Jagam Nee--EPI 5

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
அத்தியாயம் 5



ரோட்டுல மேயுது பன்னி

நீயே என் காதல் கன்னி!!!!




தனது ஒட்டு மொத்தக் கோபத்தையும் அந்தக் குட்டிக் காரின் மேல் காட்டினாள் ஷாமினி! ப்ரேக்கடித்து அவள் பார்க் செய்த விதத்தில் காரின் டயர்கள் கிரீச்சென சத்தமிட்டன.

காபிதியாமின் வெளியே அழகுக்கு வைத்திருந்த செடிகளுக்கு நீருற்றிக் கொண்டிருந்த சரவணப்பாண்டியனின் காதுகளில் அச்சத்தம் நாராசமாக விழுந்து.

எப்பொழுதும் நான்கு மணி போல வேலைக்கு வருபவள் அன்று ஏழு மணிக்கு வந்திருந்தாள்.

‘குரங்கு கையில கெடச்ச பூமாலையாட்டம், அந்த அழகான கார் இவ கையில சிக்கி சின்னாப்பின்னமாகுது! ராட்சசி’ என மனதில் மட்டுமே அவளை வறுத்தெடுத்தான் இவன்.

வெளியே சத்தமில்லாமல் முணுமுணுக்கக் கூட பயமாய் இருந்தது. காபி ப்ரேக் கூட கொடுக்காமல் அவள் கொடுமைப்படுத்த, கிச்சனுக்குப் போகும் சாக்கில் சுடச் சுட எதாவது பானத்தை ருசி அறியாமல் வாயில் ஊற்றிக் கொள்ளும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருந்தான் சரவணன். அதோடு இவன் நின்றாலும், நடந்தாலும், எது செய்தாலும் அவளின் லேசர் விழிகள் இவனை அடிக்கடி வட்டமிடுவதை இந்த ஒரு வாரமாகக் கவனிக்கத்தான் செய்தான். ஆனாலும் என்ன, ஏது எனக் கண்டுக் கொள்ளாமல் வேலையே கண்ணாக இருந்தான்.

அவள் செய்ய முடியாமல் திருதிருத்தக் கணக்கை செய்து, புத்தகப் பையில் வைத்தது இவன்தானெனக் கண்டுப் பிடித்திருப்பாளோ எனச் சந்தேகமாய்தான் இருந்தது. அவ்விடத்தில் சி.சி.டி.வி காமிரா ஏதும் இல்லாததால் நிச்சயமாய் கண்டுப்பிடித்திருக்க முடியாது என மூளை யோசித்தாலும்,

‘உனக்கேன்டா இந்த வேணாத வேலை! அவளுக்குக் கணக்கு வந்தா என்னா, போனா என்ன? மூடிட்டு உன் வேலையைப் பார்க்காம, கணக்கு வாத்தி மாதிரி ஸ்டெப் பை ஸ்டேப் போட்டு ரெண்டு பக்கத்துக்கு சொலுஷன் செஞ்சு வைக்க சொல்லி உன்னை யார் அடிச்சது! வேலைக்கார நாய்க்கு ஏன் இந்த வேலையத்த வேலைன்னு நாக்கப் புடிங்கிக்கற மாதிரி கண்டுப் புடிச்சுக் கேட்டுட்டா என்னத்த சொல்லி சமாளிப்ப!!!’ என மனசாட்சி திட்டோ திட்டெனத் திட்டித் தீர்த்தது.

“தம்பி! தானத்துல சிறந்த தானம் எது தெரியுமா? கல்வி தானம்! ஒருத்தருக்கு ஒரு வேளை சோறு போட்டா, அது அந்த நேரத்தோட முடிஞ்சு போய்டுது! அதே அவங்களுக்குத் தெரியாத ஒன்னை கற்பிச்சா, அது காலாகாலத்துக்கும் அவங்க கூடவே வரும்! இதைதான் மீன் பிடிச்சுக் குடுக்கறதுக்கு பதில், மீன் பிடிக்கக் கத்துக் குடுக்கனும்னு முன்னோர்கள் சொல்லிருக்காங்க! உனக்குத் தெரிஞ்ச பாடத்த உன் கிளாஸ் பிள்ளைங்களுக்கு நீ சொல்லித் தரப்போ, உனக்கு இன்னுமே பாடம் நல்லா புரிய ஆரம்பிக்கும்! உனக்கும் நன்மை, அவங்களுக்கும் நன்மை!” என இவனது அப்பா அடிக்கடி சொல்லுவார்.

அவள் பாடம் புரியாமல் தவித்த போது அப்பாவின் சொல் மட்டுமே அவன் மனதில் இருந்தது. அதனால் ஏற்படப் போகும் பின் விளைவுகள் எதையும் அவன் யோசித்திருக்கவில்லை!

காரை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு, புத்தகப் பையோடு டக்டக்கென நடந்து வந்தவள், அவன் அருகில் வந்து நின்றாள்.

“பாண்டியா!”

“சொல்லுங்க!”

“பேக் கொண்டு உள்ள வச்சிட்டு, எனக்கு பெனடோல் வாங்கிட்டு வா! தலை வலி மண்டையைப் பொளக்குது” எனச் சொல்லியபடியே பேக்கை அவன் புறம் தூக்கிப் போட, பட்டெனக் கேட்ச் பிடித்தான் இவன்.

“அப்படியே வைட் காபி எடுத்துட்டு வா” என உத்தரவிட்டவள், முட்டிக்குக் கொஞ்சம் மேல் இருப்பது போல அணிந்திருந்த ஜீன்ஸ் பாவாடை பாக்கேட்டில் இருந்து, ஐம்பது வெள்ளி தாளை எடுத்து இவன் ஏப்ரனில் இருக்கும் பாக்கேட்டில் சொருகி விட்டுப் போனாள்.

‘கரகாட்டக்காரிக்கு காச சொருகிற மாதிரி சொருகிட்டுப் போறா பாரேன்! ராங்கி’ எனப் பல்லைக் கடித்தவன், அவளது புத்தகப் பையோடு உள்ளே போனான்.

அவள் கேட்ட வைட் காபியைக் கொண்டு வந்து டேபிளில் வைத்தவன், சூப்பர்வைசரிடம் சொல்லி விட்டு அருகே இருந்த ஃபார்மசிக்கு வேகமாக நடந்தான். அவள் கேட்டது போல பெனடோல் எனப்படும் பாராசிட்டமோல் மாத்திரை வாங்கியவன், அப்படியே தலை வலி தைலத்தையும் வாங்கிக் கொண்டான்.

இவன் திரும்ப வந்த போது, மேசையில் தலை வைத்துப் படுத்திருந்தாள் அவள்.

“மேடம்”

“ஹ்ம்ம்”

“மருந்து”

“வச்சிட்டுப் போ”

மீதி பணத்தை மடித்து காபி கப்பின் கீழ் சொருகியவன், வேறு வேலைகளைப் பார்க்கப் போனான். அன்று இளாவுக்கு விடுமுறையாகிப் போக, இவனுக்குப் பேச்சுத் துணைக்கும் யாரும் இருக்கவில்லை.

குழந்தை ஒன்று காபியைத் தட்டிக் கீழே கவிழ்த்திருக்க, அவ்விடத்தை அவசரமாக மோப் செய்தவன், அவர்கள் கேட்ட இன்னொரு கப் காபியைக் கொண்டு வந்து வைத்தான். இப்பொழுது கேஷ் ரிஜிஸ்டரையும் இவனை நம்பி விட்டிருக்க, அந்த வேலையையும் கற்றுத் தேர்ந்திருந்தான். கல்லாவை ஃபோகஸ் செய்து சி.சி.டி.வி கேமிரா இருக்கவும் தைரியமாக இவனை அந்த வேலைக்கும் பழக்கி இருந்தார்கள். என்னதான் திருட்டு, மொள்ளமாரித்தனம் போன்றவை இவனுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது என்றாலும், அது மற்றவர்களுக்குத் தெரியாதே! அதோடு காமிரா இருப்பது இவனுக்குமே வசதிதான். இவன் மட்டுமா கேஷ் ரிஜிஸ்டரை ஹேண்டில் செய்கிறான்! எல்லோருமேத்தானே! அப்படி மற்றவர்கள் பணத்தில் கை வைத்தாலும், வெளிநாட்டவன் என இவனைத்தானே எல்லோரும் சந்தேகக் கண் கொண்டுப் பார்ப்பார்கள். தன் வரைக்கும் நேர்மையாகவே வேலைப் பார்த்தான் சரவணப்பாண்டியன்.

கடை அடைக்கும் நேரமும் வந்தது! அவளோ இன்னும் மேசையில் சாய்ந்து படுத்திருந்தாள். இவன் அவளுக்கு வைத்திருந்த காபி குடிக்காமல் ஏடு படிந்து கிடந்தது. வாங்கி வைத்திருந்த மருந்தும் அப்படியே கிடந்தது! மற்றவர்கள் கிளம்பிப் போயிருக்க, எப்பொழுதும் போல பின் வழியாக முன்னே போய் ஷட்டரை இழுத்து மூடிப் பூட்டியவன், மீண்டும் பின் வாசல் வழி கடைக்குள் நுழைந்தான்.

தலை வலி எனச் சொல்லியவள், மருந்து கூட எடுத்துக் கொள்ளாமல் தூங்கி இருந்ததைப் பார்த்து இவனுக்குப் பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் இவன் நிலையே பாவத்துக்கும் பாவமாய் இருக்க, அவளை என்ன ஏதுவெனக் கேட்டு, சட்டெர்டேயைப் பிடித்து சட்டைப் பைக்குள் விட்டுக் கொள்ள தயாராக இல்லை சரவணப்பாண்டியன்.

சத்தம் போடாமல், கடையைக் கூட்டி மோப் போட்டு, மேசைகளை சனிடைஸ் செய்து முடிக்கும் வரை கூட அவள் எழவில்லை. வேறு வழியில்லாமல், அவளை அப்படியே விட்டு விட்டுக் குளித்து விட்டு வந்தான் இவன். வயிறு வேறு பசிக்குக் காந்தியது!

‘இம்சை பண்ணறாளே இந்த கிளி(கிளியோபாட்ரா)’

பெருமூச்சுடன் கிச்சனுக்குப் போனவன், நிறைய காய்கறி சேர்த்து ப்ரைட் ரைஸ் செய்து, தனியாக முட்டை வறுத்து இரண்டு ப்ளேட்களில் போட்டு எடுத்து வந்தான். அவளது மேசை அருகே வந்து ஒரு ப்ளேட்டை வைத்தவன்,

“மேடம்” என மெல்லியக் குரலில் அழைத்தான்.

“ஹ்ம்ம்”

“எழுந்துக்குங்க”
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 5
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
“டார்ச்சர் பண்ணாதடா பாண்டியா!!!” எனக் கத்தியவள், கஷ்டப்பட்டுத் தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள்.

கண்கள் செக்கச் செவெலெனச் சிவந்து கிடந்தது. முகம் வேறு வீங்கியது போல இருக்க, சட்டென யோசிக்காமல் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான் இவன். காய்ச்சல் கொதித்தது.

“காச்ச அடிக்குது மேடம்” எனப் படபடத்தவனின் முகத்தை கண்ணிமைக்காமல் பார்த்தவள்,

“என்னை அடிக்கறதுக்கு அந்தக் காய்ச்சலுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்” என நக்கலாகக் கேட்டாள்.

குரல் சோர்ந்து ஒலித்தது.

‘சீக்குல விழுந்தாலும் இந்த சில்வண்டுக்கு கொழுப்புக் குறைய மாட்டுது பாரேன்’ என நினைத்தவன்,

“வந்து.. ப்ரைட் ரைஸ் செஞ்சேன்! சாப்பிடுங்க! சாப்பிட்டு மருந்து போடுங்க மேடம்! இந்த நிலைல கார் ஓட்ட வேணாம்! கிரெப் (ஊபர் போல) புக் பண்ணி வீட்டுக்குப் போங்க” என்றான்.

“நான் என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாதுன்னு நீ சொல்லாதே” என்றவள் அவனை முறைத்தபடியே இருந்தாள்.

“சாரி மேடம்” என இவன் பம்ம, எழுந்து முகம் கழுவ போனாள் ஷாமினி.

‘நல்லதுக்கு காலமில்லடா முருகேசா!’ எனத் தன்னையே நொந்து கொண்டவன், சாப்பிடாமல் அமைதியாக இன்னொரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

சில நிமிடங்களில் புத்தகப் பையோடு மெல்ல நடந்து வந்தாள் அவள். எப்பொழுதும் இருக்கும் சுறுசுறுப்புக் காணாமல் போயிருந்தது! நடையில் ஒரு தடுமாற்றம் இருந்தாலும் பார்வையில் அந்தத் திமிரும் அலட்சியமும் அப்படியே இருந்தது.

‘காய்ச்சல்ல ஒன்னும் முடியல போல! இருந்தாலும் கெத்து காட்டுது பாரேன் இந்தக் கிளி’ என அவளைப் பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை இவனால்.

நாற்காலியில் அமர்ந்தவள், தன் முன்னே வைக்கப்பட்டிருந்த உணவைப் பார்த்தாள். கரண்டியில் அதை அப்படி இப்படி பிரட்டிப் பார்த்தவள், பின்பு சாப்பிட ஆரம்பித்தாள்.

“நெக்ஸ்ட் டைம் எனக்கு செய்யறப்போ, இப்படி ஆடு மாடுக்குப் போடற மாதிரி நெறைய இலைதளைகள போடாதே பாண்டியா! எனக்குப் புடிக்காது! ஹாட் டாக், ஹேம், சிக்கன்னு அசைவமா போட்டு செய்யனும்! மிளகாய் நெறையக் கலந்து காரசாரமா வேணும்! புரியுதா?”

‘அய்யய்யோ! இவளுக்குப் பாவம் பார்த்ததுக்கு நெக்ஸ்ட் டைம் வேற செஞ்சுக் குடுன்னு கேக்கறாளே!! மத்தவங்களுக்கு பாவம் பார்க்கறது, பரிதாபம் பார்க்கறதுலாம் நமக்கே திருப்பி அடிக்கும்னு அனுபவப்பூர்வமா உணர்ந்திருந்தும், இன்னும் ஏன்டா சரவணா இப்படி நல்லவனா இருந்து தொலைக்கற!!!!’ என மனதில் புலம்பியவன்,

“சரி மேடம்” என வெளியே சொல்லி வைத்தான்.

“நாட் பேட்! சாப்பிடற மாதிரித்தான் இருக்கு! நம்ம சேஃப் சொல்லிக் குடுத்தாரா பாண்டியா?” எனக் கேட்டாள்.

“அவர் செய்யறத பார்த்துக் கத்துக்கிட்டேன் மேடம்”

“பார்டா!!! கண் பார்த்து கை செய்யுதாம் நம்ம பாண்டியனுக்கு!” என அதற்கும் நக்கலடித்தவள்,

“உன்னை அடிக்கடி டார்ச்சர் பண்ணுறேன்னு சாப்பாட்டுல விஷத்த கிஷத்த கலந்துடல நீ?” எனக் கேட்டாள்.

“என்னங்க மேடம்!!” என இவன் பதற,

“நீ வேற ராஜ வம்சம்! பாண்டியன்னு பேருலாம் வச்சிருக்க! அந்த காலத்து ராஜா கதைலலாம் விஷம் வச்சித்தான் எதிரிங்க சோலிய முடிப்பாங்களாமே!! அதான் டவுட்ட கேட்டுக்கிட்டேன்” என்றாள் இவள்.

“நான் ராஜ பரம்பரைலாம் இல்ல மேடம்! சாதாரண வேலைக்காரன்தான்” என முடித்துக் கொண்டான் இவன்.

“அப்படியா!!! சரி, சரி! இப்போ எதுக்கு என் வாயப் பார்த்துட்டு இருக்க! தட்டைப் பார்த்து சாப்புடு!” என மிரட்டவும் தவறவில்லை இவள்.

பின் இருவரும் அமைதியாக சாப்பிட்டு முடித்தார்கள். அவன் கொண்டு வந்து வைத்த தண்ணீரைக் குடித்து மருந்து போட்டுக் கொண்டவள்,

“பாண்டியா” என அழைத்தாள்.

“சொல்லுங்க மேடம்”

“நீ என்ன படிச்சிருக்க?”

“டிகிரி முடிக்கல மேடம்! பாதில விட்டுட்டேன்”

“பாதி படிச்சதுக்கேவா இப்படி!” என முணுமுணுத்தவள், புத்தகத்தைத் திறந்து அவன் பக்கம் வைத்தாள்.

“இந்தக் கணக்க எல்லாம் செஞ்சு முடிச்சிடு” எனச் சொல்லி விட்டு எழுந்து கொண்டாள் ஷாமினி.

இவன் பேவெனப் பார்க்க,

“என்ன?” எனக் கேட்டாள் இவள்.

“வந்து!!!”

“நீதான் அன்னைக்கு சொலுஷன எழுதி வச்சன்னு எனக்குத் தெரியும்! சோ இன்னசெண்ட் சீன் போடாம, செஞ்சு குடு! நான் போய் வேப்(vape) அடிச்சிட்டு வரேன்”

இதை தெரிந்து கொண்டுதான் இந்த ஒரு வாரமாய் இவனை நோட்டமிட்டுக் கொண்டிருந்திருக்கிறாள் எனப் புரிய, தனது அதிகப்பிரசங்கித்தனத்தில் அவள் கோபம் கொள்ளாததை எண்ணி ஆசுவாசமடைந்தான் சரவணப்பாண்டியன்.

அவனுக்கு மிக மிக பிடித்த பாடம் கணிதம். கான்சேப்ட் அறிந்து கொண்டால், எந்தக் கணக்கானாலும் இவனால் செய்து விட முடியும். அவள் திறந்து வைத்திருந்த பக்கத்தைப் பார்த்தவனுக்கு கண்கள் மின்னியது! தன்னருகே புத்தகத்தை நகர்த்தியவன், அதில் சற்று நேரம் மூழ்கிப் போனான். ஃபார்முலாவையும், எடுத்துக் காட்டாக செய்யப்பட்டிருந்த கணக்கையும் ஒரு முறை பார்த்தவன், பின் அதையே பார்க்காமல் சொந்தமாக செய்ய முனைந்தான். அந்த கணக்கு கை வசம் வர, இவளுக்குப் வீட்டுப் பாடமாகக் கொடுத்திருந்த கணக்குகளை ஒன்று இரண்டு என வரிசைப்படுத்தி செய்ய ஆரம்பித்தான்.

அந்த நேரத்தில் அவள் வந்து அருகே அமர்ந்ததோ, முகத்தைக் கைகளில் தாங்கி அவன் செய்து கொண்டிருக்கும் கணக்கை கிரகிக்க முயன்றதையோ உணரவில்லை சரவணப்பாண்டியன்.

செய்து முடித்து அவளிடம் புத்தகத்தைக் கொடுத்தவன், தயக்கத்துடன்,

“இப்போ நான் இந்த கணக்கெல்லாம் செஞ்சு குடுக்கறேன்! ஏ லெவல் பரிட்சைல உங்களுக்கு பதிலா நான் போய் எழுத முடியுமா மேடம்?” எனக் கேட்டான்.

ஏ லெவல் என்பது, வெளி நாட்டுக்குப் படிக்கப் போகும் முன்னே, உள்ளூரிலேயே தனியாரில் பணம் கட்டிப் படிக்கும் முன்னோட்டப் படிப்பாகும்! டிப்ளோமா முடித்தும் டிகிரி போகலாம், அல்லது மலேசிய அரசாங்கப் பள்ளியில் எஸ்.டி.பி.எம் எனும் படிப்பை முடித்தும் லோக்கல் யூனிவெர்சிட்டிக்குப் போகலாம். அல்லது பணம் படைத்தவர்கள் ஏ லெவல் எடுத்தும் உள்ளூரிலோ, வெளியூரிலோ ப்ரைவட் காலேஜூக்கு டிகிரி படிக்கப் போகலாம்.

யோசனையாக அவனைப் பார்த்தவள்,

“அதாவது வசூல் ராஜாவுக்கு(கமல்) மார்கபந்து(க்ரேசி மோகன்) பரீட்சை எழுதனது போல நீ எனக்கு எழுத முடியாதுன்னு சொல்லற!! அப்படி இங்க சீட்டிங் பண்ணவும் முடியாது! டவுசர அவுத்து அடிப் பின்னிடுவானுங்க! சரி விடு! நானே கணக்குப் போட்டுப் பழகறேன்! இனிமே நீதான் எனக்கு ஃபர்தர் மேத்ஸ்கு டியூசன் டீச்சர்! நைட்டு எட்டரைல இருந்து பத்து வரைக்கும், தினம் கிளாஸ் எடுக்கற நீ! இது என்னோட ஆர்டர்” என அலுங்காமல் குண்டைத் தூக்கி அவன் தலையில் போட்டு விட்டுக் கிளம்பி விட்டாள்.

சில நிமிடங்கள் அதிர்ச்சியில் விக்கித்து நின்றவன், அவள் உடல் நிலை நினைவு வர,

“மேடம்! கிரேப்(grab) புக் பண்ணிக்கங்க” எனச் சொன்னான்.

“நாங்கலாம் சுனாமிலயே சுவிம் பண்ணற பரம்பரை! இந்த சாதாரண காய்ச்சல் என்னை என்ன பண்ணிடும்! த்தா!! விடு பார்த்துக்கலாம்” என அவனைப் பார்த்து ஒற்றைக் கண் சிமிட்டி சொல்லியவள்,

“அடி ஜூம்பா ஜெயிப்பதிந்த பாண்டியன்தான்” என நக்கலாகப் பாடியபடியே காரைக் கிளப்பிக் கொண்டு போனாள்.
 

CRVS2797

Active member
Aug 4, 2024
123
-47
43
உண்மையாவே கிளிக்கு ரொம்பவே ரவுசு தான்.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin