Uyir Vangum Rojave--EPI 13

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
923
-1,952
93
அத்தியாயம் 13

காதலுங்கிறது எந்த நேரத்துல யார் மேல வரும்னு யாருக்குமே தெரியாது! அது தெரிஞ்சா எந்தப் பொண்ணும் அந்த நேரத்துல வீட்ட விட்டு வெளிய வரவே மாட்டா!

(படம் – வசீகரா)




கார் வீட்டு வாசலை வந்தடைந்தது. டிரைவர் இறங்கி வந்து இவர்கள் இருவருக்கும் கதவைத் திறந்து விட்டார். கீழே இறங்கிய வேந்தன், அந்தப் பெரிய பங்களாவை வெறிக்க நோக்கினான்.

‘ஹ்ம்ம்! இனிமே இதுதான் என் வீடா? இல்ல, இல்ல மாமனார் வீடு. நான் இனிமே வீட்டோட மாப்பிள்ளை!’

நினைக்கவே தொண்டை வரை கசந்து வழிந்தது அவனுக்கு. அதற்குள் காரிலிருந்து இறங்கி இருந்த தேவி,

“என்ன யோசனை மலர்? நான் ரெண்டு தடவை கூப்பிட்டும் ஒரு சத்தத்தையும் காணோம்?” என்றாள்.

“ஒன்னும் இல்ல மேடம். உங்க வீட்டைப் பார்த்துப் பிரமிச்சு போய் நின்னுட்டேன்”

“என் வீடு இல்ல, நம்ம வீடு. இதோட மேடம்னு கூப்பிடறத நிறுத்து மலர். அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வரும்!” என்றவள் குரலில் கோபம் இருந்தது.

“முயற்சி பண்ணுறேன்!” எனப் பொதுவாக சொன்னான் வேந்தன்.

“ஹ்ம்ம், சரி! வீட்டுக்குள்ள போகனும். என்னைத் தூக்கிட்டு போ மலர்”

“என்னது! தூக்கனுமா?” என அதிர்ச்சியானான் இவன்.

“எங்க ஊருல கல்யாணம் முடிஞ்சதும், மனைவிய ஹஸ்பண்ட் முதலிரவு ரூம் வரைக்கும் தூக்கிட்டுப் போவாங்க. நான் வீட்டுக்குள்ள வரைக்கும்தானே தூக்கச் சொல்லுறேன்” எனக் கையை நீட்டிக் கொண்டு சிறு பிள்ளைப் போல் தூக்கச் சொல்லி நின்று கொண்டிருந்தாள் அவள்.

வேந்தனுக்குச் சங்கோஜமாக இருந்தது. டிரைவர் வேறு இவர்களையே பார்த்தவாறு நின்றிருந்தான்.

இவன் தயங்குவதைப் பார்த்ததும் தேவிக்குச் சுருசுருவெனக் கோபம் ஏறியது.

“கண்டிஷன் நம்பர் ஓன் ஞாபகம் இருக்கா மலர்?” எனக் கோபமாக கேட்டாள் தேவி.

“நல்லா ஞாபகம் இருக்கு” என்றவன், அவள் எதிர்ப்பார்க்காதத் தருணத்தில் அலேக்காக அவளைத் தூக்கி இருந்தான்.

அவளது கோப முகம் பட்டெனச் சந்தோஷத்துக்குத் தாவியது. வாகாக அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு முகத்தை அவன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள். நான்கு காஸ் சிலிண்டர்களைத் தூக்கச் சொல்லி இருந்தால் கூட பாகுபலி போல் தூக்கியிருப்பான் அவன். இவள் ஒருத்தியை வீட்டு வாசல் வரை தூக்கி வருவதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி விட்டது.

‘யப்பா! என்ன கனம்டா சாமி! வட்டி வட்டியா பாஸ்தா சாப்புடுவாளோ? இவ கனத்தைக் கூட தாங்கிறலாம் போல இருக்கு, இப்படி ஒட்டிக் கிட்டு வரததான் தாங்க முடியலை. உள்ளுக்குள்ள என்னென்னமோ பண்ணுது. இம்சைடா’ என முனகிக் கொண்டான்.

வாசலிலேயே அவர்களை நிறுத்தி அப்படியே ஆரத்திச் சுற்றினார் முனிம்மா. அப்பொழுது கூட அவள் கீழே இறங்கவில்லை.

