Pirithor Nesamithu--EPI 5

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
அத்தியாயம் 5

பூ முடித்துப் பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா!




திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது எனப் பொதுவாகச் சொல்வார்கள். அதை சொர்க்கமாகவே வைத்துக் கொள்வதும், நரகமாக்கிக் கொள்வதும் அவரவர் கைகளில்! தனது வாழ்க்கையைச் சீரும் சிறப்புமாக அமைத்துக் கொள்ள முடியாமல் போனாலும், சீரழிந்து போகுமாறு விட்டு விடக் கூடாது எனும் எண்ணத்தை உருப் போட்டுக் கொண்டே மெல்ல நடையிட்டு மணமேடை நோக்கி வந்தாள் தாமரை.

அவர்கள் ஊரில் அமைந்திருக்கும் முருகன் கோயிலில்தான் திருமணச் சடங்கு ஏற்பாடாகி இருந்தது. அந்த முருகனைப் போல ஒன்று இருக்கும் போதே இன்னொன்றுக்குத் தாவாமல், மனைவி மறைந்ததும்தான் மறுமணம் செய்கிறான் எனத் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டவளுக்குத் தன்னை நினைத்தே கோபம் வந்தது.

‘சரின்னு ஒத்துக்கிட்டாச்சு! பிறகென்ன அதையும் இதையும் நெனைச்சு மனச போட்டு உளப்பறது! அக்காவோட துணிங்க அவளுக்குச் சிறுசாகிடுச்சுன்னு பெரியம்மா கொண்டு வந்து குடுத்த போது நீ போட்டது இல்லையா? இல்லை அவ யூஸ் பண்ண ஸ்கூல் புத்தகங்களைக் கொண்டு வந்து குடுத்தப்ப நீ வச்சிப் படிச்சது இல்லையா? அது போலத்தான் அவ குடும்பம் நடத்துன புருஷன உனக்குக் கட்டி வைக்கறாங்க! அவ போட்டத் துணிகள போட்டு மகிழ்ந்த உனக்கு, அவ படிச்ச புக்க படிச்சுக் கிழிச்ச உனக்கு, அவள தொட்டப் புருசன தொட்டுக்க மட்டும் கசக்குதா?’ என மனசாட்சி கேள்வி கேட்க, எவ்வளவு அடக்கியும் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து விட்டது.

‘அடியேய், அழாதேடி! பெரியம்மா பார்த்தா பிச்சுப் பேன் பார்த்துடுவாங்க! கண்ட்ரோல்’ எனத் தனக்குத் தானே சொல்லி பெரிய மூச்செடுத்து அழுகையை அடக்க முயன்றாள். மணமேடை அருகே நெருங்கியவளைப் பார்த்த அன்னபூரணி,

“ஹோமப் புகை கண்ணை உறுத்துதா? எல்லாம் கொஞ்ச காலம்தான்! பிறகு பழகிடும்!” எனப் பூடகமாகச் சொல்லி, அவள் கண்களை கைக்குட்டையால் லேசாய் ஒற்றி எடுத்தார்.

தினகரின் அருகே அமர வைக்கப்பட்டாள் தாமரை. மறந்தும் கூட அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை பெண்.

அன்று பெண் பார்க்க வந்த போது நடந்த சம்பவங்கள் மனதில் பசுமையாய் நிற்க, அவனைப் பார்க்கவே ஒரு மாதிரியாய் இருந்தது தாமரைக்கு.

அப்பாவும், மகனும், பூக்குட்டியும் மட்டுமே மாப்பிள்ளை வீட்டுச் சார்பாகப் பெண் பார்க்க வந்திருந்தார்கள். ஏற்கனவே அறிமுகமானவர்கள்தானே எல்லோரும். ஆகையால் அறிமுகப்படலம் ஏதும் இல்லாமல், நேராகவே திருமணம் எப்பொழுது வைக்கலாம், செலவு, சீர் எனப் பேசத் தொடங்கி விட்டார்கள்.

“தடபுடலா எதையும் செய்ய எனக்கு விருப்பமில்லை. கோயிலுல வச்சித் தாலி கட்டிட்டு, கல்யாணத்த ரிஜிஸ்டர் பண்ணிடலாம். ஆனாலும் தாமரைக்கு இது முதல் திருமணம். அவளுக்குப் புடிச்சது போல சேலை, நகைகள், மேக்கப்னு ஏற்பாடு பண்ணுங்க! அதுக்குண்டான செலவ நான் ஏத்துக்கறேன். மத்தபடி ரிஷப்சன், இப்போ உள்ள ட்ரேண்ட் மாதிரி போட்டோஷூட்லாம் வேணாம்” என அங்கு ஓர் ஓரமாய் நின்றிருந்த தாமரையை நேராய் பார்த்துச் சொன்னான் தினகர்.

இவளுக்குமே அதிலெல்லாம் நாட்டம் இருக்கவில்லை. இவனோடு சேர்ந்து ரிஷப்சனில் ஒட்டி நிற்பதையும், அல்லது போட்டோஷூட்டில் கட்டி நிற்பதையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. முன்பொரு காலத்தில் திருமணம் எனும் நிகழ்வை மற்றப் பெண்களைப் போல ஆசையாய் கற்பனை செய்து பார்த்திருக்கிறாள்தான். அந்தக் கனவுகள் கானலாய் கலைந்து போயிருக்க, ஆசையெல்லாம் அமிழ்ந்து போயிருந்தது தாமரைக்கு. இவளையே தினகரன் பார்த்திருக்க, சரியெனத் தலையாட்டி விட்டாள் இவள். அதன் பிறகே பார்வையை வேறு புறம் திருப்பினான் அவன்.

“இங்க பாருங்க சின்ன சம்பந்தி, சீர் வரிசைன்னு நீங்க எதையும் செய்ய வேண்டியது இல்லை. நாங்களே சீர் கொடுக்கற சாமான்களைத்தான் வியாபாரம் செய்யறோம்னு உங்களுக்கே தெரியும். தாமரை கொண்டு வந்துதான் வீடு நெறயனும்னு இல்ல. நகைலாம் உங்க இஷ்டம். பணம் மட்டும் உங்க மக பேருக்கே போட்டு விட்டுருங்க! கையில பணம் இருந்தாத்தான் பொண்ணுங்களுக்கு எப்பவுமே நெஞ்சுல தைரியம்னு ஒன்னு இருக்கும்” என்றார் தினகரின் அப்பா அதியமான்.

தாமரையை ஒரு பார்வைப் பார்த்தார் அன்னபூரணி. பார்த்தாயா நீ வாழப் போகும் குடும்பத்தை என அந்தப் பார்வைக் கேட்டது.

அதியமான் சின்னதாய் தொடங்கி நடத்தி வந்த வெள்ளிப் பொருட்கள் விற்கும் கடையை இரண்டு மாடியாய் விரிவுப்படுத்தி இருந்தான் தினகரன். கீழ் தளத்தில் வெள்ளியினாலான அலங்காரப் பொருட்கள், நகைகள், கொலுசுகளோடு நாட்டியமாடுபவர்கள் பயன்படுத்துவது போல இருக்கும் கவரிங் நகைகளையும் விற்பனைக்கு வைத்திருந்தான். சினிமாவுக்கும், சீரியலுக்கும் கூட அங்கே வந்து மொத்தமாய் கவரிங் நகைகள் வாங்கிப் போவார்கள். மேல் தளத்தில் வெள்ளி மற்றும் எவர்சில்வரிலான பூஜை பொருட்கள், குடம், சொம்பு, கும்பா என எல்லா வெரைட்டியும் கிடைக்கும். கேட்பவர்களுக்குப் பெயர் பொதித்தும் கொடுப்பார்கள்.

காலையிலேயே எழுந்திருந்த பூந்தென்றல் தூங்கி வழிய, அவளைத் தனதறையில் படுக்க வைக்க அழைத்துப் போனாள் தாமரை.

“சித்தி!”

“என்னடாம்மா?”

“நீங்க எங்க வீட்டுகே வந்திருவீங்கன்னு தாத்தா சொன்னாரே, அது நெஜமா?” எனத் தூக்கக் கலக்கத்தில் கேட்டாள் பூக்குட்டி.

ஆமென மெல்லத் தலையாட்டினாள் தாமரை.

உள்ளே அடைத்து வைத்திருந்த பெருங்கவலையை வெளியேற்றுவது போல பெரிய மூச்சொன்றை இழுத்து விட்ட சின்னக் குட்டி,

“இதை கேக்க எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா சித்தி!” எனச் சொல்லிப் படுத்தபடியே இரு கைகளையும் விரித்துக் காட்டி,

“இவ்ளோ சந்தோஷமா இருக்கு” என்றாள்.

அவளது செய்கையில் புன்னகை முளைக்க,

“எனக்கும்தான்டா குட்டிமா, இவ்ளோ சந்தோஷமா இருக்கு” எனத் தன் கைகளையும் விரித்துக் காட்டினாள் தாமரை.

“சித்தி!”

“என்னம்மா?”

“அப்பா சொன்னாங்க, நீங்க எங்களோட ரூம ஷேர் பண்ணிப்பீங்களாம்! அப்டினா எங்க கூடத்தான் தூங்குவீங்களா?” எனக் கேட்டாள் இவள்.

அதையெல்லாம் இன்னும் இவள் யோசித்திருக்கவில்லையே!

“அதெல்லாம் சித்தி அங்க வந்ததும் பேசிக்கலாம்டா!”

“நான் அப்பா கூடத்தான் தூங்கறேன்! அவரு தூக்கத்துல கையைத் தூக்கி என் மேல போட்டுருவாரு! ரொம்ப பாரமா இருக்கும்! கைய நான் அசைச்சா, முழிச்சிடுவாருல்ல! அதான் அப்படியே கஷ்டப்பட்டுத் தூங்கிடுவேன்! இனிமே எனக்கும் அப்பாக்கும் நடுவுல நீங்க படுத்துக்கோங்க! நீங்கதான் பிக்கா இருக்கீங்கல்ல, அப்பா கையைத் தூக்கிப் போட்டா உங்களுக்கு வலிக்காது! ப்ளீஸ்!” என உதட்டைக் குவித்து, முகத்தைச் சுருக்கிக் கெஞ்சினாள் பூந்தென்றல்.
இதேதடா வம்பாகப் போய் விட்டது என எண்ணிய தாமரை,

“இப்போ நீ தூங்குவியாம்! எழுந்ததும் சித்தி உனக்கு இனிப்பு பஜ்ஜி தருவேனாம்” எனப் பேச்சை மாற்றினாள்.

சரியெனத் தலையாட்டியவள், சில நிமிடங்களில் உறங்கியும் போனாள். இவள் கையைப் பற்றி இருந்த பிஞ்சு விரல்களை விலக்கியவள், குட்டிக்கு அணையாக தலையணை ஒன்றை வைத்து விட்டு எழுந்து வெளியே வந்தாள்.

“தாமரை! மாப்பிள்ளைக்குப் போன் வந்ததுன்னு பின் பக்கம் பேச போய்ருக்காரு! நீ போய் கொஞ்ச நேரம் அவரோட பேசிட்டு கையோட கூட்டிட்டு வா! சாப்பிடலாம்” என்றார் அன்னபூரணி.

சம்பந்திகள் மூவரும் கல்யாண ஏற்பாட்டைப் பற்றிப் பேசியபடி இருக்க,

“சரி பெரியம்மா” என்றவள் பின்கட்டுக்குப் போனாள்.

இவர்கள் வீட்டின் பின்னால் பல வகையான பழ மரங்களும் பூச்செடிகளும் இருந்தன. கந்தன் ஓய்வு நேரத்தில் அங்கேதான் குடி இருப்பார். மனைவியின் நினைவாய் அந்தத் தோட்டத்தை நன்றாகப் பராமரித்து வந்தார் அவர். தாமரைக்காக மரக் கிளையில் ஊஞ்சல் ஒன்றுப் போட்டு வைத்திருந்தார்கள். அதில் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டு தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான் தினகரன். தென்றல் காற்று அவன் சிகை கலைத்து விளையாடியது. அவன் பேசி முடிக்கும் வரை தொல்லை செய்ய வேண்டாமென பின் கட்டுப் படிகளில் அமர்ந்து கொண்டாள் இவள். பின்னால் திரும்பினால் மட்டுமே அவனால் இவளைப் பார்க்க முடியும்.

“நான் ஆண் சிங்கம்னு எப்படா உன் கிட்ட சொன்னேன்?” எனும் அவன் நக்கல் குரல் இவளுக்குச் சுவாரசியத்தைக் கொடுத்தது.

ஆனாலும் ஒட்டுக் கேட்பது தப்பாகப் பட, உள்ளே போக எழுந்து விட்டாள் இவள்.

“அட அப்படியா? நல்லதா போச்சு” என அவன் பேச, அப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, கலகலத்துச் சிரித்தான் தினகர்.

“இங்க பாரு மச்சி! சாரி! சாரி! உன்னை நான் மச்சின்னு கூப்ட்டா உனக்குத் தாமரை தங்கச்சி முறைல வரும். சோ தம்பின்னு கூப்படறேன்! அதான் இந்த முக்கோண உறவுக்குச் சரியா வரும்”

இவள் பெயர் அடிபடவும், அதிர்ச்சியாகி மீண்டும் அமர்ந்து விட்டாள் தாமரை.

“நான் எப்படிப்பட்ட ஆள்னா, ஒரு படத்துல சத்தியராஜ் வடிவேலு கிட்ட சொல்வாரே, ஏற்கனவே கட்டி வச்ச வீட்டுல பாய் போட்டு படுக்கறதுதான் எனக்குச் சரிப்பட்டு வரும்னு, நானும் அப்படிப்பட்ட ஆள்தான்னு வச்சிக்கோயேன். இந்தப் புத்தம் புது கை படாத ரோசாலாம் எனக்குச் சரிப்பட்டு வராது தம்பி சதிஷூ! ஏற்கனவே ஒரு கல்யாணமாகி அதெல்லாம் மூச்சு முட்ட அனுபவிச்சுட்டேன். இப்போ என் மைண்ட் ஃபுல்லா வேலை, பணம், சம்பாத்தியம், புள்ளை வளர்ப்புன்னுதான் இருக்கு! இதுல ஒன்னும் தெரியாத இந்தத் தாமரைய கட்டிக்கிட்டு, கொஞ்சி கெஞ்சி டைமெடுத்து ரோமான்ஸ் பண்ணறதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான்னு வையேன்.”

அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ இவன்,

“டேய்! என்னடா அதுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டற! முழுசா பேசி முடிக்க விடுடா தம்பி! எங்க விட்டேன்! ஆஹ்ன்ன்ன்! ரோமான்ஸ்! ஓகே, ஓகே! சோ, நீ ஏற்கனவே தாமரையத் தொட்டு எல்லாத்தையும் முடிச்சுட்டேன்னு சொல்ற! அதுல எனக்கு ஏன்டா கோபம் வரனும்! வேலை மிச்சமாகிடுச்சுன்னு ரீலீவ்தானே வரனும்! கண்ணே, மணியே இறகு போடுமான்னு கெஞ்சிட்டு நிக்காம நேரா மேய்ன் பிக்சர் போய்டலாம் பாரு!” என்றான்.

தினகரின் பேச்சில், தாமரையின் உடல் கோபத்தில் வெட வெடவென நடுங்கியது! கண்களில் அருவி அடங்காமல் இறங்கியது.

“பொட்டைப்பயலா? தம்பி சார்!! என்னதிது மரியாதை இல்லாம! கிவ் ரெஸ்பெக்ட்! டேக் ரெஸ்பேக்ட்”

“எனக்குலாம் என்ன ஹேருக்கு மரியாதையா? டேய் தம்பி படிச்ச பையன் மாதிரியாடா பேசற! அவ்வா, அவ்வா! என் பாட்டி செவப்பாயி மட்டும் உசுரோட இருந்திருந்தா, உன் மூஞ்சு முகரைலாம் செவப்பு மொளகாய அரைச்சுப் பூசிருக்கும்டா! அது செத்து போனதால, அதோட பேரன் நான், உன்னை மட்டும் நேருல எங்கயாச்சும் பார்த்தேன்னு வை மூஞ்சுல பூசாம, மூஞ்சுக்கு ரைமிங்கா வரும் இன்னொரு இடத்துல பூசி விட்டுருவேன்! அது இருக்கவும்தானேடா கொழுப்பெடுத்து ஆடறீங்க நீங்கல்லாம்! எவ்ளோ தெனாவெட்டு இருந்தா, எங்க வீட்டுப் பொண்ணப் பார்த்து என் கிட்ட கெட்டுப் போய்ட்டா, அபார்ஷன் பண்ணிருக்கான்னு வாய் கூசாம சொல்லுவ! பேசற வாயைக் கிழிச்சித் தோரணம் கட்டிருவேன் பார்த்துக்கோ! நீ என்ன கேடு கெட்ட ப்ளான் பண்ணாலும் எனக்கும் தாமரைக்கும் கல்யாணம் நடக்கும்டா என் வெண்ட்ரு! வெளி நாட்டுல நீ போய் உக்காந்துகிட்டா என்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு நெனைச்சியா? உன் அம்மா, அக்கா, தங்கச்சிலாம் இந்த நாட்டுலத்தான் இருக்காங்கன்ற நெனைப்பு இருக்கா இல்லையா? இனி போன் போட்டு உன் ஈன வேலையைக் காட்டுன, உன் வீட்டு ஆளுங்க கிட்ட நான் காட்டுக் காட்டுன்னு காட்டி விட்டுருவேன் பார்த்துக்கோ! எனக்கும் அரசியல்வாதி, ரௌடின்னு பல பேரைத் தெரியும். கூண்டோட அழிச்சி விட்ருவேன்! அடங்கி நடடா என் சதிஷூ! தாமரைப் பூவுக்கும் இந்தத் தண்ணிக்கும் கண்ணாலம் நடக்கப் போகுது! அண்ணாவும் அண்ணியும் நல்லா இருக்கனும்னு அங்கருந்தே வாழ்த்திப் பாடிட்டு மூலையில முடங்கிக்கனும்! புரிஞ்சதா! பாய்டா தம்பி சதிஷூ!!” என அழைப்பை நிறுத்தியவன்,

“ப்ளடி இடியட்” எனச் சினத்துடன் எழுந்தான்.

வீட்டுக்குள் நுழைய திரும்பியவன், அங்கே தாமரையைப் பார்த்து விட்டுப் புருவம் சுருக்கினான். அவள் அழுதிருந்த தடம் தெரிய,

“இனி தொல்லைப் பண்ண மாட்டான்! அப்படி வந்தான்னா, என் கிட்ட சொல்லு! தூக்கி அடிச்சிடறேன்” என்றான் தினகர்.

“அவன் வீட்டுப் பொண்ணுங்கள ஒன்னும் செய்யாதீங்க”

“ஓஹோ! எக்ஸோட சிஸ்டர்ஸ் மேல பாசம்!!” என நக்கலாகக் கேட்டான் இவன்.

“எக்ஸூம் இல்ல, ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல” என வெடித்தாள் இவள்.

“யாருக்கு என்ன மொழியில பேசுனா புரியுமோ, அந்த மொழியிலத்தான் அவன் கிட்ட பேசி இருக்கேன்! அவன போல கீழ்த்தரமா பொண்ணுங்க விஷயத்துல நடந்துக்கற ஆள் இல்லை நானு!”

கன்னங்களைத் துடைத்துக் கொண்ட தாமரை,

“பெரியம்மா சாப்பிட கூப்பிட்டாங்க” என்றாள்.

“வரேன்! அதுக்கு முன்ன சிலது பேசிடலாம்”

என்ன என்பது போல அவனை ஏறிட்டாள் இவள்.

“உனக்கே தெரிஞ்சிருக்கும், தென்றலுக்காகத்தான் இந்தக் கல்யாணம்னு.”

ஆமெனத் தலையாட்டினாள் இவள்.

“அதுக்குன்னு என்னால புத்தனாலாம் போக முடியாது”

பேவென அவன் முகத்தைப் பார்த்தாள் தாமரை!

சட்டென வேறு பக்கம் திரும்பிக் கொண்ட தினகர்,

“கல்யாணம்னா அதுக்கான கடமைகள் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்குமே இருக்கும்! ஆனாலும் என்னால சட்டுன்னு நிவிய மறந்துட்டு உன் கிட்ட இழைய முடியாது! எனக்கு டைம் தேவை! கல்யாணம் ஆனதும், உடனே என் மேல நீ பாஞ்சிட மாட்டேன்னு நம்பறேன்” என்றான்.

“எதே!!!”

“நான் பேச வந்தத பேசிட்டேன்! இப்போ உள்ள போகலாம்” என்றவன், அதிர்ந்து நின்றிருந்தவளைத் தாண்டி வீட்டுக்குள் நுழைந்து விட்டான்.

“கெட்டி மேளம்! கெட்டி மேளம்” எனும் சத்தம் கேட்க, தன் நினைவலைகளில் இருந்து வெளியே வந்தாள் தாமரை.

அவள் கண்களுக்கு எதிரே ஆடியது திருமாங்கல்யம். இவள் தலையைக் குனிந்து கொள்ள, தினகரன் மூன்று முடிச்சிட்டுத் தாமரையைத் தனது சரி பாதியாக ஏற்றுக் கொண்டான். தாலி கட்டி முடித்ததும், ஓடி வந்த பூக்குட்டி, இவள் மடியில் அமர்ந்து கொண்டாள். தாமரையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள்,

“வெல்கம் டூ அவர் ஃபேமிலி சித்தி” எனச் சந்தோஷமாகச் சொன்னாள்.

சின்னவளின் இந்தச் சிரிப்பை மட்டும் வாடவே விட்டு விடக் கூடாது எனச் சங்கல்பம் எடுத்துக் கொண்ட தாமரை, பூக்குட்டியை இறுக அணைத்துக் கொண்டாள்.
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 5
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
123
-47
43
சூப்பர் தினகரா, சரியான பதிலடித்தான் அந்த சதிஷ் வென்றுக்கு கொடுத்திருக்கான்.

ஆனால் பாவம் தாமரை, ஓரேயடியா அவளை ஷாக்கிங் மோடுக்கு கொண்டு போனது தான் நியாயமே கிடையாது.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin