Sorkam Madhuvile--EPI 17

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
918
-1,981
93
அத்தியாயம் 17

நீதானே வறண்ட என் பூமியின் அமிர்தவர்ஷினி!



அது ஒரு பெரிய ஷாப்பிங் வளாகம். அங்கேதான் கூடி இருந்தார்கள் ஐ.டி டீமில் பணி புரியும் பாவப்பட்ட ஜீவன்கள். மற்ற துறை சார்ந்தவர்களுக்காவது அவ்வப்பொழுது மூளைக்கு ஓய்வென்பது கிடைக்கும். ஆனால் ஐ.டியில் வேலைப் பார்ப்பவர்களுக்கு ஊண், உயிர், உணர்வு எல்லாமே பாழாய் போன அந்தக் கணிணியில்தான் அடைந்து கிடக்கின்றன. வீட்டில் மனைவியைக் கொஞ்சும் போது கூட கோடிங் போட்டது சரியா என மானங்கெட்ட மூளை யோசிக்கும். பிள்ளைகளுடன் விளையாடும் போது கூட பிராஜேக்ட் டேட்லைன் மண்டையில் சதிராடும்.

அப்படி ஸ்ட்ரெசில் வேலை பார்ப்பவர்களுக்குக் கண்டிப்பாக ரிலேக்‌ஷேசன் வேண்டும். அதனால்தான் ஐ.டி வேலைப் பார்ப்பவர்களுக்கு அடிக்கடி பார்ட்டி, டீம் அவுட்டிங், ஸ்போர்ட்ஸ் டே எனப் பல சலுகைகளை வழக்கும் அவர்கள் வேலைப் பார்க்கும் நிறுவனம். மதுஷாலினியின் நிறுவனமும் அதற்கு விதிவிலக்கல்ல! அப்படித்தான் இந்த முறை ஐஸ் ஸ்கேட்டிங் விளையாடுவதற்காக அந்த மாலுக்கு வந்திருந்தார்கள் அவர்கள் எல்லோரும். அவர்களோடு ஐ.டி டீமின் ரீஜீனல் ஹெட்டான விஜய்யும் வந்திருந்தான். யார் கவனத்தையும் கவராமல், மற்றவர்களோடு கலந்து நில்லாமல், ஓரமாய் ஒதுங்கி நின்றிருந்தான் அவன்.

இரண்டு வாரங்கள் துபாயில் வேலையை முடித்துக் கொண்டு மூன்று நாட்களுக்கு முன்புதான் கோலாலம்பூர் வந்திருந்தான். வந்தவனுக்கு நிற்க நேரமில்லாமல் வேலை வைத்துச் செய்தது. போய் வந்த வேலைக்கான ரிப்போர்ட் தயாரிப்பது, இங்கு இது வரை நடந்திருக்கும் வேலைக்கான ரிப்போர்ட்களை வாசிப்பது என ஆபிஸ் ரூமே கதியாய் கிடந்தான். அவனுக்காகத் தனி காபின் இருந்தது. அதோடு ஒரு செயலாளரும் இருந்தாள். பயணம் முடித்து வந்தது களைப்பாய் இருந்தாலும், அவனால் வீட்டில் இருக்க முடியவில்லை. இத்தனைக்கும் வீட்டில் இருந்து வேலைப் பார்க்கும் சலுகை இருந்தது அவனுக்கு. ஆனாலும் அவனை இயங்க வைக்கும் மூச்சுக் காற்று அலுவலகத்தில் இருக்க, கிளம்பி வந்து விட்டான்.

மதுஷாலினியின் டீம் அமர்ந்திருக்கும் இடத்தைக் கடந்துதான் அவனது காபினுக்கு செல்ல வேண்டும். அங்கு அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து பொதுவான ஒரு ஹாயுடன் தனது அறைக்குள் நுழைந்து கொண்டான் விஜய். மதுவின் பார்வை முதுகைத் துளைப்பதை உணர்ந்து கொண்டவனுக்கு, உள்ளுக்குள் சிரிப்பாய் வந்தது.

‘பாரு! பாரு! நல்லா பாரு!’ என எண்ணிக் கொண்டே போய் சீட்டில் அமர்ந்து கொண்டான்.

அவனது செயலாளருக்குச் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டவன், அதன் பிறகு தன் வேலையில் மூழ்கிப் போனான். இரண்டு மணி நேரம் போயிருக்கும். அவனது டெஸ்க் போன் சத்தமிட்டது. அவனது செயலாளர்தான்.

“யெஸ் ரீமா”

“சார்! உங்களைப் பார்க்க முடியுமான்னு புதுசா ஜாய்ன் பண்ணிருக்கற ப்ராஜெக்ட் மேனேஜர் மிஸ் மதுஷாலினி கேக்கறாங்க! அனுப்பவா உள்ள?”

மெல்லியப் புன்னகை அவன் இதழ்களில்.

“இப்ப நான் பிசி! ஈவ்னிங் நாலு மணிக்கு வர சொல்லுங்க”

‘டேய்! டேய்! பரதேசி! வர சொல்லுடா அவள! உனக்குக் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையா? அவள கிட்ட பார்க்க, அவ குரல கேக்க, அவ வாசத்த நுகர நான் எவ்ளோ ஏங்கிக் கிடக்கறேன்னு உனக்குப் புரியலையா? கூப்புடுடா! கூப்புடு!’ என மனம் கூக்குரலிட்டது.

‘இப்ப அவள பார்க்கக் கூப்பிட்ட, செருப்ப சாணில முக்கிப் பொளார், பொளார்னு அப்புவேன் பார்த்துக்கோ! ஈவ்னிங் கூட அப்பாயிண்ட்மேன்ட் குடுத்துருக்கக் கூடாதுடா! ரெண்டு மூனு வாரம் தவிக்க விட்டிருக்கனும்!’ என மூளை முழக்கமிட்டது.

அவளைப் பார்ப்பதை வேண்டுமென்றே தள்ளிப் போட்டவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

‘எதுக்கு என்னைப் பார்க்கனுமாம்? என்ன பேசனுமாம்? இப்ப நேருல பார்த்ததும் பொங்கற பாச அருவி, இத்தனை வருஷம் எங்க போச்சாம்? இந்த விஜய் இருக்கானா, போய்ட்டானானு என்னைக்காச்சும் தேடிருப்பாளா? இப்ப மட்டும் என்னவாம்! காத்திருக்கட்டும்! நான் காத்திருக்கல இந்த எட்டு வருஷமா! எவ்ளோ தவிச்சிருப்பேன்! எவ்ளோ துடிச்சிருப்பேன்! நீண்ட நெடிய எட்டு வருசம். நான் பட்டக் கஷ்டங்கள, வேலை கிடைச்ச சந்தோஷத்த, ஒவ்வொரு படியா முன்னேறுன இன்பத்த, சொந்தமா வீடு வாங்கன குதூகலத்த எல்லாம் பகிர்ந்துக்க பக்கத்துல அவ இல்லாம எவ்ளோ குமைஞ்சிருப்பேன். எந்தச் சந்தோஷத்தையும் ஆழ்ந்து அனுபவிச்சதே இல்லையே! மது கூட இருந்திருந்தா இன்னும்ல மகிழ்ச்சி கூடியிருக்கும்னு நெனைக்காத நிகழ்வுகள் இல்லையே என் வாழ்க்கைல! இப்ப மட்டும் என்னடி என்னைப் பார்க்கனும்! தேவையில்ல போ!’ என முரண்டியது உள்ளுக்குள்ளே.

காபி குடிக்கப் போவது போல அவள் அமர்ந்திருக்கும் இடத்தைத் தாண்டிப் போனான் விஜய். வேலையில் கவனமாய் இருந்தவள் இவனைப் பார்க்கவில்லை. வேண்டுமென்றே அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை விளித்து, சில நிமிடங்கள் சிரித்துப் பேசினான். அவன் குரலில் சட்டென நிமிர்ந்துப் பார்த்தவள், அவன் கவனிக்கவில்லை என எண்ணிப் பார்த்தபடியே இருந்தாள். ஏதேச்சையாகத் திரும்புவது போல இவன் திரும்ப, படக்கென கீழே குனிந்து கொண்டாள் மதுஷாலினி.

‘பார்த்ததென்ன

பார்வை என்னை வாட்டுதே’ எனப் பாடிய இதயத்தை இறுக்கிப் பிடித்தவன், காண்டினுக்கு நடந்து விட்டான்.

நான்கு மணி என நேரம் கொடுத்து விட்டவனுக்கு, வேலையில் கவனம் வைக்கவே முடியவில்லை. முயன்று மனதைக் கட்டுப்படுத்தி வேலைகளைப் பார்த்தான். நடுநடுவே நிறைய அழைப்புகள் வேறு வர, கவனமும் வேலையில் பதிந்தது. பகல் உணவு வேளை மற்ற டிப்பார்ட்மெண்ட் தலைவர்களுடன் ஏற்பாடாகியிருக்க, ஒரு மணிக்கெல்லாம் வெளியே போய் விட்டான் விஜய். போகும் போது அவள் இடத்தைப் பார்க்க, அது காலியாக இருந்தது. சாப்பிடப் போயிருப்பாள் என எண்ணிக் கொண்டே கடந்து விட்டான்.

ஒரு வழியாய் மாலை நான்கு மணியாகி இருந்தது. விஜய் அவனது காபின் கதவையே எட்டி எட்டிப் பார்த்தபடி இருந்தான். அவள் வருவாளா? என் உடைந்துப் போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா எனச் சந்தடி சாக்கில் சிந்து பாடியது அவன் இதயம். மூன்று நிமிடங்கள் கடந்திருக்க, எங்கே அவள் என செக்ரட்டரியிடம் கேட்க தொலைப்பேசியைக் கையில் எடுத்த நேரம், கதவு தட்டும் ஓசைக் கேட்டது!

“கம்மின்”

அவள்தான். முகம் கொஞ்சம் பதட்டமாய் தெரிய, மெல்ல அடி எடுத்து உள்ளே நுழைந்தாள். கணிணியில் வேலையாய் இருப்பது போல நடித்தவன்,

“சிட்” எனச் சொன்னான்.

“குட் ஈவ்னிங்” என்றாள் மதுஷாலினி.

சார், விஜய் என எந்த விளிப்பும் இல்லை. பதில் வணக்கம் சொன்னவன், அவளை நிமிர்ந்து பார்த்து,

“வேலைலாம் எப்படி போகுது மிஸ் மதுஷாலினி?” எனக் கேட்டான்.

“குட் வி”ஜய் எனச் சொல்ல வந்தவள்,

“குட்! ஓரளவு கேட்ச் பண்ணிட்டேன்” என்றாள்.

“சரி! சொல்லுங்க! என்ன விசயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க? எதாவது கம்ப்ளேண்ட்னா உங்க மேலதிகாரியத்தானே பார்க்கனும்! அவருக்கும் மேலதிகாரியான என்னைப் பார்க்க வந்த காரணம்?”

“அது” எனத் தயங்கியவள்,

“அகிலா ஆண்ட்டி எப்படி இருக்காங்க?” எனப் பட்டெனக் கேட்டு விட்டாள்.

“அகிலா? யூ மீன் என்னுடைய அம்மா? அவங்கள பத்தி தெரிஞ்சுக்க உங்களுக்கு என்ன அவசியம் வந்துச்சு? என் அம்மா உங்களுக்கு எந்த விதத்துலயாவது சொந்தமா? அத்தை, மாமி இப்படி?” எனக் கேட்டவனை அடிபட்டப் பார்வைப் பார்த்தாள் மதுஷாலினி.

“விஜய் ப்ளிஸ்” என ஆரம்பித்தவளைக் கண்டனமாகப் பார்த்து,

“கால் மீ விஜய் சார்” என்றான் இவன்.

அடிபட்டப் பார்வைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்திரப் பார்வையாக மாறுவதை உள்ளுக்குள் ரசித்தபடி அவளையே பார்த்திருந்தான் இவன்.

சட்டென எழுந்து நின்றவள்,

“சாரு, மோரு, வெளக்கமாறு! போடா” என அவனுக்குக் கேட்கும்படி முணுமுணுத்தவள், விறுவிறுவென வெளியேறிப் போய் விட்டாள்.

கதவு மூடிய சில நிமிடங்கள் பொறுத்து, வெடித்துச் சிரித்தான் விஜயவேல்.

“நீ எப்படி இருக்கன்னு ஒத்தை வார்த்தைக் கேட்கல! மாமியார விசாரிக்க வந்துட்டா! கோபம் வருமா வராதா! போடி, போடி!” எனக் கொஞ்சிக் கொண்டவன், மலர்ச்சியுடனே வேலையைப் பார்த்தான்.

அதன் பிறகு உள்நாட்டிலேயே மற்ற கிளைகளுக்குப் போக வேண்டியது இருந்ததில் இன்றுதான் மாலில் அவளைப் பார்க்கிறான் விஜய். தனியாய்தான் அமர்ந்திருந்தாள். பனிச்சறுக்கு விளையாட்டுக்காகப் பிரத்தியேகமாக அணியப்படும் காலணிகளை அமர்ந்தவாக்கில் அணிந்து கொண்டிருந்தாள். கண்கள் அலைபாய்ந்து யாரையோ தேடியபடி இருந்தன.

‘தேடறியா? தேடு! தேடு!’ என நினைத்தபடி அவளையே பார்த்திருந்தான் இவன்.

அந்த மாலின் நடுவே நீள் சதுர வடிவில் பனிச் சறுக்கு இடத்தை அமைத்திருந்தார்கள். அதன் உள்ளே போய் சறுக்கி விளையாட அடிப்பாகத்தில் கூர்மையாக ப்ளேட் போல் இருக்கும் காலணியை அணிய வேண்டும். அதோடு கை உறையும் போட வேண்டும்.

அவ்விடத்தை மூன்று மணி நேரத்துக்கு இவர்கள் டீமுக்காக மொத்தமாய் வாடகைக்கு எடுத்திருந்தார்கள். காலணிக்கும், கையுறைக்குமான வாடகையை நிறுவனமே செலுத்தி இருந்தது. ஸ்கேட்டிங் ரிங்க் உள்ளே, புதிதாய் வருபவர்கள் கை பிடித்துப் பழகுவதற்கு ஏதுவாய் சுற்றி கைப்பிடிகள் வைத்திருந்தார்கள். அதோடு யாராவது விழுந்து விட்டால், அவர்களுக்கு உதவுவதற்காக ஸ்கேட்டிங்கில் கை தேர்ந்தவர் ஒருத்தரும் உள்ளே இவர்களோடு இருப்பார்.

ஷாலினிக்கு இதுதான் முதல் முறை. ஆரம்பத்தில் போக வேண்டாம் எனத்தான் நினைத்தாள். தனியாய் வீட்டில் அமர்ந்து கண்டதையும் நினைத்து அழுவதற்குப் பதில் புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம் எனக் கிளம்பி வந்திருந்தாள். அதோடு விஜய்யும் வருவானோ என ஒரு நப்பாசை! பேசாவிட்டாலும் கண்ணாலாவது அவனைக் கண்டுக் களிக்கலாமே.

ரிங்க் உள்ளே அநாயசமாய் சறுக்கி விளையாடுபவர்களையும், நடனம் ஆடுபவர்களையும் பார்க்கும் போது இவளுக்கே ஓர் உற்சாகம் வந்து விட்டது.

“ஷால்! வாங்க உள்ள போகலாம்!” என அருகே வந்து நின்றான் அன்று காபி வாங்கிக் கொடுத்தவன்.

“நீங்க முதல்ல போங்க! நான் மெல்ல வரேன்” எனப் புன்னகையுடனே மறுத்து விட்டாள் இவள்.

“உள்ள பார்க்கலாம்!” எனச் சொல்லி உள்ளே நுழைந்து விட்டான் அவன்.

இவள் மெல்ல எழுந்து நின்றாள். பேலன்ஸ் இல்லாமல் பூமியே ஆடியது. மறுபடி படக்கென அமர்ந்து கொண்டாள்.

‘உள்ள போய் பொழச்சி வருவனா நானு?’ என எண்ணிக் கொண்டவளுக்குச் சிரிப்பு வந்தது.

அவளது செய்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய்க்கும் சிரிப்பு வந்தது.

மெல்ல மெல்ல எட்டு வைத்து, வெளியேயும் போடப்பட்டிருந்த கைப்பிடியைப் பற்றியபடி நடந்தாள் மதுஷாலினி. ஒரு வழியாக ஸ்கேட்டிங் ரிங்க் உள்ளே நுழைந்து விட்டாள். பளபளப்பாக்கி வைக்கப்பட்டிருந்த தரையில் கால் வைத்ததும்தான் தாமதம், ஒரு கால் கிழக்குக்கும் ஒரு கால் மேற்குக்கும் பறந்தது.

“யப்பா சாமி!” எனச் சத்தம் போட்டே கத்தி விட்டவள், அடித்துப் பிடித்து கைப்பிடியைப் பற்றி நேராக நின்றாள். அதற்குள்ளாகவே கை காலெல்லாம் நடுங்கி விட்டது.

‘வெளியாகிடலாமா?’ என இவள் யோசிக்க ஆரம்பித்த நேரம், உள்ளே நுழைந்தான் விஜய்.

அவனைப் பார்த்ததும் வெளியாக மனது வராமல் அப்படியே நின்றாள் மதுஷாலினி. விஜய் மீது நெஞ்சு முட்டக் கோபம்தான். மனது நிறைய ஆதங்கம்தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள் இவள். ஆசையாய் ஓடோடி வந்தவனின் மனதை ஒடித்து அனுப்பியதற்கு இந்த அளவாவது கோபம் காட்டா விட்டால் அவன் மனிதனில் இருந்து மாறி புனிதனாகி விடுவானல்லவா!

பெருமூச்சுடன் அவனையே பார்த்திருந்தாள் மதுஷாலினி. அவனும் கூட மிக நன்றாகவே ஸ்கேட்டிங் செய்தான்.

“பார்டா! பெரிய பருப்பாயிட்டாரு நம்ம விஜயரு!!” என முணுமுணுத்தவளுக்குப் புன்னகையும் சேர்ந்து வந்தது.

ஒரு ரிதமாய் சறுக்கி, அழகாய் வட்டமடித்து மீண்டும் சறுக்கி அவன் நகர்ந்ததைப் பார்க்கக் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. மியூசிக் வேறு ஒலிக்க, அதற்கேற்றார் போல நகர்ந்தவனைப் பரவசமாகப் பார்த்திருந்தாள் மதுஷாலினி.

“மேடம்! ஹெல்ப் வேணுமா? என் கையைப் பிடிச்சிட்டு ட்ரை செய்யறீங்களா?” என வந்து நின்றார் அங்கு வேலைப் பார்க்கும் ட்ரெய்னர்.

விஜய் போல தானும் விளையாட வேண்டும் எனும் ஆசை முளைக்க சரியெனத் தலையாட்டினாள் இவள்.

“பயப்படாதீங்க!” எனச் சொன்னவர், விழாமல் இருப்பது எப்படி, உடலை பேலன்ஸ் செய்வது எப்படி எனச் சில டிப்ஸ்கள் கொடுத்தார்.

“முதல்ல இந்தப் பிடிமானத்தப் பிடிச்சிட்டே ஒரு ரவுண்ட் வாங்க! பிறகு கைய விட்டுட்டு என் கையப் பிடிச்சிட்டு ட்ரை செய்யலாம்” எனச் சிரித்த முகமாக சொன்னார் அவர்.

சரியெனத் தலையாட்டியவள், இறுக்கமாய் பிடிமானத்தைப் பற்றியபடி மெல்ல அடி எடுத்து வைத்து குழந்தை நடைப் பழகுவது போல தத்தக்கபித்தக்காவென நடந்தாள். கீழே வழுக்கி விட, நேராய் நிற்பதே பிரம்மப்பிரயத்தனமாய் இருந்தது. இறுக்கமாய் பிடியைப் பற்றியதில் கை வேறு வலிக்க ஆரம்பித்திருந்தது.

ஓரக்கண்ணால் மதுவைக் கவனித்தபடியே ஸ்கேட் செய்து கொண்டிருந்தவனுக்கு அவள் படும் பாட்டைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. தன் கை வளைவில் வைத்துக் கொண்டு ஸ்கேட் செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும் என உடலும் உள்ளமும் துடித்தது.

“இம்சைக்கெல்லாம் இம்சைடி நீ!” என முணுமுணுத்தவன், வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி மூலையில் எறிந்து விட்டு அவளை நோக்கி ஸ்கேட் செய்ய ஆரம்பித்தான்.

அதற்குள் சறுக்கிக் கொண்டு வந்தப் பெண் ஒருத்தி பேலன்ஸ் இல்லாமல் இவளை இடித்திருக்க, பொத்தென கீழே விழுந்திருந்தாள் மதுஷாலினி.

“மது!” எனக் கூவியபடி அவளை நோக்கி விரைந்தான் விஜயவேல்.

மடிந்து அவள் அருகே அப்படியே அமர்ந்தவன்,

“மது! அடிப்பட்டிருக்கா? வலிக்குதா?” எனப் பதட்டமாகக் கேட்டான்.

“உன் அக்கறையும் வேணா, சக்கரையும் வேணா! போ!” எனக் கண்ணீர் வழியத் தேம்பினாள் இவள்.

கீழே விழுந்த வலியும், நீண்ட நாட்களுக்குப் பின் கேட்ட மதுவெனும் வார்த்தையும் பெண்ணைத் திடமிழக்கச் செய்திருந்தது. எவ்வளவு அடக்க முயன்றும் கண்களில் மழை பொழிவது நிற்கவில்லை.

அவர்களுடன் வேலைப் பார்ப்பவர்கள் சுற்றி வந்து நின்று விட, கட்டி அணைத்து ஆறுதல் சொல்ல பரபரத்தக் கைகளை அடக்கி, அவளது ஒற்றைக் கரத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான் விஜய். அந்த இறுக்கம் சொன்னது இனி உன்னை விடவே விட மாட்டேன் என்று.
 

Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 17
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
  • Love
Reactions: yasotha and lax