“மலர், முதன் முதல்ல நம்ம வீட்டுக்கு வர, ரைட் லேக் வச்சு உள்ள வா”

‘இத்தாலியா இருந்தாலும் இந்தியன் கல்ச்சர மறக்கல. அதுவரைக்கும் சந்தோஷம் தான்’

உள்ளே வந்து நடு ஹாலில் அவளை இறக்கி விட்டான். முனிம்மா பாலும், வாழைப் பழமும் எடுத்து வந்து கொடுத்தார்.

“இது எதுக்கு?” எனக் கேட்டாள் தேவி.

“நீங்களே சொல்லுங்க தம்பி எதுக்குன்னு” என அவனிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்து விட்டு உள்ளே வெட்கத்துடன் ஓடி விட்டார் அவர்.

‘நாம என்ன நாலு கல்யாணமா பண்ணியிருக்கோம் இதெல்லாம் தெரிஞ்சு வச்சிக்க. மூஞ்சிய, மூஞ்சிய பாக்குறாளே. எதையாச்சும் சொல்லி சமாளிப்போம்’

“அது வந்து, கல்யாணம் ஆன புது மண தம்பதிங்க கண்டிப்பா பாலும் பழமும் சாப்பிடனும். பாலும் பழமும் வயித்துல ஒன்னு சேர்ந்தவுடனே ஒரு கலக்கு கலக்குமில்ல, அதே மாதிரி மாப்பிள்ளையும் பொண்ணும் ஒன்னு சேர்ந்து அவங்க வாழ்க்கைய ஒரு கலக்கு கலக்கனும்னுதான் இந்தச் சாங்கியம்”

‘அப்பாடா! ஏதோ சொல்லி சமாளிச்சிட்டேன். அவ நம்பாத மாதிரியே பார்க்கறாளே. திரும்பவும் நோண்டி கேக்கறதுக்குள்ள பழத்தை உரிச்சி வாயில திணிச்சிற வேண்டியதுதான்’

நினைத்ததைச் சட்டெனச் செயல் படுத்தினான் வேந்தன். பாதிப் பழத்தை அவளிடம் கொடுத்து, மீதியைச் சாப்பிட்டான். பாலையும் அவளுக்குக் கொடுத்து மீதியைக் குடித்தான்.

“கொஞ்ச நேரம் இங்கயே உட்காரு மலர். நான் போய் சட்டை மாத்திட்டு வரேன்” என உள்ளே சென்றாள் தேவி.

அங்கிருந்த சோபாவில் அமர்ந்த வேந்தன், சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டான். ஆழ்ந்த ஊதா வண்ணத்தில் சுவரைப் பெய்ண்ட் செய்திருந்தார்கள். சோபாக்கள் அந்த வர்ணத்தை எடுத்துக் காட்டும் விதமாக பால் கலரில் இருந்தன. குட்டித் தலையணைகள் அங்கங்கே ஆரஞ்சு, நீலம், மஞ்சள் போன்ற வர்ணங்களில் சோபாவில் வைக்கப்பட்டிருந்தன. அவன் அமர்ந்திருந்தது ரிக்லைனர் வசதி கொண்ட சோபா. அதில் உள்ள பட்டனை அழுத்தி வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டான் வேந்தன். இதை போல் எல்லாம் இன்டிரியர் செய்து கொடுக்கும் போது மற்றவர்களுக்கு வாங்கி போட்டிருக்கிறான். சொந்தமாக அனுபவித்தது கிடையாது. சோபாவின் சொகுசிலும், ஏசியின் குளிரிலும், இரவு முழுக்க தூங்காததாலும் அமர்ந்தபடியே உறங்கி விட்டான் வேந்தன்.

அவன் கண் விழித்த போது, எதிரே ஒரு வெள்ளை உடை தேவதை அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தது.

‘செத்து சொர்க்கத்துக்குப் போயிட்டமா? இது தான் ரம்பையோ? இருக்காதே அவங்க செக்சியா சேலைதானே கட்டியிருப்பாங்க’

கண்களை நன்றாக தேய்த்து விட்டு மீண்டும் பார்த்தான். தேவிதான் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அப்பொழுதுதான் அவளை ஊன்றி கவனித்தான் வேந்தன். வெள்ளையர்கள் திருமணத்துக்கு அணியும் வெள்ளை உடையில் இருந்தாள் அவள். இடுப்புக்கு மேலே உடம்பை கவ்விப் பிடித்த உடை, இடுப்புக்குக் கீழே குடை போல் விரிந்திருந்தது.

‘தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்

என் உயிருடன் கலந்து விட்டாள்’ என மனதில் பாடல் ஓடியது.

தலையைக் உலுக்கிக் கொண்டவன்,

‘காதல் எல்லாம் இல்ல! அழகா வெள்ளையா இருக்காளே, அதனால ஒரு அட்ராக்சன்னு வேணும்னா வச்சுக்கலாம். என்னை இந்தப் பாடு படுத்தி கல்யாணம் பண்ணியிருக்கா. அதனால இந்த அட்ராக்சன் கூட தப்பு’ என ஆசையைத் தலைத் தட்டி அடக்கி வைத்தான்.
“எழுந்திட்டியா மலர்? இந்தா, இதை போய் போட்டுட்டு வா. கெஸ்ட் ரூம் முனிம்மா காட்டுவாங்க” எனச் சொல்லி அவன் கையில் அட்டைப் பெட்டியைக் கொடுத்தாள்.

முனிம்மா காட்டிய ரூமில் அட்டைப் பெட்டியில் இருந்த டோமி ஹில்பிகர் பிராண்ட் கருப்பு வர்ண பேண்ட்டையும், வெள்ளை நிற முழுக்கைச் சட்டையையும் அணிந்து கொண்டு, முகம் கழுவி ப்ரஷாக வந்தான் வேந்தன்.

அதற்குள் கார்த்திக்கும் வந்திருந்தான். வேந்தன் கேட்பதற்குள்,

“அவங்க எல்லாரையும் வீட்டுல பத்திரமா விட்டுட்டு, சாப்பிட வாங்கிக் குடுத்துட்டுதான் வரேன். இன்னும் ரெண்டு நாளுதானே. அதுக்குள்ள மேடம் வாங்கியிருக்கற வீட்டோட இண்டிரியர் வேலை எல்லாம் முடிஞ்சிடும். அப்புறம் அவங்க அங்க சேஃப்பா இருப்பாங்க. நீ வோரி பண்ணிக்காத மச்சி” என்றான்.

அவனுக்குப் பதிலாக ஒரு தலை அசைப்பை மட்டும் கொடுத்தான் வேந்தன். வேந்தனை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றாள் தேவி. அங்கே அவளது அம்மாவின் புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது.

லேசாகக் கண் கலங்கியவள்,

“மலர்! மீட் மை மாம் ரோஸ்மேரி. இது அவங்க வெட்டிங் டிரஸ்தான். ஆனா இதை அவங்க போட்டதே இல்லை. அவங்க ஆசை எல்லாம் நான் நல்லபடி சந்தோஷமா இருக்கனும்ங்கறது மட்டும்தான். எங்க முறைப்படித் திருமணம் செஞ்சுக்கனும்னு நினைச்சேன். ஆனா இந்த விஷயத்துலயும் உன்னை காம்ப்ரமைஸ் பண்ண வைக்க மனசு வரல. சோ, எங்க அம்மா முன்னாடி நாம மோதிரம் மாத்திக்கலாம்” என்றவள், கரகரத்தக் குரலைச் செறுமி சரி செய்து கொண்டாள்.

கார்த்திக்கைத் திரும்பி பார்த்தவள்,

“போய் அந்த ஆளை கூட்டிட்டு வா. ரூம் கீ செக்கியூரிட்டி கிட்ட இருக்கும். அந்த ரெண்டு பேரையும் கூடவே கூட்டிட்டு வா. இங்க வந்து எதாவது சத்தம் போட்டாரு, அப்புறம் எது நடந்தாலும் நான் பொறுப்பு இல்லை. சொல்லிடு மிஸ்டர் ராகவன் கிட்ட” என்றாள்.

‘அடிப்பாவி! பெத்த அப்பனையே ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சிருக்கியா? அதான் மனுஷன் கண்ணுலயே படலையா? சரியான அடாவடியா இருக்காளே. லட்டு போட்டுக் குடுத்தத் திட்டம் எதுவும் இவ கிட்ட பலிக்குமான்னு தெரியலையே’

மெல்லிய பயத்துடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான் மலர்வேந்தன்.

அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், அவனது கைகளை ஆசையுடன் பற்றிக் கொண்டாள்.

‘கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா

கைமாத்தா என் மனச கேக்குறா கேக்குறா’ என மனம் குத்து டான்ஸ் போட்டது.

‘அய்யோ! முத நாளே இப்படிக் கண்ணைக் கட்டுதே. மீதி நாள எப்படி சமாளிக்கப் போறேன்னோ தெரியலையே. இவ விஷயத்துல நான் இவ்வளவு வீக்கா?’ எனத் தன்னையே திட்டிக் கொண்டான் வேந்தன்.

அதற்குள் பாதுகாவலர்கள் இரு பக்கமும் கூட வர ரூமின் உள்ளே வந்தார் ராகவன். அவர் கண்கள் நேராக, மஞ்சள் கயிறு மினுமினுக்கும் அவள் கழுத்துக்குத்தான் சென்றது. ஒரு சோகப் பெருமூச்சு ஒன்று வெளியானது அவரிடம். தோற்றுப் போனவராக அங்கிருந்த நாற்காலியில் தளர்ந்து அமர்ந்து கொண்டார்.
 

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 13
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
923
-1,952
93
“இந்தக் கல்யாணத்தையாவது நீங்க பார்க்கனும்னுதான் வர வச்சேன். கல்யாணத்தை நிறுத்த நீங்க செஞ்ச முயற்சி எல்லாத்தையும் நான் முறியடிச்சப்பவே எஸ்கேப் ஆகி இருக்கனும். இப்படி வாண்டட்டா ஒரு வாரமா ஹவுஸ் அரெஸ்ட் ஆகிட்டீங்களே மிஸ்டர் ராகவன்” என அவரைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டாள் தேவி.

கண்கள் லேசாகக் கலங்கியது அவருக்கு. அவரது கலக்கத்தைப் பார்த்தத் தேவிக்கு உற்சாகம் பீறிட்டது.

அம்மாவின் படத்தின் முன் நின்றவள் வேந்தனையும் அருகில் நிற்க வைத்துக் கொண்டாள். கண் மூடி மனமுருக அவரிடம் பிரார்த்தித்தவள், மோதிரத்தை வேந்தனிடம் நீட்டினாள். அதை வாங்கியவன், மெல்ல அவள் கரம் பற்றி அணிவித்தான். அந்தக் காட்சியை அழகாக புகைப்படக் கருவியில் படம் பிடித்தான் கார்த்திக்.

சூழலின் இறுக்கத்தைக் குறைக்க,

“வேந்தன் சார்! எத்தனை இங்லீஸ் படம் பார்த்திருக்கீங்க. மோதிரம் மாத்துன உடனே கிஸ் குடுக்கனும்பா. இதெல்லாமா சொல்லிக் குடுப்பாங்க?” என வேந்தனை வம்பிழுத்தான் கார்த்திக்.

தேவியும் அவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘சும்மாவே இந்த மானங்கெட்ட மனசு அவ பக்கம் சாய பாக்குது. இதுல கிஸ் வேறயா? ஏன்டா என்னை இப்படி கொல்லுறீங்க?’

மெல்லக் குனிந்து அவள் கன்னத்தில் பட்டும் படாமலும் ஒரு முத்தத்தைப் பதித்தான் வேந்தன். அவள் கன்னத்தின் மென்மையில் மனம் பாடல் பாட விழைந்தது. ஏற்கனவே இரு பாடல்கள் பாடி விட்டதால், வேண்டாம் என விட்டு விட்டான்.

அவனது மீசையின் உராய்வில் சிலிர்த்துப் போன தேவி, முகம் விகசிக்க அவனைப் பார்த்து மந்தகாசப் புன்னகைப் புரிந்தாள்.

“இது செல்லாது. ‘அவள்’ படம் லெவலுக்கு குடுப்பேன்னு பார்த்தா, அவல் மெல்லறவன் மாதிரி குடுக்கற” என அவனை இன்னும் கலாய்த்தான் கார்த்திக்.

அழகாக வெட்கப்பட்ட வேந்தனைப் பார்த்து தேவி அடக்கமாட்டாமல் சிரித்தாள். அவள் சிரிப்பதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

“கார்த்திக்! தட்ஸ் இனாஃப். கிண்டல் பண்ணறத நிறுத்து” என்றவள் ஹாலுக்கு நடந்தாள்.

அவர்கள் அனைவரும் அங்கே வருவதற்கும், முனிம்மா சில லக்கேஜ் பெட்டிகளை வாசலில் கொண்டு வந்து வைப்பதற்கும் சரியாக இருந்தது.

திரும்பி ராகவனைப் பார்த்தவள்,

“இனிமே நீங்க இங்க இருக்க வேணாம். என் ஹஸ்பெண்டுக்கு மாமனார் வீட்டுல உட்கார்ந்திருக்கோம் என்கிற ஃபீலிங் வரது எனக்குப் பிடிக்கல. இது என் வீடு. இப்போ எங்க வீடு. அதுல மூனாம் மனுஷன் உங்களுக்கு இடமில்ல. குன்னூர்ல இருக்கற என் எஸ்டேட்டுக்கோ, இல்ல பெங்களூர்ல இருக்கற வீட்டுக்கோ கிளம்புங்க. தெ சாய்ஸ் இஸ் யுவர்ஸ்!” என இரக்கமின்றி கூறினாள்.

அவளது அருகாமையில் மயங்கிய வேந்தனின் மனது, அவளின் இந்தச் செயலில் மீண்டும் கடினமானது.

“தேவி! இது என்னோட வீடு. என்னை இங்க இருந்து போக சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல” எனக் கோபமாக கத்தினார் ராகவன்.

“ஸ்ஸ்ஸ்!! சத்தம், சத்தம்! கொஞ்சம் சத்தத்தைக் குறைங்க மிஸ்டர் ராகவன். ஏற்கனவே பி.பி இருக்கு. இப்போ ஹார்ட் அட்டாக் வந்துட போது. நான் வாழ்க்கைய ஆரம்பிக்கும் போது அபசகுனமா நீங்க வாழ்க்கைய முடிச்சிக்காதீங்க! என்ன சொன்னீங்க? உங்க வீடா? லுக் மிஸ்டர் ராகவன், இந்த வீடு, உங்க சொத்து எல்லாம் என் கைக்கு வந்து பல வருஷம் ஆச்சு. அதனால ஓவரா ஆடாம நடைய கட்டுங்க!” என்றவளின் கண்ணசைவில் பாதுகாவலர்கள் அவரது கையைப் பிடித்துக் கொண்டனர்.

“மேடம், அவரு பாவம்! வயசானவரு!” என சப்போர்ட்டுக்கு வந்த வேந்தனை,

“யூ ஷட் அப் மலர்! உனக்கு ஒன்னும் தெரியாது. இந்த ஆளுக்கு மட்டும் என்னைக்கும் என் கிட்ட சப்போர்ட்டுக்கு வராதே. அப்புறம் என்னோட இன்னொரு சைடை நீ பார்க்க வேண்டி வரும்” எனக் கண்டித்தாள்.

கார்த்திக்தான் பாதுகாவலர்களின் பிடியில் இருந்து அவரை விடுவித்து,

“வாங்க சார்! கல்யாணமான சின்னஞ் சிறுசுங்க நடுவுல நமக்கு என்ன வேலை? நாம சுகமா குன்னூருல ரெஸ்ட் எடுப்போம். அட வாங்க சார்!” என அவரை அழைத்துச் சென்றான்.

போவதற்கு முன் திரும்பி வேந்தனை முறைத்து விட்டுத்தான் சென்றார் அவர்.

‘என்னை ஏன்யா முறைக்கிற? பண்ணதெல்லாம் நீ பெத்தப் பிசாசு. இதுல என்னை முறைச்சி என்ன புண்ணியம். இதுக்குத்தான் எங்க அம்மா சொல்லும் ஒய்யார கொண்டையில தாழம்பூவாம், அதுக்குள்ளே இருக்குதாம் ஈரும் பேனும். இந்த சிச்சுவேஷனுக்கு இந்தப் பழமொழி சரி வருமா? காசா, பணமா. போட்டுத் தாக்குவோம்’

இவருக்குப் பரிதாபப்பட்டதற்குத் தன்னையே நொந்து கொண்டான் வேந்தன்.

அவர்கள் வெளியேறியவுடன் பாத்ரூம் போவதாக சொல்லி கெஸ்ட் ரூமுக்கு சென்றான் வேந்தன். உள்ளே சென்று கதவை அடைத்தவன், அம்மாவுக்கு ஒரு போனைப் போட்டான்.

“வேந்தா! எப்படிடா இருக்க?”

“நல்லா இருக்கேன்மா. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?”

“இன்னிக்கு காலையில நீ எப்படிப் பார்த்தீயோ, அப்படியேத்தான்டா இருக்கோம். மருமக என்ன செய்யுறா?”

“என்ன செய்யலைன்னு கேளும்மா. அவங்க அப்பாவையே வீட்ட விட்டுத் துரத்திட்டாமா”

“அப்படியா? உன்னைத் துரத்தலல, அது வரைக்கும் சந்தோஷமா இருடா. எங்க வாழ்க்கைப்பட்ட முத நாளுலயே நீ வாழாவெட்டன் ஆகிட்டயோன்னு பயந்துட்டேன்!”

“அம்மா!” எனப் பல்லைக் கடித்தான் வேந்தன்.

அந்தப் பக்கம் அவர் சிரிக்கும் சத்தம் கேட்டது.

“விடுடா! அவங்க அப்பா மக நடுவுல ஆயிரம் இருக்கும். நீ எதுக்கு அதுல தலையிடற. உன் மேல ஆசையா, பாசமா இருக்காளா, அதை மட்டும் பாருடா. இந்த மாதிரி துரத்திக் கல்யாணம் பண்ணுற பொண்ணை எங்கயாச்சும் பார்த்திருக்கியா? அப்படி செஞ்சிருக்கானா அவளுக்கு உன் மேல எவ்வளவு பிரியம் இருக்கும்! அதை நினைச்சு சந்தோஷப்படுடா. பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க”

“அம்மா! இதெல்லாம் புதுசா கல்யாணமானப் பொண்ணுங்களுக்கு அவங்க அம்மா சொல்லுவாங்க. என் காலக் கொடுமை, எனக்கு நீங்க சொல்லுறீங்க. விட்டா பால் சொம்பு தூக்கிட்டு போய் அவ காலுல விழுந்து நமஸ்காரம் பண்ணுன்னு சொல்லுவீங்க போல”

“யாரு கிட்ட யாரு சொன்னா என்னடா? நமக்குத் தேவை குடும்பத்துல அன்பும் சந்தோஷமும் நிறைஞ்சி இருக்கறதுதானே! நான் ஆம்பிள்ளை, நான்தான் பெரியவன், எனக்குக் கீழதான் என் பொண்டாட்டினு நினைக்கறத எப்ப நீங்க எல்லாம் விடறீங்களோ அப்பத்தான்டா சென்னையில மழை கொட்டுறது நிக்கும்”

“எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க இந்து மேடம்?” எனச் சிரித்தான் வேந்தன்.

அவரும் மறுபக்கத்தில் சிரித்தார்.

“நீ சந்தோஷமா இருந்தாத்தான்டா நாங்களும் சந்தோஷமா இருப்போம். சரி, சரி! லேட்டாகுது. நீ போய் உன் பொண்டாட்டிய பாரு. புவனா நோத்தே, தி யாமோ!”

“என்னம்மா, நல்லா பேசிக்கிட்டு இருந்தீங்க. திடீர்ன்னு சட்டிப் பானை உடைக்கிற மாதிரி சத்தம் வருது”

“அப்படினா இத்தாலில குட்டு நைட், ஐ லவ் யூவாம். உன் தங்கச்சிய டார்ச்சர் பண்ணி கத்துக்கிட்டேன்”

“அம்மா! நீ இங்கிலீஸ் பேசுனாலே எல்லாரும் தெறிச்சுப் போயிருவாங்க, இதுல இத்தாலி வேறய? வேணாம்மா, மீ பாவம். விட்டுரு!”

“என்னையா கிண்டல் பண்ணுற. இருடா உனக்கு ஒரு பாட்ட எடுத்து விடுறேன்!

‘அடடா நடந்து வரா இதயத்த கிழிக்க வரா
ரெடியா இருடா அது டேஞ்சரஸ் பார்ட்டி
கடவுள் ஆடர் அவ உனக்குப் பொண்டாட்டி’’ எனப் பாடினார்.

“அவ டேஞ்சரஸ் பார்ட்டிதான். கதவைத் தட்டுறா! நாளைக்கு போன் பண்ணுறேன்மா”

“சரிடா வேந்தா”

கதவைத் திறந்தவன் அவளைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான். பிறகு இருவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை உண்டார்கள்.

“வா மலர்! நம்ம ரூமுக்கு போலாம். இன்னிக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் வேற” எனக் கையைப் பிடித்து மேல் மாடிக்கு அழைத்துச் சென்றாள் தேவி.

“இதுதான் உன் ரூம். இங்க நீ குளிக்கலாம், ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலாம், ஆபிஸ் வொர்க் செய்யலாம், ஏன் தியானம் கூட பண்ணலாம். ஆனா நைட் மட்டும் என் கூடத்தான் இருக்கனும் நம்ம ரூமுல” எனச் சொல்லி அவனது ரூமை மூடியவள் அதற்கு பக்கத்தில் இருந்த தனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“நம்ம ரூம். நல்லா இருக்கா? உனக்கு பிடிக்கலைனா வேற மாதிரி மாத்திக்கலாம். இண்டிரியர்ல நீதான் புலியாச்சே!”

‘மத்த விஷயத்துல நான் புலிதான். உன் முன்னுக்கு மட்டும் எலி ஆகிடறேன். இல்ல, நீ ஆக்கிடற!’

“என்ன யோசனை மலர். குளிச்சிட்டு வா” என அவனை அனுப்பினாள்.

அவன் திரும்பி வரும் போது, பால்கனி சுவரில் சாய்ந்து கடலை வெறித்துக் கொண்டிருந்தாள் தேவி. இவனும் அவள் அருகில் சென்று நின்று கொண்டான்.

“இந்த இருட்டுல என்ன பார்க்கறீங்க மேடம்?”

“ஒன்னும் இல்ல. சும்மா இருட்டை வெறிக்கறது எனக்கு ஒரு பொழுது போக்கு. இப்பதான் நீ இருக்கியே, இனிமே இப்படி நிக்க மாட்டேன்னு நினைக்கிறேன். மலர், இப்பவே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன். இனிமே என்னை மேடம்னு கூப்பிடக் கூடாது. ரோஸ்னு கூப்பிடு”

“ரோஸ்சா? ஹ்ம்ம். வேணும்னா ரோஜான்னு கூப்பிடவா?”

“ரோஜா? என் பேருக்குத் தமிழ் அர்த்தம் அதுதான். உன் உதட்டு வழி கேட்டா கிக்காத்தான் இருக்கு. அப்படியே கூப்பிடு. எங்க இன்னொரு தரம் சொல்லு”

“ரோஜா!”

“இன்னொரு தடவை!”

“ரோஜா!”

அவனை நெருங்கி அணைத்தாற் போல் நின்று கொண்டாள் அவள். அவனது கையை எடுத்துத் தன் இடுப்பில் வைத்துக் கொண்டவள்,

“மலர், என்னைக்கும் நீ என்னைப் பிரிய கூடாதுன்னுதான் இப்படி ஓர் இக்கட்டுல வைச்சி உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டேன். அது எனக்கே கில்டியா இருக்கு. கண்டிப்பா என்னைப் புரிஞ்சுக்க உனக்கு டைம் தேவை படும். அது வரைக்கும் நாம எதையும் ஃபோர்ஸ் பண்ணிக்க வேண்டாம். நடக்கறது எல்லாம் நேச்சுரலாவே நடக்கட்டும். ஆனாலும் எனக்கு ஒரு உதவி செய்வியா மலர்?” எனக் கேட்டாள்.

அவளது நெருக்கம் அவனுக்குள்ளே ஒரு விதப் போதையை ஏற்படுத்தியது. உயிரையே கேட்டாலும் எடுத்துக் கொள் என்கிற மனநிலையில் இருந்தான்.

“சொல்லு ரோஜா. என்ன வேணும்?”

“நமக்கு ஒரு பேபி வர வரைக்கும் என்னை உங்க பேபி மாதிரி பாத்துக்கனும். முடியுமா?” எனக் குரல் குழைந்து ஒலித்தது.

“நமக்கு பேபி வந்தாலும், உன்னையும் பேபி மாதிரி பார்த்துக்குவேன்” என வாயை விட்டான் இவன்.

பிறகுதான் லாவண்யா சொன்னது ஞாபகம் வந்தது.

“அண்ணா! அவங்க போட்ட கண்டிஷன்ல அவங்களுக்கே ஆப்பு வர மாதிரி ஒரு கண்டிஷனும் இருக்கு. அதை வச்சே உன்னை அவங்க கிட்ட இருந்து பிரிக்கறேன். நீ கவலைப் படாமக் கல்யாணம் பண்ணிக்க. வெள்ளெலி வாலைப் புடுங்கி நான் எறியறேன்” என வீர மங்கையாய் சபதம் போட்டத் தங்கையின் முகம் கண் முன்னே வந்து போனது.