Pirithor Nesamithu--EPI 15

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
அத்தியாயம் 15

பூக்கள் பூக்கும் தருணம்

ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே!!




“தினு! நீங்க தாமரையைக் கல்யாணம் பண்ணிக்கணும்” எனத் திக்கித் திணறிப் பேசினாள் நிவேதா.

“பைத்தியமா நிவி உனக்கு? அதெல்லாம் முடியாது!”

நிவேதா நோயுடன் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த நாட்கள் அவை. பெற்ற மகளைத் தூக்கி வைத்துக் கொஞ்ச முடியவில்லை. கட்டியக் கணவனை ஆசைத் தீர அணைத்து மகிழ முடியவில்லை. இவள் பூமிக்கு வரக் காரணமான பெற்றவர்களோடு நான்கு வார்த்தைகள் அதிகமாய் பேச முடியவில்லை. உடல் வலியோடு சேர்ந்து, மன உளைச்சலும் ஆட்டிப் படைக்க, அல்லாடிக் கொண்டிருந்தாள் பெண்.

கண்களில் கண்ணீர் வழிய கணவனைக் கெஞ்சலாய் நோக்கினாள் நிவேதா. இவள் அடிக்கடி இதைச் செய், அதைச் செய் எனத் தினகரிடம் கேட்க மாட்டாள். அப்படி இவள் கேட்டு விட்டால் அதை செய்து முடிக்காமல் விட மாட்டான் அவன். ஆனால் இன்று இவளது கோரிக்கையை அவன் நிராகரிக்கவும், கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது.

“டேய் நிவி! பவுனு! அழாதடா! நீ அழுதா எனக்குத் தாங்காதுன்னு தெரியும்ல உனக்கு” எனக் குரல் அடைக்க மனைவியின் கண்ணீரைத் துடைத்தான் தினகரன்.

கண்கள் கலங்கி, முகம் கசங்கி, தோற்றத்தில் ஓர் அக்கறை இல்லாமல், தன் அருகே நின்றிருந்தவனை மன வலியோடு நோக்கினாள் நிவேதா. அழகான, ஆரோக்கியமான ஆண் இவள் கணவன் தினகரன். இப்பொழுது கண்களில் கரு வளையத்தோடு, இளைத்து, கருத்து பரதேசி போல இருந்தவனைப் பார்க்கையில் நெஞ்சில் உதிரம் வழிந்தது நிவேதாவுக்கு.

அன்பாய் அவள் கன்னம் வருடி, நெற்றியை வருடி, உலர்ந்து போன அவள் உதடுகளில் ஈர முத்தம் இட்டவனை வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தாள் இவள்.

அன்றைய தினம் காலைதான் தாமரை அவளது தகப்பனோடு இவளைப் பார்க்க வந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் மென் புன்னகையோடு முகமன் சொல்லிய தினகரன், அக்காவும் தங்கையும் பேசட்டும் எனக் கந்தனை அழைத்துக் கொண்டு மருத்துவமனை காண்டீன் போய் விட்டான்.

ஒன்று விட்டத் தங்கையைப் பார்த்ததும் நெஞ்சில் மெலிதானக் குற்ற உணர்வு வந்தது நிவேதாவுக்கு. திருமணமானதில் இருந்து தான் உண்டு தன் கணவன் உண்டு என இன்பமான உலகில் இருந்து கொண்டவள், போனில் கூட தாமரையிடம் சரியாய் பேசி இருக்கவில்லை. நேரில் பார்க்கும் போது தினகர் தாமரையிடம் இரண்டு வார்த்தைகள் பேசினால் கூட பொறுக்க முடியாது இவளால். அவன் மீது அதீத உரிமை உணர்வு நிவேதாவுக்கு. வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும், அதியமானிடம் நான்கு வார்த்தைகள் அதிகமாய் தினகரன் சிரித்துப் பேசினால் கூட மனதில் முனுக்கெனக் கோபம் தோன்றும் இவளுக்கு. அந்த உணர்வு தப்பானது எனத் தன்னையே திட்டிக் கொள்பவள், அப்படி ஃபீல் செய்ததுக்கு பிராயச்சித்தமாக இன்னும் இன்னும் தினகரனை அன்பால் மூழ்கடிப்பாள். இந்த நிவேதாவின் உலகம் தினகரன் எனும் சூரியனை மட்டுமே சுற்றி வந்தது.

“எப்படிக்கா இருக்க?”

பேச முயன்றாள் நிவேதா! ஆனால் வாயை விட்டு வார்த்தைகள் வரவில்லை. இருமி, செருமி என்னெவெல்லாமோ செய்தாள். ஆனாலும் பேச முடியவில்லை. கான்சர் செல்கள் நண்டு போல தொண்டை வரைப் பரவி இருக்க, தொண்டை ரணமாகி வறண்டு போய் கிடந்தது. கண்ணீர் மல்க தங்கையின் கையைப் பற்றிக் கொண்டாள் நிவேதா.

“அழாதக்கா! எல்லாம் சரியா போய்டும்! நீ மாமா கூடவும் பாப்பா கூடவும் ரொம்ப நாள் சந்தோஷமா இருப்பக்கா! உனக்காக நான் அடிக்கடி விரதம் இருக்கேன் தெரியுமா! கடவுள் கண்டிப்பா அதுக்கான பலனைக் குடுப்பாரு” எனத் தாமரையும் கண்ணீர் மல்க பேசினாள்.

அழுகையில் சிவந்திருந்த தங்கையின் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் நிவேதா. தன் குடும்பம், தன் வாழ்க்கை என இவளைக் கண்டுக் கொள்ளாத அக்காவுக்காக கண்ணீர் விடும் தங்கை கிடைப்பது வரமல்லவா! இத்தனைக்கும் தங்கையின் திருமணம் தடைப்படும் சங்கதியை இவளுக்குச் சொல்லித்தான் இருந்தார் அன்னபூரணி. அதை கூட என்ன ஏதேன்று தாமரையிடம் விசாரிக்கும் அளவுக்கு சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை நிவேதா. இந்த விஷயத்தை தினகரனிடமும் பகிர்ந்திருக்கவில்லை. தாய் தந்தையையே ஏதோ ஒரு முறைப் போய் பார்த்து வருபவளுக்கு இந்த ஒன்று விட்டத் தங்கையா நினைவில் இருக்கப் போகிறாள்!

இப்பொழுது தங்கையின் கையை இறுகப் பற்றிக் கொண்டவளின் கண்கள் ஒரு மாதிரி ஒளிர்ந்தன. ஏக்கமாகவும், கெஞ்சலாகவும் தாமரையைப் பார்த்தன நிவேதாவின் கண்கள். இது எதுவும் புரியாமல் அழுதபடியேத்தான் கிளம்பிப் போனாள் செந்தாமரை.

தாமரை வந்து போன அந்நாள் இரவுதான் கணவனிடம் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தாள் நிவேதா. தொண்டைப் புண்ணுக்கு மருந்து கொடுக்கப்பட்டிருக்க, சிரமப்பட்டுப் பேசியவளுக்கு உடனடியாய் அவனிடமிருந்து மறுப்பே பதிலாய் வந்திருந்தது.

அந்த மருத்துவமனைக் கட்டிலில் ஏறி அவள் அருகே நெருக்கமாய் படுத்துக் கொண்ட தினகரன், ஒட்டிப் போயிருந்த அவள் கன்னத்தையும், எலும்பெடுத்திருந்த அவளது கழுத்தையும் அன்பாய் வருடிக் கொடுத்தான். அவன் முகத்தையே ஆதுரமாய் பார்த்திருந்தாள் நிவேதா.

“தினு!”

“என்னடி பட்டு?” என்றவன் அவளை நெருங்கி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

“பாப்பாவ விட்டுட்டுப் போகறத நெனைச்சி கூட நான் அவ்ளோ ஃபீல் பண்ணல! நீங்களும் என் அம்மாவும் அவள அருமையா பார்த்துக்குவீங்க!” என மெல்லியக் குரலில் மெதுவாய் பேசியவள்,

“உங்கள தனியா விட்டுட்டுப் போறத நெனச்சாத்தான் மனசு தவிக்குது! என் கட்டை கூட வேகுமான்னு தெரில தினு” என முடித்தாள்.

“நிவேதா!” எனக் கோபமாய் அழைத்தவன், அதை உடல் மொழியில் காட்டாமல் அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டான்.

“ஏன்டி இப்படிலாம் பேசற! என்னால தாங்கிக்க முடியலைடி நிவி!” என்றவனின் குரல் தளுதளுத்திருந்தது.

அவனது கேசம் கோதி விட்ட நிவேதா,

“இதுதான் நிதர்சனம் தினும்மா! என் தலைக்கு மேல கத்தித் தொங்கிட்டு இருக்கு! எப்போவேணா எமன் பாசக் கயிற என் மேல வீசலாம்! முடிக்க வேண்டிய கடமையை அதுக்குள்ள நான் முடிக்கனும்ல” என நிறுத்தி நிதானமாகப் பேசியவளுக்குத் தொண்டை வறண்டுப் போனது.

அவள் சிரமப்படுவதைப் பார்த்த தினகரன்,

“போதும்டி பொன்னு! நாளைக்குப் பேசிக்கலாம்! தூங்கு” என்றான்.

“இன்னிக்குத் தூங்கி நாளைக்கு நான் எழுந்துக்கலனா? இப்பவே பேசிடறனே!” என்றவளின் பிடிவாதத்தில் கோபம் வந்தது தினகரனுக்கு.

அந்தக் கோபம் அக்காவைப் பார்த்துப் போக வந்த அப்பாவி தாமரை மேல் திரும்பியது!

‘இனி அவ வந்தா மறுபடி வராதேன்னு கறாரா சொல்லிடனும்! இது போல நிவி என்னைக்கும் தவிச்சது இல்லை. தங்கச்சிய பார்த்ததும் கண்ட நினைப்பெல்லாம் இவளுக்கு வருது’ என மனதில் முடிவெடுத்துக் கொண்டான்.

கோபத்தில் சிவந்து கிடந்த தினகரனின் கன்னத்தைத் தடவிக் கொடுத்தவள்,

“உங்களுக்குச் சின்ன வயசு தினு! மன வலிமையோட இன்னொருத்தி வேணாம்னு நெனைச்சாலும், உடல் துணைத் தேடி அலையும் வயசு! பெண் சுகத்த அனுபவிக்காமலே இருந்தவனுக்கு அதை கடக்கறது கஷ்டமா இருக்காது! ஆனா அதை ஆசையா அனுபவிச்சிட்டவனோட உடம்பு அவன் மனசு சொன்னத கேக்காது தினு! என் தினுக்கு இருக்கும் வேகமும், மோகமும் என்னை விட வேற யாருக்குத் தெரியும்! உங்கள யாருக்கும் விட்டுக் குடுக்காத நானே சொல்றேன், நான் போனதும் தாமரையைக் கல்யாணம் பண்ணிக்கோங்க!”

எழுந்து அமர்ந்து கொண்டவன், மனைவியை முறைத்துப் பார்த்தான். அவள் பேசிய விஷயங்கள் இவன் உள்ளத்தை உடைத்துப் போட்டிருந்தன! மனம் ஆழமாய் காயப்பட்டிருக்க,

“என்னைக் காமப் பிசாசு ரேஞ்சுக்குப் பேசிட்டடி! நான் காதலாய், காமமாய், தாபமாய் சங்கமிச்ச இடம் என் மனைவியான உன்னிடம் மட்டும்தான்! நீ இல்லாது போய்ட்டாலும் கண்டவ கூட கூடி குலாவ நான் மன்மதன் இல்லடி! உன்னோட காதலன்! உன்னோட புருஷன்! எனக்கு நீ மட்டும் போதும் நிவி! உன் நினைவுகளோடயே வாழ்ந்து முடிச்சிருவேன் நான்” என்றான்.

இப்படிப்பட்டக் கணவனோடு நூறாண்டு வாழ கொடுத்து வைக்கவில்லையே எனும் துக்கம் தொண்டையை அடைக்க ஓவெனக் கதறினாள் நிவேதா!

“ஏன் தினு ஏன்? நான் என்ன பாவம் பண்ணேன்? எனக்கு ஏன் இந்த நிலமை? உயிருக்கு உயிரா காதலிச்ச உங்களை நான் எப்படி தினு விட்டுட்டுப் போவேன்! எமன் கூட்டிப் போகிற இடம் இருட்டா இருக்குமாமே! உங்க கைப்பிடி இல்லாம நான் எப்படி தினு தைரியமா நடப்பேன்! உங்களுக்கு, உங்க பாசத்துக்கு, நேசத்துக்கு, அணைப்புக்கு, பரிவுக்கு, காதல் செய்யும் விதத்துக்கு அடிமையாகிக் கிடக்கும் நான் எப்படி தினு உங்கள விட்டுட்டுப் போவேன்! தினு! தினு!” எனத் திக்கித் திணறி அழுது ஆர்ப்பாட்டம் செய்தவள் அப்படியே மயங்கிப் போனாள்.

பயந்து போனான் தினகரன்! அவசரமாக அவள் மூக்கில் விரலை வைத்துப் பார்த்தான். சுவாசம் இருந்தது! பிறகே மூச்சு வந்தது இவனுக்கு. டாக்டரை அழைக்கும் மணியை அழுத்தியவனுக்கு மனைவி படும் பாடு நெஞ்சைக் கத்தியின்றி குத்திக் கிழித்தது.

டாக்டர் வந்து பார்த்து, ஊசி ஒன்றைப் போட்டு விட்டார்.

“கொஞ்சம் ஸ்ட்ரேஸ் லெவல் கூடிருச்சு! தூங்கட்டும்! நல்லா தூங்கி எழுந்தா கொஞ்சம் பெட்டரா இருப்பாங்க! நீங்களும் கொஞ்ச நேரம் படுங்க மிஸ்டர் தினகரன்” எனச் சொல்லிப் போனார்.
அமைதியாய் உறங்கும் மனைவியையே கண்ணெடுக்காமல் பார்த்தபடி அவள் அருகே ஏறிப் படுத்துக் கொண்டான் தினகரன். இன்னும் எவ்வளவு நாள் அந்தப் பாக்கியம் கிடைக்குமோ என அவன் நெஞ்சம் ஓலமிட்டது.

அதன் பிறகான நாட்கள் இம்சையாய் கழிந்தது இவனுக்கு. அடிக்கடி சுற்றி சுற்றி தாமரையைப் பற்றியும் திருமணத்தையும் பற்றியே பேசினாள் நிவேதா.

“வலிக்குதுல! ரொம்பப் பேச ட்ரை பண்ணாதீங்கம்மா!” என நர்ஸ் சொன்னாலும் கேட்பதில்லை.

சில வாரங்களில் அறவே பேச முடியாமல் போனது நிவேதாவுக்கு. அப்படி இருந்தும் இவன் கை பற்றி கண்களால் கெஞ்சுவாள். தினகரனுக்கோ மரண வேதனையாக இருக்கும். சரியெனச் சொன்னால், அது தாமரைக்கு இழைக்கும் கொடுமையல்லவா? மனதில் இவளை வைத்துக் கொண்டு, அவளோடு எப்படி வாழ்வது! முடியாது எனச் சொன்னால், மனைவி மனக் குறையோடல்லவா இறந்து போவாள்! அப்படி குறையோடு இறந்தால், பேயாக அலைவாளோ? வீட்டில் இருக்கும் மாங்காய் மரத்தில் காலமெல்லாம் தொங்கிக் கொண்டிருப்பாளோ? இப்படி என்னென்னவோ நினைவுகள் மனம் முழுதும் வியாபித்துத் தூக்கத்தைக் கெடுக்கும்.

அதற்கிடையே மறுபடி தாமரை அக்காவைப் பார்க்க வந்திருந்த பொழுது, இனி வர வேண்டாம் என நேரடியாகவே சொல்லி விட்டான். இவள் வேறு அடி வாங்கிய குழந்தை மாதிரி விழிக்க, பாவமாகிப் போனது இவனுக்கு! மனதைக் கல்லாக்கிக் கொண்டவன் சட்டென விலகிப் போய் விட்டான்.

தாமரை வந்து போனதில் இருந்து கண்ணீரும் கம்பலையுமாகத்தான் இருந்தாள் நிவேதா. அவள் சாப்பிடுவதே மூன்று ஸ்பூன் உணவுதான். அதை கூட வேண்டாமென மறுக்க ஆரம்பிக்க, உடைந்து போனான் தினகரன்.

“பண்ணிக்கறேன்! தாமரைய கல்யாணம் பண்ணிக்கறேன்! ரெண்டு வருஷம் டைம் குடு எனக்கு! என்னால உடனே முடியாது பவுனு! மத்த ஆம்பளைங்களால பொண்டாட்டி இருக்கறப்பவே கீப் வச்சிக்க முடியுது, பொண்டாட்டி இருக்கறப்பவே விலைமாது கிட்ட போக முடியுது, அவ செத்துட்டா மறு மாசமே கல்யாணம் பண்ணிக்க முடியுது! ஆனா அதெல்லாம் என்னால முடியாது நிவி! புரிஞ்சுக்கோ”

கை நீட்டி,

“சத்தியமா அவள கல்யாணம் பண்ணீப்பீங்களா?” என உதடுகளை மட்டும் அசைத்தாள் நிவேதா.

அதைப் புரிந்து கொண்டவன்,

“சத்தியமா பண்ணிக்கறேன்” என அவள் கையடித்து சத்தியம் செய்தான்.

போனைக் கொடுக்க சொல்லி சைகை செய்தாள் நிவேதா. இவனும் நோட்பேட் திறந்து போனை அவள் கையில் கொடுத்தான்.

“உங்கள நம்பறேன்! புத்திசாலித்தனமா காரியம் பார்க்கறேன்னு அவளுக்கு ஒரு மாப்பிள்ளைய நீங்களே பார்க்கக் கூடாது! சத்தியம் பண்ணுங்க” என டைப் செய்தவள், போனை அவன் பார்க்கும் படி காட்டினாள்.

அதைப் பார்த்தவன் முகம் அஷ்டகோணலாகியது! இவளுக்கோ சிரிப்பு வந்தது!

மறுபடியும் போனில் டைப் செய்தாள் நிவேதா!

“உன்னைப் பத்தி எனக்குத் தெரியும்டா கேடி! எவ்ளோ நேக்கா ப்ளான் போட்டுத் தப்பிக்கப் பாக்கற நீ! கொன்னுடுவேன் ராஸ்கல்! ரெண்டு வருஷத்துல அவளுக்குக் கல்யாணம் ஆகிட்டா, நீங்க இன்னொருத்திய கண்டிப்பா வாழ்க்கைத் துணையா எடுத்துக்கனும் தினும்மா! ஆண் வாழ்க்கையில தனிமைங்கறது ஒரு சாபம்! அம்மா இல்லாம போய் அதை அனுபவிச்ச நீங்க, மறுபடி நான் இல்லாம அதே தனிமை நரகத்துல விழுந்துடக் கூடாது!”

அதை அவனிடம் காட்டியவளின் கண்களில் கண்ணீர் இருந்தது.

“சத்தியமா கல்யாணம் பண்ணிக்கறேன்டி! இப்ப சாப்பிடு” என உணவை அவள் வாயருகே கொண்டு போக, குருவி போல வாயைத் திறந்தாள் பெண்.

அன்று இவனை இறுகக் கட்டிக் கொண்டுப் படுத்தவள், மறுநாள் விழித்தெழுந்திருக்கவில்லை! காலன் அவளை காற்றாய் வாரிக் கொண்டுப் போயிருந்தான்.

தாமரையிடம் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி இருந்த தினகரன், கண்களில் கண்ணீர் வழிவதை நிறுத்த முடியாமல் வேகமாய் எழுந்து பால்கனிக்குப் போய் விட்டான். கண்களை முட்டி நின்றக் கண்ணீரோடு, நொண்டி நொண்டி அவன் பின்னால் போனாள் தாமரை. வாய் மூடி மௌனமாய் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள் தினகரனின் இந்நாள் மனைவி. முன் புறம் திரும்பி அவளை அணைத்துக் கொண்ட தினகரன் கண்ணீர் குரலில்,

“எவ்ளோ சொன்னாலும் மண்டை மூளை உனக்கு வேலை செய்யாதா தாமரை? இந்த ஓட்டைக் கால வச்சிக்கிட்டு இவ்ளோ தூரம் ஏன்டி நடந்து வந்த?” எனக் கேட்டான்.

“என்ன பண்ண நானு? என் மச்சான்னு வந்துட்டா இந்த மச்சினிச்சி மண்டை மூளை மசமசன்னுல போய்டுது!” எனக் கண்ணீர் குரலில் பதில் தந்தாள் தாமரை!

கண்கள் கண்ணீரை சிந்த, இருவரின் உதடுகள் மட்டும் மெலிதாய் புன்னகைப் பூத்தன.
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 15
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
123
-47
43
தினகரன் ரொம்பவே கொடுத்து வைச்சவன் தான், அக்கா தங்கச்சி ரெண்டு பேருமே அவன் மேல உசிரை வைச்சிட்டிருக்காங்களே.

😃😀😃
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin