
அத்தியாயம் 1
பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வர வேண்டும்!
“தாமரை!”
“இதோ வந்துட்டேன்பா” எனக் குரல் கொடுத்தபடியே சமையலறையில் இருந்து வந்தாள் செந்தாமரை.
கையில் இருந்த காபி டம்ளரை தந்தை கந்தனிடம் நீட்டியவள்,
“முதல்ல காபியைக் குடிங்கப்பா! அங்க போனா, எத்தனை மணிக்கு சாமி கும்பிட்டு முடிச்சு சாப்பாடு போடுவாங்களோ!” என்றாள்.
கண்ணை உறுத்தாத இள நீல வண்ணத்தில் காட்டன் புடவை அணிந்து, அமரிக்கையாக நின்றிருந்த மகளைப் பார்த்தபடியே காபியை அருந்தினார் கந்தன்.
“என்னப்பா, பார்வைலாம் பலமா இருக்கு?” எனச் சின்னச் சிரிப்புடன் கேட்டாள் இவள்.
“அம்மா போலவே நல்ல அழகும்மா நீ! பேருக்கேத்தது போல நிறம்! அப்படி இருந்தும், கல்யாண யோகம் அமையாமத் தள்ளிட்டே போகுதே! உங்கம்மா உசுரோட இருந்திருந்தா, இருபத்து எட்டு வயசு வரைக்கும் உன்னைக் கட்டிக் குடுக்காம வீட்டோட இருக்க வச்சிருப்பாளா? கொண்டைய அள்ளி முடிஞ்சுக்கிட்டு, ஜாதகக் கட்ட கைல தூக்கிக்கிட்டு, ஊரெல்லாம் அலசி, உனக்கேத்தவன கட்டி வைக்காம ஓஞ்சிருக்க மாட்டா! அவ மாடு முட்டி செத்ததுக்குப் பதில் நான் செத்திருக்கலாம்!” எனக் கண் கலங்கினார் அவர்.
“என்னப்பா இது! கண்ணைத் துடைங்க! எதெது எப்ப நடக்கனுமோ, யாராருக்கு எப்ப முடிவு வரனுமோ, எல்லாம் கடவுள் விதிச்சபடிதான் நடக்கும்! போய் முகத்த கழுவிட்டு வாங்க! கிளம்பலாம்” என மிரட்டி அவரை குளியலறைக்கு அனுப்பி வைத்தாள் செந்தாமரை.
இவளது பார்வை சுவரில் மாட்டப்பட்டிருக்கும் தாயின் படத்தில் நிலைத்தது. அந்தக் குடும்பத்துக்கே அச்சாணி அவர். கந்தன் ஓர் அப்புராணி மனிதர். வேலைக்குப் போவார், சம்பாதிப்பார். சம்பளப் பணத்தை அப்படியே கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்து விடுவார். வீட்டைப் பராமரித்தது, பிள்ளையை வளர்த்தது, கட்டுச் செட்டாய் குடும்பம் நடத்திப் பணம் சேர்த்தது, ஆடு, மாடு, கோழி என வளர்த்து இன்னும் பணம் ஈட்டியது எல்லாம் இவள் அம்மாத்தான். இவள் டீச்சர் ட்ரைனிங் முடித்து, வீட்டில் இருந்த போதுதான் அந்தத் துக்கச் சம்பவம் நடந்தேறியது.
மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, வீடு வந்து கொண்டிருந்தவரை யமன் தனது வாகனத்தையே கொண்டு முட்டிச் சாய்த்து விட்டான். அரசாங்க மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள் அவரை. ஆனாலும் காப்பாற்ற முடியவில்லை. இடிந்து போய் விட்டார்கள் அப்பாவும், மகளும். அதன் பிறகு வீட்டு நிர்வாகம் இவள் கைக்கு வந்து விட்டது. முன்பு போலவே கந்தன் வேலைக்குப் போனார், வீட்டுக்கு வந்தார், சம்பளத்தை மகளிடம் தந்தார். ஆனால் அவர் முகத்தில் சோகம் நிரந்தரமாய் அமர்ந்து கொண்டது.
இவளும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறாள். இன்னும் திருமணம் கூடி வந்திருக்கவில்லை. அது ஒரு பெருங்கவலை கந்தனுக்கு. அந்தக் கவலையே அவரது உடலையும் உள்ளத்தையும் உருக்கிக் கொண்டிருந்தது. இருவருமே வேலைப் பார்க்க, வீட்டில் வளர்த்து வந்த ஆடு மாடுகளை மனதைக் கல்லாக்கிக் கொண்டு விற்று விட்டார்கள்.
அப்பாவும் மகளும் கந்தனுடைய அண்ணன் மகளின் இரண்டாவது வருட திவசத்துக்குச் செல்லத்தான் கிளம்பி இருந்தார்கள். அண்ணன், தம்பியின் வீடு ஒரே ஏரியாவில், வேறு தெருக்களில் இருந்தது. இருவருக்குள்ளும் பெரிதாய் ஒட்டுதல் இல்லை. வா, போ, இரு, சாப்பிடு என்பதோடு முடிந்து விடும் அண்ணன் தம்பி இருவரின் பேச்சு வார்த்தைகள். சண்டை என்றெல்லாம் ஒன்றுமில்லை. அப்படியே வளர்ந்து விட்டார்கள். தாமரையின் அம்மா இருந்த வரை, உறவை இழுத்துப் பிடித்து வைத்திருந்தார். மகளுக்குத் திருமணம் ஆகும் போது உறவுகளின் உதவி தேவை என்பதால் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் நல்லபடியே பழகுவார் அவர்.
ஆனாலும் யாருக்கும் பண உதவி எனச் செய்வது குறைவுதான். விவரம் இல்லாத கணவரை வைத்துக் கொண்டு, மகளைக் கரை சேர்க்க வேண்டுமே! ஆகையால் பண விஷயம் என்றால் கறாராகத்தான் இருப்பார். மற்றபடி தெரிந்தவர்கள் வீட்டு விசேஷம் என்றால் இழுத்துப் போட்டுக் கொண்டு வேலைப் பார்ப்பார். அவர் இல்லாமல் போய் விட, அப்பாவும் மகளும் வேலை, வீடு என அப்படியே முடங்கி விட்டார்கள்.
பெரியப்பாவின் வீட்டுக்குள் நுழையும் போதே, சாம்பிராணி மற்றும் ஊதுபத்தியின் கலவையான வாசம் மூக்கை நிரடியது. ஹாலில் மாட்டப்பட்டிருக்கும் நிவேதாவின் படம், இறக்கிக் கீழே வைக்கப்பட்டிருந்தது. படத்துக்குப் மாலை போட்டு, பெரிதாய் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார்கள். அந்தப் படத்தைப் பார்க்கும் போதே இவளுக்குக் கண்கள் கலங்கியது.
இருவரும் ஒரே பள்ளியில்தான் படித்தார்கள். இவளை விட நிவேதாவுக்கு இரண்டு வயது அதிகம். சாப்பாட்டு நேரத்தில், வீட்டில் இருந்து கொண்டு வந்திருக்கும் உணவை இவளுக்கும் கொடுப்பாள். அதோடு, இவள் தட்டில் இருப்பதை எடுத்து உரிமையாய் சாப்பிடுவாள். அவளும் இவளைப் போலவே வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளைதான்.
“யாராச்சும் அடிச்சா. அக்கா கிட்ட சொல்லு! என்ன சேதின்னு கேட்டுடறேன்” என இவளுக்கு ஆதரவாய் நிற்பாள்.
அக்காவெனச் சொல்லிக் கொள்வதில், இவள் மீது ஆதிக்கம் செலுத்துவதில் அப்படி ஓர் இஷ்டம் அவளுக்கு. தொடக்கப் பள்ளி மட்டும்தான் ஒன்றாய் படித்தார்கள். அதன் பிறகு சென்னையில்தான் நல்ல படிப்பு சொல்லிக் கொடுக்கிறார்களாம் எனச் சொந்தக்காரர்கள் பேச்சைக் கேட்டு நிவேதாவை சென்னையில் இருந்த இடைநிலைப் பள்ளியில் சேர்த்து விட்டார்கள். அங்கேயே ஹாஸ்டலில் தங்கிக் கொண்டாள். விடுமுறைக்குச் சில தடவைகள் வருவாள். பள்ளிப் பாடங்கள் குவிந்து கிடக்க, இந்தத் தங்கையிடம் அளவளாவ நேரம் இருந்தது இல்லை அவளுக்கு.
பிறகு சென்னையிலேயே கல்லூரி, படிப்பு முடிந்த கையோடு திருமணம் என இவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல உறவு இல்லாமலேயே போய் விட்டது. இப்பொழுது பூமியிலேயே இல்லாமல் போய் விட்டவளின் படத்தைப் பார்த்து,
‘நானாச்சும் உன் கூட பேசி பழக முயற்சி எடுத்திருக்கலாம்க்கா! இவ்ளோ சீக்கிரமா விட்டுட்டுப் போய்டுவன்னு தெரியாம போச்சு’ எனத் துக்கத்துடன் எண்ணிக் கொண்டாள் தாமரை.
“வாடி தாமரை! பக்கத்துல இருக்கறவங்களே கரேக்டான டைமுக்கு வந்தா எப்படி? எனக்கும்தான் யார் இருக்கா உதவி, ஒத்தாசைன்னு எடுத்து செய்ய” எனக் கண்ணைக் கசக்கினார் இவளது பெரியம்மா.
“வரேன் பெரியம்மா! சொல்லுங்க என்ன செய்யனும்?” என அவரைப் பின்பற்றிப் போனாள் இவள்.
இவர்கள் நிறைய ஆட்களை அழைத்திருக்கவில்லை. அழைக்கப்பட்டிருந்தவர்களும் இன்னும் வந்திருக்கவில்லை. சமையலறையில் படையலுக்கான சமையலும், வருபவர்கள் சாப்பிடுவதற்கான சமையலும் நடந்து கொண்டிருந்தது.
“வடை, இட்லி, இடியாப்பம் மாதிரி டிபன் ஐட்டமெல்லாம் வெளிய சொல்லிருக்கோம். வீட்டுல சாம்பார், சாதம், ஒரு பொரியல், இப்படி சிம்பிளாத்தான் செய்யறோம்! மாப்பிள்ள அனாதைப் புள்ளைங்க ஆஸ்ரமத்துக்கு சாப்பாடு அரேஞ் பண்ணிருக்காரு! வீட்டுல ரொம்ப சமைக்கலாம் வேணாம்னு சொல்லிட்டாரு! அவரு பேச்சுக்கு உங்க பெரியப்பா மறு பேச்சு பேச மாட்டாரு” எனச் சொல்லியபடியே, வெட்ட வேண்டிய காய்கறிகளை இவளிடம் கொடுத்தார் இவள் பெரியம்மா அன்னபூரணி.
“பாப்பா எங்க பெரியம்மா?”
“இன்னும் படுத்திருக்கா! நைட்டுத்தானே வந்தாங்க! கண்ணைத் திறக்க முடியல குட்டிக்கு”
“பாட்டி!”
இவர்கள் இருவருமே திரும்பிப் பார்த்தார்கள். தூக்கக் கலக்கம் மிகுந்திருந்த கண்ணைக் கசக்கியபடி நின்றிருந்தாள் குட்டிப் பெண் ஒருத்தி.
“வாடாம்மா பூக்குட்டி” என முகம் மலர பேத்தியைத் தூக்கிக் கொண்டார் அன்னபூரணி.
அவரது தோளில் சாய்ந்து கொண்டு, இவளைப் பார்த்துப் புன்னகைத்தாள் அந்தக் குட்டி.
இவளும் புன்னகைக்க,
“குட் மார்னிங் ஆண்ட்டி” என அழகாக வாழ்த்து சொன்னாள் அவள்.
“குட் மார்னிங்டா”
திருமணமாகி நிவேதா சென்னையில்தான் வசித்தாள். பிரசவத்தின் போது ஊருக்கு வந்திருந்தாள். அப்பொழுது இவளைத் தூக்கி வைத்து விளையாடி இருக்கிறாள் தாமரை. அதன் பிறகு அவ்வப்பொழுது அவள் வந்து போனாலும், சில மணி நேரங்கள் மட்டுமே இந்தப் பூந்தென்றலுடன் நேரம் செலவளித்திருக்கிறாள் தாமரை. அதனால்தான் அந்நியமாய் இவளைப் பார்த்தாள் சின்னவள்.
“பாட்டி பூஸ்ட் கலக்கவாடா ராஜாத்தி?”
“பல்லு தேய்க்கனும் பாட்டி! அப்படியே குளிச்சிடனும். பிறகுதான் சாப்பிடனும்! இல்லைனா அப்பா ஸ்கோல்ட் பண்ணுவாங்க”
“இன்னிக்கு ஒரு நாள் பூஸ்ட் குடிச்சிட்டு, பல்லு தேய்ச்சுக்கலாம்டா”
“நோ!” எனத் தலையாட்டினாள் அவள்.
கலைந்து கிடந்த முடி அங்கும் இங்கும் ஆட, அவ்வளவு கியூட்டாய் இருந்தது அவளைப் பார்க்க.
“குடுங்க பெரியம்மா அவள! நான் பல்லு தேய்ச்சு விட்டு, குளிப்பாட்டி கூட்டி வரேன்” எனத் தூக்கிக் கொண்டாள் இவள்.
“செய்மா தாமரை! இவ அப்பாவும், ரெண்டு தாத்தாவும் கோயிலுக்குப் போயிருக்காங்க! இல்லைனா மாப்பிள்ளையே இவள கிளப்பி விட்டுருவாரு! இப்ப அடுப்ப விட்டு நான் நகர்ந்தா சாம்பார் அடிப் பிடிச்சிடும்!” என அவர் சின்னவளின் பொறுப்பைத் தாமரையிடம் தந்தார்.
அவளைத் தூக்கிக் கொண்டு குளியலறை நோக்கி நடந்தாள் செந்தாமரை.
“ஆண்ட்டி!”
“என்னம்மா?”
“நீங்க குளிப்பாட்டுனா எனக்கு ஷையா இருக்குமே” எனத் தலையை ஆட்டிப் பேசினாள் குட்டி.
காதில் அவள் அணிந்திருந்த குட்டி ஜிமிக்கியும் சேர்ந்து அவளோடு ஆடியது.
“கியூட்டு குட்டிடா நீ” என்ற தாமரை, சின்னவளின் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தமிட்டாள்.
கன்னத்தில் முத்தமிட்டால் கள் வெறி கொள்ளுதடி என்பதின் அர்த்தம் அன்றுதான் விளங்கியது இவளுக்கு.
“அவள என் கிட்ட குடுங்க” எனும் குரலில் பின்னால் திரும்பிப் பார்த்தாள் தாமரை.
அங்கே அவளது அக்காவின் கணவன் தினகரன் நின்றிருந்தான். அவனிடம் தேவைப்பட்ட போது ஓரிரு வார்த்தைகள் தவிர, பெரிதாய் பேசியதில்லை இவள்.
“இல்ல! குளிப்பாட்டி விடலாம்னு” எனத் தயங்கியபடி சொன்னாள் தாமரை.
“நான் பார்த்துக்கறேன் குடுங்க!” என்றவனின் கறார் குரலில், குழந்தையை அவனிடம் நீட்டினாள் இவள்.
“கீழ இறக்கி விடுங்க” என்றவனின் குரலில் எரிச்சல் இருந்தது.
‘ஓ!! நேரா குடுத்தா நம்ம கை பட்டுடும் போல அவர் மேல! இவர தொட்டுப் பார்க்கத்தான் நான் ஏங்கிக்கிட்டு இருக்கேன் பாரு!!’ எனக் கடுப்பாகிப் போனவள், சின்னவளைக் கீழே இறக்கி விட்டு விட்டு விடுவிடுவென சமையலறைக்குப் போய் விட்டாள்.
பூந்தென்றல் குளித்து முடித்து அழகான பாவாடை சட்டையில் வந்து, இவளை உரசிக் கொண்டு நின்ற போது கூட வேலை இருப்பது போல வேறு பக்கம் அகன்று விட்டாள் தாமரை. திருமணமாகாதவள்தான்! ஆனால் ஆண் துணைக்கு அலைகிறவள் இல்லை. மனம் என்னவோ தினகரனின் செய்கையில் காயப்பட்டுப் போனது.
ஐயரும் சில சொந்தங்களும் வந்து விட பூஜை தொடங்கியது. மேற்சட்டை போடாமல், வேட்டியில் அமர்ந்திருந்த தினகரன், தனது ஐந்து வயது மகளை கூடவே வைத்துக் கொண்டு சாங்கியங்களைச் செய்தான். பூந்தென்றலுக்கு மூன்று வயதாகி இருந்த போது, மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, பல சிகிச்சைகள் அளித்தும், எதுவும் பலன் தராமல் உயிரை நீத்திருந்தாள் நிவேதா.
தந்தையோடு சென்னைக்குப் போய் மருத்துவமனையில் அவளைப் பார்த்து விட்டு வந்திருந்தாள் தாமரை. நிவேதாவால் பேசக் கூட முடியவில்லை. இவள் கையைப் பற்றிக் கொண்டு கண்ணீர் மட்டும் வடித்தாள். மீண்டும் இன்னொரு முறை பார்க்கப் போன போது,
“உங்கள பார்த்தா ரொம்ப இமோஷனல் ஆகறா! தூங்க மாட்டறா! அதனால இனி அவள பார்க்க வராதீங்க” எனச் சுவரைப் பார்த்தபடி சொல்லி இருந்தான் தினகரன்.
இவளால் நிவேதா துன்பப்பட வேண்டாம் எனச் சென்னைக்குப் போவதை நிறுத்தி விட்டாள் செந்தாமரை. அதன் பிறகு நிவேதாவின் இறப்புக்குத்தான் போனாள்.
ஐயர் சத்தமாய் ஏதோ மந்திரம் சொல்ல, இவளது கவனம் மீண்டும் நிவேதாவின் படத்தின் மேல் போனது.
“இந்தப் பிஞ்சுக் குழந்தைக்காகவாவது கடவுள் உன்னை உயிரோட வச்சிருந்திருக்கலாம்கா” என முணுமுணுத்தவளுக்குக் கண்ணீர் பொங்கி வழிந்தது.
Last edited:
Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 1
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Pirithor Nesamithu--EPI 1
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.