Pirithor Nesamithu--EPI 16

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
அத்தியாயம் 16

பூ வண்ணம்

போல நெஞ்சம்

பூபாளம் பாடும் நேரம்

பொங்கி நிற்கும் தினம்!!!



“சித்தி”

“என்னம்மா பூக்குட்டி?”

பெண்கள் இருவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் முன்னே கலர் பென்சில்களும் வண்ணம் தீட்டும் புத்தகமும் வீற்றிருந்தன. சற்று முன்புதான் பள்ளி முடிந்து வந்து, குளித்து முடித்து, கீழே இறங்கி வந்திருந்தார்கள் இவர்கள்.

சின்னவள் வெளியே தோட்டத்துக்குப் போகலாம் என வம்பு செய்து கொண்டிருந்தாள். இப்பொழுதெல்லாம் ஓரளவு நடக்க முடிந்தாலும் வேகமான நடை இன்னும் வந்திருக்கவில்லை செந்தாமரைக்கு. தோட்டத்திற்கு போனால் பட்டாம்பூச்சி பிடிக்கிறேன், பூக்களைப் பறிக்கிறேன், ஊஞ்சல் ஆடுகிறேன் என ஓரிடத்தில் நிற்காமல் ஓடும் பூக்குட்டியைச் சமாளிக்க முடியாது இவளால். அதனால்தான் வண்ணம் தீட்டலாம் என அவளை மேசையில் அமர்த்தி வைத்திருந்தாள் தாமரை.

“இன்னிக்கு கிளாஸ்ல ரிலேஷென்சிப் பத்தி படிச்சோம் சித்தி”

“குட்! என்ன சொல்லிக் குடுத்தாங்க டீச்சர் அதைப் பத்தி?”

“அப்பா, அம்மா, அக்கா, அண்ணா, தம்பி, பாட்டி, தாத்தா எல்லாம் படம் வரைஞ்சு சொல்லிக் குடுத்தாங்க! அதுல அப்பா பக்கத்துல அம்மாத்தான் இருக்காங்க! சித்தி காணோம்!” எனச் சொன்னவள் நிமிர்ந்து தாமரையைப் பார்த்தாள்.

அந்தக் குட்டி முகத்தில் தெரிந்த கலக்கத்தில் இவளுக்கு அடி வயிறு கலங்கியது. முதலில் அவள் பேசி முடிக்கட்டும் என அமைதியாய் மகள் முகத்தையே பார்த்திருந்தாள் இவள்.

“எனக்கு அம்மா நிவேதாம்மான்னு தெரியும்! அவங்க சாமிக்கிட்ட போய் இன்னொரு சாமியாகிட்டாங்கன்னும் தெரியும்! நீங்க அப்பாவ மேரேஜ் பண்ணிட்டு எங்க கூட ரூம் ஷேர் பண்ணிக்கறீங்கன்னும் தெரியும்! டீச்சர் சொன்னாங்க அப்பா பக்கத்துல இருந்தா அது அம்மான்னு! பின்ன ஏன் நான் உங்கள சித்தின்னு கூப்புடனும்? அம்மான்னு கூப்புடவா? என் ஃப்ரேண்ட் நீத்துக்கு அம்மா இருக்கு, கிஷன்கு அம்மா இருக்கு! எனக்கு சித்தித்தான் இருக்குன்னு அவங்கட்டலாம் சொல்லப் புடிக்கல! எனக்கும் அம்மா வேணும்!” எனக் கேட்டவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் செந்தாமரை.

பூக்குட்டியை அம்மா போல பார்த்துக் கொண்டாலும், அவளது அழைக்கும் விதத்தை இவள் மாற்றவில்லை. இறந்து போயிருந்தாலும் நிவேதா பெற்றவள் இல்லையா! பத்து மாதங்கள் சுமந்து, பல கனவுகள் கண்டு, வலிக்கப் பெற்றெடுத்து, ஆசையாய் கையில் ஏந்தியவள் அவளல்லவா! இப்பொழுது பூக்குட்டியை இவள் மனதில் சுமந்தாலும், நிவேதாவின் அம்மா எனும் ஸ்தானத்தைத் தட்டிப் பறிக்க நினைக்கவில்லை தாமரை. இவளை அம்மாவாக உணரும் போது மகளாகவே அழைப்பை மாற்றிக் கொள்ளட்டும்! அப்படி அம்மா என அழைக்காமல் போனாலும், இந்தச் சித்தி காட்டும் அன்பு குறைந்து விடப் போவதில்லை என விட்டு விட்டாள். அது மகள் மனதில் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறிந்து கொண்டவளுக்கு மனம் கனத்துப் போனது.

“பூக்குட்டிக்குச் சித்தியை அம்மான்னு கூப்பிடனுமா?” எனக் குரலடைக்கக் கேட்டாள் இவள்.

“ஆமா சித்தி!” என உதடுப் பிதுக்கியவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் இவள்.

அந்த நேரம் சமையலறை வாயிலில் நிழலாட, நிமிர்ந்து பார்த்தாள் தாமரை. அங்கே இருவரையும் பார்த்தபடி நின்றிருந்தான் தினகரன். இவளுக்கு ஆசைதான் சரியெனச் சொல்ல! ஆனால் இறந்து போன மனைவியின் மேல் இன்னும் பற்றறுக்காமல் இருக்கும் இவன் என்ன சொல்வானோ எனத் தயக்கமாய் இருந்தது.

மகளின் கண்ணீரைப் பார்த்தத் தினகரன், தலையசைத்து தாமரையிடம் சம்மதம் சொன்னான். தவிப்புடன் பார்த்திருந்த தாமரையின் முகம், தாமரையாய் மலர்ந்து போனது. அவனைப் பார்த்துப் பளீரெனப் புன்னகைத்து,

“தேங்க்ஸ் மாமா” என வாயசைத்தாள்.

அவளுக்கு ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்தவன், அங்கேயே அமைதியாய் நின்றிருந்தான்.

“சித்தியை அம்மான்னு பூக்குட்டி கூப்பிடனும்னா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு” என மகளின் முகத்தை நிமிர்த்தி தன்னைப் பார்க்க வைத்தபடி சொன்னாள் இவள்.

“என்ன செய்யனும் சித்தி? என்னோட பிங்க் கிட்டி டீ ஷர்ட்ட உங்களுக்குக் குடுக்கவா? என்னோட டான்ஸ் ஆடுமே பிரின்சஸ் பொம்மை, அதை குடுக்கவா? இல்லை, என்னோட கிளிட்டர் நெயில் பாலிஷ் செட்ட உங்களுக்கே உங்களுக்கா குடுக்கவா? என்ன வேணும்?” எனக் கண்களில் ஆர்வம் பொங்க கேட்டவளை ஆதுரமாகப் பார்த்தாள் தாமரை.

அவள் கொடுக்கிறேன் எனச் சொன்னது எல்லாமே சின்னவள் பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்கள். நமக்கு அது சாதாரண பொருளாய் இருக்கும். அவர்களுக்கு அதுதான் பொக்கிஷம். சில சமயங்களில் குப்பை என அவர்களின் விளையாட்டுப் பொருட்களை நாம் தூக்கி எறிந்து விடுவோம்! ஆனால் குழந்தைகள் அதனோடு இமோஷனலி அட்டாச் ஆகி இருப்பார்கள். அது இல்லாமல் அழுகையில் கரைந்து போவார்கள். நாம் பாதுகாத்து வைத்திருக்கும் தங்க ஆரத்தைத் தூக்கி வீசினால், எப்படி நமக்கு வலிக்குமோ அதே வலிதான் அவர்களுக்கும். இங்கே பொருளின் விலை வலியை நிர்ணயிக்கவில்லை! அது கொடுக்கும் இமோஷனல் பாண்டிங்தான் வலியை நிர்ணயிக்கிறது.

“அதெல்லாம் எங்க பூக்குட்டியே வச்சிக்கலாம்! சித்தியோட, இல்ல இல்ல அம்மாவோட கண்டிஷன் என்னன்னா, பூக்குட்டி கண்ணைத் தொடைச்சிட்டு, அம்மாவுக்கு ஹண்ட்ரட் கிஸ்சஸ் குடுக்கனும்! டீலா?” எனப் புன்னகையுடன் கேட்க, வேகமாய் கண்ணீர் கன்னங்களைத் துடைத்துக் கொண்ட பூந்தென்றல், தாமரையின் முகம் முழுக்க அவசர முத்தங்கள் இட ஆரம்பித்தாள்.

மகளின் வேகத்தையும், அம்மாவென அழைக்க வேண்டும் எனும் ஆர்வத்தையும் கண்டவளுக்குக் கண்கள் கலங்கிப் போனது!

“சித்தி! பூக்குட்டிக்கு வாய் வலிக்குது! மீதியை நைட் குடுக்கவா?” எனக் கேட்டவளைப் பார்த்து,

“சித்தியா?” என ஒற்றைப் புருவம் உயர்த்தினாள் இவள்.

“இல்லல்லா! அம்மா! அம்மா! அம்மா” எனக் குதூகலமாக அம்மாவை ஏலம் போட்டாள் சின்னவள்.

அப்பொழுதுதான் வருவது போல இவர்கள் அருகே வந்தான் தினகரன். அருகில் பார்க்க அவனது கண்களும் சிந்தாத கண்ணீரை உள்ளடக்கி வைத்திருந்தன. நாற்காலியில் நின்றிருந்த மகளைத் தூக்கி ஒரு சுற்று தட்டாமலைச் சுற்றியவன்,

“பூக்குட்டி உள்ள ஓடிப் போய் அக்கா கிட்ட நம்ம மூனு பேருக்கும் டீயும் ஸ்நாக்சும் சொல்லிட்டு வாங்க” என மகளைச் சமயலறை அனுப்பினான்.

“உங்களுக்கு மனசு கஷ்டமா இருக்கா மாமா?” எனக் கேட்டாள் தாமரை.

“மனசு கஷ்டம்னு சொல்ல முடியாது! ஆனா ஒரு மாதிரி வலி இருக்குன்னு சொல்லலாம்! பூக்குட்டிக்கு அவ அம்மா காட்டன அன்போ, பாசமோ ஞாபகத்துல இருக்க சான்ஸ் இல்ல! இவளுக்கு விவரம் தெரியறதுக்குள்ள நிவிக்கு உடம்பு முடியாம போய்டுச்சு! அவள பார்க்க ஹாஸ்பிட்டல் கூட்டிப் போகவும் முடியாது! வார்ட்ல குழந்தைகள விட மாட்டாங்க! வீடியோ கால்லதான் நிவி மகள பார்ப்பா! வீட்டுல நான் இருக்கறப்ப என் பிடில இறுக்கி வச்சி போன்ல தெரியற நிவியைக் காட்டி அம்மான்னு சொல்லிக் குடுத்தா, கீழ விளையாட விட சொல்லி அழுவா பூக்குட்டி! நிவி இறந்து, அவ உடம்ப கிடத்தி வச்சிருந்தப்ப கூட, பூக்குட்டி சிரிச்சு விளையாடிட்டுத்தான் இருந்தா! கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்ச நேரம் பூக்குட்டிக்குக் கிடைச்சதெல்லாம் இந்த அப்பாவோட அரவணைப்புத்தான். எவ்ளோதான் நான் அன்பைக் கொட்டுனாலும் அம்மாவுக்கு ஈடாகாதுல்ல! அதான் உன் கிட்ட ஒட்டிக்கிட்டா! சாமியா போனவ, அவ வரைக்கும் சாமியாவே இருக்கட்டும்! அவ உணர்ந்து அனுபவிக்காத அம்மா பாசத்தைக் குடுக்கற நீயே அவளுக்கு அம்மாவா இரு”

அவனது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள் தாமரை. அவளைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தான் தினகரன்.

சமையல் அக்காவுடன் ஸ்நாக்ஸ் இருக்கும் தட்டைப் பிடித்துக் கொண்டு சின்னவள் வர,

“டீ ஜக்க வாங்கிக்க தாமரை! தோட்டத்து சிட் அவுட்டுக்குப் போயிடலாம்” என்றான் தினகரன்.

இப்பொழுதெல்லாம் தோட்டத்தில் டீ, இந்தக் குட்டிக் குடும்பத்தின் வழக்கமாகி இருந்தது. மாலையில் இவர்களைப் பள்ளியில் இருந்து இறக்கி விட்டு விட்டு அதியமான் கடைக்குப் போய் விடுவார். அவர் அங்கு போனதும், தினகரன் வீட்டுக்குக் கிளம்பி வருவான். மனைவி மகளுடன் சற்று நேரம் அளவளாவி, டீ குடித்து விட்டுக் கிளம்பி விடுவான். அதோடு இரவு பத்துக்கும் மேலாகி விடும் அவன் வீடு வந்து சேர.

அந்தி நேர தென்றல் காற்று இவர்களை ஆரத் தழுவிக் கொண்டது. தாமரைத் தேநீர் கப்பை கையில் வைத்து அதன் சூட்டை உணர்ந்து, மூக்கருகே கொண்டு போய் வாசம் இழுத்து, ரசித்து ருசித்துப் பருக, கண்களில் சிரிப்புடன் அவளைப் பார்த்திருந்தான் தினகரன். பட்டர் கேக்கை சாப்பிட்டு முடித்த பூக்குட்டியோ பட்டர்பிளை பிடிக்க ஓடி விட்டாள்.

“அது தேநீரா இல்லை தேவாமிர்தமா? தினமும் குடிக்கறதுதானே! அதுக்கேன் இவ்ளோ பில்டப்பு?” எனக் கேட்டான் இவன்.

“இதுதான் பூலோக தேவாமிர்தம்! தினமும்தான் மூச்சு விடறோம்! அதுக்கேன் பில்டப்புன்னு இந்த மூக்க வெட்டி வீசிட முடியுமா! அது போலத்தான் தினமும் டீ குடிச்சாலும் என்னால ஏனோதானோன்னு குடிக்க முடியாது! அனுபவிச்சுத்தான் குடிக்க முடியும்”

“டீயும் மூச்சு விடறதும் ஒன்னா தாமரை?”

“டீ லவர்க்கு ரெண்டும் ஒன்னுதான்!” எனச் சிலிர்த்துக் கொண்டாள் செந்தாமரை.

“அப்படிங்கற! அப்போ இனி நீ டீ மட்டும் குடி! மூச்சு விட வேணாம்!” எனச் சொல்லி எழுந்து வந்தவன் விளையாட்டாய் அவள் மூக்கைப் பிடித்துக் கொண்டான்.

இவள் படபடவென அவனை அடிக்க, பூக்குட்டி ஓடி வந்து,

“அம்மாவ விடுங்க! என் அம்மாவ விடுங்கப்பா!” என இவளுடன் சேர்ந்து கொண்டாள்.

அவன் இவர்களைத் தள்ளி விட்டு ஓட, பெண்கள் இருவரும் அவனைத் துரத்தி அடித்தார்கள். பூக்குட்டிக்கு ஒரே சிரிப்பு.

“என்னை அடிக்கறீயா நீ?” எனக் கேட்டு அவளை மேலே தூக்கிப் போட்டுப் பிடிக்க, கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள் சின்னவள்.

தாமரைக்குக் கால் லேசாய் வலிக்க, அப்பாவும் மகளும் விளையாடட்டும் என மீண்டும் நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டாள். கூச்சலும் கும்மாளமுமாய் விளையாடும் அவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்திருந்தாள் தாமரை.
 

Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 16
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
இப்பொழுதெல்லாம் இவளிடம் கடுகடுவென முகம் காட்டுவதில்லை தினகரன். நன்றாக பேசுகிறான், சிரிக்கிறான்! சில சமயம் வம்பு கூட வளர்க்கிறான்.

“நண்பர்களாய் இருக்கலாமா?” என அன்றொரு நாள் இரவில் பால்கனியில் நின்று அழுதவனுக்கு ஆறுதல் சொல்லப் போனவள் கேட்டிருந்ததை கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்தான் தினகரன்.

தாமரையின் மனம் அன்றைய நிகழ்வுக்குள் நுழைந்தது.

“செந்தாமரைய ஒரு அமைதியான பெண்ணாத்தான் எனக்குத் தெரியும்! உனக்குள்ள ஒரு ரைமிங் குவீன், ஒரு சண்டைக்காரி, ஒரு வாயாடி எல்லாம் ஒளிஞ்சிருக்கறது நம்ம கல்யாணத்துக்குப் பிறகுதான் தெரியுது எனக்கு” என்றான் தினகரன்.

அழுது முடித்து இருவரும் பால்கனியில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள்.

“அம்மா இருக்கற வரைக்கும் சளசளன்னு பேசிட்டே இருப்பேன்! அவங்கள வம்பிழுத்துட்டே இருப்பேன்! அவங்க போனதும் என்னோட பேச்சும் போய்டுச்சு! அப்பா ஏற்கனவே அமைதிதான். அம்மாவுக்குப் பிறகு பேரமைதி ஆகிட்டாரு! நீங்கதான் என்னை அடிக்கடி கடுப்பாக்கி, காண்டாக்கி என்னோட அதர் சைடை வெளிய வர வைக்கறீங்க மாமா” என்றவளை மென்னகையுடன் பார்த்தான் இவன்.

பின் வெளியே இருளை சற்று நேரம் வெறித்தவன்,

“கடந்த ரெண்டு வருஷத்துல உனக்குக் கல்யாணம் ஆகிடனும்னு நான் வேண்டாத சாமியில்ல தாமரை! உன் கல்யாண விஷயத்துல தலையிடக் கூடாதுன்னு நிவி சத்தியம் வாங்கிட்டதால என்னால ஒன்னுமே பண்ண முடியல! ஒவ்வொரு தடவையும் அத்தை கால் பண்ணுறப்ப, தாமரைக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சுன்னு சொல்ல மாட்டாங்களான்னு ஏங்கியிருக்கேன்” என்றான்.

“எனக்குக் கல்யாணம் ஆகிருந்தாலும், நீங்க வேற பொண்ண கட்டித்தானே ஆகனும் மாமா! அப்படித்தானே அக்கா சொல்லிருந்தா?”

“வேற பொண்ணக் கட்டறதும், உன்னைக் கட்டறதும் ஒன்னு இல்ல தாமரை! வெளிய பொண்ணு எடுக்கறதுனா என் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி ஒரு டைவர்ஸ் ஆனவளோ, இல்ல கணவன இழந்தவளோ இப்படி யாரையாச்சும் நான் பார்த்திருப்பேன். என் மனநிலைய சொல்லி, கொஞ்சம் டைம் குடுங்கன்னு பேசி புரிய வச்சுக் கல்யாணம் செஞ்சிருப்பேன். அதே உன்னைக் கட்டிக்கறதுனா அதுல எவ்ளோ சங்கடங்கள் இருக்குன்னு உனக்குத் தெரியுமா! இன்னும் சிங்கிளா இருக்கற தாமரையை எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்கன்னு எங்கப்பாட்ட எப்படி போய் கேப்பேன் நானு? நிவியோட வாழ்ந்த போது, அவ மேல நான் வச்சிருந்த காதலை, ஆசையை, பாசத்தை, உருக்கத்தை எல்லாம் பார்த்தவரு எங்கப்பா! இன்னொரு கல்யாணம், அதுவும் உன்னைக் கல்யாணம் பண்ணனும்னு நான் கேட்டா, என்ன நினைப்பாரு அந்த மனுஷன்! எங்கம்மாவ மட்டும் நெஞ்சுல சுமந்து வாழ்ந்தவரு, என்னைக் கேவலமா நெனைக்க மாட்டாரா தாமரை? அக்கா இடத்துல தங்கச்சிய வச்சு அவ நெனைப்புல இவ கூட வாழ போறான்னோன்னு சந்தேகம் கூட அவருக்கு வரலாம்! அவர விடு! உங்க பெரியம்மா என்ன நினைப்பாங்க? அக்கா செத்ததும் தங்கச்சி வேணும்னு வந்து நிக்கறானே, இவன்லாம் ஒரு ஆம்பளையான்னு நெனைக்க மாட்டாங்க? அதையும் விடு! உங்க அப்பா என்ன சொல்வாரு? ரெண்டாந்தாரமா, அதுவும் ஒரு பிள்ளை இருக்கறவனுக்கு அவர் மகள தூக்கிக் குடுத்துருவாரா? எவ்ளோ சிக்கல் இதுக்குள்ள! நிவிதான் கல்யாணம் பண்ணிக்க சொன்னான்னு சொன்னா, செத்தவ சாட்சி சொல்லவா வர போறான்னு கேக்க மாட்டாங்களா? நிவியோட இரண்டாவது நினைவு நாள் நெருங்க, நெருங்க அவ்ளோ மன அழுத்தத்துல இருந்தேன் தாமரை நானு!”

“அதான் அக்கா ப்ரேயர்ஸ்ல என்னை முறை மாமன் மாதிரி முறைச்சிட்டே இருந்தீங்களா?”

அவள் கூற்றில் சிரித்து விட்டான் இவன்.

“நீ ஹாஸ்பிட்டலுக்கு வந்திருக்கலைனா நிவிக்கு இப்படிலாம் ஐடியா வந்திருக்காதுன்னு சில சமயம் உன் மேல முட்டாள்த்தனமா கோபம் வளர்த்து வச்சிருப்பேன். சில சமயம், அக்கா பாசத்துல வந்து பார்த்துட்டு போனதை குத்தமாக்கலாமான்னு என்னையே திட்டிப்பேன். உன்னைப் பார்க்கறப்ப கோபம் மேல வந்து முறைச்சு வைப்பேன்! பார்க்காதப்ப பரிதாபம் மேல வந்து பாவம் இந்தத் தாமரைன்னு ஃபீலாகி நிப்பேன்.”

“கல்யாணத்துக்கு முன்னமே ஏன் என் கிட்ட அக்கா பேசனத சொல்லல? சொல்லியே கல்யாணத்துக்குக் கேட்டிருக்கலாம்ல”

“நிவிதான் உன்னைக் கட்டிக்க சொன்னான்னு சொல்லிருந்தா என்னை நம்பிருப்பியா தாமரை?”

சற்று நேரம் யோசித்தவள்,

“நம்பியிருக்க மாட்டேன்னு நெனைக்கறேன்! அந்த டைம்ல எனக்கு ஆம்பளைங்க மேல நம்பிக்கையே விட்டுப் போயிருந்தது இந்த சதீஷாலயும் அவன நம்பி என்னை வேணாம்னு சொன்ன மத்தவனுங்களாலயும். அப்பா மட்டும் அதுக்கு விதிவிலக்கு! நீங்க என் கிட்ட அக்கா பேர சொல்லி கல்யாணத்துக்கு கேட்டிருந்தா, கண்டிப்பா ரொம்பத் தப்பா நெனைச்சிருப்பேன் உங்கள!” என்றாள் இவள்.

“அதான் நான் எதையும் சொல்லல. பூக்குட்டிக்காகத்தான் இந்தக் கல்யாணம்னு எல்லாரையும் நம்ப வச்சேன். நிவி ப்ரேயர்ஸ் முடிஞ்சதும் அப்பா கல்யாணத்துக்கு ஓகேவான்னு கேட்டப்ப, சரிப்பான்னு சொல்லிட்டு பூக்குட்டிய கூட்டிட்டுப் போகிற சாக்குல மறுபடி திருச்சி வந்தேன். அத்தை கிட்ட உன்னைப் பொண்ணு கேட்டுப் பார்க்கலாமான்னுதான் கிளம்பி வந்தேன். உள்ளுக்குள்ள ஒரே உதறலா இருந்தது. உங்க பெரியம்மாவுக்கு என் மேல ரொம்ப மரியாதை! அதோட ரொம்பப் பாசம் வேற. அவங்க சம்மதிச்சா, எல்லாம் சரியா நடக்கும்னு தோணுச்சு! அங்க வந்ததும்தான் தெரிஞ்சது எங்கப்பா சூட்டோட சூடா பெரிய மாமாட்ட சொல்லி அலையன்ஸ் பார்க்க சொல்லிருக்காருன்னு. உங்க பெரியப்பாவோட சொதப்பலும், உங்கப்பாவோட வேண்டுகோளும், அத்தை எனக்காகப் பரிஞ்சுட்டு வந்ததும், என் மகளோட பாச சீனும் சேர்ந்து நம்ம கல்யாணத்த எந்தச் சிரமமும் இல்லாம நடத்தி வச்சிருச்சு”

“விட்டா இந்தப் பஞ்ச பூதங்கள் எல்லாம் ஒன்னு கூடி நம்ம கல்யாணத்த நடத்துச்சுன்னு புருடா விடுவீங்க!”

“பஞ்ச பூதங்கள் ஒன்னு கூடுச்சான்னு எனக்குத் தெரியாது! ஆனா இந்தப் பிரபஞ்சம் உனக்கு நான் எனக்கு நீன்னு கோர்த்து விட்டிருக்குன்னு மட்டும் தெரியும்!” என்றவன்,

“உன்னோட கல்யாண ஆசைகள், கனவுகள் எல்லாத்தையும் நான் சிதைச்சிட்டேனா தாமரை? பீச்ல ஜோடியா கை பிடிச்சுட்டு போன ரெண்டு பேர நீ பார்த்துட்டே இருந்தது, எனக்கு எவ்ளோ வேதனையா இருந்தது தெரியுமா!” என அவள் முகத்தைப் பார்க்காமல் தன் கை விரல்களைப் பார்த்தபடி கேட்டான் தினகரன்.

“சாதாரணமா கல்யாணம் பண்ணிட்டு வந்திருந்தா நீங்க என்னைத் தள்ளி வைக்கறது தப்புன்னு சொல்லலாம் மாமா! நான் பூக்குட்டிக்காகவும், எங்கப்பாவோட அழுகைக்காகவும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் உங்கள! நீங்க அக்காவுக்குக் குடுத்தச் சத்தியத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க! ரெண்டு பேரும் பிறர் நலம் பார்த்து இந்தக் கல்யாணத்த பண்ணிக்கிட்டோம்! இந்த லட்சணத்துல நடந்த கல்யாணத்துல, நமக்குள்ள இஸ்க்கு இஸ்க்கு நடந்திருந்தாத்தான் கொடுமையா இருந்திருக்கும் மாமா! அப்படி நீங்க நெருங்கிருந்தா, உங்களை நான் மன்னிச்சிருக்கவே மாட்டேன்!” எனச் சமாதானமாகப் பேசினாள் இவள்.

“கல்யாணம் நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சதும் என்னோட மனச உன் வருகைக்கு அடாப்ட் பண்ணிக்க ட்ரை பண்ணேன் தாமரை. நானும் நிவியும் யூஸ் பண்ண ரூம விட்டுட்டு இன்னொரு ரூம் நமக்காக செட் பண்ணேன். எல்லாம் புதுசு வாங்கிப் போட்டேன். நானும் என் மகளும் நிவியோட மிச்சங்களா உனக்குக் கிடைச்சிருக்கலாம். மத்ததெல்லாம் புதுசா இருக்கனும்னு நெனைச்சேன். சேலைல இருந்து, மேக்கப் வரைக்கும் உனக்குப் புடிச்சதா இருக்கட்டும்னு உன் கிட்டயே சாய்ஸ விட்டேன். இதிலெல்லாம் மாற்றம் கொண்டு வந்த என்னால, என் கிட்ட மாற்றத்த கொண்டு வர முடியல! கடவுள் கிட்ட போய்ட்ட ஒரு ஜீவனுக்காக, உசுரோட இருக்கற இன்னொரு ஜீவனோட வாழ்க்கைல விளையாடறமோன்னு ரொம்ப கில்ட்டியா இருக்கு தாமரை. என் மேல எனக்கே கோபம் கோபமா வருது! அந்த ஸ்ட்ரெஸ எடுத்துக்க முடியல என்னால! வெடிச்சுச் தெறிக்கற எரிமலைக் குழம்பு போல என் கோபம் உன் மேலயும் முறைப்பா, கிண்டலா, கேலியான்னு பல முறை வெடிச்சு சிதறிருக்கு! அதுக்கெல்லாம் சேர்த்து என்னை மன்னிச்சிரு தாமரை”

“நீங்க வெடிச்சப்ப நான் என்ன பூவா பறிச்சுட்டு இருந்தேன்! நானும்தானே படபட பட்டாசா வெடிச்சேன்! சோ வெடிக்கு வெடி சரியா போச்சு! அதை விடுங்க! நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க இப்போ! என்னமோ உங்களை மயக்கவே வந்தவ நானுங்கற மாதிரி கிட்ட வராதே, மேனகை வேலைப் பார்க்காதேன்னுலாம் ஏன் மாமா வம்பு பண்ணீங்க?”

“என் மேல எனக்கே நம்பிக்கை இல்லை தாமரை! நீ கிட்ட வந்தாலோ, ஒட்டி நின்னாலோ என் உடம்பு உனக்கு ரெஸ்போண்ட் பண்ணிடுமோன்னு ஒரே பயம்! அதான் உன்னைத் தள்ளி நிறுத்த அப்படிலாம் சொல்லிட்டு திரிஞ்சேன்! மனைவியா இருந்தாலும் அவ மேல லவ்வோட லஸ்ட் வரனும்! எங்கே உன் மேல லஸ்ட்ட மட்டும் காட்டிடுவேனோன்னு பயமா இருந்தது! ஒரு தடவை நீ ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டு இருந்தப்ப, என்னையும் அறியாம ரசிச்சுப் பார்த்தேன்! அது நம்ம பூக்குட்டியைப் பார்க்கற மாதிரி ஒரு ஹார்ம்லெஸ் ரசனைதான்! அதுக்கே என் மனசாட்சி என்னைக் காமக் கொடூரன் ரேஞ்சுக்கு திட்டிருச்சு!”

கல்யாணத்துக்கு இவன் சம்மதிக்க வேண்டுமென நிவேதா சொன்ன வார்த்தைகள் எந்தளவு இவனைப் பாதித்திருக்கின்றன என நன்றாகவே புரிந்தது தாமரைக்கு! வேகத்தையும் தாபத்தையும் காதல் மனைவியிடம்தானே காட்டி இருந்தான். கண்டவளிடம் காட்டி இருக்கவில்லையே! கொஞ்சம் யோசித்துப் பேசியிருக்கலாம் இந்த அக்கா என எண்ணியவள், நாள்தோறும் வலியிலும், மருந்து மயக்கத்திலும் இருந்தவள் கணவனுக்காக யோசித்து இவ்வளவு செய்ததே பெரிய விஷயம் என நிவேதாவை மன்னித்து விட்டு விட்டாள்.

“நீ என் மனைவியாகி சென்னைக்கு வந்த கொஞ்ச நாளுல உன் மேல எனக்கு கொஞ்சம் கொஞ்சமா அன்பு, அக்கறைலாம் வர ஆரம்பிச்சது தாமரை! மஞ்ச கயிறு மேஜிக்கா என்னன்னு தெரியல! சும்மாவே பொண்ணுங்க அழுதா எனக்குத் தாங்காது! அதும் நீ அழுதா பார்க்கவே ரொம்பப் பாவமா இருக்கும்! என் மேல உள்ள பயத்துல கிட்ட வந்து தொட்டுக் கிட்டு சமாதானப் படுத்தவும் பயம். அந்த டைம்லாம் உன்னைக் கடுப்பேத்தி அழுகைய நிறுத்தி இருக்கேன். எனக்கு பதிலடியா கோபத்துல நீ பேசற பேச்சு அவ்ளோ கியூட்டா இருக்கும்! அது மாதிரி நீ பேசறத கேக்கவே சில சமயம் வேணும்னே வம்பு வளப்பேன்! தென்றல் ஸ்கூல்ல அவளோட லெவலுக்கு இறங்கி நீ நடந்துகிட்டத பார்த்தப்ப, ஒரு திறமையான டீச்சர வீட்டுல அடைச்சு வைக்கறமோன்னு இருந்தது. அதனாலத்தான் உனக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணேன்! ஆனா உனக்காக என் மனசு இளகி நின்னது எனக்கே பிடிக்கல! அதுக்குள்ள பொண்டாட்டி கிட்ட மயங்கி நிக்கறமோன்ற மாதிரி ஃபீலிங்! அதான் உனக்கு வேலை வாங்கி தந்திருக்கேன்னு சொல்லாம நீயே சம்பாதிச்சுக்கன்னு சொல்லி உன் ஈகோவ உசுப்பி விட்டு வேலைக்குப் போக வச்சேன்”

“அப்போ உங்க மேல செம்ம கோபம்! இதென்னடா வாழ்க்கைன்னு வெக்ஸா கூட இருந்தது. உள்ளுக்குள்ள உங்கள திட்டிட்டேத்தான் இருந்தேன். ஆனா வேலைல சேர்ந்ததும், ரொம்ப மன நிறைவா உணர்ந்தேன்! எனக்குப் பிடிச்ச வேலைய செய்ய விட்டதுல, பொழச்சு போடா மாமா டேய்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்” என்றாள் இவள்.

“டேய்யா?”

“அதுலாம் ஃப்ளோல வரும்! கண்டுக்கக் கூடாது”

“யம்மா புண்ணியவதி! புல்லானாலும் புருஷன்மா! ஃப்ளோல இந்தப் புல்ல புடுங்கிப் போட்டுறாதே”

“சரி, சரி! முயற்சி பண்ணறேன்!” எனச் சொல்லி சிரித்தாள் இவள்.

சிரித்த முடித்தவளைப் பார்த்து,

“நீ ஒரு ராட்சசி தெரியுமா?” எனக் கேட்டான் இவன்.

“ராட்சசி? மீ? இருக்கலாம்! ராட்சசனுக்கு வாக்கப்பட்டதனால நானும் பை டிஃபால்ட் ராட்சசியா மாறி இருக்கலாம்” என அசால்ட்டாய் சொன்னாள் தாமரை.

“கொழந்தைப் புள்ளைக்கு கொக்கோகோலா குடுத்து, குடிக்கறதுக்கு முன்ன புடிங்கி வச்சிக்கிட்ட மாதிரி, தனிமைல இனிமை கண்டுட்டு இருந்த எனக்கு உன்னோட அருகாமையையும், அண்மையையும் பழக்கிட்டு மறுபடி கூட்டுக்குள்ள போய் அடைஞ்சுக்கிட்ட! ரொம்ப கஷ்டமா போச்சி தாமரை! ஏன் எனக்கு மேசேஜ் பண்ணலன்னு நேரடியா கேக்கவும் வாய் வரல! ஏன் எனக்காகக் காத்திருக்கலன்னு சண்டைப் பிடிக்கவும் மனசு வரல! மொனகிட்டே திரிய வச்சுட்ட என்னை! ஹாஸ்பிட்டல்ல பாத்திரக் கடைக்காரனுக்கு மனச குடுக்க மாட்டேன்னு சொன்ன பார்த்தியா, அதான் எனக்கு டர்னிங் பாய்ண்ட்! என் மனசு உன்னை நோக்கி பேபி ஸ்டேப்ஸ் எடுத்து வைக்கற சமயத்துல, நீ எட்டிப் போறத என்னால தாங்கிக்க முடியலை தாமரை! கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் நடக்கற யுத்ததுல, நான் நிகழ்காலம் பக்கம் நிற்கும் முயற்சில இறங்க ஆரம்பிச்சிருந்தேன்! எப்போ தெரியுமா? அன்றைக்கு நீ கீழ விழற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான்! நிவேதா படத்துக்கிட்ட நின்னு, அவள என் மனைவியா பார்க்காம குலசாமியா மட்டும் பார்த்து மனமுருக வேண்டிக்கிட்டேன்! ‘நிவி! உன்னை என் மனமெனும் சிறைல இருந்து விட்டுடறேன்! நிம்மதியா பறந்து போ! இனியாவது உன் ஆத்மா சாந்தியடையட்டும்!’னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன்! உன்னை ஹாஸ்பிட்டல்ல பார்த்துக்கிட்டது, தூக்கனது, இறக்கனது எல்லாம் மனசார என் மனைவியா நெனைச்சுத்தான் பண்ணேன்! இனிமே நமக்குள்ள எந்த விதமான சங்கடங்களும், சஞ்சலங்களும் வேணாம்னுதான் இன்னிக்கே என் மனசுல அடைச்சு வச்சிருந்த எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிட்டேன்!” என்றவனின் கரத்தைப் பற்றி மென்மையாய் வருடிக் கொடுத்தாள் இவள்.

“மாமா! நான் சதிஷ லவ் பண்ணிருப்பேன்னு இன்னும் நினைக்கறீங்களா?” எனக் கேட்டாள் தாமரை.

“சதிஷ் விஷயம் எனக்கு யாருமே சொன்னது இல்ல தாமரை. நானும் திருச்சிக்கு அடிக்கடி வரதில்லல! அதனால அரசல் புரசலா கூடத் தெரியல. உங்க பெரியப்பா பேச்சுக்கு நீ முகமெல்லாம் சிவக்க பத்ரகாளி மாதிரி நின்னதே, உன் மேல எந்தத் தப்பும் இல்லைன்னு புரிய வச்சது! அதனாலத்தான் அவனோட போன் வந்தப்ப, என்னால நோஸ்கட் குடுக்கவும் முடிஞ்சது! என்னை என்னமோ பொல்லாதவன் ரேஞ்சுக்கு நீ பேசவும்தான் உன்னைக் கடுப்படிச்சேன்! மத்தபடி அந்த சொறி டாக் சதிஷ அப்பவே நான் மறந்து போய்ட்டேன்!”

முகம் மலர்ந்து போக,

“இனி பழசு எதுவும் பேச வேணாம் மாமா! போனது, வந்தது, நடந்தது, நடக்காதது எல்லாம் போகட்டும்! நாம எதுக்கும் ரஷ் பண்ண வேணாம். கோபப்படாம, சிடுசிடுன்னு விழாம, அடிக்கடி சண்டைப் போட்டுக்காம கொஞ்ச நாள் நண்பர்களா மட்டும் இருப்போம்! மத்ததெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்!” என்றவளின் கையை எடுத்துக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டவன்,

“தேங்க் யூ தாமரை” என்றிருந்தான்.

தோளில் அழுத்தமாய் ஒரு கரம் படிய, நினைவலைகளில் இருந்து வெளியே வந்தாள் தாமரை. தினகரன்தான் அவள் தோள் பற்றி இருந்தான்.

“என்ன கனவு? எவ்ளோ நேரமா தாமரைன்னு கூப்பிடறேன்”

அவன் கரம் மேல் தன் கரம் வைத்தவள், அவனைப் பார்த்து அழகாய் முறுவலித்தாள். நெற்றி வகிட்டில் குங்குமத்துடன், புன்னகை முகமாய் நின்றவளின் மேலிருந்த பார்வையை அகற்ற முடியாமல் தடுமாறியவன்,

“நான் கிளம்பறேன் தாமரை!” என்றான்.

“சரி மாமா!” என நாற்காலியில் இருந்து எழுந்தவள் சரிந்து அவன் மேல் விழுந்தாள்.

சற்று முன் ஓடியதால் கால் வலி அதிகரித்திருக்க, காலை ஊன முடியாமல் அவன் புறம் சரிந்திருந்தாள். அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்ட தினகரன்,

“என்னாச்சு தாமரை?” எனக் கேட்டான்.

கால் வலி எனச் சொன்னால், ஏன் ஓடினாய் எனக் காய்ச்சி எடுப்பான் எனத் தெரிந்திருந்ததால்,

“வீட்டை விட்டு வெளிய போற புருஷன கட்டிப் புடிச்சு அனுப்பி வச்சா, அவன் மனக் கஷ்டம்லாம் பஞ்சா பறந்திடுமாம்! அதுக்குத்தான் இந்த மேஜிக் ஹக்!” என்றாள் இவள்.

“நெஜமாவா?”

“நெஜம்தான்! வீட்டுக்குள்ள பொண்டாட்டின்னு இருக்கற பெருங்கஷ்டத்தையே சமாளிக்கறோம்! மத்ததெல்லாம் ஜூஜூபி மேட்டர்னு மனசுல தைரியம் வந்திடுமாம்” என அவள் சொன்னதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தான் தினகரன்.

தந்தை சிரிப்பதையும் தாய் அவன் அணைப்பில் இருப்பதையும் பார்த்தப் பூக்குட்டி,

“நானு!” என ஓடி வந்தாள்.

அவளையும் தூக்கித் தங்களின் அணைப்பில் இணைத்துக் கொண்டான் தினகரன்.
 
Last edited:

CRVS2797

Active member
Aug 4, 2024
123
-47
43
ஆனாலும் இந்த தாமரைக்கு அநியாயத்திற்கு வாய்ப்பா, இந்த வாய் மட்டும் இல்லைன்னா தினகரன் கூட இவளை சீண்டியிருக்க மாட்டான் போலவே.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin