Pirithor Nesamithu--EPI 10

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
அத்தியாயம் 10

பூத்துப் பூத்துக் குலுங்குதடி பூவு

அதைப் பார்த்துப் பார்த்து மனசுக்குள்ள நோவு!




“அம்மா! அம்மா!” என முனகிய செந்தாமரைத் திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கனவில் தாய் முகம். அவர் முகத்தைப் பார்க்கும் கொடுப்பினை எல்லாம் கனவில்தானே என எண்ணிக் கொண்டவள் தன்னையே திட்டிக் கொண்டாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் கண்ணை மூடித் தூங்கி தொலைச்சிருக்க வேண்டியதுதானேடி! அதுக்குள்ள யாரு முழிச்சுக்க சொன்னா! இப்போ பாரு மறைஞ்சுப் போச்சு அம்மா முகம். மட்டி!” எனப் பெருமூச்சுடன் முணுமுணுத்தவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

அவள் அருகே சின்னக்குட்டி நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள். சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்க்க, மணி பன்னிரெண்டு பத்து எனக் காட்டியது அது. குழந்தையின் அந்தப் பக்கம் ஆளில்லாமல் போக, இன்னும் தினகரன் வந்திருக்கவில்லை எனப் புரிந்தது இவளுக்கு. அலட்டிக் கொள்ளவில்லை பெண். மனதில் மாமா எனப் பதிந்திருந்தால் அக்கறை வரும். இன்னும் அக்கா கணவராய் இருந்தது போல தினகர் மாமா எனத்தானே அழைக்கிறாள். அக்கறை, சர்க்கரை எல்லாம் எங்கிருந்து வரும்.

குழந்தைக்கு நன்றாகப் போர்த்தி விட்டவள், கீழே போய் சில்லென ஜூஸ் எதாவது குடிக்கலாம் எனப் படி இறங்கினாள். வீடு இருட்டாய் இருந்தது. சமையலறையில் மட்டும் மெலிதாய் வெளிச்சம் வந்தது. அதை நெருங்கும் போதுதான், தினகரன் தனியாய் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்தாள் செந்தாமரை.

என்னவோ மனதைப் பிசைந்தது இவளுக்கு. அப்பா வீட்டில் இருந்த வரை அவரோடுத்தான் சாப்பிடுவாள் தாமரை. பள்ளியில் சக ஆசிரியைகளுடன் அமர்ந்து சாப்பிடுவாள். இப்பொழுதெல்லாம் பூக்குட்டியுடன்தான் அவளது உணவு நேரம். தனியாய் சாப்பிடுவதை அறவே வெறுத்தாள் தாமரை. அப்படிச் சாப்பிட நேர்ந்தால், தாய் உணவு பரிமாறும் போது அழகாய் ஆடும் தங்க வளையல்கள், இன்னும் கொஞ்சம்டா கண்ணு எனக் கெஞ்சும் குரலோசை, அவர் சமைத்த உணவின் சுவை என எல்லாம் ஞாபகம் வந்து சாப்பிட முடியாமல் நெஞ்சம் விம்மும். அதனாலேயே தனியாய் சாப்பிடுவதைத் தவிர்க்கப் பார்ப்பாள் தாமரை.

கண்ணில் காணாதவரை அலட்சியமாகக் கடந்து போயிருந்தவள், தனியாய் அவன் சாப்பிடுவதைப் பார்த்ததும் உள்ளுக்குள் தவித்துத்தான் போனாள். அவன் மேல் கோபம், ஆதங்கம், கடுப்பு எல்லாம் இருந்ததுதான். இப்பொழுது அதெல்லாம் பின்னால் போய் தாய்மை உணர்வு முன்னே வந்து நின்றது. இந்தத் தாய்மை உணர்வு இருக்கிறதே, அது பெண்களுக்குக் கடவுள் கொடுத்தனுப்பிய வரமென எண்ணியும் கொண்டாடலாம். சாபமென எண்ணியும் திண்டாடலாம்.

இரவுதான் கணவன் திட்டோ திட்டெனத் திட்டி விட்டிருப்பான்! கோபத்தில் அவனிடம் இனி ஜென்மத்துக்கும் பேசவே கூடாது என விடைத்துக் கொண்டுப் படுப்பாள் மனைவி. காலையில் காபி வேண்டும் எனக் கேட்கத் திணறியபடி அங்கிக்கு அவன் உலாத்துவதைப் பார்த்ததும் மனமிறங்கி குழந்தைகளிடம் காபி கொடுத்து அனுப்பும் அந்தத் தாய்மை உணர்வு இருக்கிறதே, அது வரமா சாபமா என உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன்!

அடுத்த இட்லியை இவன் கை நீட்டி எடுக்கும் முன், இவள் எடுத்து அவன் தட்டினில் வைத்திருந்தாள். நிமிர்ந்து தாமரையைப் பார்த்தவன்,

“என்ன லோட்டஸ், இன்னும் தூங்கலியா? நிலவு வந்தா தூங்கி, சூரியன் வந்தாத்தான் முழிக்கும் தாமரைன்னு நெனைச்சேனே?” எனக் கிண்டலடித்தபடியே சாப்பிட்டான் தினகரன்.

“சூரியன்(தினகரன்) வந்தாச்சே! அதான் தாமரை எழுந்து வந்திருக்கு” என்றவளைப் பார்த்து,

“ஓஹோ! நீ அப்டி வர!” எனப் புன்னகைத்தான் இவன்.

“இட்லி மட்டும் போதுமா தினகர் மாமா? ஆம்லேட் ஒன்னு போட்டுத் தரவா?” எனக் கேட்டாள் இவள்.

“இல்ல வேணாம்! என்ன திடீர் அக்கறை மேடம் தாமரைக்கு?”

“அக்கறையான்னு தெரியல தினகர் மாமா! பார்க்காத வரைக்கும் தெரிஞ்சுக்கல! தனியா சாப்பிடறத பார்த்ததும் கொஞ்சமா ஃபீலாகிடுச்சு! இனி நீங்க வேலை முடிச்சிட்டு வர வரைக்கும் வேய்ட் பண்ணறேன்”

“தனியா சாப்பிடறது எனக்குப் புதுசில்ல தாமரை! அம்மா இல்லாம போனதும், சுயமா எல்லாம் செய்ய கத்துக்கிட்டேன்! நிவி கூடவும் சேர்ந்து சாப்பிட்டதுலாம் கொஞ்ச காலம்தான். அதனால நீ மெனக்கெட வேணாம்! வேலைக்கும் போய்ட்டு வந்து, சின்னவளையும் கவனிச்சுக்கற! உனக்கு நல்ல ரெஸ்ட் தேவை! அதோட என் வயித்துக்கும் இதயத்துக்கும் எந்த ஷார்ட் ரூட்டும் இல்ல! சோ டைம் வேஸ்ட் பண்ணாதே” என்றவனை ஆழ்ந்து நோக்கினாள் செந்தாமரை.

“தினகர் மாமா”

“ஹ்ம்ம்”

“நான் எதுக்கு இந்த வீட்டுக்கு வந்திருக்கேன்?”

“சின்னக்குட்டியைப் பார்த்துக்க”

“அதை நீங்களும் நல்லா ஞாபகத்துல வச்சிக்கிட்டா நல்லதுன்னு நெனைக்கிறேன்! சின்னப் பூவைப் பார்த்துக்கறதுதான் என் கடமை. சிடுமூஞ்சி பூதத்தைப் பார்த்துக்கறது இல்ல. என்னமோ பாவப்பட்டு தட்டுல ஓர் இட்லி எடுத்து வச்சதுக்கு, இத்தாலி வரைக்கும் பேச்சு நீளுது!” எனப் பேசியபடியே இன்னும் ஓர் இட்லியை இவள் வைத்திருக்க, அவனும் அதைச் சாப்பிட்டு முடித்திருந்தான்.

கையையும் தட்டையும் கழுவியவன், மீதி உணவை ஃப்ரிட்ஜில் வைக்க முனைய,

“நான் வச்சிக்கறேன்! பூக்குட்டி தனியா இருக்கா! நீங்க மேல போங்க!” என்றாள் தாமரை.

போகும் முன்னே,

“சைக்கில் கேப்புல என்னை பூதம்னு சொல்லிட்டல்ல லோட்டஸ்! பூதத்துக்குக் கோபம் வந்தா என்ன செய்யும் தெரியுமா?” எனக் கேட்டவன், அவள் சுதாரிக்கும் முன்னே பைப்பில் இருந்து கையில் தண்ணீர் பிடித்து அவள் முகத்தில் தெளித்து விட்டு ஓடி விட்டான்.

“யோவ் மாமா! இதெல்லாம் சின்னப்புள்ளைத்தனமா இல்லை!” எனக் கத்தியவள், கடுப்புடன் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

வெளியே சத்தம் கேட்கவும் எழுந்து வந்திருந்த அதியமான், மகனுக்கு மருமகள் உணவிட்டதையும், சின்னப் பையன் போல அவன் துள்ளி ஓடியதையும் பார்த்துப் புன்னகையுடன் மீண்டும் படுக்கப் போனார்.

மறுநாள் மருமகளையும், பேத்தியையும் பள்ளியில் இருந்து ஏற்றிக் கொள்ள வந்திருந்தார் அதியமான். இரு பெண்களும் காரில் ஏறியதும், கார் புறப்பட்டது. வீட்டுக்குப் போகாமல் வேறு வழியில் கார் பயணிக்க,

“தாத்தா! வேர் ஆர் வீ கோயிங்?” எனக் கேட்டாள் பூந்தென்றல்.

“ஹோட்டல்ல டிபன் சாப்பிட்டுப் போகலாம்மா!”

அதை கேட்டதும் ஒரே குஷி சின்னவளுக்கு. வீட்டில் என்னதான் வகை வகையாய், ருசி ருசியாய் சமைத்துக் கொடுத்தாலும் ஹோட்டலில் சாப்பிடுவதென்றால் குதூகலம்தான் குழந்தைகளுக்கு. வெளியே அமர்ந்து சாப்பிடும்படி இருந்த ஹோட்டல் ஒன்றுக்கு இவர்களை அழைத்துப் போனார் அவர். அங்கே குழந்தைகள் விளையாடும் இடமும் இருந்தது.

காபி, ஸ்நாக்ஸ் என ஆர்டர் செய்தவுடனே, ஊஞ்சல் விளையாடப் போவதாக ஓடி விட்டாள் பூந்தென்றல். இவர்கள் கண் முன்னேயே அந்த விளையாட்டு இடம் இருக்க, அமர்ந்தபடியே அவள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டாள் தாமரை.

“யம்மா” என அழைத்தார் அதியமான்.

“சொல்லுங்க மாமா”

தாமரை அதியமானிடம் மரியாதையாக ஒரு அடி தள்ளித்தான் நிற்பாள். அவர் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்வாள்! தானாகவே பேச வராது! மடக்கி மடக்கிப் பேசுவதெல்லாம் அவர் பெற்ற மகனிடம் மட்டும்தான். அமைதியானத் தாமரையை அராத்து தாமரையாக மாற்றி விடுகிறது அவனுடைய சீண்டல்கள்.

அவரிடமிருந்து பதில் வராமல் போக, சின்னவள் மீது இருந்த பார்வையை இவர் புறம் திருப்பினாள் தாமரை. அவர் முகம் சோகச் சாயலைப் பூசி இருந்தது.

“என்ன மாமா?” எனக் கேட்டவளின் குரலில் அக்கறை இருந்தது.

“தினகரன பத்தி உன் கிட்ட கொஞ்சம் பேசனும்மா!”

கேள்வியாக அவர் முகத்தை ஏறிட்டாள் பெண்.

“கணவன் மனைவி உறவுக்குள்ள அப்பா, அம்மாவுமா இருந்தாலுமே, தலையிடறது தப்புன்னு நெனைக்கறவன் நான். ஆனாலும் எனக்கு வேற வழி தெரியலைம்மா! உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சதுல இருந்து மேலோட்டமா கவனிச்சிட்டுத்தான் இருக்கறேன்! நீ ஒரு பக்கம், அவன் ஒரு பக்கம்னு போறீங்க! எடுத்தவுடனே அந்நியோன்யமா இருங்கன்னு நான் சொல்ல வரல. முதல் திருமணத்துலயே அதெல்லாம் சட்டுன்னு வாய்க்கறது கஷ்டம்தான். ஆனாலும் ஒரு நட்புறவா இருக்கலாம்லமா! நட்பு அன்ப விதைக்கும், அன்பு பரிவ கொண்டு வரும்! பரிவு காதல பரிசளிக்கும். கடைசி வரைக்கும் நீ பூக்குட்டிக்கு அம்மாவா மட்டும் வாழ்ந்து முடிச்சிடலாம்னு இருக்கியா?”

இவள் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், அமைதியாய் இருந்தாள்.

“மனுஷ வாழ்க்கை நிரந்தரம் இல்லைமா! இன்னிக்கு உள்ளவன் நாளைக்கு இல்ல! கண்டதையும் நினைச்சு, கவலைகளை மட்டும் விதைச்சு நிகழ்கால வாழ்க்கையைப் பாழாக்கிக்காதீங்க! என் மகன்றதுனால மட்டும் நான் சொல்லலமா! உனக்காகவும்தான் சொல்றேன்! தினகரன் இருக்கானே, அவன் ஒரு சைக்கோ”

இவள் அதிர்ச்சியாக மாமனாரைப் பார்த்தாள். அவரோ இவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“அன்பு செலுத்தறதுல சைக்கோன்னு சொல்ல வந்தேன்மா! எல்லாரையும் இவன் நல்லா பார்த்துப்பான். ஆனா இவன பார்த்துக்க யாரும் இல்லைமா! என் மனைவி இறந்ததும், சோகத்துல வேலைல மூழ்கிட்டேன் நான். இவன சரியாவே கவனிச்சுக்கல! ஆனா இவன், அவங்கம்மா என்னைப் பார்த்துக்கற மாதிரியே அக்கறையா பார்த்துக்கிட்டான். உங்கக்காவையும் அப்படித்தான் அனுசரணையா கவனிச்சிக்கிட்டான். இப்போ அவன் பெத்த மகள கவனிச்சிக்கறான். அவனுக்கு அன்ப குடுத்துப் பழக்கமாகிடுச்சு! அதை மத்தவங்க கிட்ட இருந்து எடுத்துக்கத் தெரியல! இன்னும் கொஞ்சம் நல்லா உன் கிட்ட பழகிட்டானா, உனக்கும் அன்ப குடுக்க ஆரம்பிச்சிடுவான்” எனச் சொல்லி நிறுத்தியவர்,

“குடுக்கறதுல மட்டும் இல்ல, வாங்கிக்கறதுலயும் சுகமிருக்குன்னு அவனுக்குப் புரிய வைம்மா! நீயும் சந்தோஷமா இருப்ப! அவனும் சந்தோஷமா இருப்பான்” என்றார்.

இவளுக்குக் குழப்பமாக இருந்தது. பிறரிடம் அன்பைக் காட்டுபவன், தன்னிடம் மட்டும் அடிக்கடி முறைத்தபடி திரிவானேன்? மனது வலிப்பது போல சில சமயங்களில் பேசி வைப்பானேன்? நீயே சம்பாதித்துக் கொள் என கை கழுவி விடுவானேன்? மகளுக்கு பெண் துணை அவசியம் என்பதற்கு மட்டுமே தன்னைத் திருமணம் செய்தவன், நிவேதாவின் இடத்தில் இவளா எனும் காதல் மனது சண்டைப் போடும் பொழுதுகளில், அந்த அழுத்தத்தைத் தன் மேல் இறக்கி வைக்கிறான் என ஏற்கனவே ஒரு முடிவிற்கு வந்திருந்தாள். அது மாதிரி நேரங்களில் ஒதுங்கி போய் விடலாம் என நினைத்தாலும், அவனது சீண்டல்கள் இவளை சிலிர்த்துக் கொண்டு சண்டைப் போட வைத்து விடுகின்றன.

அதியமான் அவள் முகத்தையே பார்த்திருக்க, சரியெனத் தலையாட்டி வைத்தாள் செந்தாமரை. காலம் முழுக்க பூந்தென்றலின் சித்தி எனும் அடையாளம் மட்டும் போதுமா என மாமனார் கேட்டது மனதைப் போட்டு உளப்பியது. இவள் என்ன உணர்வும் உணர்ச்சியும் மரத்துப் போன பெண்ணா? அல்லது விளைச்சலுக்கு உதவாத பொட்டல் மண்ணா? மாதவிடாய் வருவதற்கு முன்பான நாட்களில் உடல் கொதிக்கத்தான் செய்தது. உணர்ச்சி வெடிக்கத்தான் செய்தது. பனியிரவுகளில் உடம்பு முறுக்கிப் போடத்தான் செய்தது. ஓர் ஆணின் அணைப்பு, அவனின் தகிக்கும் தீண்டல், மூச்சடைக்கும் முத்தங்கள் எல்லாம் எப்படி இருக்கும் எனக் கற்பனை விரியத்தான் செய்தது. உடம்பை அடக்கி வைத்தாலும் உள்ளத்தை அடக்கும் வித்தைத் தெரிந்திருக்கவில்லையே பேதை பெண்ணுக்கு.

‘எனக்கும் வாழனும்! சாப்பிட்டேன், தூங்கினேன், வேலைக்குப் போனேன் என உப்புச் சப்பில்லாத ஒரு வாழ்க்கை வேணாம்! காதல், காமம்லாம் இல்லாட்டியும் போகுது! பாசத்தோட கன்னத்து முத்தம், தலை கோதும் விரல்களின் ஸ்பரிசம், அன்னைக்கு பீச்ல விழாம இறுக்கப் பிடிச்சிக்கிட்ட கையோட வெப்பம், அழும் போது தாங்கிக் கொள்ளும் பரந்த நெஞ்சம்னு எனக்குக் கொஞ்சமே கொஞ்சம் இளைப்பாற ஓர் ஆண் நிழல் வேணும்! அதாவது என் புருஷனோட நிழல் வேணும்’ என இவள் எண்ணமிட்டப்படி இருக்க, ஓடி வந்து இவள் மேல் விழுந்தாள் பூந்தென்றல்.

அவளது அதிரடியில் ஒரு குலுங்குக் குலுங்கி கீழே விழாமல் சமாளித்தாள் செந்தாமரை. அந்தக் குலுக்கலில் உள்ளே இருந்த தாலி சேலை வெளியே வந்து விழுந்திருந்தது. இத்தனை நாள் ஓர் ஆபரணமாக அதைப் பார்த்தவள், அன்றிலிருந்து ஆத்மார்த்த பந்தமாகப் பார்க்க ஆரம்பித்தாள்.

‘தினகர் மாமாவ மயக்கி முந்தானைல முடிஞ்சுக்கற வேலைலாம் நான் பார்க்க மாட்டேன்! அது எனக்கு வரவும் வராது! தினகர எடுத்துட்டு வெறும் மாமான்னு நெஞ்சுல பதிச்சு வைக்க முதல்ல முயற்சி பண்ணறேன்! அதுக்கு மேல அந்த ஆண்டவன் விட்ட வழி!’ என முடிவெடுத்தவள், கணவனை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைக்க முயன்றாள்.

அவள் ஓர் எட்டு எடுத்து வைக்க, அவன் எட்டடிக்கு எகிறி குதித்து ஓட ஆரம்பித்தான்! ஓட்டக்காரனை வீட்டுக்காரன் ஆக்குவாளா செந்தாமரை? ரன்னரை தனது மன்னர் ஆக்குவாளா செந்தாமரை? மாமனைத் தனது ராமன் ஆக்குவாளா செந்தாமரை?
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 10
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
123
-47
43
எட்டடிக்கு எகிறி குதித்து ஓடுற அளவுக்கு தாமரை அப்படி என்னத்தை பண்ணிட்டாளாம்..?

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin