு கூப்பிடு இனி” என்றவள் கோபத்துடனும், கண்ணில் துளிர்த்த நீருடனும் திரும்பி விடுவிடுவென நடக்க, அவள் பின்னாடியே ஓடினான் இவன்.

“மேடம்! ப்ளீஸ்! சொல்லுறத கேளுங்க! ப்ளீஸ்”

அவளிடம் எந்த பதிலும் இல்லை! அவள் அறைக்குப் போய் பூட்டிக் கொண்டாள். கதவைத் தட்டியவன்,

“செல்ல மேடம்ல! ப்ளீஸ், ப்ளீஸ்! எனக்கு ஒரு சான்ஸ் குடுங்க! எல்லாம் சொல்லறேன்! இப்படி என்னை வெளிய விட்டுக் கதவை சாத்தாதீங்க! என்னால தாங்கவே முடியாது! மேடம்! கிளி! ஷாமினி” எனக் கெஞ்சினான்.

“ஓ! கடை ஓனருக்கு பேர்லாம் சொல்லிக் கூப்புட வருது! நான் பெரியாள்னு காட்டறீங்களோ என் கிட்ட” என உள்ளிருந்து கத்தினாள்.

“இல்லல்ல! சாரி! இனி கூப்பிட மாட்டேன் மேடம்! சாரி! சாரி! பாண்டியா பாவம் இல்லையா! தயவு செஞ்சு கதவைத் திறங்க! நாம உக்காந்து பேசலாம்! கிளி ப்ளிஸ்”

“தேவையில்ல! பாண்டியா பாவம் இல்ல! அவன் பாவம்னு நெனைச்ச நான்தான் பாவம்! இந்த பத்து வருஷத்துல நீ என்னெல்லாம் பாடுபட்டிருப்ப, எவ்ளோ துன்பத்த அனுபவிச்சிருப்பன்னுலாம் தினம் தினம் யோசிச்சு ரத்தக் கண்ணீர் விட்ட நான்தான் பாவம்! பழச பத்தி எதையும் உன் கிட்ட கேட்டு உன் ரணத்த மறுபடி கீறி விடக் கூடாதுன்னு நெனைச்சி உன்னை எந்த கேள்வியும் கேக்காம இளிச்சவாய் போல அப்படியே ஏத்துக்கிட்ட நான்தான் பாவம்! என் பாண்டியா சொல்றதெல்லாம் உண்மைன்னு நம்பி ஏமாந்து போன நான்தான் பாவம்! உன் கஷ்டத்த எல்லாம் போக்கி இனி உன்னைக் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்கனும்! கல்யாணம் செஞ்சு எல்லா இன்பத்தையும் உனக்கு திகட்ட திகட்டக் குடுக்கனும்னு ஆசைப்பட்ட நான்தான் பாவம்! நான்தான் பாவத்துலயும் பாவம்”

“கிளிம்மா! அழாதடா!” என இவன் கெஞ்ச, கதவைத் திறந்து முகத்தைக் காட்டியவள்,

“நான் அழல! அழற அளவுக்கு நீ வொர்த்து பீஸ் இல்ல” எனச் சொல்லி மீண்டும் அவன் முகத்திலேயே கதவை அடித்துச் சாற்றினாள்.

பார்த்த சில வினாடிகளில், அவள் கலங்கிய கண்களும், அழுந்த துடைத்ததால் சிவந்து போயிருந்த கன்னங்களும் அப்பட்டமாய் தெரிந்தது இவனுக்கு. மனது வலித்தது சரவணப்பாண்டியனுக்கு.

“சாயாங்!!!”(அன்பே- மலாய் மொழியில்)

“டேய்! என்னடா மலாய்ல கொஞ்சற?”

“மலேசியா நாட்டுக்காரங்கள இப்படித்தானே கொஞ்சனும்?”

“தேவையில்ல போ! உன் கொஞ்சலும் வேணா, கொரங்கு மூஞ்சியும் வேணா! ஐ ஹேட் யூ பாண்டியா!!!”

“கிளி, கிளி! அப்படிலாம் சொல்லாதெ கிளி! மனசு வலிக்குது!”

“அப்போ எனக்கு மட்டும் குளு குளுன்னு இருக்கா! எனக்கும்தான்டா மனசு வலிக்குது! துரோகிடா நீ”

“துரோகினுலாம் சொல்லாதீங்க மேடம்! என்ன துரோகம் பண்ணிட்டேன் நான்? உங்களுக்காக உங்க பணத்துல உழைச்சதுதான் துரோகமா? என் மேடம் எவ்ளோ கெத்தா காருல வந்து இறங்குவாங்க தெரியுமா! தன்னை சுத்தி உள்ளவங்களுக்குத் தண்ணீரா காச செலவளிப்பாங்க! அப்படிப்பட்டவங்கள காலம் கீழ தூக்கிப் போட்டுடுச்சுன்னு கேள்விப்பட்டதுல இருந்து அவங்கள மேல ஏத்திப் பார்க்கனும்னு நான் ராப்பகலா பாடுபட்டதுதான் துரோகமா? எது மேடம் துரோகம்?” என மனம் ஒடிந்து போய் இவன் கேட்க,

“இப்போ என் மேல நீ கொண்டது காதலா பரிதாபமா பாண்டியா? நான் குடுத்த காசுக்கு வட்டியா நீ காதல குடுக்கறியா? உன்னைக் கடைசியா நான் பார்த்த நாள் வரை கூட உனக்கு என் மேல காதல் என்பது இல்லைன்னு எனக்குத் தெரியும் பாண்டியா! உன் கண்ணுல எனக்கான மரியாதையையும், அன்பையும், நட்பையும் பார்த்திருக்கேனே தவிர காதல ஒரு துளி அளவு கூட கண்டது இல்ல! ஆனா உன் கண்ணுல இப்போ எனக்கான காதல் தெரியுது பாண்டியா! அது என் மேல உள்ள ஆசையால வந்த காதல்னு நெனைச்சேன்! இப்போத்தான் அது என் மேல உள்ள ஐயோ பாவத்துனால வந்ததுன்னு புரியுது! நான் குடுத்த காச வேணும்னா வட்டிப் போட்டுத் திருப்பிக் குடுத்துடு பாண்டியா! பண்டமாற்று மாதிரி காதல குடுக்காதே! என்னால தாங்கிக்க முடியல! ப்ளிஸ்! போய்டு!”

“மேடம்! கண்ண பார்த்து பேச சான்ஸ் குடுங்க மேடம்! போ போன்னு துரத்தினா நான் எங்க மேடம் போவேன்! உங்கள விட்டா எனக்கு யார் இருக்கா!”

“சாவடிக்கப் போறேன் பாரு! யார் இருக்கா, யார் இருக்கான்னு கேட்டே என்னை கவுக்கப் பார்க்கற! இன்னொரு முறை நான் ஏமாற மாட்டேன்! உன் பணத்துக்கு ஆயிரம் பேர் பின்னாடி வருவாங்க! போ! அதுல யாரயாச்சும் கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு”

“என் பணத்துக்காக இப்போ பலர் வரலாம் மேடம். இந்த வெறும் பாண்டியனுக்காக அப்போ வந்த நீங்க மட்டும்தான் எனக்கு வேணும்! கதவ திறங்க மேடம்!”

“போடான்னு சொல்றேன்ல! எனக்கு டைம் குடு, நான் இதெல்லாம் டைஜஸ்ட் பண்ணனும்! அட் லிஸ்ட் ஓன் வீக் என் கண்ணுல படாத! இது உன் மேடத்தோட கட்டளை” என்றவள் அவனது பேக்கை கதவைத் திறந்து வெளியே வீசி விட்டு மீண்டும் கதவடைத்தாள்.

“போறேன் மேடம்! நீங்க சொல்லி நான் கேக்காம இருப்பனா? இன்னும் ஒரு வாரத்துல திரும்ப வருவேன்! பாய் கிளி! ஐ லவ் யூ சோ சோ மச் மேடம்” என்றவன்,

“நான் இத்தனை நாள் கட்டிக் காத்த பொக்கிஷத்த இங்க விட்டுட்டுப் போறேன்! பத்திரமா வச்சிக்கங்க இந்த பாண்டியனின் பரிச!” என்றவன் தனது பேக்கில் இருந்த ஒரு பெரிய என்வலப்பை கதவின் முன்னே வைத்து விட்டுக் கிளம்பி விட்டான்.

அருகிலேயே இருந்த இன்னொரு ஹோட்டலில் தங்கிக் கொண்டவன், அந்த ஒரு வாரமும் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். பாருக்கு அவள் வேலைக்குக் கிளம்பும் நேரம், அவள் அறியாமல் நின்று பார்த்து விட்டு மீண்டும் அறைக்கு வந்து விடுவான்.

இவள் கொடுத்த ஒரு வார கெடு முடிய இன்னும் இருபத்து நான்கு மணி நேரம்தான் இருந்தது. சரவணன் கொடுத்து விட்டுப் போயிருந்த என்வலப் பிரிக்கப்படாமலேயே கட்டிலின் மேல் கிடந்தது. அதை அடிக்கடி தொட்டுத் தடவிப் பார்த்தவளுக்குப் பிரித்துப் பார்க்க தைரியம் வந்திருக்கவில்லை. அவளுக்கு எதாவது சொத்து பத்து எழுதி வைத்திருந்த பத்திரமாக இருந்தால், மனம் வெடித்தே செத்து விடுவாள் எனத் தோன்ற அதை பிரிக்க முடியவில்லை. இவளிடம் அப்பொழுது பணமிருந்தது, எடுத்துக் கொடுத்தாள். அதற்கு பிரதிபலனாக, இப்பொழுது முன்னேறி முழு மனிதனாய் நிற்பவனிடம் காதலை யாசிப்பது என்னவோ சுயநலமாகத் தோன்றியது! காதல் ஆழ் மனதில் இருந்து வர வேண்டும்! அச்சோ பாவமிவள் என வரக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தவளுக்கு, கண்களில் கண்ணீர் வழிந்தது.

“காதல் உன்னைக் கோழையாக்கிடுச்சு ஷாமினி! பிரிச்சுப் பார்த்து முடிச்சு விட்ரு!” எனத் தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டவள், அதை கை நடுங்க பிரித்தாள்.

குட்டி குட்டியாக பல காகிதங்கள் கிடந்தன அதன் உள்ளே! அப்படியே அவற்றை கட்டிலின் மேல் கொட்டினாள். கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேல், கடை பில் காகிதம், டிஷூ பேப்பர், கிழித்தெடுக்கப்பட்ட நாளிதழ் துணுக்கு, எண்ணெய் பிசுக்கு காகிதம் எனக் கிடந்தன பேப்பர்கள். எல்லாவற்றிலும் தமிழில் என்னவோ கிறுக்கி வைத்திருந்தான் சரவணன். ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தாள். பல வருடங்களாய் எழுதியதை சேர்த்து வைத்திருந்தான் போல. சில காகிதங்களில் இங்க் அழிந்திருந்தது. சில காகிதங்கள் மஞ்சளாகிப் போயிருந்தன.

“பாண்டியா டேய்! நான் தமிழ் ஸ்கூலுக்கு போகலத் தெரியுமா! படிச்சதெல்லாம் மலாய் ஸ்கூல்லதான்! அங்க எக்ஸ்ட்ராவா தமிழ் கிளாஸ் வச்சப்பவே அடிக்கடி டிமிக்கி குடுத்த ஆளு நானு! எனக்கு போய் தமிழ்ல எழுதி குடுத்துட்டுப் போயிருக்க!” என முணுமுணுத்தவள், தனக்குத் தெரிந்த தமிழை நம்பி எழுத்துக் கூட்டித் தப்பும் தவறுமாகப் படிக்க ஆரம்பித்தாள்.

“அ+டி+கு+தூ பா+ரூ வெ+ய்லூ

அ+டி நீ+டான்+டி என் கு+ய்+லூ”

அதை படித்தவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு!

“எருமை போடுமே சாணி

நீதான் என் இதய ராணி!!!!” என எழுத்துக் கூட்டிப் படித்தவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள். அன்றைய இரவு தூங்காமல் நூற்றுக் கணக்கில் இருந்த அந்த குட்டி குட்டி இரு வரி கவிதைகளை மீண்டும் மீண்டும் படித்தபடி விழித்துக் கிடந்தாள் ஷாமினி.
 

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 21
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
134
-29
43
அப்பாடா..! சிரிச்சிட்டாள், இனி சமாதானம் ஆகிடுவாள் தானே...?

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin

sai deepalakshmi

Active member
Dec 2, 2025
70
-23
28
இவன் எழுதிய கவிதை சமாதானம் செய்ய உதவும் என்று நம்பலாம்.
அழகான கலகலப்பான பதிவு.
 
  • Love
Reactions: VanishaAdmin